Home / பொருளாதாரம் / இயற்கை வளம் / நாங்கள் ஏன் நியூட்ரினோ திட்டத்தை எதிர்க்கின்றோம் ?

நாங்கள் ஏன் நியூட்ரினோ திட்டத்தை எதிர்க்கின்றோம் ?

நியூட்ரினோ திட்டம் மட்டும் தான் நடக்கப் போகின்றது என்ற பார்வையின் அடிப்படையில்…

1) 2.5 கிலோ மீட்டர் சுரங்கம் அமைக்கப்பட்டு பின்னர் ஆய்வகம் அமைக்கப்பட வேண்டும். இதற்கான தரைப் பகுதி முழுதும் குடைந்து அகற்றப்பட்டு, பின்னர் கட்டுமானப்பணிகள் நடக்க வேண்டும். இதற்கு அவர்கள் 800 நாட்கள் பிடிக்கும் என்கிறார்கள். அதாவது குறைந்தது மூன்று ஆண்டுகள். 6 இலட்சம் டன் பாறை அகற்றப்பட வேண்டும் என அரசுத்தரப்பும், அவர்களின் கணக்கு Theory Based, எதார்த்தத்தில் 8 இலட்சம் டன் பாறை அகற்றப்பட வேண்டும் என அறிவியலாளர் வி.பத்மநாபனும் தெரிவிக்கின்றார்கள்.

இதில் அரசு தரப்பு கூறுவதையே எடுத்துக்கொள்வோம். 6 இலட்சம் டன் (ஒரு டன் ஆயிரம் கிலோ) பாறையை வெடி வைத்து அகற்ற வேண்டும். இதற்கு தோரயமாக 4 லிருந்து 6 இலட்சம் கிலோ வெடி மருந்துகள் பயன்படுத்தப்பட வேண்டும். நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க இருக்கிற பகுதி நீர் அடுக்குகள் (Aquifer) நிறைந்த பகுதி. இவ்வாறாக, சுரங்கம் அமைக்க வெடி வைத்து பாறைகளையும் நிலத்தையும் தகர்க்கும்பொழுது அது புவிமேலோட்டுப் பேரியக்கத்தில் (tectonics) மாற்றம் நிகழ்த்தும். நீர் அடுக்குகளால் நிறைந்த பகுதி என்பதால் நீரியல் பூகம்பத்தை (hydro seismicity) எளிதில் ஏற்படுத்தக்கூடிய வாய்ப்பு உள்ளது. ஆய்வு மையப்பகுதியில் எவ்வித புவிசார்தொழிற்நுட்ப முறை (Geotechnical studies) ஆய்வுகளை அரசு இதுவரை செய்யவில்லை. அதுகுறித்து வெளிப்படைத்தன்மை உடைய அறிக்கையை இதுவரை இல்லை. அதாவது, சுரங்க கிடங்குகள் அல்லது ஆய்வகங்கள் அமைக்கும்பொழுது நீர் அடுக்குகளுக்கும் இயற்கை வளங்களுக்கும் எவ்வகையிலான பாதிப்புகள் வரும் என்பதனை கணிக்கும் ஆய்வு நடத்தப்பட்டு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இது நடக்கவேயில்லை, சரி அதனால் என்ன எனக்கேட்பவர்களுக்கு. நியூட்ரினோ ஆய்வகம் அமைய இருக்கும் இடத்திலிருந்து 70கிலோமீட்டர் சுற்றுப்பகுதியில் மட்டும் மொத்தம் 15 அணைகள் உள்ளன (பார்க்க – படம்). பெரிய அணைகளான இடுக்கி அணை 36 கிலோமீட்டர் தூரத்திலும், முல்லைப் பெரியாறு அணை 40 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளன. அப்படி ஏதாவது நீரியல் பூகம்பம் ஏற்பட்டால் அதன் விளைவுகள் மிகக் கடுமையான ஒன்றாக இருக்கும்.

newtemplate_clip_image002_0044

2) 6 இலட்சம் டன் பாறைகளை வெடி வைத்து தகர்க்கும் போது உண்டாகும் தூசி மண்டலமும், இப்பாறைகளை எடுத்துச் செல்ல நடத்தப்படும் வாகனப் போக்குவரத்துகளையும் கணக்கில் கொண்டால், சுற்றியுள்ள பகுதிகளின் விவசாய நிலங்களும், சூழியலும், வன உயிரினங்களும் கடுமையாகப் பாதிக்கப்படும்.

3) தமிழ்நாடு தண்ணீர் பற்றாக்குறை உள்ள மாநிலங்களில் ஒன்று. நியூட்ரினோ ஆய்வகம் செயல்பட ஒரு நாளைக்கு 2லிருந்து 3.4 இலட்சம் லிட்டர் தண்ணீர் வேண்டும் என பூவுலகின் நண்பர்கள் RTI கேள்விக்கான பதிலில் அரசு சொல்லியுள்ளது. இது 6000 பேர் கொண்ட கிராமத்திற்கு போதுமான ஒன்று (ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 50 லிட்டர் தண்ணீர் செலவிடுவார், குளிக்க, குடிக்க, துவைக்க என எல்லாம் சேர்த்து). மேலும் இந்த நீர் எங்கிருந்து எடுக்கப்படும் என இதுவரை அவர்கள் சொல்லவில்லை. ஆனால் சலீம் அலி நடத்திய சூழியல் தாக்க அறிக்கையில் மட்டும் முல்லைப் பெரியாற்றில் இருந்து இந்த தண்ணீரை தமிழ்நாட்டு குடிநீர் வாரியம் எடுத்துக் கொடுக்கும் எனக்கூறியுள்ளார்கள்(8 – பக்க எண்-11). இந்த முல்லைப் பெரியாறு நீரை நம்பிதான் மூன்று மாவட்டங்களின் விவசாயம் நடந்து வருகின்றது. அப்படியானால் அந்த அணை நீரைப் பயன்படுத்தி வரும் விவசாயிகளின் பொருளாதாரத்திற்கான மாற்று என்ன? அவர்களின் வாழ்வாதாரத்திற்கான பதில் என்ன?

4) இடுக்கி அணை, முல்லைப் பெரியாறு அணை உள்ளிட்ட ப‌ல அணைகள் ஆய்வகம் அமையும் பகுதியின் சுற்றுவட்டாரத்தில் உள்ளன. இந்த அணைகளுக்கு ஏற்படும் பாதிப்பு ஆய்வு செய்யப்படவில்லை. வெடி வைப்பதனால் ஏற்படும் பாதிப்புகள் சூழல் பாதிப்பு மதிப்பீட்டு ஆய்வில் மேற்கொள்ளப்படவில்லை, நிலைமை இப்படி இருக்க எதை வைத்து இம்மையத்திற்கு சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி கொடுத்தது? எப்படி ஒன்றுமே நடக்காது என அறிவியலாளர்கள் கூறுகின்றார்கள்? இவர்கள் எல்லாம் அறிவியலாளர்களா, ஆருடம் சொல்லும் ஜோசியக்காரர்களா?

5) இங்கு அமைக்கப்படும் ஆய்வகம் உலகத்திலேயே இதுவரை இல்லாத அளவு 50ஆயிரம் கிலோ எடையுள்ள காந்தக்கருவி. ஆய்வகம் செயல்படுத்த தொடங்கிய முதல் கட்டமாக‌ இயற்கையாக உள்ள நியூட்ரினோக்களையும், பின்னர் இரண்டாம் கட்டத்தில் நியூட்ரினோ தொழிற்சாலையிலிருந்து செயற்கையாக உற்பத்தி செய்யப்படும் நியூட்ரினோக்களையும் ஆராய்வதே அவர்களது திட்டம், இதை வி.பத்மநாபனுக்கு அவர்கள் எழுதிய கடிதங்களில் தெளிவாகக் கூறுகின்றனர். இந்த செயற்கையாக உற்பத்தி செய்யப்படும் நியூட்ரினோக்கள் ஐரோப்பா, ஜப்பான், அமெரிக்காவிலிருந்து தேனி நோக்கி செலுத்தப்படும். இயற்கையாக இருக்கும் நியூட்ரினோவை ஆராய்வதால் எந்த தீங்கும் இல்லை. ஆனால் செயற்கையாக உருவாக்கப்படும் நியூட்ரினோ அவ்வாறில்லை, அதிலிருந்து கதிர்வீச்சு வெளிப்படலாம் என ஆய்வுகள் கூறுகின்றன. Hirotaka,sugawara, Hiroyuki hagura, Toshiya sanamiஆகிய ஜப்பான் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். செயற்கை நியூட்ரினோக்களின் கதிர்வீச்சு அபாயம் குறித்து எண்ணற்ற ஆய்வறிக்கைகள் வெளிவந்தபடியே இருக்கின்றன. 2013-ம் ஆண்டு ஆல்ஃப்ரெட் டாங்க் என்கிற அமெரிக்க விஞ்ஞானி எழுதிய இது தொடர்பான கட்டுரையை http://arxiv.org/pdf/0805.3991.pdf என்ற இணைப்பில் படிக்கலாம். அப்படி கதிர்வீச்சு வெளியாகும் பட்சத்தில் அது சுற்றியுள்ள அணைகளின் நீர், நிலம் என எல்லாவற்றையும் மாசுபடுத்தி, மனிதப் பயன்பாட்டிற்கு உகந்ததாக இருக்காது.

6) இத்தாலியில் உள்ள கிரான் சாசோ என்ற ஆய்வகமும், தேனியில் அமைய இருக்கும் ஆய்வகம் போலவே மலையைக் குடைந்து அமைக்கப்பட்ட நியூட்ரினோ நோக்கு ஆய்வகமாகும். இந்த ஆய்வகம் பாதுகாப்பானதாக இல்லை, ஆய்வகம் மூலம் அருகிலுள்ள நீர்நிலைகள் மாசடைகின்றன, இதனால் சூழியல் பாதிக்கப்படுகின்றது என்று அரசு நியமித்த குழுவின் அறிக்கையே கூறியது, மேலும் இது போல இங்கும் நிகழாது என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை.

TH08-INO-BRSC_2271340f

இந்த ஆய்வகத்தின் உள்ளே ஒரு பகுதியில் அணுக்கழிவுகளை சேகரித்து வைக்கின்றார்கள் என்பதன் அடிப்படையில்.

சென்னை தரமணியில் செயல்படும் கணிதவியல் ஆய்வு நிறுவனம்தான், தேனி நியூட்ரினோ ஆய்வு மையத்துக்கான ஆரம்பக்கட்டப் பணிகளைச் செய்தது. இந்த நிறுவனம், நியூட்ரினோ ஆய்வுக்கான சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்காக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்குச் செய்த விண்ணப்பத்தில் ‘அணு உலை/அணு உலை எரிபொருள்/அணு உலைக் கழிவுகள்’ என்ற பிரிவின் கீழ் ஐ.என்.ஓ-வை வகைப்படுத்தி உள்ளது. இதைப் பற்றி கேட்டதற்கு விளக்கம் அளித்த விஞ்ஞானி த.வி.வெங்கடேஷ்வரன், ‘அது தெரியாமல் நடந்துவிட்ட கிளரிக்கல் தவறு. ரேஷன் கார்டில் பெயரைத் தவறாக எழுதிவிடுவது இல்லையா… அதுபோலதான். தவறைச் சரிசெய்துவிட்டோம்’ என மிகச் சாதாரணமாகச் சொல்கிறார். அதாவது நியூட்ரினோ ஆய்வகம் என்பதற்கு பதிலாக அவர்கள் அணுக்கழிவு சேகரிக்கும் மையம் என மாற்றி எழுதிவிட்டார்கள் என நம்மை நம்பச் சொல்கின்றார்கள்.

இன்று நம் முன் அது சின்ன கிளரிக்கல் தவறு என்று கூறிவிட்டு, நாளை அணு உலைக் கழிவுகளை புதைக்கமாட்டார்கள் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை, கண்டிப்பாக நாளைக்கு அணு உலைக்கழிவுகள் அங்கு தான் புதைக்கப்படும். இதிலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மதுரை வடபழஞ்சியில் அதிக ஆற்றல் உள்ள அணு உலைக் கழிவுகளை ஆராயும் மையமும் இதே திட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளது என்பதை இங்கே நினைவில் கொள்ள வேண்டும்.

அப்படி அணு உலைக்கழிவுகள் இங்கு சேகரிக்கத் தொடங்கப்படும் பொழுது இதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் முழுக்க கதிர்வீச்சால் பாதிக்கப்படும். அந்த பகுதி முழுக்கவே மக்கள் பயன்பாட்டுக்கு உகந்த பகுதியாக இருக்காது. இப்பொழுது வாழ்ந்து வரும் மக்கள் முழுக்க அங்கிருந்து வெளியேற்றப்படுவார்கள். அருகில் உள்ள அணையில் இருக்கும் நீரும் கதிர்வீச்சால் பாதிக்கப்படும் அது ஒட்டுமொத்த தென் தமிழகத்தையும், கேரளத்தில் சில பகுதிகளையும் பாதிக்கும். இதை

முன்னரே இந்த ஆய்வு கோலார் தங்க சுரங்கத்தில் நடந்துள்ளது. இன்றும் கூட அங்கு நடத்தலாம். ஆனால் அங்குள்ள மக்கள் எதிர்ப்பார்கள். கூடங்குளம் அணுக்கழிவை எங்கு புதைப்பீர்கள் என்ற கேள்விக்கு முந்தைய அரசு கோலார் தங்க வயலில் என்று கூறிய பொழுது அதை கர்நாடக அரசு எதிர்த்தது, உடனே வேறு எங்காவது நாங்கள் புதைப்போம் என பின்வாங்கினார்கள், இதை நாம் இங்கு பொருத்திப் பார்க்கவேண்டும்.

பல்லாயிரக்கணக்கான‌ மக்களின் வாழ்வியலைச் சிதைத்து அதன் மேல் அறிவியல் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டாம் என்பதே எங்கள் இறுதி கருத்து.

நாங்கள் அறிவியலுக்கு எதிரானவர்கள் அல்ல, ஆனால் அழிவியலுக்கு எதிரானவர்கள்…

பி.கு – இதில் நியூட்ரினோ ஆயுதம் செய்யம் திட்டம் பற்றி பேசப்படவில்லை, அது ஒரு தனிக்கட்டுரையாகப் பேசப்பட வேண்டும் என்பதால் தனி ஒரு கட்டுரையாக வெளிவரும்.

நற்றமிழன்.ப‌ –   இளந்தமிழகம் இயக்கம்

தரவுகள் அல்லது மேலும் படிக்க‌

1) பூவுலகின் RTIக்கான பதில்கள்.

2) அணு உலை… மீத்தேன் வாயு…அடுத்த அதிர்ச்சி நியுட்ரினோ?-பாரதி தம்பி – ஆனந்த விகடன் பிப்ரவரி 11 பதிப்பு.

3) http://www.countercurrents.org/vtp260912.htm

4)http://www.countercurrents.org/vtp271212.htm

5)http://www.countercurrents.org/padmanabhan241012.htm

6)http://www.countercurrents.org/vtp260314.htm

7) http://www.ino.tifr.res.in/ino/reports/REIA-Final_doc.pdf

8) http://www.newscientist.com/article/dn3800-pollution-hazard-closes-neutrino-lab.html#.VOib5vmUePs

About நற்றமிழன்

ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் தரக்கட்டுபாட்டுத் துறையில் பணி புரிகின்றார். தற்சமயம் திருப்பூரில் வசித்து வருகின்றார்.

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*