Home / அரசியல் / கூடங்குளத்தில் அணு உலைப் பூங்கா அமைக்காதே …

கூடங்குளத்தில் அணு உலைப் பூங்கா அமைக்காதே …

ரூ 17,200 கோடியில் கட்டப்பட்ட முதல் இரண்டு அணு உலைகளில், முதல் அணுவுலை வணிக ரீதியிலான மின் உற்பத்தியைத் தொடங்கியதாக கடந்த டிசம்பர் 31, 2014 அன்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கூடங்குளம் இரண்டாவது அணுவுலையும் விரைவில் செயல்படத் துவங்கும் என்று அறிவிக்கிறது அரசு. அது மட்டுமின்றி 3,4 அணு உலைகளுக்கான ஒப்பந்தமும் போட்டாயிற்று.

கூடங்குளம் 3,4 அணு உலைகள் வேண்டாம்! அணு உலை பூங்கா வேண்டாம்:

அணுவுலைப் பூங்கா என்பது, இரண்டுக்கும் மேற்பட்ட அணுவுலைகளை ஒரே இடத்தில் நிறுவுவதாகும். கூடங்குளத்தில் அமையவிருக்கும் 3,4,5,6 என்று அடுத்தடுத்து அணு உலை அமைக்க நினைக்கிறது அரசு. கூடங்குளத்தில் ஓர் அணு உலைப் பூங்கா அமைப்பதே திட்டம். அணு உலைப் பூங்காக்கள் போர், பயங்கரவாதிகளின் தாக்குதலாலும், சுனாமி போன்ற இயற்கை பேரிடராலும் பேராபத்து நிகழலாம். 2011இல் ஏற்பட்ட ஃபுக்குஷிமா அணு உலை விபத்து இதனை மிகத் தெளிவாகக் காட்டுகிறது. இத்தகைய காரணங்களால், கூடங்குளத்தில் 3,4 அணு உலைகள் அமைக்கப்படக் கூடாது. மேலும், கூடங்குளம் 3,4 அணு உலைகளுக்கு தற்போது கணக்கிடப்பட்டுள்ள தொகை சுமார் 40,000 கோடி ரூபாய் ஆகும். இது 1,2 அணு உலைகளைவிட 2 மடங்கு அதிகம் என்பதும் இங்கு கவனிக்க வேண்டியதாகும்.
மத்திய அரசின் மக்கள் விரோத அணுசக்திக் கொள்கை:

”வளர்ச்சி” என்னும் முழக்கத்தை வைத்து ஆட்சிக்கு வந்த திருவாளர் மோடி, பன்னாட்டு, உள்நாட்டு பெருமுதலாளிகளின் இலாப வளர்ச்சிக்காக மட்டுமே பாடுபடுகின்றார். போராடும் மக்களைப் பார்த்து அந்நிய நாட்டுக் கைக்கூலிகள் என்றும், அயல்நாடுகளிடம் பணம் பெறுபவர்கள் என்றும் குற்றம் சாட்டிய இந்த அரசுதான் ஆஸ்திரேலிய, இரசிய, அமெரிக்க அதிபர்களுடன் அணுசக்தி ஒப்பந்தங்கள் போட்டு நம் நாட்டைப் பலி கொடுத்துள்ளது. விரைவில் ஜப்பானிடமும் ஒப்பந்தம் போடப்பட்டு, அந்நாட்டு அணுசக்தி நிறுவனங்களும் இங்கு கடை விரிக்கும்.

உலகில் மொத்தமுள்ள யுரேனியத்தில் 40% வரை தன்னகத்தே கொண்டிருந்தாலும் இதுவரை ஒரேயொரு அணுவுலைகூட அமைக்காத ஆஸ்திரேலியாவிடமிருந்து இந்திய அரசு யுரேனிய இறக்குமதிக்கான ஒப்பந்தத்தைப் போட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம், இந்தியா வந்த இரசியப் பிரதமரிடம் மேலும் 12 அணுவுலைகளை இந்தியாவின் பல்வேறு இடங்களில் அமைக்க ஒப்பந்தம் போட்டுள்ளார் மோடி.

anti-nuke-energy-protest-kudankulam-protest-envazhi61
அணு விபத்து இழப்பீட்டுச் சட்டம்:

”அணு விபத்து இழப்பீட்டுச் சட்டம்” என்பது கடந்த 2010 ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசால் இயற்றப்பட்ட சட்டமாகும். அணுவுலைகளில் ஏதேனும் விபத்து நேரும்பட்சத்தில், சுமார் ரூ 1500 கோடி வரை மட்டுமே அணு உலைக்கு பாகங்கள் வழங்கிய நிறுவனங்களை இச்சட்டத்தின் மூலம் பொறுப்பேற்கச் செய்ய முடியும். 2011இல் ஜப்பான் ஃபுக்குசிமாவில் ஏற்பட்ட விபத்தினால் ஏற்பட்ட இழப்பு சுமார் 6.5 இலட்சம் கோடி ரூபாய். ஆனால் இச்சட்டத்தை இரசியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடுமையாக எதிர்த்தன.

கூடங்குளத்தில் அமைந்திருப்பது அல்லது அமையப் போவது “உலகத்தரம் வாய்ந்த மூன்றாவது தலைமுறை” அணு உலை. அதனால் அங்கு விபத்து நேர வாய்ப்பே இல்லை என்று திரும்பத் திரும்ப நம்மிடம் கூறிய அவர்கள், பின் ஏன் இச்சட்டத்தை எதிர்க்க வேண்டும்?
அமெரிக்க அதிபருடன் ஒப்பந்தம்:

உண்மையான அமெரிக்க அடிமை யார்? என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டிய நிகழ்வு கடந்த ஜனவரி 25, குடியரசு தினத்தையொட்டி நிகழ்ந்தது. இந்தியக் குடியரசு தினத்தில் பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் முதல்முறையாக ஒரு அமெரிக்க அதிபர் கலந்து கொண்டார். அமெரிக்கப் பெரு நிறுவனங்கள், குறிப்பாக அணுசக்தி நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் கடையை விரித்து இலாபம் பார்ப்பதற்குத் தடையாக விளங்கிய ஒரு சில சட்டங்களிலிருந்தும் கூட அவர்களுக்கு விலக்கு பெற்றுத் தர அவர் இங்கு வந்தார். GE, Westinghouse போன்ற அமெரிக்க நிறுவனங்கள் முக்கிய பிரச்சனையாகப் பார்த்தது, அணு விபத்து இழப்பீட்டுச் சட்டத்தைத் தான். இந்த சிக்கலை மோடி தலைமையிலான அரசு தீர்த்தது.

இந்திய அரசும், அரசு காப்பீட்டு நிறுவனங்களும் இணைந்து “இந்திய அணுசக்திக் காப்பீட்டுக் குழுமம்” ஒன்றை ஆரம்பிக்கும். இந்தியாவில் ஒரு புதிய அணு உலையை விற்க வரும் ஒரு வெளிநாட்டு நிறுவனம் இக்குழுமத்தில் ஒரு சிறு தொகையை தவணைக் கட்டணமாகக் கட்டி பதிந்துக் கொள்ளலாம். பின்னாளில் அவ்வணு உலையில் விபத்து ஏற்பட்டால் விபத்துக்கான ஈழப்பீடு காப்பீட்டிலிருந்தே பெறப்படும். அதாவது, நம் நாட்டு மக்களின் வருமானத்திலிருந்து பெறப்படும். இந்தக் காப்பீட்டுத் தொகைக்கான உச்சபட்ச வரம்பு ரூ 1500 கோடியாகும். அதற்கு மேல் இந்திய அரசே பொறுப்பேற்கும்.

இதன் மூலம், பன்னாட்டு நிறுவனங்களுக்கு எந்த இழப்பீடும் ஏற்படுத்தாமல், அனைத்தையும் மக்களின் தலையில் கட்டிவிட்டது இந்திய அரசு

INDIA_(F)_0321_-_Nuclear_Energy._Article.corrected_(2)
தமிழகத்தை அணுக்கழிவுக் கூடமாக்கும் இந்திய அரசு:

நியாயமான கேள்விகளை முன்வைத்து துவங்கியதே கூடங்குளம் அணு உலைக்கெதிரான மக்கள் போராட்டம். தன்னை ஒரு சனநாயக அரசாக வெளிக்காட்டிக்கொள்ளும் இந்திய அரசு, போராடும் மக்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்தது. அவர்கள் மேல் வழக்குகளைப் போட்டுக் குவித்தது.

ஆனால், “அணுவுலை செயல்பட்டால் உண்டாகும் கழிவு கதிரியிக்கத் தன்மை உடையது. அதனை என்ன செய்வதாக உத்தேசம்?” என்ற மக்களின் அடிப்படையான கேள்விக்குக்கூட இன்றுவரை அரசிடம் சரியான பதிலில்லை.
”விபத்தே ஏற்படாது என்பது உண்மையென்றால் எதற்கு அணுவிபத்து இழப்பீட்டுச் சட்டத்தைக் கொண்டு வருகிறீர்கள்?”

“அதை ஏன் அணுசக்தி நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றன?”

தமிழகத்தில் அணுவுலைப் பூங்காவை வைப்பது. அணுக்கழிவுகளை எங்கே வைக்கப் போகிறோம் என்று இதுவரை சரியாக விளக்காதது இவற்றைக் கொண்டு பார்க்கும் போது இந்திய அரசு தமிழகத்தை அணுக்கழிவுக் கூடமாக்க முயற்சிப்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம்

நமது வாழ்வையும் வாழ்வாதாரங்களையும் பணயம் வைத்து, பெருமுதலாளிகளின் இலாபத்திற்காக இந்திய அரசு மேற்கொண்டுள்ள கேடான அணுசக்திக் கொள்கையை நம்மால் இனியும் அனுமதிக்கக் கூடாது

இந்திய அரசே!
அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தத்தை இரத்து செய்!
கூடங்குளத்தில் அணு உலைப் பூங்கா அமைக்காதே!
3 & 4 அணு உலைகளுக்கான ஒப்பந்தங்களை இரத்து செய்!
தமிழகத்தை அணுக்கழிவுக் கூடமாக்காதே!
மார்ச் 14 அன்று சென்னையில் நடந்த முழுநாள் கருத்தரங்கத்திற்காக வினியோகிக்கப்பட்ட துண்டறிக்கை


அணுசக்தி எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு
பேச: 9443184051, 9941931499, 9443307681, 9047521117
மின்னஞ்சல்: pfakknp2011@gmail.com
தொடர்பு முகவரி: எண் – 95, நடேசன் சாலை, மயிலாப்பூர், சென்னை – 4

About சிறப்பு கட்டுரையாளர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*