Home / FITE சங்கம் / டி.சி.எஸ் நிறுவனத்தின் பணி நீக்கத்திற்கெதிரான போராட்டத்தைத் தொடர்வோம்
பெங்களூரில் நடைபெற்ற மனிதச் சங்கிலி போராட்டம்

டி.சி.எஸ் நிறுவனத்தின் பணி நீக்கத்திற்கெதிரான போராட்டத்தைத் தொடர்வோம்

பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் தகவல் தொழில்நுட்ப ஊழியர்களால், தங்களது உரிமைகளை பாதுகாத்துக்கொள்ளவும், தங்களது நலத்தை மேம்படுத்திக் கொள்ளவும் 2014 டிசம்பர் இறுதி வாரத்தில் “தகவல் தொழில்நுட்ப ஊழியர்களுக்கான மன்றம்” ஒன்றை உருவாக்கப்பட்டது. சட்டத்திற்கு புறம்பாகவும், அறமற்ற வகையிலும் இந்தியா முழுவதும் உள்ள தங்களது பணியாளர்களை டி.சி.எஸ் நிறுவனம் பெருமளவில் பணி நீக்கம் செய்து வருவதை எதிர்த்து போராடத் தொடங்கியது இம்மன்றம்.

FITE

முதலில் இந்தியா முழுவதும்  உள்ள டி.சி.எஸ் ஊழியர்கள் எங்களை தொடர்பு கொண்டு பேசியதன் அடிப்படையில், டி.சி.எஸ் நிறுவனம் செய்து வரும் பணி நீக்கம் திட்டமிட்ட ஒன்று என்பதை இம்மன்றம் புரிந்து கொண்டது, அதனால் இப்பணி நீக்கத்தை எதிர்த்த இம்மன்றம் இந்தியா முழுவதும் செயல்பட வேண்டும் என முடிவெடுத்து,சென்னை,  கொச்சின், பெங்களூர், ஐதராபாத், பூனே, மும்பை, கொல்கத்தா, தில்லி ஆகிய இடங்களுக்கு இம்மன்றத்தின் உறுப்பினர்கள் பயணம்  சென்று பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களிடம் நேரில் பேசி நிலைமையை இன்னும் தெளிவாக அறிந்து கொண்டனர். இச்சந்திப்புகளை அடுத்து அந்தந்த ஊர்களில் உள்ள தொழிலாளர் ஆணையரைச் சந்தித்து மன்றத்தின் சார்பில் மனு அளிக்கப்பட்டு, அதன் மீது நடவடிக்கை எடுக்கும் படி கோரப்பட்டது. அந்தந்த ஊர்களில் இம்மன்றத்தின் கிளைகளும் நிறுவப்பட்டன.

பெங்களூரில் நடைபெற்ற மனிதச் சங்கிலி போராட்டம்

பெங்களூரில் நடைபெற்ற மனிதச் சங்கிலி போராட்டம்

பரப்புரையும், போராட்டங்களும்:

இதன் பின்னர் மீண்டும் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களைச் சந்தித்து சட்டரீதியான வழிமுறைகள் விவாதிக்கப்பட்டன. அதே நேரத்தில் இப்பணி நீக்கம் பற்றிய செய்தியை பொதுமக்களிடம் கொண்டு செல்லவும், இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மன்றத்தின் ஊழியர்கள் பரப்புரையை சென்னை, கொல்கத்தா, பெங்களூர், கொச்சின், ஐதராபாத், பூனே, மும்பை போன்ற இடங்களில் தொடங்கினர். இதனைத் தொடர்ந்து சென்னையில் வாயில் கருப்புத் துணி கட்டி போராடும் போராட்டமும், நேற்று இருசக்கர வாகனப் பேரணியும், பெங்களூரில் மனிதச் சங்கலியும், தில்லி ஜந்தர் மந்தரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக ஐ.டி ஊழியர்களுக்கு உள்ள உரிமைகள் என்ன என்பது தொடர்பான கருத்தரங்கத்தை மன்றத்தின் கொல்கத்தா பிரிவு சனவரி 31ஆம் திகதி நடத்த இருக்கின்றது.

சென்னையில் நேற்று நடைபெற்ற இருசக்கர வாகனப் பேரணி

சென்னையில் நேற்று நடைபெற்ற இருசக்கர வாகனப் பேரணி

சட்டப் போராட்டம்:

பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் எமது மன்றத்தின் துணையுடன் சட்ட ரீதியான போராட்டத்தினைத் தொடர முன்வந்துள்ளனர். சென்னையில் பிரியா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண் ஊழியர் முதல் வழக்கை மன்றத்தின் துணையுடன் சென்னை உயர்நீதி மன்றத்தில் ரிட் மனுவாகவும், தொழிலாளர் ஆணையத்தில் “தொழில் தகராறு சட்டம்” பிரிவு 2″அ”வின் கீழும் பதிந்தார். தொழிற் தகராறு சட்டத்தின் கீழ் வரும் “தொழிலாளி” என்ற பதம் ஐ.டி. பணியாளர்களுக்கும் பொருந்தும், அதே போல “தொழிற்சாலை” என்ற பதம் ஐ.டி. நிறுவனங்களுக்கு பொருந்தும் என்பதும், இப்பணி நீக்கம் சட்டத்திற்கு புறம்பான முறையில் நடைபெற்றுள்ளது, இது நிறுத்தப்பட்ட வேண்டும்  என்பதே மொத்த வழக்கின் சாரமாகும். எமது மன்றத்தின் உறுப்பினர்கள் சார்பாக வழக்கறிஞர்.பிரகாசும், ரமா பிரியாவும் இவ்வழக்கில் பங்கு கொண்டனர்.

வழக்கு விசாரணைக்கு வந்த பொழுது டி.சி. எஸ்ஸின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் இவர் தொழிலாளி அல்ல என்றும், ஐ.டி நிறுவனங்கள் தொழிற்சாலை என்ற வரையறைக்குள் வரமாட்டார்கள் என்றும் கூறினார்கள். வழக்கை விசாரித்த  நீதிபதி இப்பணி நீக்கத்தின் மீது இடைக்கலாத் தடையை(Stay) வழங்கினார். ஒரு வாரத்திற்கு பிறகு வழக்கு விசாரணைக்கு  வந்த பொழுது டி.சி.எஸ் நிறுவனத்தின் சார்பில் ப்ரியா கர்ப்பமாக இருப்பதால், பணி நீக்கத்தை திரும்பப் பெற்றுக் கொள்வதாக அறிவித்தனர். ப்ரியா தான் தாக்கல் செய்த மனுவிலேயே தான் கர்ப்பமாக இருப்பதை குறிப்பிட்டிருந்தார். அதை முழுதும் படித்து விட்டு, டி.சி.எஸ் தாக்கல் செய்த பதில் மனுவில் அதைப் பற்றி ஒரு வார்த்தை கூட குறிப்பிட படாத நிலையில், இப்பொழுது தான் அவர் எங்களுக்கு கர்ப்பமாக இருக்கிறார் எனத் தெரியும் எனக்கூறி பணி நீக்கத்தை இரத்து செய்வதாக கூறி டி.சி.எஸ் நிறுவனம் அந்தர் பல்டி அடித்துள்ளது. மேலும் பிரியாவின் வழக்கில் அவர் வேலை செய்த அணிக்கு வழங்கிய “டி.சி.எஸ்ஸின் முத்துக்கள்” பாராட்டுச் சான்றிதழ் பற்றி தங்களது பதில்மனுவில் அவையெல்லாம் ஊழியர்கள்  நிறுவனத்தை விட்டு வெளியேறிவிடக் கூடாது என்பதற்காகத் தான் என்று கூறியுள்ளது.

Madras HC sign 2_0

இதே நேரத்தில் சென்னையில் பணி நீக்கம் செய்யப்பட்ட இன்னொரு ஊழியரும் எமது மன்றத்தின் துணையுடன் உயர்நீதிமன்றத்தில் மேலே பிரியா தாக்கல் செய்தது போன்ற ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார், பிரியாவுக்கு எப்படி பதில் மனு தாக்கல் செய்திருந்தார்களோ, அதே போல இந்த ஊழியருக்கும் பதில் மனு தாக்கல் செய்தனர், இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என டி.சி.எஸ் தரப்பில் கடுமையாக வலியுறுத்தினர். இருதரப்பு வாதங்களை கேட்ட பின்னர் நீதிபதி, இரன்டு வாரங்கள் இடைக்காலத் தடை வழங்குவதன் மூலம் நிறுவனத்திற்கு ஒன்றும் பெரிய இழப்பு ஏற்பட்டு விடாது, ஆனால் மனுதாரருக்கு இழப்பு ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு இந்த வழக்கிலும் நீதிபதி இரண்டு வாரங்களுக்கு  இடைக்கால‌த் தடையை வழங்கினார்.  தொழிலாளர் அலுவலகம் சமரசப் பேச்சு வார்த்தையை உடனே தொடங்க வேண்டும் எனவும் உத்திரவிட்டுள்ளார்.

இதே போல புனேவில் பணியிழந்த ஐந்து பேரும், மும்பையில் பணியிழந்த நான்கு பேரும், ஐதராபாத்தில் பணியிழந்த இருவரும் அந்தந்த பகுதிகளில் உயர் நீதிமன்றத்தில் வழக்கும், தொழிலாளர் ஆணையத்தில் வழக்கும் தாக்கல் செய்துள்ளனர். மும்பை உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை சனவரி 27 அன்று தொடங்குகின்றது. ஐதராபாத்தில் நேற்று(சனவரி 23) அன்று விசாரணைக்கு வந்த இவ்வழக்கில் நீதிமன்றம் இது தொடார்பான அரசின் கருத்து என்ன என இருவாரத்திற்குள் பதிலளிக்குமாறு உத்திரவிட்டுள்ளது. மும்பை தொழிலாளர் ஆணையம் 23 சனவரி அன்று மனு மீதான முதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.  எமது மன்றத்தின் உறுப்பினர்கள் சார்பாக மும்பையில் வழக்கறிஞர்.காயத்ரியும், ஹைதராபாத்தில் வழக்கறிஞர்.பீமாராவும் பங்கேற்றனர்.

டி.சி.எஸ் நிறுவனம் சொல்வது உண்மை அல்ல‌:

சென்ற வாரத்தில் டி.சி.எஸ் நிறுவனம் வெளியிட்ட செய்தி அறிக்கையில் வெறும் 2574 பேர் மட்டும் தான் வெளியேற்றி இருப்பதாக கூறியுள்ளனர். இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான அறிக்கை என்று எங்கள் மன்றத்தின் சார்பில் கண்டிக்கின்றோம். அதே போல தங்களது நிறுவனத்திற்கு கடந்த சில ஆண்டுகளாக ஊனுறக்கத்தை துறந்து பணியாற்றிய தொழிலாளர்களை திறனற்றவர்கள் எனப் பொய் சொல்வதையும் அவர்கள் நிறுத்த வேண்டும்.

டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டம்

டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டம்

இந்திய ஒன்றிய, மாநில அரசுகளின் கவனத்திற்கு,

ஐ.டி நிறுவனங்களுக்கு இடம் வழங்குவதில் சலுகை, மின் கட்டணத்தில் சலுகை, பல வரிகளில் சலுகை என்ன எல்லாம் அரசு வழங்குவதற்கு காரணம் அவர்கள் வேலை வாய்ப்பை வழங்குகின்றார்கள் என்பது தான், ஆனால் இந்த ஐ.டி நிறுவனங்கள் வழங்கும் வேலை வாய்ப்பு எல்லாம் இந்த நிலைமையில் தான் இருக்கின்றன. ஒன்றிய, மாநில அரசுகள் 32 இலட்சம் ஐ.டி தொழிலாளர்களின் நிலை என்பதை ஆராய்ந்து, சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு வரும் ஐ.டி நிறுவனங்களின் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போல ஐ.டி தொழிலாளர்கள், தொழிற்தகராறுச் சட்டத்தின் கீழ் கூறியுள்ளப்படி “தொழிலாளி” என்ற பதத்திற்குள் வருவார்களா, நிறுவனங்கள் “தொழிற்சாலை” என்ற பதத்திற்குள் வருவார்களா என்ற கேள்விக்கும் 32 இலட்சம் தொழிலாளர்களின் நிலையை மனதில் நிறுத்தி பொறுப்பான ஒரு பதிலைக் கொடுக்க வேண்டும். நடந்து வரும் பணி நீக்கத்தை நிறுத்த வேண்டும் என்றும் கோருகின்றோம்.

இம்மன்றம் டி.சி.எஸ் நிறுவனத்தின் சட்டத்திற்கு  புறம்பான இப்பணி நீக்கத்திற்கு எதிரான போராட்டத்தை நீதிமன்றங்களிலும், மக்கள் மன்றங்களிலும் தொடர்ந்து நடத்தும், அடுத்து பெங்களூரில் மேலும் ஒரு  ஐ.டி நிறுவனம்  சட்டத்திற்கு புறம்பான வகையில் பணி நீக்கம் செய்து வருவதாக அறிகின்றோம், அது தொடர்பான பணியையும் நாங்கள் தொடங்க உள்ளோம். இந்தியாவில் எங்கெங்கு ஐ.டி தொழிலாளர்களின் உரிமை பாதிக்கப்பட்டாலும்,   அவர்களுக்காக நாங்கள் குரல் கொடுப்போம், அவர்களது உரிமைகளை மீட்டெடுக்கப் போராடுவோம்.

தகவல் தொழில்நுட்ப ஊழியர்களுக்கான மன்றம்

சென்னை

24-சனவரி-2015

இன்று (24 சனவரி) சென்னை பத்திரிகையாளர் சந்திப்பில் தகவல் தொழில்நுட்ப ஊழியர்களுக்கான மன்றம் வெளியிட்ட பத்திரிகை செய்தி இது.

About விசை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*