Home / சமூகம் / மதுரையில் தமிழர் விழவு ‍ – 2046

மதுரையில் தமிழர் விழவு ‍ – 2046

1902801_646603995462929_1037780607815760414_n

இளந்தமிழகம் இயக்கத்தின் மதுரைக் குழுவின் சார்பாகத் தைத்திருநாள், தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு மதுரையில் ‘தமிழர் விழவு’ என்ற தலைப்பில் விழா எடுத்தோம். திருவள்ளுவர் ஆண்டு 2046 தை 3 ஆம் நாளும், இரோமானிய ஆண்டு 2015 சனவரி 17ஆம் நாளுமாக அமைந்த நந்நாளில் காந்தி அருங்காட்சியகத்தில் உள்ள கல்மண்டபத்தில் காலை 9.30 மணியளவில் கல்லுப்பட்டியில் இருந்து வந்திருந்த இயற்கை உழவர் ஐயா பாண்டி அவர்களது தென்றல் போன்ற தெம்மாங்குப் பாட்டுடன் விழா இனிதே தொடங்கியது. தோழர் இரபீக்கின் வரவேற்புரைக்குப் பின் இளந்தமிழகம் இயக்கத்தைப் பற்றிய அறிமுகம், இயக்கச் செயற்பாடுகள் பற்றித் தோழர் அரவிந்தன் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து பனைமரத்தின் அருமைகளை எடுத்துச் சொல்லும் வகையில் மற்றொரு நாட்டார் பாடல் பாடப்பட்டது. 

1902801_646603998796262_2707856349630566519_n

பாடல் முடிந்தவுடன் நாணல் நண்பர்கள் குழு சார்பில் ‘தமிழர் பண்பாட்டில் மிகுதியாக வெளிப்படுவது அகம் சார்ந்த சிந்தனையா அல்லது புறம் சார்ந்த சிந்தனையா ?’ என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. தமிழர் பண்பாட்டில் மிகுதியாக வெளிப்படுவது அகம் சார்ந்த சிந்தனையே என்ற வாதத்திற்குத் தலைமையேற்று கட்டுமானப் பொறியாளரும் பேச்சாளருமான கான்சா சாதிக், இயந்திரவியல் பொறியாளர் பவித்ரா ஆகியோர் பேசினர். தமிழர் பண்பாட்டில் மிகுதியாக வெளிப்படுவது புறம் சார்ந்த சிந்தனையே என்று மேலாண்மைக் கல்வி மாணவர் பாரூக், செந்தமிழ்க்கல்லூரி தமிழ்த்துறை மாணவரும் பேச்சாளருமான பூபதி ஆகியோர் பேசினர். ஈரணிகளும் சுவையாகவும் சரிக்குச் சரியாகவும் விவாதித்தனர். நடுவர் திரு. துளிர் அவர்கள் ஓர் அரசுப்பள்ளி ஆசிரியர், ஆய்வுக்கட்டுரைத் தொகுப்புகளும் வெளியிட்டிருக்கிறார். பேசியவர்கள் அனைவரும் அகம் என்பதைக் காதலாகவும், புறம் என்பதை வீரமாகவும் மட்டும் உருவகப்படுத்திப் பேசினர். முடிவில் நடுவர் காதலற்ற வீரமும், வீரமற்ற காதலும் பண்பாட்டிற்கு அழகல்ல என்று தீர்ப்பளித்தார். மக்கள் பட்டிமன்றத்தில் மெய்மறந்திருந்த போதே அவர்களுக்குச் சூடான சுக்கு மல்லி வடிநீரும் சுண்டலும் வழங்கப்பட்டன. அடுத்து நடந்த அனைத்தும் அதகளம்.

1902801_646603992129596_91071829003761005_n

முதலில் கரகாட்டம். சேது பொறியியல் கல்லூரி இணைப் பேராசிரியர் மலைச்சாமி அவர்கள் கரகத்தில் செய்து காட்டிய அத்தனை அடவுகளும் அருமை. அளக்கும் படி இரண்டின் மேல் கரகத்துடன் ஏறி நிற்பது, நெருப்புக்கரகத்துடன் உருளையின் மேல் பலகையில் சமநிலைப்படுத்தி நிற்பது, கண்களைக்கட்டிக்கொண்டு மாணவர் கையில் இருக்கும் வாழைப்பழத்தை வெட்டுவது என்று கூடியிருந்தவர்களை வியப்பின் உச்சத்திலேயே வைத்திருந்தார். அவருடன் வந்திருந்த ஒரு பெண் கரகாட்டக் கலைஞரும், தவில், நாயனம் (நாகசுரம்), பம்பை மேளக்காரர்களும் சிறப்பாகத் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். 

1902801_646604002129595_8373615277768311529_n
தமிழர் பண்பாட்டு மையம் கலைக்குழுவினரின் ஒயிலாட்டம் சிறுவர்களால் ஆடப்பட்டது. ஏறக்குறைய அரை மணிநேரம் சிறிதுகூடத் தொய்வின்றி அவ்வளவு உற்சாகத்துடனும் துள்ளலுடனும் தாளம் பிசகாமலும் ஆடினர். ஆட்டத்திற்குக் கொஞ்சமும் சளைக்காமல் பின்னணியில் ஒலித்த பறையிசை கூடியிருந்தவர்களை எழுந்து ஆடவும், சீட்டி அடிக்கவும் வைத்தது. கூச்சப்பட்டவர்கள் குறைந்தபட்சம் தாளம் போடாமல் கூட இருக்க முடியவில்லை. 

1902801_646604005462928_4623677791979417295_n

ஆட்டங்களுக்கு இடையிடையே நிலவிய வெற்றிடத்தைத் தோழர் தீபனின் தமிழர் கலை பற்றிய பாராட்டுரைகள் தக்கபடியே நிரப்பின. அறம் செய்வோம் என்ற அமைப்பின் சார்பாகத் தகவல் தொழில்நுட்பத்துறையில் பணிபுரியும் நண்பர்கள் தவில் அடிக்கும், நாயனத்தின் இசைக்கும் ஏற்ப ஒயிலாட்டம் ஆடினர். பிழைப்புக்காகத் திசை வேறு போனாலும் தைத்திருநாளில் வேர் தேடும் அவர்களது முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது.

1904224_646607902129205_2699417780853726370_n

சூல் வாசிப்புத்தளத்தின் சார்பாகத் தோழர் தினேசு, தமிழகக் காவல்துறையில் பணிபுரிபவர் சிலம்பத்தை எடுத்துச் சுற்றிய இலாவகத்தில் அரங்கத்தைக் கையொலிகளால் நிறைத்தார். மீண்டும் தமிழர் பண்பாட்டு மையம் கலைக்குழுவினரின் கட்டைக்கால் ஆட்டமும், பாண்டிய நாடு – பண்பாட்டு மையம் குழுவினரின் போர்ச்சிலம்ப அடவுகளும் அனைவரையும் கவர்ந்தன. தோழர் இரபீக்கின் நன்றி உரையோடு பிற்பகல் 1.30 மணியளவில் நிகழ்ச்சி நிறைவடைந்தது.

10922494_646608425462486_4598109855738215918_n

இறுதி வரை மக்கள் கலையாமல் இருந்தது மிகுதியான ஊக்கம் அளிப்பதாக இருந்தது. காந்தி அருங்காட்சியகத்திற்கு வந்திருந்த பொதுமக்களும் அயல்நாட்டினரும் நம் தமிழர் விழவில் பங்கேற்றது எதிர்பாராதது. உளவுத்துறையினர்கூட உளமாரப் பாராட்டினர். ஒருங்கிணைப்பில் பெருமளவில் உதவிய நாணல் நண்பர்கள் குழு தமிழ்தாசனுக்கும், தமிழக மக்கள் பண்பாட்டுக் கழகம் தோழர் திவ்யாவிற்கும், தமிழ்நாடு மக்கள் கட்சித் தலைவர் தோழர் மீ. த. பாண்டியன் அவர்களுக்கும் நம் இயக்கத் தோழர்களுக்கும் அமைப்பின் மதுரைக் குழு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.

1904224_646607912129204_5873498537883292301_n

அவனி அரவிந்தன் – இளந்தமிழகம் இயக்கம்

About அவனி அரவிந்தன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*