Home / FITE சங்கம் / பிரதமர் மோடிக்கு – ஒரு ஐ.டி ஊழியனின் கடிதம்!

பிரதமர் மோடிக்கு – ஒரு ஐ.டி ஊழியனின் கடிதம்!

பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு வணக்கம்!

நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்கியிருக்கும் வேளையில், உங்களை தொந்தரவு செய்வது சரியா? என்று எண்ணியவாறே இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன்.

என் பெயர் கவுதம் ( உங்களுக்கு மிகவும் பரிச்சயப்பட்ட பெயர்தான்). நான் பெங்களூருவில் உள்ள முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமொன்றில் பணிபுரிந்து வருகிறேன். எனக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருக்கிறாள். வங்கியில் பெற்ற கடனைக் கொண்டு அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரு வீட்டை வாங்கி வசித்து வருகிறேன். வீட்டுக் கடனுக்கான மாதாந்திர தவணை தோராயமாக முப்பதாயிரம் ரூபாய் கட்டுகிறேன். என் அப்பாவை ஒப்பிட்டால் என்னுடைய வாழ்க்கை முறை மாறியிருக்கிறது,, நான் சிறுவயதில் ஏங்கி நின்ற பல பொருட்கள் என்னுடைய பெண் கேட்டால் வாங்கிக் கொடுக்க முடியும் என்கிற நிலையில் இருக்கிறேன்.

உங்கள் வார்த்தைகளில் சொல்வதானால், நானும் என் குடும்பமும் வளர்ந்திருக்கிறோம் திரு. மோடி அவர்களே. நானும், என்னைப் போன்றே தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் சக ஊழியர்களும் இதே போன்று ஒரு வாழ்க்கை முறையைத்தான் பின்பற்றுகிறோம்.

கல்லூரியில் படிக்கும் போதே பெரிய நிறுவனமொன்றில் வேலை கிடைத்து பெருநகரங்கள் நோக்கி நகர்ந்த எம்மைப் போன்றவர்களை மனதில் வைத்து ஒரு சந்தை உருவாகியிருக்கிறது. அந்த சந்தைதான் என்னைப் போன்றவர்களை வீடு வாங்கவும், வாகனம் வாங்கவும் வைத்தது. இந்திய அளவில் ஐ.டி துறையில் சுமார் 35 இலட்சம் ஊழியர்கள் பணிபுரிகின்றோம். அதில் பெரும்பாலான ஊழியர்களின் வாழக்கைமுறை என்பது மேற்சொன்னவாறு தான் இருக்கிறது.

வேலை இருக்கிறது, சொந்தமாக வீடு வாங்கியிருக்கிறீர்கள், கல்வியும், மருத்துவமும் கைக்கு எட்டும் தூரத்தில் இருக்கிறது. வேறு என்ன கவலை எங்களுக்கு? என்று நீங்கள் நினைக்கலாம். இவ்வளவு ஏன்? நாங்களும் அப்படிதான் நினைத்திருந்தோம்.. வளர்ச்சி முழக்கமிட்டு நீங்கள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட போது, இந்த பொய் நம்பிக்கைதான் எங்களில் பெரும்பாலானோரை உங்களுக்காக பரப்புரை செய்ய வைத்தது. “ உண்மை வீட்டு வாசல் தாண்டுவதற்கு முன், பொய் ஊரைச் சுற்றி வந்துவிடுமாம்” , வளர்ச்சி மாயை சுழன்றடிக்க, நீங்கள் ஆட்சியைப் பிடித்தீர்கள்.

layoffs-in-it-sector

ஆனால், வளர்ச்சி முழக்கமிட்ட உங்களால் மக்களுக்கான வளர்ச்சியைக் கொண்டு வரவும் முடியவில்லை; பொதுச் சமூகம் அனைத்தும் வளர்ச்சியின் அடையாளமாகக் காட்டும் ஐ.டி துறையில் நடக்கும் பணிநீக்கங்களைத் தடுக்கவும் முடியவில்லை.

நீங்கள் வளர்ச்சி! வளர்ச்சி! என்று சொன்னது யாருக்கானது என்று நாட்கள் ஓடிய போதுதான் எங்களுக்கு உரைத்தது. டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனமும், ஐபிஎம் நிறுவனமும் தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பிய போது, இலட்சங்கள் கொட்டி நெய்த சூட் அணிந்து ஒபமாவோடு விருந்து சாப்பிட்டு கொண்டிருந்தீர்கள் திரு. மோடி அவர்களே!

ஒபாமவைச் சந்திக்க வரிசையில் நின்ற இந்தியத் தொழிலதிபர்களின் அரசியல் பிரதிநிதி நீங்கள் என்பதை நாங்கள் இப்போதுதான் உணர்ந்து கொண்டோம்.

Barack-Obama-India-Inc

போட்டிகள் நிறைந்த உலகில், “உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள்! யாராலும் உங்களைப் பணியைவிட்டு நீக்க முடியாது!” என்று நீங்கள் சொல்லக்கூடும். அப்படிச் சொல்வீர்களானால், அது வெற்றுச் சவடால் ஆகிவிடும் என்பதை உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன். ஏனெனில், ஐ.டி பணிகளை அவுட்சோர்ஸ் செய்வதற்கு முக்கியக் காரணம், குறைந்த ஊதியம் பெறும் தொழிலாளர்களும், சட்டங்களை பெருநிறுவனங்களுக்காக வளைத்துக் கொடுக்கும் உங்களைப் போன்றவர்களும்தான்.

திறமைகளை வளர்த்துக் கொண்டாலும் நாங்கள் வேலையில் தொடர்வோம் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை, திரு. மோடி அவர்களே! பெருத்த இலாபம் மட்டுமே குறியாகக் கொண்ட பெருநிறுவனங்களில் வேலை பார்க்கும் என்னைப் போன்றவர்கள் ஏழு, எட்டு ஆண்டுகள் அனுபவத்தைக் கடந்தாலே ஒரு அச்ச உணர்வு தொற்றிக் கொள்கிறது. . அதற்குக் காரணம், நாங்கள் எங்களைத் தகுதிப்படுத்திக் கொள்ளாமல் இருப்பதால் அல்ல! நிறுவனங்கள் தாங்கள் எதிர்பார்க்கும் இலாபத்தை எட்ட முடியாததால்தான்.

எம்மைப் போன்ற தொழிலாளர்களில் பெரும்பாலோனோர், கிராமங்களில் இருந்தும், சிறுநகரங்களில் இருந்தும் பெருநகரங்கள் நோக்கி குடிபெயர்ந்தவர்கள். சரியோ! தவறோ! , நுகர்வை ஒட்டிய எங்களின் வாழக்கை முறை நாங்கள் செய்யும் இந்த வேலையை நம்பித்தான் இருக்கிறது.

நில கையகப்படுத்துதல் சட்டத்தில் மாற்றத்தைக் கொண்டு வந்து பெருநிறுவனங்களுக்கு தொண்டூழியம் செய்து கொண்டிருக்கும் நீங்கள் தகவல் தொழில்நுட்பத் துறையில் நடக்கும் பணிநீக்கங்களைத் தடுத்துவிடுவீர்கள் என்றெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. அதற்காக, நான் தனியனாகப் போராடி ஐ.டி ஊழியர்களுக்கான உரிமைகளைப் பெற்றுவிட முடியும் என்றும் நம்பவில்லை.

நீங்கள் வேண்டுமானால் தனிநபர் சாகசவாதத்தை நம்புவோரின் வாக்குகளைப் பெற்றும், உங்களின் துதிபாடும் பெருநிறுவன முதலாளிகளின் போற்றுதல்களில் மெய்மறந்தும் இருக்கலாம்.

ஐ. டி ஊழியர்கள் ஒற்றுமையாய், அமைப்பாவதே இதற்குத் தீர்வு என்கிற முடிவுக்கு நாங்கள் வந்துவிட்டோம். இப்போது உறங்கிக் கொண்டிருக்கும் என் மகளின் முன்பு வேலையிழந்து நிற்க நானோ, என்னைப் போன்றவர்களோ தயாராக இல்லை திரு. பிரதமர் அவர்களே!

எங்களுடைய சிக்கல்களுக்கான தீர்வுகள் அரசியல் மூலம்தான் என்பதை நாங்கள் அறிந்து கொண்டோம். ஆனால், அந்தத் தீர்வை உங்கள் அரசு தரப் போவதில்லை. அதானிக்கு ஆயிரம் கோடி கடன் வழங்கும் நாட்டில்தான் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நாள்தோறும் வேலை இழந்து வருகிறோம். இன்றுவரை உங்களுடைய மௌனமே எங்களுடைய போராட்டங்களுக்கு பதிலாக இருக்கிறது.

ஐ.டி துறையில் நடைபெறும் பணிநீக்கங்களில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு, உங்களைக் கோரும் ஒரு மனு ஒன்றை இணையத்தில் தொடங்கியுள்ளது ” தகவல் தொழில்நுட்ப ஊழியர்களுக்கான மன்றம் (FITE)”. அதில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கையெழுத்திட்டுள்ளனர். உங்களின் மௌனத்தினாலும், பெருநிறுவன ஆதரவுப் போக்காலும் என்னைப் போன்றவர்களிடம் மட்டுமல்ல; உங்களை நம்பிக் கொண்டிருக்கும் பலரின் முன்பும் கிழியத் தொடங்கியுள்ளது உங்களின் வளர்ச்சி முகமூடி.

ஐ.டி ஊழியர்களுக்கான மன்றம் - டி.சி.எஸ் நிறுவன பணி நீக்கத்திற்கு எதிராக நடத்திய மனித சங்கிலி போராட்டம்

ஐ.டி ஊழியர்களுக்கான மன்றம் – டி.சி.எஸ் நிறுவன பணி நீக்கத்திற்கு எதிராக நடத்திய மனித சங்கிலி போராட்டம்

தனியாக போராட முடியாத நான், ” ஐ.டி ஊழியர்களுக்கான மன்றத்தில்” என்னை இணைத்துக் கொண்டுள்ளேன். எங்களைப் போன்ற தொழிலாளர்கள் அமைப்பாவோம், பிற துறையை சார்ந்த தொழிலாளர்களும் எங்களுக்கு ஆதரவாக இருப்பர். உங்களுக்கு ஆதரவாக இருந்த ஐ.டி தொழிலாளர்களை உங்களின் மௌனமும், பெருநிறுவன முதலாளிகளுக்கு காவடி தூக்கும் நிர்வாகமும் உங்களுக்கே எதிரிகளாக்கியுள்ளது.

இன்றுவரை சமூகச் சங்கிலியில் இருந்து விடுபட்டு இருந்த நாங்கள், ஏனைய சமூகத்துடன் இணைந்து உங்கள் அரசின் மக்கள் விரோத செயல்களுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடுவோம்.

இப்படிக்கு,

கவுதம்

ஒரு ஐ.டி ஊழியன்

About விசை

One comment

  1. Clearly shows u don’t have any economical IQ. If u don’t like India to grow, goto pak please

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*