Home / சமூகம் / இந்துத்துவம் / இந்துத்துவத்தின் உளவியல் போர் – மொழியாக்கம். கிருபாகரன்

இந்துத்துவத்தின் உளவியல் போர் – மொழியாக்கம். கிருபாகரன்

மோடி முதல்வராக இருந்த போது பெரும் படுகொலையை சிறுபான்மையினத்தவரின் மீது நிகழ்த்தியவர், இவர் தான் இன்று பிரதமராக உள்ளார். இவர் பிரதமரான பின்னர் நாக்பூரில் இருக்கும் ஆர்.எஸ்.எஸ் இன்று தில்லி முழுவதும் ஏன் இந்தியா முழுவதும் வியாபித்திருப்பது போன்ற தோற்றம் ஏற்படுகின்றது. சிறுபான்மையினத்தவரின் மீதான தாக்குதல்கள் பல வழிகளில் நடைபெற்று வருகின்றது. அவர்களின் ஆலயங்கள் மீதான தாக்குதல்கள், கர் வப்சி எனப்படும் தாய் மதம் திரும்புதல், மத மோதல்களைத் தூண்டும் பேச்சுகள் என நீண்டு கொண்டே செல்கின்றது இப்பட்டியல். பார்ப்பதற்கு தனித்த நிகழ்வுகளாகத் தெரியும் இதனுள்ளே ஒரு மைய இழை உள்ளது. பல கலாச்சாரங்களையும், பல மதங்களையும் கொண்ட சனநாயக இந்தியாவை – ஒற்றை இந்து தேசமாக மாற்றுவது தான் அது. எப்படி, எவ்வாறு என தெளிவாக விளக்குகின்றது இக்கட்டுரை . இந்தியா சனநாயக நாடாக இருக்க வேண்டுமா அல்லது இந்து மத பாசிச, சர்வாதிகார நாடாக மாற வேண்டுமா என்ற கேள்வியை வாசகர்கள் முன் வைக்கின்றோம்….

விசை ஆசிரியர் குழு

—————————

இந்துத்துவத்தின் உளவியல் போர்

“தாய் மதம் திரும்புதல்” திட்டத்தினுள்ளே உள்ள வஞ்சக கொள்கை நிரல்.

பி.கே.விஜயன், கேரன் கப்ரியேல்.

தேசத்தின் ஒரு அங்கமாக இருப்பதற்கான விலையாக சுய ஒழிப்பை முன்நிறுத்தும் இந்துத்துவம்.

மக்களவையில் முழுபெரும்பான்மையுடன் அதிகாரத்திற்கு வந்த நரேந்திர மோடியின் கீழியங்கும் பாரதிய சனதா கட்சி (பா.ச.க) நம்மில் பலர் கொண்டிருந்த பேரச்சத்திற்கு ஏற்ப தனது செயல்களை துவங்கிவிட்டது. சங் பரிவாரின் சுய கோட்பாட்டு நிரலாக – இந்திய மதசார்பின்மைக்கு எதிரான ‘இந்து தேசத்தை’ உருவாக்குதல் – அரசாங்கத்திற்கு உள்ளேயும் வெளியேயும் உடனடியாக மிகப்பெரும் உந்துசக்தியை பெற்றுள்ளது. மதச்சிறுபான்மையினர் பா.ச.க ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் மென்மேலும் பாதிப்புக்கும், மிரட்டலுக்கும் உள்ளானதாக உணர்கின்றனர். அரசாங்கத்திற்குள்ளே உள்ள மத்திய அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாநிலஅமைச்சர்கள், மாநில சட்டசபை உறுப்பினர்கள் என அனைவரும் வெளிப்படையாக மதவாத கருத்துக்களை எவ்வித அடிப்படையோ, தயக்கமோ இன்றி வெளிபடுத்த துவங்கிவிட்டனர். அரசாங்கத்திற்கு வெளியேயுள்ள அரசியல் கட்சி தலைவர்கள், மதத்தலைவர்கள், சங்பரிவாரின் உறுப்பினர்கள், அதன் இதர துணை இயக்கங்கள் ஒரு படி மேலே போய், நஞ்சை கக்கும் மத வெறுப்பை தூண்டகூடிய வகையில் பேசி, சதிவேலைகள் செய்து பல மதக்கலவரங்களை தூண்டிவிட்டுள்ளனர்.

அண்மையில் இது போன்ற அருவெருக்கத்தக்க அவமதிப்பு அரசியல் அமைப்பின் உரிமைக்கும் பாதுகாப்புக்கும் ஏற்படுத்தபட்டது. அரசியல் அமைப்பின் மதிப்பை குறைக்கும் வெளிப்படையான செயலே இது: அரசாங்கத்தின் பிரச்சார விளம்பரங்களில் ‘மதசார்பின்மை’ மற்றும் ‘பொதுவுடைமை’ சொற்களை அரசியல் அமைப்பை பிரதிநிதிப்படுத்தும் முகவுரையிலிருந்து நீக்கி வெளியிட்டிருக்கின்றது. முன்னேபோதுமில்லாத அளவிற்க்கு இவர்களின் கொள்கைத் திணிப்பு சந்தேகத்திற்கிடமின்றி மக்களவையில் இவர்கள் பெற்ற முழுபெரும்பான்மையின் விளைவே. இவர்கள் இனி கூட்டணி கட்சிகளின் எதிர்ப்பை பற்றிய அச்சம்கொள்ள போவதில்லை. இது முந்தய தேசிய சனநாயக முன்னணி (NDA) ஆட்சியிலிருந்து முற்றிலும் மாறுபட்டது, முந்தைய ஆட்சியில் கூட்டணி கட்சிகளின் ஆதரவின்றி ஏதேனும் செய்ய முற்பட்டால் பாசக ஆட்சியை இழக்கும் நிலையிலிருந்தது.

தற்போதைய ஒழுங்கமைக்கப்பட்ட இந்துவத்தின் அருவெருக்கத்தக்க செயலாக்கங்களுக்கு நரேந்திர மோடியே காரணம், குஜராத் 2002ன் சூத்திரதாரியின் தலைமையே காரணம், குறைந்தபட்ச, கட்டுபாடான, முகப்பளவில் சிறுபான்மையினரின் உரிமையை மதித்த முந்தைய வாச்பாயின் தலைமை போன்றில்லாதது, எனினும் இந்துத்துவா இது போன்ற தவறுகளிலிருந்து தப்புவதற்கான உறுதி மோடியிடமும், அவர் மேலுள்ள நம்பிக்கையிலிருந்தும் தான் எழுகின்றது, ஏனென்றால் மோடியும் இதே மனநிலையில் இருப்பவர் தானே. பரிவாரங்களின் ‘வெறித்தனமான உதிரிகள்’ இன்று கடைநிலையிலிருந்து மையத்தை நோக்கி நகர்ந்துக்கொண்டிருக்கின்றார்கள். வலதுசாரி இந்துகள் பைத்திய நிலையிலிருந்து பாசிச நிலைக்கு நகர்ந்துள்ளார்கள். அவர்கள் தங்கள் வன்செயல்களுக்கு எதிர்வினையாக மென்மையான கண்டனத்தையே எதிர்பார்க்கின்றார்கள் – ஆனால் அவர்களுக்கோ அதற்கு பதிலாக சலுகைகள் வழங்கப்படுகின்றது, உதராணமாக மோடி அவரின் அமைச்சர் நிரந்ஜன் ஜோதி டிசம்பர் 2014லில் பேசிய வெறுக்கத்தக்க பேச்சிற்கு ஆதரவாக அவரின் கிராமம் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமுகத்தின் பின்னணிதான் காரணம் என்று சலுகைக்காட்டுகின்றார்.

prasad cartoon on attack on Haryana Chirch

நயவஞ்சக வத்தனமான தாக்குதல்:

சங்க பரிவாரங்கள் அண்மையில் செயல்படுத்தி வரும் “தாய் மதம் திரும்புதல்” என்பது சிறுபான்மையினர் மீதான பெரும் நயவஞ்சகத் தாக்குதலாகும். சங்க பரிவாரங்கள் சிறுபான்மையினரை வழி வழியாக அன்னியராகவே நடத்திவருகின்றனர்: ஆகையால், அவர்களின் பிரச்சாரம், இந்தியா இந்துகளுக்கானது, இந்து அல்லாதவர்கள் இந்தியாவை இந்துக்களிடம் விட்டுவிட்டு வெளியேறிவிட வேண்டும் (ஜெயின்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள் இந்து மதத்தின் பிரிவுகளே அதனால் அவர்களுக்கு விலக்களிக்கப்படுகிறது மற்றும் பார்சிகள் எண்ணிக்கையளவில் ஒரு பொருட்டல்ல) . பா.ச.க எம்.பி சாக்சி மகாராஜ் கூறுகிறார் “நான்கு மனைவிகளும் நாற்பது குழந்தைக்களும் உள்ளவர்கள் இந்நாட்டில் அனுமதிக்கப்படகூடாது, நமக்கு நல்ல காலம் வந்துவிட்டது” என்று இதுதான் இவர்கள் இஸ்லாமியர்கள் மீது கொண்டுள்ள கருத்து (மேலும் அவர் கூறுகிறார் “சாதுக்களின் அறிவுறுத்தல்களின் படி நம் மக்கள் அனைவரும் நான்கு குழந்தைகளாவது பெற்றுக்கொள்ளவேண்டும்” – சிறுபான்மையினரின் எண்ணிக்கை மீதான இவர்களின் பதட்டமான எண்ணத்தின் வெளிப்பாடே இது (see http://www. dailymail.co.uk/indiahome/indianews/article-290256/Sakshirefuses-apologise-calling-Hindu-familyfour-children.html).

மதச்சிறுபான்மையினருக்கு எதிரான கலவரங்களுக்கு இதுபோன்ற கருத்துகளே நேரடியான காரணம். இந்த கலவரங்களின் நோக்கம் முடிந்தளவில் அதிக எண்ணிகையிலான “அன்னியர்களை” கொன்றொழிப்பது மட்டுமல்ல, மேலும்

(அ) மீதமுள்ளவர்களை வீடற்றவர்களாகவும், ஆதரவற்றவர்களாகவும் ஆக்குவது

(ஆ) பெரும்பான்மையினரின் கருணையாலும், அனுதாபத்தால் மட்டுமே இந்தியாவில் தாங்கள் வாழ்வதாக பாடம் புகட்டவேண்டியும்; அதனால் அவர்கள் இந்த நாட்டில் எந்த உரிமையும் கேட்க கூடாதவர்களாக ஆக்குவது.

(இ) அச்சுறுத்தி கட்டாயபடுத்தி அவர்களை தொடர்ச்சியாக இடம்பெயர வைப்பது அல்லது தங்களை தாங்களே தனிமைப்படுத்திகொள்ளச் செய்வது.

மேற்சொன்ன குறிப்புகளை இன்னும் விரிவாக பார்க்கவேண்டியுள்ளது.

முதலாவதாக, மதக்கலவரங்களால் சிறுபான்மையினரின் இருப்பை முற்றிலுமாக அகற்ற முடியாது என்பது அடிமட்ட இந்துத்துவ தொண்டனுக்கும் தெரியும் – பல லட்சம் சிறுபான்மையினனரைக் கொல்வது என்பது நடைமுறை சாத்தியமில்லை என்பதால் மட்டுமல்ல, நீதிநெறிமுறைக்கும்- சட்டத்திற்கும் எதிரானதாகவும் சர்வதேச அளவில் பாரிய இனவழிப்பாகவும் ஆகிவிடும். இரண்டாவதாக, அவர்களை வீடற்றவர்களாகவும், ஆதரவற்றவர்களாகவும் ஆக்குவது ஒன்றே முடிவுமல்ல, ஏனென்றால் இது அவர்களை தொடர்ச்சியாக இடம்பெயரும் பெருங்குழுவாக மாற்றி சமுக, குடிமையியல் சிக்கல்களை உருவாக்கிவிடும். (இதன் மூலம் சிறுபான்மையினரை அச்சுறுத்தவும், உள்ளுக்குள்ளே பயத்தை ஏற்படுத்தவும் முடியும், ஆனால் அது குறைந்தகாலதிற்கே நீடிக்கும்).

மூன்றவதாக, இந்த அச்சுறுத்தலில் இருந்து தப்ப, தொடர்ச்சியான இடப்பெயர்தலுக்கும்
தனிமைப் படுத்திக் கொள்வதற்க்கும் ஓர் எல்லையுண்டு- முதன்மையாக நடைமுறை சாத்தியங்களும், புவியியல் கூறுகளும், இத்தேசத்தில் இவர்களிடமிருந்து இடம்பெயர்ந்து தப்பிச்செல்ல வெகு சில இடங்களே உள்ளன. ஒரு புறம் எல்லா சமூகத்திற்கும் அவர்களின் தவிர்க்கமுடியாத இயல்பான செயலின்மை அடிக்கடி இடம்பெயர்தலை இயலாமை ஆக்குகிறது. மற்றொருபுறம் சேரிகளும், முகாம்களும் உருவாகி மேலும் பாதிக்கப்பட்டவர்கள் அங்கே வந்து பெருகுவது தவிர்க்க முடியாததாக ஆகிவிடும். ஒவ்வொரு முறையும் இது போன்ற கலவரங்களின் போது உருவாகும் நிவாரண முகாம்கள், தொடர்ந்து தனிச்சேரிகளாக உருவாகி, மேலும் இதிலிருந்து தப்ப வேறொரு பகுதிக்கு இடம்பெயர்வது அல்லது கடைசியாக நாட்டைவிட்டே செல்ல வேண்டியநிலை ஏற்படுத்தும். இதையெல்லாம் தவிர்க்க கடைசியாக அவர்களிடம் எஞ்சி இருக்கும் ஒரே வாய்ப்பு தங்களது மத அடையாளங்களை அழித்துவிட்டு பெரும்பான்மையான இந்து மதத்திற்கு மாறிவிடுவதுதான். மேலும் இதைதான் சிறுபான்மையினர் பிரச்சனைகளுக்கு தீர்வாக இந்துத்துவ அடிப்படைவாதிகள் மறுவடிவமைத்துள்ளனர், 19ஆம் நூற்றண்டில் ஆர்யசமாஜின் “சுத்தி” சடங்குகாக இருந்தது இன்று “தாய் மதம் திரும்புதலாக” (Ghar wapsi) மறுவடிவைமைப்பு செய்யபட்டுள்ளது.

chruch vandalised
சிறுபான்மையினரை தேவையற்ற சந்ததியினராக (ஊதாரிகளின் பிள்ளைகளாக)

தாய் மதம் திரும்புதல் ஓர் துள்ளியமான நயவஞ்சக திட்டம் ஏனென்றால் அது எஞ்சி இருக்கும் கடைசி வாய்பை மட்டுமே கொடுக்கிறது – இதுதான் மதக்கலவரங்களால் கிடைக்கபெற்ற பரிசு. தாய் மதம் திரும்புதல் அல்லது கர் வப்சி என்பது வலியுறுத்தும் கருத்து யாதெனில் இந்த சிறுபான்மையினர் ‘தேசத்திற்கு’ உரியவர்கள் இல்லை, பெரும்பான்மையினர் மதமே இந்த தேசத்தின் மதம், இதன் மூலம் உறுதியான உணர்ச்சிவயப்பட்ட, குடும்பத்திற்கான இடம் – சிறுபான்மையினரை ஊதாரிகளின் பிள்ளைகளாகவும், தேவையற்றவர்களாகவும் கட்டமைத்து இவர்கள் தாய் மதம் திரும்பினால் மட்டுமே ஏற்றுக்கொள்ளபடும் என்று கட்டமைக்கின்றனர். இது ஒன்றே இனப்படுகொலைக்கு சாத்தியமான மாற்றாக மட்டுமின்றி, இது ஒன்றே சிறுபான்மையினரை அணுகும் விதமாகவும் கருதுகின்றனர்; இது பெரும்பான்மையினரின் எண்ணிக்கையை உயர்த்தவும் ஒரு வகையில் உதவும். கலவரங்களை இது தவிர்த்தாலும் சிறுபான்மையினரை மதமாற இக்கலவரச் சூழல் பெரிதும் ஊக்குவிக்கிறது.

எனினும் இவர்கள் செய்யும் இச்செயல் மத‌மாற்றமாக கூட அவர்களால் கருத்தில் கொள்ளப்படவில்லை, மாறாக இவர்களை சுத்தபடுத்துவதாகவே அவர்கள் குறிப்பிடப்படுகின்றார்கள்: மாற்றுமதத்தில் இருந்த காரணத்தினால் அவர்கள் கறைபடிந்தவர்கள் என்று புரிந்துகொள்ளப்பட வேண்டும். ஆகையால் தாய்மதம் திரும்புதல் மூலம் வெறுமனே அவர்கள் ‘உண்மையான’ மதத்திற்கு திரும்புகின்றனர்; ஆனால் அவர்கள் வெறும் மதமாற்றம் செய்துகொள்ளாமல் மற்ற மதத்திலிருந்து சுத்திகரித்து கொள்ளவேண்டும். இது சிறுபான்மையினர் மீதான பெருபான்மையினரின் மனப்பான்மையை வெளிப்படுத்துன்கிறது. அவர்கள் வெறுமனே மாற்றுமதத்தின் உறுப்பினர் மட்டும் அல்ல, நடுநிலையாகவும், பாரபட்சமற்ற முறையிலும்; ‘மற்றவர்’ என்றும், ‘அன்னியர்’ என்றும் கூட கூறத் தகுதியற்றவர்கள். அவர்கள் இந்துமத புனிதத்திற்கு எதிரான தூய்மையற்ற, அசுத்தமான, வெறுக்கத்தக்கவர்களாக பார்க்கப்படுகின்றார்கள்- ஆகையால் இவர்கள் சுத்திகரிக்கப் படவேண்டியவர்கள், மதமாற்றம் மட்டுமே போதுமானதல்ல.

wpid-wp-1419570488584
இந்த சுத்திகரிப்பு சடங்குகள் என்பது வேரொன்றும் இல்லை சாதி அடுக்குகளை நிலைநிறுத்திக்கொள்வதே ஆகும்- தலித்தாக இருந்தாலும் வெளிநாட்டினராக இருந்தாலும்- அவர் ஒரு ‘மிலேச்சர்’ (அசுத்தமானவர், அழுக்கானவர், கலாச்சாரமற்றவர்). வீடு திரும்புதலை வேறு வார்த்தைகளில் சொன்னால் சாதி அடையாளத்தை மீண்டும் புகுத்துதல். ஆகையினால் இந்து மதத்திற்கு திரும்பியவர்கள், ஊதாரிகளின் பிள்ளைகள், என்னதான் சுத்திகரிக்கபட்டு இருந்தாலும், அவர்கள் தாமாக தங்களின் சாதியைத் தேர்ந்து எடுத்துகொள்ள முடியாது. அவர்கள் தங்களது பூர்விக சாதிக்கே திரும்ப வேண்டும். இந்து மதத்திலிருந்து மாறிய கிறித்துவர்களும் இஸ்லாமியர்களும் இந்த சாதியமைப்பின் அடக்குமுறை மற்றும் அவமானங்களிலிருந்து மீளவே மதம் மாறியவர்கள், அதனால் மீண்டும் இந்து மதத்திற்கு திரும்புவது விரும்பக்கூடியதாக இருக்காது. இது போன்று தாய் மதம் திரும்புதலினால் பாதிப்படைவார்கள் என்ற குறையை மறைக்க, அனைத்து சாதிகளும் மதிக்கபடவேண்டியவர்கள் என்று சங்க பரிவார் அழுத்தம் தர கோருகிறது.

சிறுபான்மையினரில் தாழ்த்தப்பட்ட மக்களையே இந்த திட்டத்தில் மதம் மாற்றுவது இந்த காரணங்களுக்காகவே. மஞ்சரி கட்ஜு சொல்கிறார் “ஏழைகளையும், வறுமைகோட்டிற்கு கீழுள்ளவர்களையும் அச்சுறுத்தி “தாய் மதம் திரும்ப’ வைப்பது மிகவும் எளிது”. (பார்க்க “Politics of Ghar Wapsi,” EPW, 3 January 2015), அடக்குமுறைக்கும் அவமானங்களுக்கும் உட்பட்ட மக்களுக்கு ஒவ்வொரு வெற்றிகரமான தாய்மதம் திரும்புதல் திட்டங்களும் அச்சங்களை போக்குவதாக உறுதியளிக்கிறது என்கிறார். சாதிய படிநிலைகளை தொடர்ந்து வலியுறுத்துவதை ஏன் என்பதை கருத்தில் கொள்ளவேண்டும்: சாதி இந்துகளின் பதற்றம் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான தங்களது தார்மீக உரிமை போய்விடகூடாது என்பதாகும். மேல் சாதியினருக்கு தங்களின் அடிமை தொழிலாளிகளை இழந்துவிடக்கூடாது என்பதாகும். மேலும் அவர்களில் பலர் செய்யும் வேலைகள் அசுத்தமானதாகவும், அழுக்கானதாகவும, கறைபடிந்தவைகளாகவும் கருதும் பட்சத்தில் அவர்கள் மீண்டும் அது போன்ற வேலைகளையே தொடர்ந்து செய்யும் பொழுது ஏன் அவர்களை “சுத்தம்” செய்யவேண்டும் என்றும் கருதுகிறார்கள்.

 சுய அடையாளங்களை இழக்க வலியுறுத்துதல் :

ஒரு வாதத்திற்காக இச்செயலை இந்துத்துவத்திலிருந்து பிரிந்து சென்றவர்களை திரும்ப கொண்டு வரும் ஒரு வஞ்சகமற்ற செயலென்று கொண்டாலும்; முதலில் தாய்மதம் திரும்புதல் திட்டத்தை முன்னிருத்தும் முன் சாதி பேதமற்ற மதத்தை இவர்கள் உருவாக்க வேண்டும். அடிப்படை சிக்கல் என்னவென்றால் சாதி இல்லாத இந்து தேசம் என்பது இந்துத்துவத்தின் கற்பனையே. ஏனென்றால் இந்து மத எண்ணத்திலும் நடைமுறையிலும் சாதி கலந்தே இருக்கும். சிறுபான்மையினரின் இருப்பு என்பது இவர்களின் புனிதத்தில் படிந்த கரையாகக் கருதும்பொழுது, இந்த தேசத்தின் ஒவ்வொரு செயலும் அனுதினமும் சிறுபான்மையினருக்கு எதிரான அழுத்தமாக மாற்றமடைகின்றது. சிறுபான்மையினரில் எளிதில் அடங்காதவர்கள் மீது வன்முறையாகவும், அடங்கிவிடுபவர்களை மதமாற்றவும் அழுத்தம் கொடுக்கப்படுகின்றது.

அடங்கிவிடுபவர்களுக்கு கொடுக்கப்படும் அழுத்தத்தையே நாங்கள் நயவஞ்சகம் என்கிறோம், இது சிறுபான்மையினரை தங்களைத் தாங்களே மதிப்பற்றவர்களாக கருதச் செய்து, தங்கள் அடையாளங்களை இழந்து மத மாற்றத்தை ஏற்றுக்கொள்ள வலியுறுத்துகின்றது. சுருக்கமாக சொன்னால் இந்த தேசத்தின் அங்கமாக இருப்பதன் விலையாக இவர்கள் சிறுபான்மையினரின் சுயங்களை/அடையாளங்களை இழக்க வலியுறுத்துகிறார்கள். அடிப்படையில் முரணான இந்து தேசம் என்ற திட்டத்திற்காக நடக்கும் பாரிய நயவஞ்சக உளவியல் போர் சிறுபான்மையினரின் மீது தொடுக்க பட்டுள்ளது.

மொழியாக்கம்- கிருபாகரன் . இளந்தமிழகம் இயக்கம்

மூலப்பதிவு

http://www.epw.in/commentary/hindutvas-psychological-warfare.html

About சிறப்பு கட்டுரையாளர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*