Home / அரசியல் / “வாழ்க குடியரசு, வளர்க குற்றவாளிகள்”
இந்தியில் பெயர் வைத்ததால் அணிவகுப்பில் பங்கு கொண்ட ஊர்திகள்

“வாழ்க குடியரசு, வளர்க குற்றவாளிகள்”

இந்தியாவின் 66 ஆவது குடியரசு நாள் கொண்டாட்டங்கள் சனவரி 26 அன்று நாடு முழுவதும் நடைபெற்றன. அக் கொண்டாட்டங்களில் ஒன்றிய‌, மாநில அரசுகள் மேற்கொண்ட குற்றங்களுக்குக் கொஞ்சமும் குறைவில்லை. அதைப் பற்றிய ஒரு கழுகுப் பார்வையே இக்கட்டுரை…

ஒன்றிய அரசு(Union Government) – ஆம், அரசியல் சாசனத்தின் படி இந்திய அரசை அப்படித்தான் அழைக்க வேண்டும், ஆனால் நமக்கு நடுவண் அரசு அல்லது மத்திய அரசு என்று அழைத்துதான் பழக்கம். குடியரசு நாளன்று ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் அம்மாநில சிறப்புகளைப் பறைசாற்றும் வகையில் ஊர்தி அணிவகுப்பு தில்லியில் நடைபெறும். இம்முறை இந்தியில் பெயர் எழுதிய மாநிலங்களைச் சேர்ந்த ஊர்திகள் மட்டுமே அணிவகுப்பில் கலந்துகொண்டன. தங்களது தாய் மொழியில் மாநிலங்களின் பெயரை எழுதியிருந்ததாலும், பா.ச.க. ஆளாத மாநிலங்கள் உள்ளிட்டப் பல்வேறு காரணங்களால் தமிழ்நாடு, கேரளா, ஒதிசா, பீகார், மேற்கு வங்கம், நாகாலாந்து, திரிபுரா, மணிப்பூர், மிசோரம், இமாச்சலப் பிரதேசம், இராச்சசுத்தான், பஞ்சாப், தில்லி உள்ளிட்ட 13 மாநிலங்களின் ஊர்தி அணிவகுப்புக்கு இசைவளிக்கவில்லை(1).

இந்தியில் பெயர் வைத்ததால் அணிவகுப்பில் பங்கு கொண்ட ஊர்திகள்

இந்தியில் பெயர் வைத்ததால் அணிவகுப்பில் பங்கு கொண்ட ஊர்திகள்

இந்தியாவைப் பற்றி ஒருவரியில் சொல்லுங்கள் என்று கேட்டால் சிறு வயது மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை சொல்லுவது “வேற்றுமையில் ஒற்றுமை” என்பதைத்தான்.  ஆனால்  இங்கு இந்தியாவின் மொழி வேற்றுமையின் மேல் இந்தி வலிந்து திணிக்கப்படுகின்றது. இந்தி ஒன்று தான் இந்தியாவின் மொழி என்ற மாயப்பிம்பம் உருவாக்கப்படுகின்றது.  மீண்டும் ஒரு மொழிப்போரை இந்திப் பேசாத மாநிலங்களின் மீது திணிக்கின்றது ஒன்றிய அரசு. இந்திய ஒன்றிய அரசே  “மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி, தேச ஒற்றுமைக்குக் குந்தகம் விளைவிக்கின்றது”. நான் ஆட்சிக்கு வந்தால் மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் எனக்கூறிய மோடி, மாநிலங்களின் ஊர்தியைக்கூடக் குடியரசு நாளில் அனுமதிக்க மறுக்கின்றார் என்பதுதான் உண்மைநிலை.  அதுமட்டுமின்றித் தகவல்-ஒளிபரப்புத் துறையின் சார்பில் நாளிதழ்களுக்குக் கொடுக்கப்பட்ட விளம்பரங்களில் 1976 ஆம் ஆண்டில் திருத்தப்பட்ட அரசியலமைப்புச் சட்ட முகப்பு இல்லாமல் 1950 ஆம் ஆண்டு முகப்பே உள்ளது. அதாவது 1976 ஆம் ஆண்டில் சேர்க்கப்பட்ட “மதச்சார்பற்ற”, “சோசலிச” ஆகிய சொற்கள் இல்லாத அவர்களுக்குத் தேவையான 1950 ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்ட முகப்பைப் பயன்படுத்தியுள்ளார்கள். இதன்மூலம் நேரடியாக அவர்கள் சொல்ல விரும்பும் சேதி – இந்தியா ஒரு மதச்சார்புள்ள, முதலாளித்துவ அரசு என்பதே.

ஊழல் குற்றவாளியை முகப்பில் கொண்ட ஊர்தி அணிவகுப்பு

ஊழல் குற்றவாளியை முகப்பில் கொண்ட ஊர்தி அணிவகுப்பு

தமிழ்நாட்டில் நடைபெற்ற குடியரசு நாள் ஊர்தி அணிவகுப்பில் ஊழல் வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்க‌ப்பட்ட செயலலிதாவின் புகைப்படம் நீக்கமற நிறைந்திருந்தது. ஊழல் வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட ஒருவரின் புகைப்படத்தைக் குடியரசு நாளில் ஊர்திகளின் முகப்பில் மாட்டி அணிவகுப்பில் ஈடுபடச்செய்வது அரசியல் சாசனத்தைக் கேலிக்கூத்தாக்கும் செயல். சட்டம், விதிகள் என எல்லாம் மக்களுக்கு மட்டுமே பொருந்தும்; அரசுக்கோ, அதில் உள்ள அதிகாரிகளுக்கோ கிடையாது என்ற கூற்றை மீண்டும், மீண்டும் மெய்ப்பிக்கின்றன இது போன்ற செயற்பாடுகள். அதுமட்டுமின்றி உண்மையில் மன்னராட்சிதான் இங்கு நடைபெறுகின்றது என்பதைத்தான் ஒன்றிய, மாநில அரசுகளின் செயற்பாடுகள் நமக்குக் காட்டுகின்றன. நான் வைத்தது தான் சட்டம், பிடித்தால் இரு, இல்லாவிட்டால் ஓடு என மறைமுகமாகச் சொல்கின்றார்கள்.

 66ஆவது குடியரசு நாள் விழா என எழுதுவத‌ற்கு பதிலாக 65ஆவது குடியரசு நாள் என எழுதிக் கொண்டாடிய மகாராசுட்டிர அரசு....

66ஆவது குடியரசு நாள் விழா என எழுதுவத‌ற்கு பதிலாக 65ஆவது குடியரசு நாள் என எழுதிக் கொண்டாடிய மகாராசுட்டிர அரசு….

இந்தியா முழுக்க 66 ஆவது குடியரசு நாளை கொண்டாட உண்மையான தேச பக்தர்களான பா.ச.க. வினால் ஆளப்படும் மகாராசுட்ராவில் ‘65’ ஆவது குடியரசு நாளை கொண்டாடி இருக்கின்றார்கள். ஆம் மகாராசுட்ரா அரசு நடத்திய குடியரசு விழாப் பதாகையில் 65ஆவது குடியரசு நாள் என அச்சிடப்பட்டிருந்தது இப்படித்தான் உள்ளது இவர்களது தேச பக்தி. எத்தனையாவது குடியரசு நாள் கொண்டாடுகின்றோம் எனத் தெரியாத இவர்கள்தான் நமக்குத் தேசபக்தியைக் கற்பிக்கின்றார்கள். எல்லோரும் விடுதலைக்காகப் போராடிக்கொண்டிருந்த பொழுது ஆங்கிலேய அரசுக்குத் தொண்டுச் செய்தவர்களிடம் இதைவிட வேறு என்ன எதிர்பார்க்க முடியும். இவற்றையெல்லாம் பார்க்கும் பொழுது இறுதியாக ஒன்று மட்டுமே தோன்றுகின்றது.

“வாழ்க குடியரசு, வளர்க குற்றவாளிகள்”

நற்றமிழன். ப‌.

தரவுகள்

1) http://english.manoramaonline.com/news/just-in/kerala-other-non-bjp-states-unrepresented-at-r-day.html

About நற்றமிழன்

ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் தரக்கட்டுபாட்டுத் துறையில் பணி புரிகின்றார். தற்சமயம் திருப்பூரில் வசித்து வருகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*