Home / கலை / “சுடுமணல்” – சிறுகதை

“சுடுமணல்” – சிறுகதை

பாயம்மாவை விட அவள் உற்பத்தி செய்கிற‌ இடியாப்ப ருசியையும், பாரதி நகர் பேருந்து நிலைய திண்டின் லாந்தர் ஒளியையும் சட்டென்று யாராலும் மறந்து விட முடியாது. மாலை நேரங்களில், பாலத்தினின்று கீழிறங்கும் 2ஏ, 33,116 ஆகிய‌ வடசென்னையின் நெளிவு சுளிவுகளுக்குள் புகுந்தலையும் எல்லா பேருந்துகளும் பாயம்மாவின் இடியாப்ப வாசனையை நுகராமல் நகர்ந்து விட முடியாது. இடியாப்பத்திற்கு அப்படி என்ன வாசனை இருக்க முடியும்? இருக்கிறது. மல்லிகை, கனகாம்பரம், முல்லை பூக்களோடு, மண்ணெண்ணெய் அடுப்பின் புகை கலந்து அடிக்கும் ஒரு வித சுகந்த நெடி, பேருந்தின் சன்னலோரம் அமர்ந்திருப்பவர்களோடு பக்கத்தில் வந்து அமர்ந்து கொள்ளும். சற்று நெருங்கிச் சென்றால், தையல் இலைகளில் தூய வெள்ளை நிறத்தில் சுடச்சுட பரிமாறப்படும் இடியாப்பங்களுக்கென்று ஒரு மணம் இருக்க முடியும் என்பதை உணர முடியும்.

குழந்தைகள், வயதானவர்கள், சுகுநாதன் கிளினிக்கிலிருந்து வெளியேறும் ஜூரத்துக் காரர்கள் என அனைவரின் இரவு நேர உணவை ஈடுகட்டுவது பாயம்மாவின் இடியாப்பம் தான். பத்து ரூபாய்க்கு ஐந்து இடியாப்பங்கள் என்பது அளவுக்கு சற்று அதிகம் தான். போட்டிக்கென்று இருக்கும் மற்ற இரண்டு கடைகளிலும் இதே விலை தான் என்றாலும் பாயம்மாவின் கடையில் கூட்டம் கும்முவதைப் போல, மற்ற கடைகளுக்கு ஆள் வருவதில்லை. ருசி வேறுபாட்டில் சிலப்பல ரகசியங்கள் ஒளிந்திருக்கின்றன. பெரிய வித்தியாசங்கள் இல்லை. மற்றவர்கள் அரிசி மாவை அரைத்து வறுப்பதில்லை. அரைப்பதோடு சரி. சுடு தண்ணீரை ஊற்றி, குழாயில் அடைத்து பிழிந்தெடுப்பார்கள். இடியாப்பத்தை பார்சல் கவரில் அணைத்து, தினந்தந்தியில் மடித்து தருவார்கள். பார்சலோடு வீடு போய்ச் சேருவதற்குள் இடியாப்பம் பொங்கலாகி இருக்கும். அல்லது அரிசியையே கடித்தது போல அரைவேக்காடாக கறுக்கென்று இருக்கும்.

இர‌வு ஆறு ம‌ணிக்குப் பிற‌கு தான் க‌டை என்ப‌தால் ப‌க‌ல் முழுதும் அரைத்த‌ மாவை வ‌றுப்ப‌து தான் பாய‌ம்மாவுக்கு வேலையே. மகள் நசுரீனை கல்லூரிக்கு அனுப்பி விட்டு, அடுப்பை ப‌ற்ற வைத்தால், மாலை அச‌ர் தொழுகைக்கு பாங்கோசை எழும் வ‌ரை இடிப்பு ஒடிய‌ மாவை வ‌றுக்க‌ வேண்டியிருக்கும். வார‌ம் இர‌ண்டு மூன்று நாட்க‌ள் ம‌ட்டும் தான் இந்த‌ வேலை. ம‌ற்ற‌ நாட்க‌ளில் பிளாஸ்டிக் பூ கோற்பாள். சுற்றி நின்று நச்சரிக்கும் “பாயம்மா பத்து ரூவாய்க்கு…இருவது ருவாய்க்கு…” குரல்களை சமாளிக்க வேண்டுமானால், சங்கு சக்கரமாக இயங்க வேண்டும். பேருந்து நிலைய திண்டில் தான் தரையோடு சேர்த்து அடுப்பு வைக்கப்பட்டிருக்கிறது. பெரிய வட்டப்பாத்திரத்தில் பத்துக்கும் மேற்பட்ட இடியாப்பங்களை ஒரு சுற்றில் பிழிந்து வைக்க வேண்டும். ஒரு ஓவியம் வரைவதைப் போல வட்டத்தட்டு முழுவ‌தையும் நிர‌ப்ப‌ வேண்டும். குழாயில் மாவை நிறைத்து, கோல‌ம் போடுவாக்கில் அம‌ர்ந்து உற்ப‌த்தியைத் தொட‌ங்குவாள் பாய‌ம்மா. நான்கைந்து ம‌ணி நேர‌ங்க‌ள் த‌ண்ணீர் குடிக்க‌க் கூட‌ நேர‌மிருக்காது. வீட்டுப்பாட‌ங்க‌ளை முடித்து விட்டு மைமூனா க‌டைக்கு வந்தால், பார்ச‌ல் க‌ட்ட‌, காசு வாங்கிப் போட‌ என‌ ஆசுவாசப்படுத்திக் கொள்ள நேரம் கிடைக்கும்.பி6 காவல் நிலையத்துக்கு அனுதினம் 50 ரூபாய் மொய் பணம் தவிர வாடகையென்று பெரிதாக இல்லை.

புரசைவாக்க பிளாட்பாரத்தில் சர்புதீன் பனியன் விற்றுக் கொண்டிருந்த வரை, வீட்டு அடுப்பங்கறை வரை மட்டுமே இடியாப்பம் செய்யத் தெரிந்திருந்தது பாயம்மாவுக்கு. ஒரு காவிக்கட்சி அலுவலகத்தில் குண்டு வெடித்திருந்த நேரம். விசாரணையென்று ஒரு நள்ளிரவில் சர்புதீனை கூட்டிப் போனார்கள். “மையத்” ஆக வீடு வந்து சேர்ந்தார் சர்புதீன். 12 வருடங்கள் பாயம்மாவின் இடியாப்பக்கடை பாரதி நகரின் முக்கிய அடையாளமாகி விட்டது.

“33ல இறங்குங்கோ. அங்க ஒரு இடியாப்பக்கட வரும். அங்கருந்து யார்கிட்டனா கேளுங்க. அட்ரஸ் சொல்வாங்க”

“சொல்லுங்க தோழர்…இங்க இருக்க இடியாப்பக்கட பக்கத்துல தான் தெருமுனைக் கூட்டம். நம்ம மீட்டிங்கு வர்ற கூட்டத்த விட, இந்தக் கடையில கூட்டம் அதிகமா இருக்கும். ஆஹ்..கரெக்ட்…அங்க வந்துருங்க..”

“ஆமா…அந்த இடியாப்பக்கடய் க்கு பின்னாடி இருக்க நாட்டு மருந்து கடையில் சாமின்னு ஒருத்தர் இருப்பாரு..கேட்டுப் பாருங்க.. அரிசித்திப்பிலினு சொல்லுங்க..தருவாரு…”

“பாரதி நகர்ல பெஞ்சமின‌ போட்டாங்கல‌. எல்லாம் பயினாலு பாஞ்சு வயசு புள்ளீங்கோ..காது குத்து ரவி பசங்க தான்….பீச்சு வுட்ட மாரி ரோடெல்லாம் ரத்தம்…பி6 எஸ்.ஐ..டேசனுக்கு புதுசுபா.. ..அவ்ஸ்ரப்பட்டு துர்துர்ன்னு பாக்கெட்ல இருந்து கன்ன எடுக்குறதுக்குள்ள, கைல தோள்ல இரண்டு வெட்டு…போட்டு எல்லாம் எகிறிட்டானுங்க…நம்ம பாயம்மா கடைக்கி மின்னாடி தாம்ப்பா..”

வியாசர்பாடியின் எல்லா உரையாடல்களிலும் பாயம்மாவின் இடியாப்பக்கடை குடி கொண்டு விட்டது. பின்னால் காதைப் பிளக்கும் ஹார்ன் சத்தங்களையும் பொருட் படுத்தாமல், சாவகாசமாக தங்கள் வாகனங்களை நிறுத்தி, இடியாப்பங்களை நகர்க்காரர்கள் வாங்கிச் சென்றனர். பெரும்புள்ளிகளுக்கு கூட பாயம்மாவின் கடையென்றால் அவ்வளவு பரிச்சயம்.

பாயம்மா பற்றி பேசிக் கொண்டிருப்பதற்கு இப்போதென்ன காரணம் என்றால் விஷயம் இருக்கிறது. சொல்கிறேன்.

============================

நேற்று அலுவலகத்தில் ஏகப்பட்ட வேலை. பெண்டு கழன்று விட்டது. வீட்டுக்கு வந்து சேரும் போது மணி பதினொன்றைத் தாண்டியிருந்தது. இரவு உணவை முடித்து விட்டு எப்போது படுத்தேன் என்று நினைவில்லை. காலை எட்டு மணிக்கு தான் விழிப்பு தட்டியது. வழக்கம் போல கண்ணைத் திறந்த உடன், தலையணைக்கு கீழ் புதைத்து வைத்திருந்த அலைபேசியைத் தூக்கக் கலக்கத்தில் துழாவினேன். திறந்து பார்த்தால் மூன்று தவறிய அழைப்புகள். நான் அதுவரை சேமித்து வைத்திராத புதிய எண். அதிகாலை 5.10க்கு ஒன்று, 5.15க்கு ஒன்று, 5.20க்கு ஒன்றாக மூன்று அழைப்புகள். திரும்ப அழைத்தால் அந்த எண்ணை தொடர்பு கொள்ளவே முடியவில்லை. சம்பந்தப்பட்ட நபர் யாருடனோ பேசிக் கொண்டே இருந்திருப்பார் போல….. விட்டு விட்டேன். அந்த எண்ணை மீண்டுமொருமுறை சரி பார்த்தேன். சரியாக இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு மாலை நேரம் 5.20 மணிக்கு அந்த எண்ணுக்கு நான் அழைத்திருப்பதாக, சேமித்து வைத்த “அழைப்புப் பதிவு” சொல்லிற்று. இரண்டு வாரங்களுக்கு முன்பு நான் ஏன் அந்த எண்ணுக்கு அழைத்தேன். அதுவும் தெரியாத புது எண்ணுக்கு. அந்த நாள் ஒரு வெள்ளிக்கிழமை, நான் எங்கிருந்தேன். அலுவலகத்தில் தான் இருந்திருப்பேன்.. மதியம் ஆளுநர் மாளிகை வளாகத்திற்குள் இருக்கும் பள்ளிவாசலில் ஜூம்மா தொழுகையை முடித்தேன். பொன்னுசாமியில் சாப்பிட்டோம். பிறகு எங்கே போனேன். பிடித்து விட்டேன். இயக்கத்தோழர் நாசரோடு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றேன். சரி தான்.

அமில வீச்சால் சிதைந்து போயிருந்த ஆதம்பாக்கம் வித்யா என்கிற இளம்பெண்ணைப் பார்க்கச் சென்றிருந்தோம். நான்கைந்து தோழர்கள் ஏற்கெனவே அங்கு வந்து விட்டிருந்தனர். தோழர் பரிமளா என்னுடைய அலைபேசியை வாங்கி, வித்யாவின் அண்ணனான விஜயை அழைத்து, எந்த வார்டுக்கு வர வேண்டுமென கேட்டுக் கொண்டிருந்தார். தீப்புண் அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் சென்றோம். ஆண்களுக்கு அனுமதியில்லை என்பதால் தோழர் பரிமளாவும் திவ்யாவும் உள்ளே பார்க்கச் சென்றார்கள். அப்படியென்றால் விஜயின் எண் தானா அது ? ஒரு கணம் தலை சுற்றியது.
விஜய்க்கு என்ன அவசரம். என் அலைபேசி எண்ணுக்கு அவர் ஏன் அழைத்தார்? ஏதேனும் நடந்திருக்குமா ? பதறிப் போனேன். திரும்ப விஜயை அழைத்துப் பேசத் தைரியம் வர வில்லை. தோழர் பரிமளாவை அழைத்தேன். அதிகாலை 5 மணிக்குத் தான் வித்யாவின் உயிர் பிரிந்திருந்தது. மருத்துவமனையில் உள்ள குறைபாடுகளினால் ”இன்ஃபெக்‌ஷன்” ஆகி விட்டதால், உடல் முழுதும் நோய்க்கிருமிகள் பரவி உடல் நிலை மிகவும் மோசமாகி விட்டிருந்ததாகவும் தெரிவித்தார். அதன் பிறகு ஒவ்வொரு தோழராக குறுந்தகவல் அனுப்ப ஆரம்பித்தனர்.

1479-povpic2111609-web

தொலைக்காட்சிகளில் “நகரும்” செய்திகளில் வித்யாவின் மரணச் செய்தி ஓடிக்கொண்டிருந்தது. வினோதினிக்கு பிறகு கடந்த சில மாதங்களில் இது இரண்டாவது அமில வீச்சு மரணம். பதறியடித்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு ஓடினோம். வினோதினியின் மரண நாள் அன்று நடந்த அதே காட்சிகள் தான் இன்றும். ஊடகவியலாளர்கள் ஒவ்வொருவராக வரத் துவங்கியிருந்தனர். உடற்கூறு அறுவை சிகிச்சை மருத்துவர் வர தாமதமாகுமென நேரம் கடத்திக் கொண்டிருந்தார்கள். வித்யாவின் அம்மா பரிமளாவின் தோளில் சாய்ந்து அழுது புலம்பிக் கொண்டிருந்தார். உரிய நேரத்தில் சரியான சிகிச்சை கிடைக்காமல் வித்யாவின் சிதைந்து போன உடலோடு, வித்யாவின் அம்மாவையும் அண்ணனையும் மருத்துவமனை ஊழியர்கள் அலைக்கழித்துக் கொண்டிருந்த போது, தோழர் பரிமளா உள்ளிட்ட மற்ற தோழர்கள், கூட்டாகச் சென்று கோட்டையில் அரசு மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலரைச் சந்தித்து, பேசினர். செயலர் மருத்துவமனையின் டீனை உடனடியாக தொடர்பு கொண்டு பேசினார். அந்தச் சந்திப்புக்கு பிறகு இயக்கத் தோழர்கள் ”பிரஸ் மீட்” நடத்தி வித்யாவுக்கு உடனடியாக உயர் சிகிச்சை, உரிய இழப்பீடு, குற்றவாளி மீது தகுந்த நடவடிக்கை உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஊடகங்களுக்கு செய்தி வெளியிட்டனர். இப்படி கடந்த இரண்டு வாரமாக தோழர்கள் வித்யா குடும்பத்தினரோடு, மருத்துவமனையிலேயே உடனிருந்தனர். இன்று காலை மரணச் செய்தி.

கண்ணீர் மல்க கோபத்தோடு ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார் அண்ணன். ஊடகங்கள் ஒவ்வொன்றாக வர வர, கூட்டம் கூடி விட்டது, மருத்துவமனை வளாகம் பரபரப்பானது. கடந்த வாரங்களில் என்னன்ன நடந்தது என தோழர் பரிமளா புதிய தலைமுறைக்கு விளக்கிக் கொண்டிருந்தார். இயல்பாக உருவான கொந்தளிப்பான சூழலை, சனநாயக மாதர் சங்கம் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி அணைக்கும் வேலையைச் செய்ய ஆரம்பித்தது. தில்லி நிர்பயா சம்பவத்திற்கு பிறகு “கற்பழிப்பு சம்பவங்கள்” அதிகமாகி விட்டதாக சனநாயக மாதர் சங்க பெண் தோழர் உணர்ச்சி பொங்க கொப்பளித்துக் கொண்டிருந்தார். பெண்களுக்கெதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகள், அமில வீச்சுகள், அரசு மருத்துவமனைகளின் மோசமான ஆபத்தான அடிப்படை வசதிகள் இவைகளை எதிர்த்து உருவாகவிருந்த போராட்டச் சூழல், விஜய்க்கு அரசு வேலை, லட்சங்களில் இழப்பீடு என சுருங்கி நின்றது. திருமா பார்க்க வந்த போது மீண்டுமொருமுறை பரபரப்பாகி அடங்கியது. பல்வேறு இயக்கத் தோழர்கள் பங்கேற்ற வித்யாவின் இறுதிச் சடங்கோடு பரபரப்புகளும் அடங்கிப் போயின.

எல்லாம் முடிந்து வீட்டிற்கு வந்து சேர்ந்தேன். ஏதோ ஒரு தொலைக்காட்சியில் விவாத அரங்கில் “பெண்களைக் கல்லூரிக்கு அனுப்பும் போது பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் எங்கு போகிறார்கள், யாரோடு பேசுகிறார்கள்” என்றெல்லாம் கண்காணிக்க வேண்டுமென்பதாய் ஒருவர் உரத்த குரலில் பெண்களுக்கும் பெற்றோர்களுக்குமாய் அறிவுரை நல்கிக் கொண்டிருந்தார். எரிச்சலாகி அதை அணைத்து வைத்தேன்.
லேசாக தலை வலிக்க ஆரம்பித்தது.

========================

வடசென்னையிலிருந்து புலம் பெயர்ந்து இன்றோடு ஒரு ஆண்டு நிறைவு பெறுகிறது. புழுதி படிந்த தெருக்களையும், பர்மா “பாத்தைக்” கைலி கட்டிய வெள்ளந்தி மனிதர்களையும், அத்தோ மொய்ங்கா கடைகளையும், பீலிக்கான் முனீஸ்வரர் திருவிழாக் கூட்டங்களையும் இந்த ஓராண்டில் முழுமையாக இழந்து விட்டிருக்கிறேன். மேட்டுக்குடி மக்கள் வாழும் சென்னையின் அஸ்தினாபுரம் போன்ற பகுதிகளும் ஜிகினா டைப் வாழ்க்கை முறையும் இன்னும் எமக்கு கட்டுப்படியாகவில்லை. தெருக்களில் ஓடியாடி, வெயிலோடு விளையாடும் குழந்தைப்பருவம், எனக்கு கிட்டியதைப் போல, என் பையனுக்கு கிடைக்க வாய்ப்பே இல்லை. வீட்டோடு அடைந்து கிடைப்பதால், மாலை நேரங்களில் மாநகராட்சி பூங்காக்களில் தஞ்சமடைகிறான்.

வழக்கமாக அவன் விளையாடும் மாநகராட்சி பூங்கா மராமத்து பணிகளுக்காக‌ மூடி விட்டிருந்தார்கள். தெருக்கள் தோறும் தேடி ஒரு பூங்காவைக் கண்டு பிடித்தோம். மாநகராட்சி பூங்கா அல்ல. ஏதோ தனியார் அமைத்து பராமரிக்கும் “ஹைகிளாஸ்” பூங்கா போல மினுமினுத்தது. சரி குழந்தைகள் விளையாடத் தானே..யார் கேட்கப்போகிறார்கள் என்று நுழைந்து விட்டோம். தள்ளாத வயதில் ஒரு முதியவர் சொன்னார். “திஸ் இஸ் நாட் எ பப்ளிக் பார்க். இட்ஸ் எ ப்ரைவேட் ப்ளே ஏரியா. நீங்க எங்கிருந்து வர்றேள் ?”

“தெரியும் சார். பையன் பார்க் அ பாத்தவுடன ஆசைப்பட்டுட்டான். கொஞ்சம் நேரம் விளையாடிட்டு போயிருவோம்” என பதிலளித்தேன்.

”இட்ஸ் ஓக்கே, வில் டாக் டூ செக்யூரிட்டி” என்று நகர்ந்தார். கண்டிப்பாக செக்யூரிட்டி சிறிது நேரம் கழித்து, நம்மை அப்புறப்படுத்த என்னிடம் வந்து நெளிவார் என எதிர்பார்த்தேன். இருக்கையிலிருந்து மனிதர் நகரவேயில்லை.முதியவர் ஏதோ உரத்துச் சொல்லி விட்டு, பாஸ்டனிடல் இருக்கும் தன்னுடைய மகனுடைய அலைபேசி அழைப்பை எடுத்துப் பேசலானார். கண்டிப்பாகக் காவலர் அவாள் கிடையாது. விளையாடி முடித்ததும் பெரிசு அப்படி அந்த செக்யூரிட்டியிடம் என்ன தான் சொல்லியிருக்கும் என கேட்க அவரிடம் நெருங்கினேன். அட நம்ம “சின்னசாமியண்ணே!”

“அட ஆமாம்பா.. வயசாயிருச்சி…நாட்டு மருந்து கடையில ஒன்னும் வேபாரம் சரி இல்ல. அதான் ஊரப்பாக்கத்துல இருக்க நெலத்துல ஒரு குட்சய போட்டு இங்க வந்து இந்த வாட்சு மேன் வேலையில ஒண்டிக்கிட்ட” என்று தொப்பியைக் கழற்றி வைத்து, குழந்தையைக் கொஞ்சினார்.

நம்ம ஏரியா ஆளுனாலே ஒரு தனிப்பாசந்தான். ஏரியாவின் பல கதைகளைப் பற்றிப் பேச ஆரம்பித்தார். பேச்சுக்கு நடுவே பாயம்மாவின் கடை பற்றி பேச்சு போனது. “நம்ம பாயம்மா கட போட்டு ஆறு மாசம் ஆவுது சாமி…அந்தப் பிரச்சினைக்கு அப்புறம்”…..!

“என்னங்க ஆச்சு பாயம்மாவுக்கு”..என்ன பிரச்சினைங்க..?

“அட அந்தக் கதைய ஏம்ப்பா கேக்குற…அந்தம்மா பொண்ணு இருந்துதில்ல. கொஞ்சம் கலரா…. பேரு கூட நசுரீன்….காலேஜ் படிச்சினிருந்துதே…”

”ஆமா….ஏன்….அந்தப் பொண்ணுக்கு என்ன?….”

“ஆளுங்கட்சி கவுன்சிலர் பையன் ஆசிட் அஷ்டாம்பா… நம்ம கடைக்கு பக்கத்துல கூட அடிக்கடி, ஸ்கார்ப்பியோல‌ நிறுத்திட்டு மொய்ங்கா சாப்ட வருவானே”….

“தெரியும் தெரியும் அவனா….அய்யய்யோ…என்னாச்சி பொண்ணுக்கு…லவ் மேட்டரா?”…..

”ஆமாம்பா…ஒன் சைட் லவ்வாம்…. ஆனா பாயம்மா உசுர காப்பாத்திருச்சு பா…”

”ஓஹ் அப்படியா…என்னாச்சு முழுசா சொல்லுங்க..”

”அந்தம்மா கடையில இடியாப்பம் புழிஞ்சினு இருந்துது போல…இந்தப் பொண்ணு தேங்காத்துருவினு இருந்துது…நம்மாளு செம்ம சரக்கு….நேரா கடைக்கு வந்து பாட்டில் மூடிய ஒட்ச்சிருக்கான்…பாயம்மா பாட்ல ஒடக்கிம் போதே உசாரா ஆய்ட்ருந்துக்கிது. ஏற்கெனவே இரண்டு நாள் முன்னாடி வேற வந்து மெரட்டினு தான் போய்க்கிறானுங்க போல….எல்லாத்துக்கும் ரெடின்னு தான் அந்தம்மா இருந்த மாரி, கரெக்ட்டா வீசும் போது, இடியாப்பம் வக்கிற வட்டப் பாத்திரம் இல்ல ….பெரிய பாத்திரம்….அத வச்சி தட்திருச்சு….”

”அப்ப யார் மேலயும் ஆசிட் படலீயா “ எனக்கு ஆர்வம் தாங்க வில்லை.

“அதெப்படி படாம இருக்கும். லைட்டா ரெண்டு பேர் மேலயும் கொஞ்சம் பட்ருச்சி தான்….பாயம்மா கையில கொஞ்சம்….வெரல்ல கொஞ்சம்… அந்தப் பொண்ணு தோள்ல…கழுத்துல..பாத்திரத்துல தான ஆசிட் பட்டுச்சு அதனால…லைட்டா தாம்ப்பா காயம்…..ஸ்டான்லிலயே சரி பண்ணிட்டாங்க….”

“அப்ப அந்தப்பையன் என்ன ஆனான்….புடிச்சுட்டாங்களா ???”

“யார் சொன்னா…புடிக்கலாம் இல்ல…ஆனா பையன் ஒரு மாசம் ஆஸ்பத்திரில அட்மிட்டு…..பாயம்மா தடுத்த பாத்திரத்த வச்சே பையன செம்ம வெலாசு வெலாசிடுச்சி…. பையன் இரத்தப் பொறியலா ஆயிட்டான்….ஆசிட் வேறயா….வெந்து போயிட்டான்….”

TH24_ACID_FINAL_TH_1375427e

“அய்யய்யோ…..ஆளுங்கட்சி பையன் ஆச்சே….பாயம்மாவ ஒன்னும் பண்ணலியா அவங்க…”

“சும்மாவா விடுவானுங்க…அம்மாவையும் பொண்ணையும் டேசன்ல ரெண்டு நாள் வச்சி தான் அனுப்புனாங்க…ஆனா அந்தம்மாவ போலிசு தொட முடியல பா…வெளிய செம்ம சப்போட்டு….வெளிய வந்த மறுநாள்ல இருந்து நெருப்பு மாதிரி இருந்துச்சுப்பா அந்தம்மா….என்ன பண்ணுச்சோ தெரியல…போராட்டம் அது இதுன்னு ஆரம்பிச்சிருச்சி…எப்படி தான் அவ்வளவு பேர சேத்துச்சோ தெர்ல”

“அப்படியா….இவ்ளோ நடந்திருக்கு….நான் எந்த நியூஸ்லயும் பாக்கலியே”……

“அட போப்பா….பாத்துருப்ப….ஆனா வேறெங்கியோ நடந்துதுனு முழுசா பட்சிருக்க மாட்ட….சரி அத வுடு…கதைய கேளு….. உங்க ஆளுங்க…அதாம்பா …செ.மு.மு.க, ஆளுங்க…அப்புறம் நம்ம கடைக்கி மின்னாடி ஆளே இல்லாம மைக்க வெச்சி கூடங்குளம் அது இதுன்னு நாலஞ்சி பசங்க கத்தினு கெடப்பானுங்களே. அந்த பசங்க….பாயம்மா கட ரெகுலர் கஸ்டமர்ஸ்….அப்டி இப்டின்னு ஒரு நூறு பேர தேத்திக்கினு டேசன் முன்னாடி போய் உக்காந்திச்சி பா…அந்தப்பையன அரெஸ்ட் பண்ணு….இல்ல இங்கேயே தீக்குளிப்பனு மெரட்டல் வேற…..”

”அப்புறம் அரெஸ்ட் பண்ணாங்களா இல்லீயா…..”

“பண்டானுங்க…..அரெஸ்ட் பண்றாங்களோ இல்லையோ…அவனுங்க ஆட்டம் அடங்கிருச்சி…அந்தம்மாவ கூட அதுக்கப்புறம் ஒன்னும் பண்ண முடில…”

“ஏன் ?….”

“அதுக்கப்புறம் நகர்ல எந்தப் பிரச்சினையா இருந்தாலும் பாயம்மாவ தான் கூப்டறாங்கபா….குழாயில தண்ணி வர்லனா…ரோடு பிரச்சின.. அது இதுன்னு பாயம்மா தான் இப்ப போராட்டங்களுக்கெல்லாம் லீடர்னு கேள்விப் பட்டேன்….”

“போற போக்க பாத்தா….பாயம்மாவ கவுன்சிலர் ஆக்கிடுவாங்க போல…”

“அட ஆமப்பா…. நாட்ல என்னனெம்மோ நடக்குது…பாயம்மா கவுன்சிலர் ஆனா ஆவாதுன்றாங்களா ?”

“அப்ப இடியாப்ப கட”

“நீயும் நானும் போய் தான் திரும்ப இடியாப்பக் கடய நடத்தணும் வர்றியா….?” வயிறு குலுங்க சிரிக்க ஆரம்பித்தார் சின்ன சாமி.

பதிலுக்குச் சிரித்து வைத்து, சாமியின் அலைபேசி எண் வாங்கிக் கொண்டு, குழந்தையை பின்னால் கிடத்தி, வண்டியை இயக்க ஆரம்பித்தேன். ஏதோ கூடியிருந்த மனப்புழுக்கம் நீங்குவது போல இருந்தது. நன்மங்கலம் காட்டிலிருந்து வரும் யூகலிப்டஸ் இலைகளின் வாசத்தோடு கூடிய காற்று முகத்திலறைந்தது.

 

இளவிச்சிக்கோ

 

About சிறப்பு கட்டுரையாளர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*