Home / FITE சங்கம் / அனேகனும் – ஐ.டி தொழிலாளர்களும் …..

அனேகனும் – ஐ.டி தொழிலாளர்களும் …..

அண்மை காலங்களில் ஐ.டி தொழிலாள‌ர்களின் வாழ்க்கையை  சித்தரிக்கும் படியான படங்கள் வரத் தொடங்கியுள்ளன, அதில் அனேகனும் ஒன்று. அனேகன் படத்தில் கதை மாந்தர்கள் அனைவரும்  வீடியோ விளையாட்டுகளை வடிவமைக்கும் ஒரு ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்கின்றனர். அனைவரும் (நாயகன் தவிர்த்து) மன அழுத்தத்தின்(Mental Stress) காரணமாக மன நல மருத்துவரைப் பார்த்து வருகின்றனர். இந்த மன அழுத்தத்திற்கு காரணம் அவர்களின் வேலைப்பளு.
             

பொதுவாகவே ஐ.டி ஊழியர்களைப் பற்றி சமூகம் கொண்டுள்ள மதிப்பீட்டின் படி, ஐ.டியில் பணி புரிபவர்கள் அதிக சம்பளம் வாங்குபவர்கள்,  வார இறுதி கொண்டாட்டங்களில் ஈடுபடுபவர்கள் என்பதோடு நின்று விடுகின்றது, அதை இந்த திரைப்படத்திலும் காட்டியுள்ளார்கள், நாயகன் உள்ளிட்ட தொழிலாளர்களில் பலர் காரில் தான் பணிக்கு வருகின்றார்கள், ஒரு திட்டம்(Project) முடிந்த உடன் நிறுவன உரிமையாளரின் பண்ணை வீட்டில் கொண்டாட்டம் நடைபெறுகின்றது (இந்த பாடல் காட்சி அப்படியே Wolf  of  Wall street படக்காட்சி ஒன்றை நினைவூட்டுகின்றது). சமூகத்தின் பொது புத்தியும், படங்களில் ஐ.டி தொழிலாள‌ர்கள் பற்றி காட்டப்படுபவையும் பெரும்பாலும் தவறான, காழ்ப்புணர்ச்சியினால் எழுந்த ஒன்றாகவே உள்ளன, இது அனேகனிலும் உள்ளது, கதைக்கு தேவைப்பட்டதால் ஐ.டி தொழிலாளர்களின் மன அழுத்தம் சேர்க்கப்பட்டுள்ளது அவ்வளவே.

work-stress2
     

2013ஆம் ஆண்டு தேசிய மன நல, நரம்பியல் அறிவியல் கல்வி நிலையம் – பெங்களூர் (National Institute of Mental Health and Neuro Sciences -Nimhans)  எடுத்த ஆய்வின் படி முதலில் மன அழுத்தத்தில் இருந்த ஐ.டி.தொழிலாளர்கள், இன்று மனச்சிதைவுக்கு (Mental Depression) ஆளாகி உள்ளனர் என்கிறது. தங்களிடம் மன நல ஆலோசனைக்கு வருவதில் பகுதி பேர் ஐ.டி தொழிலாளர்களாக உள்ளனர்,  இதற்கு காரணம் அதிக வேலைப்பளு, வேலை நிச்சயமற்றத்தன்மை, சமூகத்துடனான தொடர்பற்ற நிலை என்கிறது அந்த ஆய்வு. மேலும் கணவன் – மனைவி இருவரும் ஐ.டி துறையில் பணியாற்றும் பொழுது மணமுறிவுகள் அதிகரிப்பது, இதன் இறுதி கட்டமாக தற்கொலைகளும் நிகழ்கின்றது  என்கிறது ஆய்வறிக்கை.

360_bangalore_0501
   

வெளியிலிருந்து பார்ப்பதற்கு பகட்டான வாழ்கையாகத் தெரியும் ஐ.டி துறை, உள்ளே அவ்வாறிருப்பதில்லை என்பதையே மேற்கூறிய ஆய்வுகள் காட்டுகின்றது. இதில் வேலைப்பளுவும், வேலை நிச்சயமற்றத்தன்மை இன்று அதிகரித்து வருகின்றது, டி.சி.எஸ்ஸில் பல்லாயிரம் பேர் வேலை இழப்பு, ஐ.பி.எம்-மில் ஆட்குறைப்பு, ஐ.கேட்டில் ஆட்குறைப்பு என நாளிதழ்களில் தினமும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. அதே நேரம் ஒரு காலத்தில் அதிக அள‌வில் வேலைவாய்ப்பளித்து வந்த ஐ.டி. நிறுவனங்கள் இன்று புதிய பணியமர்வுகளைக் குறைத்தும் வருகின்றன. இந்த ஆன்டை விட அடுத்த ஆண்டு 30விழுக்காடு புதிய பணியமர்வுகளே நடக்கும் என நாஸ்காம் கூறியுள்ளது. மறு புறம் தேவையை விட அதிகமான பொறியாளர்கள் ஆண்டு தோறும் வெளியே வருகின்றனர்.

இதற்கு தீர்வு தான் என்ன ?

     

சமூகத்துடனான பிணைப்பை ஐ.டி தொழிலாளர்கள் பரமாரிக்க வேண்டும். டி.சி.எஸ் வேலை இழப்பு தொடர்பான பரப்புரையில் ஒரு ஆட்டோ ஓட்டுநர் தானாகவே முன்வந்து இது என்ன பிரச்சனை எதற்கான பரப்புரை என்று கேட்டதோடு இல்லாமல் பரப்புரை தொடர்பான போஸ்டரை தனது வண்டியில் ஒட்டிக்கொண்டு அவர் சொன்னார், அவர்களை நம்பி தான் சார் நம்ம பொழப்பு ஓடுது, அவங்களுக்கு வேலை இல்லைன்னா நாம எங்க சார் போறதுன்னு… இந்த சமூகச்சங்கிலியை அவர் புரிந்து கொண்டுள்ளார், அதே போல நாமும் புரிந்துகொள்ள வேண்டும். நம்மை இந்த சமூகத்தோடு நன்கு பிணைத்து கொள்ள வேண்டும்.

   

நிறுவனங்கள் தங்கள் உரிமையை பாதுகாத்துக் கொள்ள ஒன்று சேர்ந்துள்ளனர், நாஸ்காம் போன்ற சங்கங்களை வைத்துள்ளனர், ஆனால் நாம், நமது சக ஊழியரிடம் கூட அதிகம் பேசுவதில்லை, இதை மாற்றி நமது சக  ஊழியர்களுடன் ஒரு நல்ல உறவைப் பேண வேண்டும். அதே போல சட்டத்திற்கு புறம்பான வேலைப்பறிப்புகளுக்கு எதிராகவும்,  நமது  உரிமைகளுக்காகவும், நலன்களை பாதுகாத்துக் கொள்ளவும் நாம் ஒன்று சேர்ந்து போராட‌ வேண்டும், நாம் எந்த அளவுக்கு ஒன்று சேருகின்றோமா அந்த அளவுக்கு மன அழுத்தத்திலிருந்தும், மனச் சிதைவுகளிலிருந்தும் நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

நற்றமிழன்.ப‌

தரவுகள் , மேலும் படிக்க‌

About நற்றமிழன்

ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் தரக்கட்டுபாட்டுத் துறையில் பணி புரிகின்றார். தற்சமயம் திருப்பூரில் வசித்து வருகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*