Home / FITE சங்கம் / ஐ.பி.எம். நிறுவனமும் கத்தியைக் கையில் எடுக்கின்றது !

ஐ.பி.எம். நிறுவனமும் கத்தியைக் கையில் எடுக்கின்றது !

டி.சி.எஸ் நிறுவனத்தைத் தொடர்ந்து ஐ.பி.எம் நிறுவனமும் மறு சீரமைப்பு என்ற பெயரில் ஐ.டி தொழிலாளர்களைப் பணி நீக்கம் செய்ய உள்ளதாகச் செய்திகள் வெளி வந்துள்ளது. ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் வலைப்பூ பகுதியில் ஐ.பி.எம் நிறுவனம் 1,10,000 தொழிலாளர்களைப் பணி நீக்கம் செய்ய உள்ளது என்று பிரபல பதிவர் ஒருவர் எழுதினார். இதை மறுத்துள்ள ஐ.பி.எம் அந்த எண்ணிக்கையில் பணி நீக்கம் செய்யவில்லை. ஆனால் மறு சீரமைப்பின் ஒரு பகுதியாகப் ப‌ல ஆயிரம் தொழிலாளர்களைப் பணி நீக்கம் செய்ய இருக்கின்றோம் எனத் தெரிவித்துள்ளது(1,2).  இந்தத் திட்டத்திற்கு “குரோம்” என்று பெயரிட்டுள்ளது ஐ.பி.எம் நிறுவனம்.

பெயர் கூற விரும்பாத ஒர் ஐ.பி.எம் ஊழியர் சொல்லும் போது இந்தியாவில் மட்டும் தோராயமாக 7,500 பேரை வேலையை விட்டு நீக்கப்போகின்றார்கள். இந்தியாவில் ஒட்டு மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை தோராயமாக 90,000 பேர். இதில் 50,000 பேர் பெங்களூரில் மட்டும் வேலை செய்வதால் பெங்களூரில் மட்டும் 4000த்திலிருந்து 5000 பேர் வரையிலும், மற்ற நகரங்களில் 1000 பேர் வரை  வேலையை விட்டு நீக்கப்படலாம் எனக்கூறினார்.

 

ஐ.பி.எம் நிறுவனம் தொழிலாளர்களைப் பணிநீக்கம் செய்வது இது முதல்முறையல்ல. சென்ற ஆண்டுப் பிப்ரவரி மாதத்திலும் இதே போன்று மறு சீரமைப்பு என்ற பெயரில் தொழிலாள‌ர்களைப் பணியை விட்டு நீக்கியது ஐ.பி.எம் அதற்கு “அப்பலோ” எனப் பெயரிட்டார்கள்.(3)

download
எதற்காகப் பணிநீக்கங்கள்?

மறு சீரமைப்பு எனப் பெயரிட்டு இந்தப் பணிநீக்கங்களை ஐ.டி. நிறுவனங்கள் நடத்துகின்றன. ஆனால் இதன் உண்மையான நோக்கம்  திட்டமிடப்பட்ட இலாபம் எக்காரணத்தைக் கொண்டும் குறைந்து விடக்கூடாது என்பதே, அதற்காகவே தொழிலாளர்களைப் பணியை விட்டு நீக்குகின்றன. இதில் நான்கிலிருந்து 13 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்ட தொழிலாளர்களே குறி வைக்கப்படுகின்றனர். ஐ.பி.எம் நிரந்தரத் தொழிலாளர்களைப் பணிநீக்கம் செய்து விட்டு அதிகமாக ஒப்பந்தத் தொழிலாளர்களை அமர்த்தத் திட்டமிட்டுள்ளது. நிரந்தரத் தொழிலாளர்கள் என்றால் குறைந்தபட்ச உரிமைகளாவது கொடுக்க வேண்டும், ஒப்பந்த தொழிலாளர் என்றால் எதுவுமே தேவையில்லை, சம்பளமும் குறைவாகக் கொடுத்தால் போதும் என்பதே இதற்குக் காரணம்.

இப்பணி நீக்கங்கள் எல்லாம் சட்டபூர்வமானவையா ?

இப்பணி நீக்கங்கள் எதுவும் சட்டபூர்வமானவையல்ல, எல்லாம் சட்டத்திற்கு எதிராகவே நடைபெறுகின்றன. சட்டப்படி கர்நாடகாவில் 50 பேருக்கு மேல் ஒர் ஐ.டி நிறுவனம் பணி நீக்கம் செய்கின்றது என்றால் தொழிலாளர் ஆணையத்திடம் அறிவிக்க வேண்டும். அதே போலத் தொழிற்சாலை தகராறுச் சட்டம் இறுதியாகச் சேர்ந்தவரை முதலிலும், முதலில் பணிக்கு சேர்ந்தவரை இறுதியாகவும் பணி நீக்கம் செய்ய வேண்டும் எனச் சொல்கின்றது.  ஆனால் இன்று ஆயிரக்கணக்கில் பணி நீக்கம் செய்யும் டி.சி.எஸ்ஸோ, ஐ.பி.எம்-மோ இது போன்ற‌ எந்த‌ விதிகளையும் பின்பற்றாமல் சட்டத்திற்கு எதிராகச் செயல்படுகின்றனர்.

அதே போலப் பணிநீக்கம் செய்யப்படுவோருக்கு உரிய இழப்பீட்டுத்தொகை (Compensation) எதையும் அளிக்காமல் அவர்கள் விருப்பத்திற்கு ஒரு மாதம் அல்லது இரண்டு மாதம் என ஊதியம் வழங்கி வருகின்றார்கள். தொழிற்சாலைத் தகராறுச் சட்டப்படி ஓர் ஊழியர் பணியிலிருந்து விலகும் போதோ, விலக்கப்படும் போதோ அவர் பணியாற்றிய ஒவ்வொரு ஆண்டிற்கும் 15 நாட்கள் என்ற கணக்கில் அவர் இறுதியாக வாங்கும் ஊதியத்தைக் கணக்கிட்டு இழப்பீடு வழங்க வேண்டும். எடுத்துக்காட்டாக ஒருவர் 8 ஆண்டுகள் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்திருந்தால், அவர் இறுதியாக வாங்கும் ஊதியத்தை வைத்துக் கணக்கிட்டு 4 மாத ஊதியம் அவருக்குக் கொடுக்கப்பட வேண்டும். அதுமட்டுமின்றி நமது வேலை அளிப்புக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அறிவிப்புக் காலத்திற்கு (Notice Period) உரிய ஊதியமும் கொடுக்கப்பட வேண்டும்.

FITE-1024x768

என்ன செய்ய வேண்டும் ?

ஐ.டி. நிறுவனங்களுக்கு நாஸ்காம் என்ற அமைப்பு உண்டு, நிறுவனங்கள் தங்கள் நலன்களைப் பாதுகாப்பதில் கவனமாக உள்ளார்கள், நாம் அப்படி இல்லாததன் விளைவுதான் இன்றைய நிலை. நாம் இன்று நுகரும் 8 மணி நேர வேலை நேரம் உள்ளிட்ட எல்லா உரிமைகளும் தொழிலாளர்களின் போராட்டங்களினால் பெறப்பட்டது. பெங்களூரில் ஓர் அரசு அலுவலரைச் சந்திக்கும் போது அவர் கூறியது என்னவென்றால், பெங்களூரில் உள்ள ஐ.டி. நிறுவனங்களின் எண்ணிக்கை 4000-த்திற்கு மிகாமல் இருக்கலாம், அதில் பணிபுரியும் தொழிலாளர்களின் எண்ணிக்கையானது குறைந்தது ஐந்து  இலட்சத்திலிருந்து ஆறு இலட்சம் வரை இருக்கலாம். இந்த ஆறு இலட்சம் ஊழியர்கள் ஒன்றாக இணைந்தால் 4000 நிறுவனங்கள் எம்மாத்திரம். தொழிலாளர்களின் ஒற்றுமையும், அவர்களது போராட்டமுமே அவர்களது உரிமையை மீட்டெடுக்க உதவும் என்ற முந்தைய வரலாற்றைப் பாடமாகக் கொண்டு, இன்று நாம் ஒன்றிணைந்து நமது உரிமைகளுக்காகப் போராட வேண்டிய நேரமிது.

இந்த நேரத்தில் அண்மையில் ஐ.டி. தொழிலாளர்களின் உரிமைகளைக் காக்கவும், நலன்களை மேம்படுத்தவும் உருவான “தகவல் தொழில்நுட்ப ஊழியர்களுக்கான மன்றத்தை” (Forum for IT Employees) நான் நினைவுக் கூறுகின்றேன். இந்த மன்றம்தான் டி.சி.எஸ். நிறுவனத்தின் சட்டத்திற்குப் புறம்பான பணிநீக்கத்தை எதிர்த்து இந்தியா முழுவதும் பரப்புரை, போராட்டம், நீதிப் போராட்டம் எனத் தொடர்ந்து நடத்தி வருகின்றது. இது டி.சி.எஸ். தொழிலாளர்கள் என்றல்ல, இந்தியாவில் எந்த நிறுவனத்தில் ஐ.டி. தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்காகக் குரல் கொடுக்க இம்மன்றம் ஆயத்தமாக உள்ளது. இது போன்ற மன்றங்களில் இணைந்து நாம் நமது உரிமைகளை மீட்டெடுப்போம்.

About நற்றமிழன்

ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் தரக்கட்டுபாட்டுத் துறையில் பணி புரிகின்றார். தற்சமயம் திருப்பூரில் வசித்து வருகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*