Home / ஈழம் / இலங்கை புறக்கணிப்பு / தமிழினப்படுகொலையே இலங்கையின் அரச கொள்கை…

தமிழினப்படுகொலையே இலங்கையின் அரச கொள்கை…

இலங்கை அதிபராக இராசபக்சே எனும் கடும்போக்காளர் தோல்வி அடைந்து இலங்கையில் மைத்ரிபால எனும் புதிய அதிபர் பொறுப்பேற்றுள்ளார். இதனால் ஒரு சனநாயக மாற்றம் இலங்கையில் நடைபெற்றுள்ளது போலவும், 13 ஆவது சட்டதிருத்தத்தை இலங்கை அரசு நடைமுறைபடுத்த தயாராக உள்ளது என்பது போன்ற கருத்துக்களை இந்திய ஊடகங்களாலும் அரசு ஆதரவாளர்களாலும் தொடர்ந்து கருத்துகள் பரப்படுகின்றன. இந்தச் சிந்தனையில் இருந்து தான் மைத்ரிபாலவின் இந்திய வருகை ‘இந்திய – இலங்கை’ உறவில் புதிய கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என அவர்கள் நம்புகின்றனர் அல்லது மக்களை நம்ப வைக்க முயலுகின்றனர்.

இலங்கையில் ஈழத் தமிழர்கள் ஒடுக்குமுறைக்கு உள்ளாவதை, கொல்லப்படுவதை இராசபக்சே அல்லது இரணில் விக்கிரமசிங்கே போன்ற அரசியல் தலைவர்கள் செய்த தவறுகள் என்றோ இலங்கை சுதந்திரக் கட்சி அல்லது ஐக்கியத் தேசக் கட்சியின் தவறான கொள்கை என்று பார்ப்பது நாம் இலங்கையின் அரசியலைத் தவறாகப் புரிந்து கொள்வதன் வெளிப்பாடு.

சிங்கள அரசு என்பது எவ்வாறு உருவானது எந்த அரசியல் கோட்பாடுகளை அடிப்படையாக வைத்து வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது என்பதை நாம் முழுமையாக விளங்கிக் கொண்டால் தான் சிங்கள தேசியம் என்பது அதன் தோற்றத்திலேயே சனநாயக கூறுகளுடன் வளர்த்தெடுக்கப்படாமல் தீவிர சிங்கள பெளத்த பேரினவாதமாக வளர்த்தெடுக்கப்பட்டுள்ளதை விளங்கிக் கொள்ள முடியும். இந்தப் பேரினவாதத்தின் மீது ஏறி நின்று கடந்த 60 ஆண்டுகாலமாகப் பல்வேறு கட்சிகள் இலங்கையில் ஆட்சி செய்தாலும் தலைவர்களின் முகங்கள் மாறினாலும் அவர்கள் அனைவரின் அடிப்படை கொள்கை என்பது தமிழ் மக்களைக் கொன்று ஒழிப்பது தான்.

நவின இலங்கையின் தந்தை என்று அழைக்கபடும் ஐக்கியத் தேசக் கட்சியின் தலைவர் டி.எசு சேனநாயக்கா தான் இலங்கையில் முதன் முதலில் தமிழர்களின் தாயகப் பகுதியில் திட்டமிட்ட கட்டாயச் சிங்களக் குடியேற்றங்களைத் தொடங்கி வைத்தவர்.

1948 ஆம் ஆண்டுக் கல்லோயா எனும் இடத்தில் சிங்களர் – தமிழ் மக்கள் எல்லைப் பகுதியில் சிங்கள குடியேற்றத்தை தொடங்கி வைத்த அப்போதைய பிரதமரான சேனநாயக்கா ‘நீங்கள் தான் எதிர்காலச் சிங்கள மக்களின் பாதுகாவலர்கள்’ என்று உரையாற்றினார்..

1956 இல் சாலமன் பண்டாரநாயக ஆட்சி காலத்தில் ‘தனிச் சிங்களச்’ சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு 1958 வரை தொடர்ந்து தமிழ் மக்கள் மீது வன்முறை ஏவிவிடப்பட்டுப் படுகொலைகள் நடைபெற்றது.

1977, 1981, 1983 கருப்பு யூலை வன்முறை …….. என ஐக்கியத் தேசிய கட்சியின் ஜே.ஆர். செயவர்த்தன அதிபராக இருந்த காலத்தில் திட்டமிட்ட வகையில் இனப்படுகொலையைத் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்டனர். இந்தக் காலகட்டத்தில் 1981 இல் தான் யாழ் நூலகம் எரிக்கப்பட்டது. இந்தக் காலகட்டத்தில் பிரமதேசா இலங்கையின் பிரதமராக இருந்தார்.

இன்று 2015 இல் இலங்கையில் பிரதமராக உள்ள இரணில் விக்கிரமசிங்கே அன்று செயவர்த்தனா தலைமையிலான ஆட்சியில் அமைச்சராக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

செயவர்தனாவின் ஆட்சிக் காலத்தில் தான் 1978 இல் ‘பயங்கரவாத தடைச் சட்டம்’ நிறைவேற்றப்பட்டது.

காவல்துறையினர் எந்தவித முன் அனுமதியும் இன்றி யாரையும் கைது செய்யலாம், சிறையில் அடைக்கலாம் என்று அடக்குமுறை வழிகளைக் கொண்ட இந்தச் சட்டம் இன்றும் நடைமுறையில் உள்ளது.

1987 இல் இந்திய-இலங்கை ஒப்பந்தம் மூலம் இந்திய இராணுவத்தை அமைதிப்படை எனும் பெயரில் இலங்கைக்கு வரச்செய்து தமிழர்களைக் கொன்று குவித்தது.

1998 இல் இலங்கை சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சந்திரிகா குமாரதுங்க இலங்கையின் அதிபராக இருந்த பொழுதுதான் செம்மணி எனும் இடத்தில் போராளிகள் அல்லாத அப்பாவி பொதுமக்கள் 500க்கும் மேற்பட்டவர்கள் இலங்கை இராணுவத்தினால் கொல்லப்பட்டுப் புதைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் 2009 மிகக் கொடுரமான இனப்படுகொலையை முள்ளிவாய்ககாலில் இராசபக்சே தலைமையில் தமிழ் மக்கள் எதிர்கொண்டனர். இந்தக் கொலையின் இறுதி காலகட்டமான மே 16,17,18, 2009 ஆண்டில் இன்றைய அதிபரான மைத்ரிபால இலங்கையின் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்து பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவிக்கக் கையெழுத்திட்டவர்.

10959307_658786864244642_4152614614940105933_n

இதனைத் தொகுத்துப் பார்த்தால் தொடக்கத்தில் இலங்கை ஆட்சியாளார்கள் சிங்கள கைதிகளைக் கொண்டு தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துவதைத் தொடங்கி, பின்னர்க் காவல்த்துறை, இலங்கை இராணுவம், அரசியல் ஒப்பந்தங்கள், பன்னாட்டு உளவுத்துறை, பன்னாட்டு இராணுவம் என அனைத்தையும் திரட்டி தமிழர்களை அழித்தொழிக்கும் தங்கள் கொள்கைக்குத் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர்.

எனவே காலம் காலமாகச் சேனநாயக்கா, பண்டாரநாயக்கே, செயவர்த்தனே, பிரமதேசா, சந்திரிக்கா, விக்ரமசிங்கே, இராசபக்சே, மைத்ரிபால என இலங்கையில் தலைவர்கள் மாறினாலும், ஐக்கியத் தேசக் கட்சி அல்லது இலங்கை சுதந்திரக் கட்சி எனக் கட்சிகள் மாறினாலும் அவர்கள் அனைவரும் தமிழர்களை இனப்படுகொலை செய்வது என்பதைத் தான் தங்களின் அடிப்படை அரச கொள்கையாகக் கொண்டுள்ளனர்.

இந்த வரலாற்று படிப்பினையுடன் நோக்கினால் இலங்கையில் சிங்கள தலைவர்கள் ஆட்சி மாறினாலும் தமிழர்கள் ஒடுக்கப்படுவது கொல்லப்படுவது வெவ்வேறு வழிகளில் தொடர்வதைத் தமிழர்கள் நாம் விளங்கிக் கொள்வதும் இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமுகத்திற்கு இதனை இன்னும் ஆழமாக எடுத்துச் செல்வதும் இன்று முதன்மையானதாகும்.
ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை இலங்கை அரசின் அடிப்படைக் கொள்கை என்பது அடக்குவது, ஒடுக்குவது. கொல்வது தான். அதுவே இனப்படுகொலை கொள்கையாக இன்றும் தொடர்கின்றது.

இதில் மாறும் சிங்களத் தலைவர்களிடம் தில்லியிலும் கொழும்புவிலும் வைத்து மாறி மாறி பேச்சுவார்த்தை நடத்துவதால் தீர்வு காண முடியும் என்று காலத்தைக் கடத்தும் இந்திய அரசு தொடர்ந்து தமிழ் இனப்படுகொலையை நடத்தி முடிக்க இலங்கைக்குக் காலத்தை வழங்கி வெளிப்படையாகவே இனக்கொலையை ஆதரித்து வருகின்றது.
தமிழர்கள் மீது நடத்தப்படும் இனப்படுகொலைக்கு ஒரு முழுமையான பன்னாட்டு விசாரனையை இந்தியா சர்வதேச தளத்தில் கோருவது தான் இனக்கொலைக்கான நீதியாக இருக்க முடியும். தமிழ் மக்களின் பாதுகாப்பிற்காக ஈழத் தமிழர்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்துவது தான் அரசியல் தீர்வாக இருக்கமுடியும்.

இளங்கோவன் – இளந்தமிழகம் இயக்கம்.

About இளங்கோவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*