Home / அரசியல் / நிலத்தை பறித்து முதலாளிகளிடம் கொடுத்தே தீருவேன் மோடி

நிலத்தை பறித்து முதலாளிகளிடம் கொடுத்தே தீருவேன் மோடி

நிலம் கையகப்படுத்தல் சட்டத்தில் கடந்த அக்டோபர் மாதம் ஒரு சட்டத்திருத்தத்தை அவசரச் சட்டமாகக் கொண்டு வந்தது மோடி தலைமையிலான ஒன்றிய அரசு (இச்சட்டத்திருத்ததைப் பற்றி விரிவாக படிக்க – நிலம் கையகப்படுத்துதல் சட்டம் – என்ன பிரச்சனை ? ). இந்த சட்டத்திருத்தம் பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையே மக்களவையில் நிறைவேறிவிட்டது. ஆனால் மாநிலங்களவையில் இதுவரை இந்த சட்டத்திருத்தம் விவாதத்திற்கோ, அதன் பின்னரான ஓட்டெடுப்பிற்கோ இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை. அவசரச் சட்டங்களின் ஆயுட்காலம் ஆறு மாதங்கள் தான் அதற்குள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அது தாக்கல் செய்யப்பட்டு ஓட்டெடுப்பில் வெற்றி பெற வேண்டும், இல்லையென்றால் அந்த குறிப்பிட்ட அவசரச் சட்டம் காலாவதியாகி விடும்.

அக்டோபரில் இந்த அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டதால் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை தான் இந்த சட்டத்திருத்தத்தின் ஆயுட்காலமாகும். இப்பொழுது நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் செயற்பட்டுக் கொண்டுதானிருக்கின்றன, இப்பொழுது கூட மாநிலங்களவையில் இச்சட்டத்திருத்தத்தை தாக்கல் செய்து விவாதிக்கவும், ஓட்டெடுப்பு நடத்தவும் முடியும். ஆனால் மோடியோ மாநிலங்களைவில் இச்சட்டத்தை தாக்கல் செய்யாமல், இப்பொழுது செயல்பட்டுக் கொண்டிருக்கும் மாநிலங்களைவையை நிறுத்தி இதே சட்டத் திருத்தத்தை மீண்டுமொரு முறை அவசரச் சட்டமாக கொண்டு வரத் தொடங்கியுள்ளார். ஏன் மாநிலங்களவையின் செயல்பாட்டை நிறுத்த வேண்டும்? ஏனெனில், நாடாளுமனறம் செயல்படாத போது மட்டுமே தேவை கருதி அவசரச் சட்டத்தினை அமைச்சரவை இயற்ற முடியும். நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று கொண்டிருக்கும் போது அவசரச் சட்டம் இயற்ற முடியாது.

எங்கள் நிலத்தை பறிக்க அரசுக்கு யார் அதிகாரம் கொடுத்தது ? -  நிலம் கையகப்படுத்தல் சட்டத்திற்கு எதிராக தில்லியில் விவசாயிகள் நடத்திய‌ போராட்டம்

எங்கள் நிலத்தை பறிக்க அரசுக்கு யார் அதிகாரம் கொடுத்தது ? – நிலம் கையகப்படுத்தல் சட்டத்திற்கு எதிராக தில்லியில் விவசாயிகள் நடத்திய‌ போராட்டம்

மாநிலங்களவையில் இச்சட்டத்திருத்தத்தை இப்பொழுதே தாக்கல் செய்வதில் என்ன பிரச்சனை? பா.ஜ.க மக்களவையில் தான் பெரும்பான்மை பலத்துடன் உள்ளது, மாநிலங்களவையில் அவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு, ஏற்கனவே எல்லா எதிர் கட்சிகளும் (கூட்டணி கட்சியான சிவ சேனா உள்ளிட்டு) இச்சட்டத் திருத்தத்தை எதிர்ப்பதால், மாநிலங்களவையில் தாக்கல் செய்தால் மசோதா படு தோல்வியடையும், அதன் பின்னர் அவர்கள் ஒரு கூட்டு கூட்டத்தின் மூலம் இரண்டு அவைகளையும் ஒரே இடத்தில் கூட்டி வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும், இன்றைய அளவில் அதுவும் தோல்வியைத் தழுவும் சாத்தியம் உண்டு.

அதனால் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நாடாளுமன்றத்தை நிறுத்தி இன்னொரு அவசரச் சட்டத்தின் மூலம் இந்த சட்டத்திருத்தத்தை இன்னும் ஆறு மாதத்திற்கு உயிர்ப்பிக்க முடியும், இப்படியே இந்த சட்டத்திருத்தத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க திட்டம் தீட்டுகின்றார் மோடி. மோடி மக்களாட்சிக்கு கொடுக்கும் மதிப்பு இவ்வளவு தான். பாசிசவாதிகள் எந்த அமைப்பையும் மதிப்பதில்லை, மோடியும் அதற்கு விதிவிலக்கில்லை.

p03a

இந்திய தண்டனைச் சட்டத்தின் படி ஒருவரின் அனுமதி இல்லாமல் அவரது சொத்தை அடுத்தவர் பறிப்பது குற்றமாகும், இதை மாற்றி மக்களின் நிலத்தை அவர்களின் ஒப்புதல் இல்லாமலேயே அவர்களிடமிருந்து பறித்து முதலாளிகளுக்கு காணிக்கையாக்கும் இந்த சட்டத்திருத்தத்தை அதிக முனைப்போடு நிறைவேற்றத் துடிக்கின்றார் திருவாளர்.மோடி. ஏழைகளுக்கு ஒரு சட்டம், பணக்காரர்களுக்கு ஒரு சட்டம் என்பதை மோடி மீண்டும் உறுதிப்படுத்துகின்றார். மோடி வளர்ச்சி கொண்டு வருவார், தங்களக்கு நல்ல வாழ்க்கையைக் கொண்டு வருவார் என்று ஏமாந்து அவருக்கு வாக்களித்த மக்களிடம் எஞ்சியிருந்த நிலத்தையும் பிடுங்கி நிரந்தரமாகவே நடுத்தெருவில் நிறுத்தி தனது உண்மையான முகத்தைக் காட்டுகின்றார். இப்பொழுதும் நாம் போராடா விட்டால் நாளை நாம் நிற்க நடுத்தெரு கூட இருக்குமா என்பது கேள்விக்குறியே ?????

நிலம் கையகப்படுத்தும் சட்டம் யாருக்கு அவசரமாகத் தேவைப்படுகிறது? பெரு முதலாளிகளுக்கா? சிறு,குறு விவசாயிகளுக்கா?

இதற்கான விடையில், மோடி தலைமையிலான ஒன்றிய அரசு யாருடைய வளர்ச்சிக்கு அதிக முனைப்புடன் செயல்படுகிறது என்பது எளிதில் புலப்படும்.

நற்றமிழன்.ப‌

நன்றி – ஓவியர்-கண்ணா, விகடன்

About நற்றமிழன்

ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் தரக்கட்டுபாட்டுத் துறையில் பணி புரிகின்றார். தற்சமயம் திருப்பூரில் வசித்து வருகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*