Home / அரசியல் / ஜெயலலிதா மக்களின் முதல்வரல்ல………… சர்வாதிகாரி

ஜெயலலிதா மக்களின் முதல்வரல்ல………… சர்வாதிகாரி

ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமான சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை வழங்கப்பட்டபின் அவரது அடிமைகள் (இரத்தத்தின் இரத்தங்கள்) அவருக்கு வழங்கிய பட்டமே “மக்களின் முதல்வர்”. அதே போல தமிழக அரசின் முதல்வராக பணிவு பன்னீர் செல்வம் உள்ளார். இருப்பினும் குற்றவாளி ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின்  பெயரிலேயே தமிழக அரசு செயல்பட்டுக் கொண்டிருப்பது ஊரறிந்த இரகசியம்.

ஜெயலலிதா ஆட்சியில் இருந்த பொழுது “மக்களின் முதல்வராக” இருந்தாரா? என்றால் இல்லை. அவர் முதல்வராக இருந்த காலத்தில் சட்டசபையில் அவர் விதி எண் 110-ஐயே அதிகம் பயன்படுத்தி வந்துள்ளார். விதி எண் 110ன் படி ஒரு அறிக்கையை தாக்கல் செய்தால் அதன் மீது எந்த ஒரு விவாதமும் செய்யமுடியாது. எப்பொழுதாவது அவசர காலகட்டத்தில் பயன்படுத்தப்பட வேண்டிய இந்த விதியை எப்பொழுதும் பயன்படுத்தி மக்களினால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் யாரையும் தமிழக நலன் தொடர்பாக எந்தவொரு விவாதமும் செய்யமுடியாதபடி செய்தவர் தான் ஜெயலலிதா. சட்டசபையை தனக்கு ஜால்ரா போடும் இடமாக மாற்றியவர் தான் ஜெயலலிதா.

5_9_caricature_jayalalitha2
சென்ற ஆண்டு ஜெயலலிதா ஆட்சி செய்த காலத்தில் நடந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் போராட்டத்தின் மீது கடுமையான வன்முறையை ஏவி ஒடுக்கியவர் தான் இந்த‌ இதய தெய்வம். பின்னர் போராட்டத்திற்கு அடிபணிந்து கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதாக சொன்னவர் இன்று வரை அதை நடைமுறைப்படுத்த வில்லை.அதனால் இன்று மீண்டும் அதே 9 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்திற்கு வந்துள்ளார்கள் மாற்றுத்திறனாளிகள்… 9 அம்ச கோரிக்கைகள் பின்வருமாறு….

1) ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடித்துக் காத்திருக்கும் தகுதியுடைய பார்வையற்ற அனைவருக்கும் உடனடியாகப் பட்டதாரி ஆசிரியர்களாகப் பணி நியமனம் செய்ய வேண்டும்!

2) (அ) பி.எட். பட்டம் பெற்ற பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளைச் சிறப்பு ஆசிரியர்
தகுதித் தேர்வு நடத்தி தமிழ், ஆங்கிலம் வரலாறு போன்ற பாடங்களில் 550 பட்டதாரிகளை, பட்டதாரி ஆசிரியர்களாகப் பணி அமர்த்த வேண்டும்!

(ஆ) முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களாகத் தகுதியுடைய 200 பார்வையற்ற பட்டதாரிகளை உடனடியாகச் சிறப்பு தேர்வு நடத்தி பணி நியமனம் செய்ய வேண்டும்.

(இ) உதவிப் பேராசிரியருக்கான தகுதித் தேர்வு(NET or SET) முடித்து நீண்ட காலமாகக் காத்திருக்கும் தகுதி உடைய பார்வையற்ற 100 (நூறு) பட்டதாரிகளுக்கு உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் உடனடியாகச் சிறப்பு நேர்காணல் மூலம் நிரப்பப் பட வேண்டும்.

3) பார்வையற்றோருக்கு உடனடியாகத் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சிறப்புத் தேர்வு ஒன்றினை நடத்துவதற்குத் தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும். தமிழக அரசு பார்வையற்றவர்களுக்கெனக் கண்டறியப்பட்டுள்ள காலிப்பின்னடைவு பணியிடங்களை (9000 பணியிடங்கள்) உடனடியாக ஒரு சிறப்பு தேர்வின் மூலம் நிரப்பப்பட வேண்டும்.

4) உச்சநீதி மன்றத் தீர்ப்புக்கு இணங்கத் தமிழக அரசு உடனடியாகப் பிரிவு ‘அ’ மற்றும் ‘ஆ’ பிரிவு பணியிடங்களில் 500 பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்குப் பணிவாய்ப்பு வழங்க ஆவன செய்ய வேண்டும்.

5) பார்வையற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்குத் தமிழக அரசினால் வழங்கப்படுகின்ற ஊர்திப் பயணப்படியினை மத்திய அரசு வழங்குவது போல் அடிப்படை ஊதியத்துடன் இணைத்து வழங்க வேண்டும்.

6) படித்து முடித்து வேலைக்காகக் காத்திருக்கும் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் வேலையற்றோர் துயர்துடைப்பு உதவித் தொகையினை ரூ.1000/-ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.

7) பார்வையற்ற கல்லூரி மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித் தொகை, வாசிப்பாளர் உதவித் தொகை ஆகியவற்றை உடனடியாக வழங்கப்பட வேண்டும்.

8) 1.04.2003 க்குப் பிறகு தமிழக அரசு பணியில் சேர்ந்த பார்வையற்ற அரசு ஊழியர்களுக்கும் சமப் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்திலிருந்து விலக்கு அளித்து முழு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் முழு ஓய்வூதியம் வழங்க ஆவன செய்தல் வேண்டும்.

9) பார்வையற்ற மாற்றுத் திறனாளி மாணவ மாணவிகளுக்குத் தேர்வு எழுத வரும் எழுதுநர்களுக்கு ரூபாய். 300/- வழங்கி அரசாணை வெளியிட வேண்டும்.
அன்று போலவே இன்றும் குற்றவாளி ஜெயலலிதாவின் வழிகாட்டுதலில் இயங்கும் தமிழக அரசு பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் மீது கடுமையான வன்முறையை ஏவிவருகின்றது. துளி கூட ஈவு இரக்கம் இல்லாத ச‌ர்வாதிகாரியான ஜெயலலிதா தான் பார்வையற்றவர்கள் என்றும் பாராமல் அவர்களின் மீது காவல்துறையைப் பயன்படுத்தி வருகின்றார். மேலும் மக்களின் நிலத்தைப் பிடுங்கி முதலாளிகளுக்கு தாரை வார்க்கும் நிலக்கையகப்படுத்தல் சட்டத்தையும், காப்பீட்டு துறையில் அந்நிய முதலீட்டை 49% ஆக‌ அதிகரிக்கும் சட்டத்தையும் இவரது வழிகாட்டுதலின் படி ஆதரித்துள்ளார்கள் மக்களினால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக பாராளுமன்ற உறுப்பினர்கள்.

9-11-11a

சென்ற ஆட்சியின் போது ஆடு, கோழி வெட்டுவதை தடுத்து சட்டமியற்றிவர், 14,500 மக்கள் நலப்பணியாளர்களை ஒரே நாளில் நடுத்தெருவில் நிறுத்தியவர் இவரே. அதே போல இந்த முறை ஆட்சிக்கு வந்ததும் மின் கட்டணம், பேருந்து கட்டணம் போன்றவற்றையும் உயர்த்தி மக்களை வதைத்தார்.  இதயமே இல்லாத இவரைத் தான் “இதய தெய்வம்” என்றும் “அம்மா” என்றும், மக்களை மதிக்காத இவரைத் தான் “மக்களின் முதல்வர்” என்றும் அழைத்து வருகின்றார்கள் இரத்தத்தின் இரத்தங்கள். முசோலினியின் வழிவந்த பாசிசமே …… மக்களை கொடுமைப்படுத்தி மகிழும் நவயுக நீரோவே…..ஹிட்லரின் வழிவந்த சர்வாதிகாரியே… போன்ற பட்டங்களே அம்மையாருக்கு பொருத்தமான பட்டங்களாக இருக்கும்.

நற்றமிழன்.ப‌

நன்றி கார்ட்டூனிஸ்ட் ஸ்ரேயாஸ் நவ்ரி, கார்ட்டூனிஸ்ட் பாலா.

About நற்றமிழன்

ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் தரக்கட்டுபாட்டுத் துறையில் பணி புரிகின்றார். தற்சமயம் திருப்பூரில் வசித்து வருகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*