Home / அரசியல் / காந்தியை ஏன் கொன்றார்க‌ள்?

காந்தியை ஏன் கொன்றார்க‌ள்?

“ஆங்கிலேயரிடமிருந்து இந்தியா சுதந்திரம் பெற்ற 165 ஆம் நாள், காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தியாவை காந்தி மதச்சார்பற்ற நாடு என்று சொன்ன 53 ஆம் நாள், அதாவது 1948- சனவரி 30, நாதுராம் கோட்சேவினால் சுட்டுக் கொல்லப்படுகிறார். இந்தியா சுதந்திரமடைந்தவுடன் காந்தி, பார்ப்பனர்களின் நடத்தையைப் பார்த்து சுயமரியாதைக்காரர் ஆகி விட்டார். அவர் கொல்லப்படாவிட்டால், இந்தியா சுயமரியாதைக் கொள்கை நாடாகி இருக்கக் கூடும்” என்று பெரியார் தனது நாட்குறிப்பில் எழுதுகிறார்.

காந்தியைக் கொன்ற கோட்சே ஒரு தேசபக்தர். அவருக்கு சிலை வைக்க வேண்டும் என்று வெளிப்படையாக பேசுமளவுக்கு இன்று அரசியல் சூழல் தலையெடுத்திருக்கின்றது. ”இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கு காந்தியே முக்கியமானவர். காந்தி இந்துக்களைக் கைவிட்டு விட்டு, முசுலிம்களை ஆதரித்தார். பிரிவினையின் போது, இந்து ஏதிலியர்களின் (அகதிகளின்) துயரைப் பாராது, முசுலிம்களைக் காப்பாற்றுவதையே குறிக்கோளாகக் கொண்டிருந்தார்.மேலும் பாகிஸ்தானுக்கு இழப்பீடாக 55 கோடி ரூபாய் தர வேண்டும் என்பதையே காந்தி வலியுறுத்திக் கொண்டிருந்தார். காந்தி உயிரோடிருந்தால், ”இந்து ராஷ்டிரத்துக்கு” பெரும் தடைக்கல்லாக இருந்திருப்பார். ஆகவே பாரத மாதாவைக் காப்பாற்ற வேண்டுமென்றால், காந்தியைக் கொல்வதைத் தவிர வேறு வழியில்லை” போன்ற பல காரணங்களை இந்து வெறியர்களும் கோட்சே ஆதரவாளர்களும் இன்றளவும் முன் வைக்கின்றனர்.

காந்தியைக் கொன்றதற்கு “பாகிஸ்தான்” பிரிவினையையும் அதனையொட்டிய விளைவுகளையும் காரணங்களாக அடுக்கும், இந்துத்துவாதிகள் ஒரு செய்தியை வசதியாக மறந்து விடுகின்றனர். கடைசியாக 1948 சனவரி 20 ஆம் திகதியும், 30 ஆம் திகதியும் காந்தி உயிர் மீது குறி வைக்கப்படுவதற்கு முன்பாகவே, பதிவு செய்யப்பட்ட கொலை முயற்சிகள் நான்குமுறை நடந்திருக்கின்றன. தோல்வியடைந்த ஐந்து கொலை முயற்சிகளில் நான்கு முயற்சிகள், முசுலிம்களின் கொள்கைத் திட்டங்களில் ”பாகிஸ்தான்” என்பது இடம் பெறாத காலத்தில் நடைபெற்றவை. அதாவது பாகிஸ்தான் பிரிவினை பேச்சு எழுமுன்பே, காந்தியின் உயிருக்கு தேதி குறிக்கப்பட்டிருக்கிறது. 1934 இல், காந்தி காரில் சென்று கொண்டிருந்த போது, பூனாவில் ஒரு கை வெடிகுண்டு அவர் வண்டி மீது வீசப்பட்டது. அது தான் முதல் முயற்சி. அன்றிலிருந்து சனவரி 30 வரை, பதிவு செய்யப்பட்ட கொலை முயற்சிகள் நான்கு. பதிவு செய்யப்படாத முயற்சிகளின் எண்ணிக்கை பத்து.

தோல்வியடைந்த நான்கு தாக்குதல்களும் பூனாவைச் சேர்ந்த உயர் சாதி இந்துக்களால் நடத்தப் பட்டவை. இந்த நான்கில் மூன்று முயற்சிகள் “நாராயண் ஆப்தே-கோட்சே” கும்பலால் மேற்கொள்ளப்பட்டவை. இதில் இரண்டு முறை நாதுராம் கையும் களவுமாக பிடிபட்டிருக்கிறான்.

மேற்சொன்ன அனைத்து முயற்சிகளிலும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. இச்சதியில் ஈடுபட்ட அனைவருமே சித்பாவன பார்ப்பனர்கள். அனைவரும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தோடு தொடர்புடையவர்கள். அல்லது ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கியவர்கள்.

காந்தி கொல்லப்பட்ட சனவரி 30, 1948 ஆம் நாளுக்கு, பத்து நாட்களுக்கு முன்பே ஒரு கொலை முயற்சி நடந்திருந்தது. சனவரி 20 ஆம் நாள், தில்லி பிர்லா மாளிகையில் நடைபெற்றுக் கொண்டிருந்த வழிபாட்டுக் கூட்டத்தில், மதன்லால் பெஹ்வா என்ற பாகிஸ்தானிலிருந்து வந்த ஏதிலி, பயங்கரமான வெடிகுண்டை வீசி வெடிக்கச் செய்தான். இந்த தாக்குதலில் காந்தி உயிர் தப்பினார். அவன் கைது செய்யப்பட்ட பிறகு, நடந்த விசாரணையில், காந்தியைக் கொல்வதற்கு சதி செய்து கொண்டிருந்த ஒரு கும்பலில் தானும் ஒருவன் என்பதை ஒப்புக் கொண்டான். அந்த கும்பலின் தலைவர்கள் பூனாவைச் சேர்ந்தவர்கள் என்பதையும், அவர்களில் ஒருவன் “இந்து ராஷ்டிரா”, “அக்ரானி” ஆகிய செய்தி இதழ்களின் ஆசிரியராகவும், வெளியீட்டாளராகவும் இருப்பவன் என்பதையும் அவன் ஒப்புக் கொண்டான். இவ்விரண்டும் மராத்தி மொழிக் கிழமை இதழ்கள். இவ்விரண்டையும் அச்சிட்டு நடத்தி வந்தவர்கள், நாதுராம் கோட்சேவும், நாராயண் ஆப்தேவும்.

சனவரி 20 ஆம் தேதி “மதன்லால்” ஆல் மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சி தோல்வியடைந்த பின், பம்பாயிலிருந்த இந்தி மொழிப் பேராசிரியரான ஜே.சி.ஜெயின் என்பவர், பம்பாய் மாநிலத்தின் அப்போதைய உள்துறை அமைச்சராக இருந்த மொர்ராஜி தேசாயிடம் ஒரு தகவலைத் தெரிவித்தார். மதன்லால் கஷ்மீரிலால் பெஹ்வா எனும் ஒருவன் தில்லியில் காந்தியைக் கொல்வதற்குத் திட்டமிட்ட கும்பலில் தானும் ஒருவன் என்ற தற்பெருமையோடு தன்னிடம் கூறியதை ஜே.சி.ஜெயின், மொர்ராஜி தேசாயிடம் எடுத்துக் கூறினார். தேசாய் ஜெயினின் எச்சரிக்கையைப் பொருட்படுத்தவில்லை. ஆனால் அகமதாபாத்தில் தேசாய், சர்தார் படேலைச் சந்தித்த போது இத்தகவலைச் சொல்லியிருக்கிறார். இச்சதித்திட்டம் நிலவுவதைப் பற்றி படேல் ஒப்புக் கொண்டிருந்தாலும், ஜெயின் சொல்லும் செய்தி கற்பனையானது என்று அதனை ஏற்க மறுத்து விட்டார்.

பூனா காவல்துறைக்கும் பம்பாய் காவல்துறைக்கும் “இந்து ராஷ்டிரா மற்றும் அக்ரானி” இதழ்களைப் பற்றியும் அதன் ஊழியர்கள், பின்னணியில் உள்ள மனிதர்கள் ஆகியோரைப் பற்றியும் நன்கு தெரியும். இதில் வேடிக்கை என்னவென்றால், பூனாவிலுள்ள காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்படவேயில்லை. உதவிக்காகக் கூட அவர்கள் கேட்கப்படவில்லை. சனவரி 20 கொலை முயற்சிக்குப் பின் காவல்துறை, சிறிதளவு முயற்சி செய்திருந்தாலும் காந்தி கொலையைத் தடுத்திருக்க முடியும். ஆனால் சனவரி 20 முதல் 30 வரை, காவல்துறையினர் எடுத்த நடவடிக்கைகள், அவரது கொலையைத் தடுப்பதற்காக எடுக்கப்பட்டவை என்பதை விடக் கொலையாளிகளைக் காப்பாற்றுவதற்காகவும், அவர்கள் எளிதாகத் தங்கள் திட்டங்களை நோக்கி முன்னேறுவதற்குத் துணை செய்வதாகவுமே அமைந்திருந்தன.

p130(1)

உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் படேலுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட கமுக்கமான அறிக்கை ஒன்றில், பல காவல்துறை அதிகாரிகளும் அதிகார வர்க்கத்தினரும் ராஷ்ட்ரிய சுயம் சேவக் ( ஆர்.எஸ்.எஸ்) சங்கத்திலும், இந்து மகா சபையிலும் உறுப்பினர்களாக இருக்கிறார்கள் என்றும் அவர்கள் அனைவரும் இந்துத் தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவும் உதவியும் அளித்து வந்தனர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. காந்தியைக் கொல்லும் முயற்சிகள் அனைத்திற்கும் அதிகார வர்க்கத்தினரும் காவல்துறையினரும் ஒட்டு மொத்தமாக உதவி செய்திருக்கின்றனர் என்பது இதன் மூலம் வெளிப்படையாகிறது. தன்னுடைய 22 ஆம் வயதிலிருந்து ஆர்.எஸ்.எஸ்ஸோடு இணைந்திருந்தவன் நாதுராம் கோட்சே. வி.டி.சாவர்க்கரை தெய்வத் தன்மை கொண்ட ஒரு குருவாக பின்பற்றி வாழ்ந்தவன்.

இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது, செய்ய ஒன்றும் இயலாத நிலையில், நாட்டையே நடுங்கச் செய்யக்கூடிய ஏதேனும் ஒன்றைச் செய்தாக வேண்டும் என கோட்சேவும் அவரது கூட்டாளிகளும் ஒன்றாக அமர்ந்து சிந்தித்தார்கள். மூளையை கசக்கிப் பிழிந்தார்கள். பாகிஸ்தானுக்குச் செல்லக்கூடிய ஆயுத இரயில் ஒன்றைப் பாகிஸ்தானிலேயே வெடிக்கச் செய்யலாமா? ஜின்னாவையும் அவரது சட்டசபையையும் ஒரே வீச்சில் அழித்து விடலாமா ? பாலங்களை வெடிக்கச் செய்யலாமா? அப்போதுவரை இந்தியாவுடன் இணையாதிருந்த ஹைதராபாத் மாகாணாத்தில் கொரில்லாத் தாக்குதல்கள் நடத்தலாமா ? இப்படியெல்லாம் சிந்தித்தார்கள். அதற்காக அதிக அளவு பணச் செலவு செய்து, ஆபத்துகளைப் பற்றி கவலைப் படாமல், வெடிபொருள்களையும் ஆயுதங்களையும் வாங்கிக் குவித்தார்கள். இந்தத் திட்டங்களையெல்லாம் விட ஆகச் சிறந்த திட்டம் ஒன்றை அவர்கள் கண்டு பிடித்து விட்டார்கள். “தேசத் தந்தை” என்று கருதப்படும் காந்தியின் உயிரை முடிப்பது என்று வெளிப்படையான பெருமித்தோடு நாதுராம் கோட்சே பின்னர் வாக்குமூலம் அளித்தான்.

காந்தியை அரசியல் களத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்ற நோக்கம், இந்தியாவை ஒரு முழுமையான இந்து நாடாக மாற்ற வேண்டும் என்ற விபரீதக் கனவிலிருந்து பிறப்பெடுத்தது. பிரிவினை முழுமையாக அமைய வேண்டும். இந்தியாவில் ஒரு முஸ்லிம் கூட இருக்கக் கூடாது. அனைவரும் விரட்டியடிக்கப்பட வேண்டும். அல்லது கொடூரமாக கொல்லப்பட வேண்டும். இந்தத்திட்டத்தை காந்தி முறியடித்து விட்டார். பிரிவினையின் போது முசுலிம்கள் வட இந்தியப்பகுதிகளிலிருந்து முழுமையாக பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட வேண்டும். இது நடந்து விட்டால், நாட்டின் எஞ்சிய பகுதிகளிலிருந்து முசுலிம்களை விரட்டுவது மிக எளிதாகி விடும். அதன் பிறகு, “உண்மையான இந்து நாடு” என்பது உருவாகி விடும். இதே முறையை முசுலிம் லீக்கும் மேற்கொண்டது. மேற்கு பஞ்சாப், சிந்து, வடமேற்கு எல்லைப்புற மாநிலங்கள் கிழக்கு வங்காளம் ஆகிய பகுதிகளில் வாழ்ந்த இந்துக்களை பாகிஸ்தானை விட்டு வெளியேறாவிட்டால் கொன்று விடுவோம் என்று அச்சுறுத்தி வந்தார்கள்.

நாட்டை விட்டு ஓடும் நிலையிலிருந்து முசுலிம்கள் காந்தியின் முயற்சிகளால், மீண்டும் உறுதியளிக்கப்பட்ட மக்களாக இங்கே இருந்தார்கள். வெறி கொண்ட இந்துத் தீவிரவாதிகள், பாகிஸ்தான் என்ற ஒரு நாடு உருவான பின்பு, இந்தியாவில் வாழ்வதற்கான தகுதியை முசுலிம்கள் இழந்து விட்டார்கள் என்றும், தம்முடைய கனவுகளுக்கெல்லாம் காந்தி தடைக்கல்லாக இருக்கிறார் என்றும் கருதத் தொடங்கினர். இந்து முசுலிம் கலவரங்களில் எண்ணற்றோர் கொல்லப்பட்டனர். இக்கலவரங்களை கட்டுக்குள் கொண்டு வரவும், இந்து முசுலிம் ஒற்றுமையை வலியுறுத்தியும், பாகிஸ்தானுக்கு உறுதியளிக்கப்பட்ட 55 கோடி ரூபாய் ( பிரிவினையின் போது நான்கில் ஒரு பங்கு, அதாவது 220 கோடியில் ஒரு பங்கு) பணத்தை திருப்பித் தரவும் கோரி காந்தி சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கலானார். காந்தி மவுண்ட் பேட்டனோடு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருக்கும் போதே, இம்முடிவை எடுக்கலானார். இந்தியாவின் பதினான்கு மொழிகளில் இச்செய்தி வெளியானது. பூனாவில் “இந்து ராட்டிர” செய்தித்தாள் அலுவலகத்தில், ஒரு தொலையச்சுக் கருவியில் இதைப் படித்தார்கள் ஆப்தேவும் கோட்சேவும். காந்தியைக் கொல்ல வேண்டும் என முடிவெடுத்ததும் அப்போது தான்.

……………………………

67 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. மீண்டும் பழைய நிலைமைக்கே இந்த நாடு திரும்பிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் வாழ்வதாக இருந்தால் முசுலிம்கள் இந்துக்களாக மாற வேண்டும். அல்லது முசுலிம்கள் வெளியேற்றப்பட வேண்டும். இல்லையேல் அவர்கள் சொந்த நாட்டில் இரண்டாந்தர, மூன்றாந்தர குடிமக்களாக நடத்தப்படுவார்கள் என்ற கருத்தோட்டம் ஓங்கியிருக்கின்றது. இந்துத் தீவிரவாதிகளின் தலைவர்கள், அதிகார பீடத்துக்கு வந்து விட்டார்கள். அவர்களின் “இந்து ராஷ்டிர” கனவு புத்துயிர் பெற்றிருக்கின்றது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், முசுலிம்களுக்கும் எதிரான கருத்தியல் வன்முறை, ஒரு அரசியல் வடிவத்தைப் பெற்றிருக்கின்றது.

ஒருவேளை காந்தி என்றொரு ஆளுமை அரசியல் அரங்கில் இல்லாமல் போயிருந்தால், இந்தியா ஒரு முழுமையான இந்து நாடாக மாறிப் போயிருந்திருக்கும். பாகிஸ்தானைப் போல இலங்கையைப் போல, மதவாத இனவாத நாடாக இந்தியா உருவாகியிருக்கும். அதனால் தான் காந்தியை எப்படியேனும் அரசியல் களத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்ற இந்துத்துவ வெறியர்கள் தங்கள் செயல்திட்டங்களை வகுக்க வேண்டியிருந்தது. ஆனால் காந்தியின் மறைவு, அவர்களின் கனவுகளை தவிடு பொடியாக்கியது. “இசுமாயில்” என்று பச்சைக் குத்திக் கொண்ட கோட்சே, காந்தியைக் கொன்ற அடுத்த வினாடி, அவன் ஒரு முசுலிம், அவன் ஒரு முசுலிம் என்று திட்டமிட்டு, பிர்லா மாளிகையில் குரல் எழுப்பியவர்களும் பச்சைப் பார்ப்பன இந்து வெறியர்களே. ஆனால் அவன் ஒரு இந்து அப்பட்டமாக வெளிச்சமாகியது.

GODSE_2256046f

ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கும், காந்தி கொலைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என பா.ஜ.கவினர் வாதாடுகின்றனர். அவர்கள் அனைவரும் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம், காந்தியை கொலை செய்த நாதுராம் கோட்சே, ஆர்.எஸ்.எஸ்.காரர்தான் என்று உறுதி செய்து, காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று விடுதலையான கோட்சேயின் சகோதரரான கோபால் கோட்சே, பிரண்ட்லைன் இதழுக்கு 1994 ஆம் ஆண்டு அளித்த நேர்காணல் இதை உறுதி செய்கிறது.

“நாங்கள் சகோதரர்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ். சில் இருந்தவர்கள் தாம். நாதுராம் (கோட்சே) சத்பத்ரேயா, நான், கோவிந்த் ஆகிய நாங்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சார்ந்தவர்களே. நாங்கள் எங்கள் வீடுகளில் வளர்ந்ததைவிட ஆர்.எஸ்.எஸ்.சில்தான் அதிகமாக வளர்ந்தோம். நாதுராம் ஆர்.எஸ்.எஸ்.இல் (காரியவாஹ்) செயலாளராக இருந்தான். அவன் காந்தி கொலை வழக்கில் கொடுத்த வாக்குமூலத்தில்தான் ஆர்.எஸ்.எஸ்.சிலிருந்து விலகி விட்டதாகக் குறிப்பிடுகின்றார். அவர் அப்படி சொன்னதற்கு காரணம் ஆர்.எஸ்.எஸ்.சின் அப்போதைய தலைவர் கோல்வால்கரும், ஆர்.எஸ்.எஸ்.சும், காந்திஜியின் கொலைக்குப் பின் பயங்கர கெடுபிடிகளுக்கு உள்ளானதுதான். ஆனால், நாதுராம் கோட்சே ஆர்.எஸ்.எஸ்.சை விட்டு வெளியேறவில்லை. அத்வானி, கோட்சேவுக்கும் ஆர்.எஸ்.எஸ்.விற்கும் சம்பந்தமில்லை என்று கூறி இருக்கின்றாரே? என்ற கேள்விக்கு, அதைத் தான் மறுப்பதாகவும், அத்வானி சொல்வது கோழைத்தனம் என்றும் பதிலளித்திருக்கிறான் கோபால் கோட்சே. 1944‍ஆம் ஆண்டு முதல் இந்து மகா சபைக்காகப் பணி செய்யத் தொடங்கிய நாதுராம் கோட்சே, அதே நேரத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திலும் பணி செய்யத் தொடங்கினான். ஆர்.எஸ்.எஸ் இல் காரியவாஹ் என்ற அறிவுத்துறை செயலாளராகவும் இருந்தததாகவும் கோபால் கோட்சேவின் நேர்காணல் தெரிவிக்கிறது.

காந்தியின் மரணம் என்பது ஆர்.எஸ்.எஸ் ஒரு வன்முறை இயக்கம் என்பதற்கான வெளிப்படையான, ஆதாரப்பூர்வமான சான்று. இப்படியான ஒரு கொடூரமான வன்முறைப் பின்னணி கொண்ட ஒரு பயங்கரவாத இயக்கத்தின் ஒரு அரசியல் முகமான பா.ஜ.க தற்போது ஆட்சிக்கு வந்திருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் கொள்கைககளை, இந்தியா முழுமைக்கும் செயல்படுத்துவதற்கு உறுதி பூண்டிருக்கும், ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர் அத்தகைய அரசுக்கு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். பா.ஜ.க அரசின் அமைச்சர்கள், அதிகாரிகள், காவல்துறையின் உயர் பொறுப்பில் இருக்கிறவர்கள் என்று அத்தனை பேரும் ஆர்.எஸ்.எஸ் எனும் பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர்கள் தான் நாங்கள் என்பதை கூச்ச நாச்சமின்றி பெருமையோடு சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் கூட தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில், பா.ஜ.க உறுப்பினர்கள், தாங்கள் சிறுவயதிலிருந்தே ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் இருந்தவர்கள் என்பதை வெட்கமின்றி, களிப்போடு அறிவித்து மகிழ்கின்றனர். இதை விட ஒரு ஆபத்தானச் சூழலை, இந்திய நாடு ஒரு போதும் சந்தித்திருக்க முடியாது.

அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்பில் இருந்த “மதச்சார்பின்மை, சோசலிசம்” போன்ற சொற்கள் இன்று அடியோடு நீக்கப்படுவதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த சொல்லாடல்கள் தானே, மதச்சிறுபான்மையினரை பாதுகாக்கிறது. இந்தச் சொல்லாடல்களை வைத்துத் தானே, வாதங்களின் போது இந்தியா மதச்சார்பற்ற நாடு என்று இந்துத்துவாதிகளை நோக்கி, கேள்வி கேட்க முடிகிறது. இது தானே சனநாயகத்தைப் பாதுகாக்கிறது. இந்தியா முழுமையான இந்து நாடாக மாறாமலிருப்பதற்கு இந்தச் சொல்லாடல் தானே தடைக்கல்லாக இருக்கிறது. ஆகவே அதை நீக்கினால் என்ன தவறு? என்று கேட்கிறார் ஒரு பா.ஜ.க அமைச்சர். வாருங்களேன் விவாதிக்கலாம் என்கிறார் இன்னொரு அமைச்சர்.

இந்தியா இந்து நாடாக மாறுவதற்கு முட்டுக்கட்டையாக இருந்த காந்தி, அப்புறப்படுத்தப்பட்டார். அதைப் போலவே,மதச்சார்பின்மையைக் குறிக்கும் வாக்கியங்களும் இனி இந்திய அரசியல் சட்ட வரைவுகளிலிருந்து அப்புறப்படுத்தப்படும். ஆக‌வே காந்தியைக் கொன்றதும் ப‌டுகொலை தான்.
ம‌த‌ச்சார்ப‌ற்ற‌ வாக்கிய‌ங்க‌ளை நீக்குவ‌தும் ப‌டுகொலை தான்.

முத‌ல் கொலையைச் செய்த‌து ஆர்.எஸ்.எஸ். இர‌ண்டாவ‌து கொலையைச் செய்ய‌விருப்ப‌தும் ஆர்.எஸ்.எஸ். முதல் கொலையை வேடிக்கை பார்த்தோம். இரண்டாவது கொலையையும் வேடிக்கை பார்க்கப் போகிறோமா?

அ.மு.செய்யது
இளந்தமிழகம் இயக்கம்

படங்கள் நன்றி:  ஹாசிப் கான், ஆனந்தவிகடன்

About அ.மு.செய்யது

4 comments

 1. பெருமாள் தேவன்

  இதுபோன்ற கட்டுரைகள்தான் இன்று பாஜக இந்தியாவில் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க காரணமாகி உள்ளன.

  மற்றபடி காந்தி துவக்கம் முதலே முஸ்லீம் ஆதரவு அரசியல் செய்தார் என்பது தெள்ளத் தெளிவு.

  காந்தி கொல்லப்பட இறுதிக் காரணம் பாகிஸ்தானில் முஸ்லீம் வெறியர்கள், போலீஸ், ராணுவம் என மூன்று தரப்பினரும் இந்துக்களை தாக்கி கொலை செய்தனர். அதேவேளையில் இந்தியாவில் முஸ்லீம்களுக்கு காவல்துறையும் ராணுவமும் போதுமான பாதுகாப்பை அளிக்க காந்தி முழுமுயற்சி எடுத்து வந்தார்.

  உயிரை மட்டும் கையில் பிடித்துக் கொண்டு ஓடி வந்த இந்துக்களைப் பார்த்து நீங்கள் ஏன் முஸ்லீமாக மாறி அங்கேயே இருக்கக் கூடாது காந்தி கேட்டார். இதுபோன்ற காரணங்களே காந்தி கொலைக்கு அடிப்படை காரணங்களாக அமைந்தன. காந்தியின் தவறான அரசியல் காரணமாக அவர் இயற்கைக்கு மாறான மரணத்தை தழுவுவார் என்று காங்கிரஸ் தீவிரவாத தலைவர்களில் ஒருவரான ஸ்ரீநிவாச அய்யங்கார் எச்சரித்ததும் இங்கே குறிப்பிடத் தக்கது.

  • தோழருக்கு வணக்கம்,

   இந்த கட்டுரை கோட்சேவைத் தேசிய நாயகனாக பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் , அதன் கிளை அமைப்புகள் பேசுவதும், அவருக்கு சிலை வைக்க கோருவதற்குமான எதிர்வினை…

   காந்தி துவக்கம் முதலே முஸ்லீம் ஆதரவு அரசியல் செய்தார்- என்றால் முஸ்லிம் லீக் ஏன் தோன்றியது. காந்தியின் இராம இராஜ்ஜியத்தில் எங்களுக்கு இடமில்லை என்று தானே ஜின்னா பிரிவினை கோரிக்கையை முன்னிறுத்தினார். உண்மை இப்படியிருக்க காந்தி எப்பொழுதும் முஸ்லிம் ஆதரவு அரசியல் செய்தார் என ஏன் இல்லாத ஒன்றை கூறுகின்றீர்கள்?

   உங்களது வாதப்படி, காந்தி இந்திய இந்துக்கள் இந்திய முஸ்லிமை கொலை செய்ய உதவவில்லை, அது தவறு என்கிறீர்கள், நாம் ஒரு வேளை கற்காலத்தில் வாழ்ந்தால் அப்படி செய்யச்சொல்லலாம், ஆனால் நாம் சனநாயக நாட்டில் வாழ்கின்றோம். மேலும் நீங்களே இறுதி காரணம் மட்டும் தான் பாகிசுதான் பிரிவினை என்று சொல்கின்றீர்கள், அப்படியானால் இதை விட அதிகமான காரணங்களும் காந்தி கொலை செய்யக் காரணம் என சொல்கின்றீர்கள், அதை தான் நாங்கள் கட்டுரையிலும் கூறியிருக்கின்றோம்.

 2. It’s not good. all r Indians. India Oru madha sarbatra nadu. please heaven sake don’t encourage this. Hindu Muslim christian all r equal in India.

 3. பெரியார்

  எல்லாம் சரி தோழரே, இந்தியாவை இந்துக்கள் நாடாக மாற்ற வேண்டும் மற்றவர்கள் யாருக்கும் இங்கு இடமில்லை அதனால் நாதுராம் கோட்சே காந்தியை கொன்றான் சரி, எதுக்கு தன் கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்தினான்? எதற்காக கத்னா செய்தான்? காந்தியை கொல்லவேண்டும் என்றால் அவன் அவனாகவே போய் கொல்ல வேண்டியதுதானே?இதற்கு என்ன அர்த்தம் சொல்லுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*