Home / அரசியல் / முதல்வர். பன்னீரின் புளுகு மூட்டை…

முதல்வர். பன்னீரின் புளுகு மூட்டை…

தமிழக முதல்வர்.பன்னீர் செல்வம் நேற்று நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்து பேசிய போது நிலம் கையகப்படுத்தல் சட்டம் மீது பா.ஜ.க கொண்டு வந்த சட்டத்திருத்தத்தை நாங்கள் அப்படியே ஆதரிக்கவில்லை, அந்த சட்டத்திருத்ததில் 9 திருத்தங்கள் கொண்டு வந்த பின்னர் தான் மக்களவையில் ஆதரித்தோம் எனக் கூறியுள்ளார்.

சரி அந்த 9 திருத்தங்கள் முக்கியமான பிரச்சனையை தீர்த்தனவா என்று பார்ப்பதற்கு முன், பா.ஜ.க கொண்டு வந்த சட்டத்திருத்ததின் மூலம்

அ) நில உரிமையாளரின் ஒப்புதல் இல்லாமலேயே நிலத்தைப் பறிக்க முடியும்

ஆ) நில கையகப்படுத்தலுக்கு முன்பு சமூக பாதிப்பு ஆய்வு, விசாரணை செய்யத்தேவையில்லை

இ) விளை நிலங்களை விவசாயிகளிடமிருந்து பறிக்க முடியும்

மேற்கூறியவை தான் முக்கிய திருத்தங்கள், அதுமட்டுமின்றி அரசு அதிகாரி தவறு செய்தால் அவர் மீது வழக்கு தாக்கல் செய்ய அந்தந்த அரசுகள் அனுமதிக்க வேண்டும். கையகப்படுத்தப்படும் திட்டங்கள் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக கூட எந்த பணியும் தொடங்காமல் நிலத்தை காலியாகவே வைத்துக் கொள்ளலாம். இந்த சட்டத்திருத்தத்திற்கு பின்னர் நடைபெறும் திருத்தங்கள் எதையும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கத் தேவையே இல்லை என்பது போன்ற சில திருத்தங்களையும் பா.ஜ.க தனது சட்டத்திருத்தத்தில் முன்வைத்தது.

O-Panneerselvam-Pardaphash-164057
முதல்வர்.பன்னீர்செல்வத்தின் கூற்றுப்படி அதிமுக இந்த சட்டத்திருத்தத்தை 9 திருத்தங்களுக்குப் பிறகு தான் ஆதரித்தது. இந்த ஒன்பது திருத்தங்கள் மூலம் எல்லாப் பிரச்சனையும் தீர்த்துவிட்டது அதனால் ஆதரித்தோம் என்கின்றார்கள்.

இந்த ஒன்பது திருத்தங்களில் ஒன்று கூட முக்கிய பிரச்சனையைப் பற்றிப் பேசவில்லை, அதாவது அதிமுக மக்களவையில் ஆதரித்த “திருத்தப்பட்ட” சட்டத்திருத்தத்தின் மூலமும் நில உரிமையாளரின் ஒப்பதல் இல்லாமலே நிலத்தைப் பறிக்க முடியும், சமூக பாதிப்பு ஆய்வு, விசாரணை நடத்தத் தேவையில்லை. விவசாயிகளிடமிருந்து விளைநிலங்களை முதலாளிகளுக்குப் பறித்து கொடுக்க முடியும். முதல்வர்.பன்னீர் கூறும் அந்த ஒன்பது திருத்தங்களில் ஒரு திருத்தத்தைத் தவிர மற்ற எட்டும் உப்பு, சப்பில்லாதவற்றைப் பற்றி மட்டுமே பேசுகின்றன. ஒரு திருத்தம் மட்டும் காங்கிரசு கொண்டுவந்த சட்டப்படியே அரசு அதிகாரிகள் தவறு செய்தால் அந்த துறைத் தலைவரின் மீது வழக்கு பதிவு செய்யலாம் என்கின்றது.

அதிமுக நிலம் கையகப்படுத்தல்  சட்டத்திருத்தத்தை ஆதரிக்க காரணம் அவர்கள் கட்சித் தலைவியின் மீதான வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கின் மேல் முறையீட்டு வழக்கில் மத்திய அரசின் மூலம் விடுதலை வாங்கித் தருவதற்காகவேயன்றி வேறெதுவும் இல்லை. அதாவது அவர்களின் கூற்றுப்படி “மக்கள் முதல்வரான” ஜெயலலிதாவை மக்களின் வயிற்றிலடித்து விடுதலை செய்யப் பாடுபடுகின்றார்கள் அதிமுகவின் இரத்தத்தின் இரத்தங்கள்..

நற்றமிழன்.ப‌

நிலம் கையகப்படுத்தல் சட்டம் பற்றி விரிவாக படிக்க  – நிலம் கையகப்படுத்துதல் சட்டம் – என்ன பிரச்சனை ?

About நற்றமிழன்

ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் தரக்கட்டுபாட்டுத் துறையில் பணி புரிகின்றார். தற்சமயம் திருப்பூரில் வசித்து வருகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*