Home / ஈழம் / இலங்கை புறக்கணிப்பு / பிரதமர் மோடியே – இனப்படுகொலை இலங்கைப் பயணத்தை இரத்து செய்க….

பிரதமர் மோடியே – இனப்படுகொலை இலங்கைப் பயணத்தை இரத்து செய்க….

கடந்த மார்ச்சு 2014 இல் ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இந்திய அரசின் எதிர்ப்பைக் கடந்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி வரும் 25 மார்ச்சு 2015 க்குள் அறிக்கை வழங்குமாறு மனித உரிமை மன்ற ஆணையாளரை கோரியது. அப்பொழுது ஆணையாளராக இருந்த நவநீதம் அவர்கள் இவ்விசாரணைக்காக பின்லாந்தைச் சேர்ந்த மார்த்தி அத்திசாரி, நியூசிலாந்தைச் சேர்ந்த சில்வியா காட்ரைட் பாகிசுதானைச் சேர்ந்த அசுமா சாகாங்கீர் ஆகியோர் தலைமையில் பன்னாட்டு வல்லுநர் குழு ஒன்றை அமைத்தார்.

இக்குழு தனது விசாரணை அறிக்கையை தயார் செய்து வந்த இறுதி வேளையில் கடந்த சனவரியில் இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் இராசபக்சே தோல்வி அடைந்தார். மேற்குலக நாடுகளின் ஆதரவாளராக தன்னை காட்டிக் கொள்ளும் இலங்கை சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த மைத்ரிபால சிறிசேனா புதிய அதிபரானார். இந்த அதிபர் மாற்றத்தைக் காட்டி தங்கள் இராசதந்திர அரசியல் நகர்வுகளால் மேற்குலகநாடுகளின் ஆதரவைப் பெற்று இனக்கொலை நீதிக்கான போராட்டத்தின் மையமாக உள்ள ஐ.நா. குழுவின் விசாரணை அறிக்கையை காலம் தாழ்த்தி இலங்கை அரசு வெற்றி பெற்றது. அதன்படி ஐ.நா மனித உரிமை மன்றத்தின் புதிய ஆணையாளராக பொறுப்பேற்றுள்ள சையத் இராத் அல் உசைன் அவர்கள் விசாரணைக் குழு அறிக்கை சமர்பிப்பதை செப்டம்பர் 2015 க்கு தள்ளிப்போடுவதாக அறிவித்தார் .

BoySLPhamplet1

தேர்தலுக்குப் பிறகு தமிழர்களின் இனப்படுகொலை நீதிக்கான அரசியலைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு இலங்கையில் ”மாற்றம் நடத்துள்ளது” என மேற்குலக நாடுகளும் இந்தியாவும் உலகுக்கு அறிவித்துள்ளன. மேலும் அமெரிக்காவும் இந்தியாவும் சிங்கள அரசுடனான உறவை மிக வேகமாக வலுபடுத்தத் துடிக்கின்றன. அதற்கு வலுசேர்க்கவே ஐ.நா விசாரணைக் குழுவின் அறிக்கையை தள்ளிப்போட்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் இராசபக்சேவை தோற்கடிக்க புதிய அரசிற்கு கூடுதல் காலம் வழங்கியுள்ளனர்.

இலங்கையின் புதிய அதிபரான மைத்ரிபால கடந்த பிப்ரவரி 15 அன்று இந்தியாவிற்கு வருவதற்கு திட்டமிட்டிருந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இலங்கையின் வடக்கு மாகாண சபையில், ”தமிழர்களுக்கு நடந்தது இனப்படுகொலை” என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மைத்ரி வருகையின் பொழுது இந்த தீர்மானம் குறித்தோ, எதிர்வரும் ஐ.நா கூட்டத் தொடர் குறித்தோ, தமிழர்களின் இனப்படுகொலைக்கான நீதி குறித்தோ இந்திய தலைமை அமைச்சர் மோடியும் மைத்ரியும் எதையும் பேசவில்லை.

இலங்கையில் போர் முடிந்து 6 ஆண்டுகள் கடந்த நிலையிலும் போரினால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து இராணுவ அடக்குமுறைக்குள் இருக்கும் ஈழத் தமிழர்கள் மீதான இன அழிப்பு நடவடிக்கை பல்வேறு வடிவங்களில் தொடர்கின்றன. ஆனால் இந்திய அரசோ தமிழினப் படுகொலைக்கு துணை போனது மட்டுமின்றி தொடர்ந்து பன்னாட்டு அரங்கில் அக்குற்றம் மீதான் விசாரணையிலிருந்து இலங்கையைப் பாதுகாக்கும் வேலையை செய்துவருகின்றது.

BoySLPhamplet3

கடந்த ஐ.நா. மனித உரிமை மன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு இணங்க அமைக்கப்பட்ட விசாரணைக் குழு தங்கள் நாட்டுக்குள் வர இந்திய, இலங்கை அரசுகள் அனுமதிக்கவில்லை. பன்னாட்டுப் புலனாய்வை எதிர்த்த வகையில் இராசபக்சேவுக்கும் மைத்ரிக்கும் வேறுபாடில்லை. இலங்கையைப் பாதுகாப்பதிலும் தமிழர்களுக்கான அரசியல் நீதியை மறுப்பதிலும் மன்மோகனுக்கும் மோடிக்கும் வேறுபாடு இல்லை.

சர்வதேச அரங்கில் இலங்கையின் மதிப்பை உயர்த்தும் நோக்கத்திலும் இலங்கையைப் பாதுகாக்கும் முகமாகவும் தான் மார்ச்சு 13 அன்று தனது பிரதமரை இலங்கைக்கு சுற்றுலாப் பயணத்திற்கு இந்தியா அனுப்புகின்றது. 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் இலங்கை தீவுக்கு பயணம் செய்கிறார் என்பதைவிட இங்கு முக்கியம் அன்று போலவே இன்றும் சிங்களப் பேரினவாத அரசுடனான உறவை வலுப்படுத்தவே போகிறார் மோடி. ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்றும் பன்னாட்டு புலனாய்வு நடத்தப்பட வேண்டும் என்றும் ஈழத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்தி அரசியல் தீர்வு காண வேண்டும் என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டிருக்கிறது. இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. 7 கோடி தமிழர்களின் கோரிக்கையைக் காலில் போட்டு மிதித்துவிட்டு இலங்கையோடு கும்மாளம் போடும் இந்திய அரசை நாம் எச்சரிக்கின்றோம்.

சிங்கள பேரினவாத அரசை உள்நாட்டிலும் உலக அரங்கிலும் தனிமைப்படுத்த “இலங்கையை புறக்கணிப்போம்” என்பதே நமது முழக்கம். குறிப்பாக, இந்திய அரசு இலங்கையுடனான அரசியல் பொருளாதார பண்பாட்டு உறவுகளை துண்டித்து கொள்ள வேண்டும். இதன் அடிப்படையிலேயே இந்திய அரசின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை கொழும்பு காமன்வெல்த் மாநாட்டிற்கு செல்லக் கூடாதென நாம் போராடினோம். போராட்டத்தின் பயனாய் அவரை இலங்கைக்குப் போகாமல் நம்மால் தடுக்க முடிந்தது. ஆனால் இன்று இன்னும் வெளிப்படையாக இலங்கைக்கு ஆதரவளிக்கும் இந்தியாவின் புதிய பிரதமர் மோடி இலங்கைக்கு செல்வதை தடுக்க வேண்டிய தேவை முன்னைவிட கூடுதலாக உள்ளது.

எனவே தமிழனப் படுகொலையை தொடர்ந்து நடத்தும் இந்திய-சிங்களக் கூட்டை உடைப்பதில் தான் ஈழ விடுதலைக்கானப் பூட்டைத் திறக்க முடியும்.

unnamed

கோரிக்கைகள் :
இந்திய அரசே!

இலங்கையைப் புறக்கணித்திடுக! தலைமை அமைச்சர் மோடியே, இலங்கை பயணத்தை இரத்து செய்க!

இலங்கையில் நடந்தது தமிழினப் படுகொலை என அங்கீகரித்து வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானத்தை அங்கீகரித்து இந்திய நாடாளுமன்றத்திலும் ”இலங்கையில் நடப்பது தமிழினப்படுகொலை”என தீர்மானம் நிறைவேற்றுக!

ஐ.நா. விசாரணைக் குழு அறிக்கையை உடனடியாக சமர்பிக்க ஐ.நா மனித உரிமைக் கூட்டத் தொடரில் வலியுறுத்துக!

இந்திய அரசே! இனக்கொலை இலங்கையைப் புறக்கணித்திடுக!

தலைமை அமைச்சர் மோடியே! இலங்கைப் பயணத்தை இரத்து செய்க!

கண்டன ஆர்ப்பாட்டம்
7 மார்ச்சு 2015 | சனிக்கிழமை | காலை 10 மணி | வள்ளுவர் கோட்டம் அருகில், சென்னை

கண்டன உரையாற்றுவோர்
தோழர். விடுதலை இராசேந்திரன் பொதுச் செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம்
தோழர் இளையராசா, தமிழ்நாடு மாணவர் இயக்கம்
தோழர் செந்தில், இளந்தமிழகம் இயக்கம்
தோழர் அண்ணாமலை, வடக்கு மண்டல அமைப்பாளர், தந்தைப் பெரியார் திராவிடர் கழகம்
தோழர் ஆதில் மாநிலக் குழு உறுப்பினர் கேம்பஸ் ப்ரண்ட் ஆப் இந்தியா

 

ஒருங்கிணைப்பு: திராவிடர் விடுதலைக் கழகம், இளந்தமிழகம் இயக்கம், தமிழ்நாடு மாணவர் இயக்கம்

98844 68039 | 95000 44452 | 98847 54080

About விசை