Home / FITE சங்கம் / மரியாதைக்குரிய ஐ.டி துறை நண்பனுக்கு – 6

மரியாதைக்குரிய ஐ.டி துறை நண்பனுக்கு – 6

என் சக ஊழியனுக்கு வணக்கம்!

நலமாக இருக்கிறாயா?..நான் நலமாக இருக்கிறேன். நம்மைப் பற்றிய கவலைகள் பல இருந்தும், அன்றாடம் சிக்கல்களையும், சவால்களையும் எதிர்கொள்ளும் போதும், நான் மகிழ்வாகவும், நம்பிக்கையோடும் இருக்கிறேன்.

நமது தகவல் தொழில்நுட்ப துறையில், பணிநீக்கங்கள் என்பது அன்றாட நிகழ்வாகிவிட்ட சூழலில் நான் மட்டும் எப்படி மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று நீ கேட்பது எனக்குக் கேட்கிறது. அதற்குக் காரணம் நீயும் நானும்தான்.

25000-க்கும் மேற்பட்ட பணியாளர்களை டாடா கன்சல்டன்சி நிறுவனம் பணிநீக்கம் செய்யப் போகிறது என்னும் செய்தி கடந்த டிசம்பர் மாதம் ஊடகங்களில் வெளிவந்தது. அந்தத் தகவலைப் பார்த்து பதறாதவர், எவரும் நம்மில்  இருக்க முடியாது.

25000 என்பது வெறும் எண்ணிக்கை மட்டுமல்ல; அது 25000 ஊழியர்களின் வேலை, அவர்களுடைய குடும்பத்தின் வாழ்வாதாரம். அதுவும், குறைவான திறனுள்ளவர்களையே வேலையைவிட்டு அனுப்புகிறோம் என்று டிசிஎஸ் நிறுவனம் சொன்னது, ஒட்டுமொத்த ஐ.டி ஊழியர்களின் சுயமரியாதை மீது விழுந்த சம்மட்டி அடி.

நீயும் நானும் ஒன்றானோம்; நம்மைப் போன்ற சக ஊழியர்களை ஒருங்கிணைத்தோம். சமூக வட்டத்தைவிட்டு, கண்ணாடி கட்டிடத்திற்குள் கணிப்பொறித் திரையை மட்டுமே கவனத்தில் கொண்டிருந்த நாம் தெருவுக்கு வந்தோம். ஐ.டி பணியாளர்களுக்கான மன்றத்தை உருவாக்கினோம்.

பல மாநிலத் தலைநகரங்களில் உள்ள, தொழிலாளர் ஆணையர்களைச் சந்தித்து சிக்கலின் தீவிரத்தை எடுத்துரைத்தோம். சென்னை, பெங்களூரு, பூனே, மும்பை, ஐதராபாத் ஆகிய நகரங்களில் தொழில் தகராறு சட்டத்தின் வழக்குகளைப் பதிந்தோம். சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் வெற்றியும் பெற்றோம். பிரியா என்னும் நம்முடைய சகதோழிக்கு, வேலையைத் திரும்ப வழங்கியது டிசிஎஸ் நிறுவனம். வேலையை திரும்பப் பெற்ற நம்முடைய சக தோழி, ” டிசிஎஸ் பறித்தது என்னுடைய பணியை அல்ல; என்னுடைய சுயமரியாதையை” என்று சொன்னார்

13layoff

இப்போது டிசிஎஸ் நிறுவனம் பணிநீக்கம் செய்வதை நிறுத்தி வைத்துள்ளது .நீயும் நானும் ஒருங்கிணைந்ததால் வந்தது இந்த மாற்றம். நான் மகிழ்ச்சியாகவும், நம்பிக்கையோடும் இருப்பதற்கு இதுதான் காரணம்.

தொழிலாளர் நல வாரியம், உயர் நீதிமன்றம், வழக்கறிஞர் அலுவலகம், காவல் நிலையம் என்று சகல இடங்களுக்கும் நீயும் நானும் ஒன்றாகவே பயணித்தோம். நமக்கு இருக்கும் சிக்கல்களைத் தீர்க்க வேண்டும் என்கிற உன்னுடைய தன்முனைப்பு என் கவலைகளைத் துடைத்தெறிந்தது.

நம்மை போன்ற அத்தனை பேருமா, தெருவுக்கு வந்து நமது உரிமைகளுக்காகப் போராடினர் என்று நீ எண்ணுவது எனக்குத் தெரியும். அனைவரும் வரவில்லைதான். நாம் ஒருங்கிணைந்து அமைப்பாகி, நமக்கான போராட்டங்களை முன்னெடுப்பதே, இதற்கான தீர்வு என்பதை நம்மில் பெரும்பாலானோர் உணர்ந்துவிட்டோம். நமது உரிமைகளை நாம் ஒருங்கிணைந்தால் மட்டுமே வென்றெடுக்க முடியும் என்று நாம் உணர்ந்திருப்பதே நாம் கைகோர்க்கும் பயணத்தின் முதல் படி.

டிசிஎஸ் மட்டுமல்ல, ஐபிஎம், ஐகேட், அல்டிசொர்ஸ், சிட்ரிக்ஸ் என பணிநீக்கங்கள் செய்யும் நிறுவனங்களின் பட்டியல் பெருகிக் கொண்டே போகிறது.

இன்னும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்படும் விதத்தை நம்பும் ஊழிய நண்பர்கள் நம்மிடையே இருக்கத்தான் செய்கிறார்கள். நிறுவனங்கள் தரப்பு நியாயங்களை நம்மைப் போன்ற ஊழியர்கள் புரிந்து கொள்வதேயில்லை என சக ஊழிய நண்பர்கள் சிலர் என்னிடம் கூறினர். நீ என்றாவது அதைப் பற்றி சிந்தித்து இருக்கிறாயா? என்று எனக்குத் தெரியவில்லை. நிறுவனங்களின் தரப்பு நியாயம் என்று ஒன்று இருக்கிறது ; ஊழியர்களின் தரப்பு நியாயம் என்று ஒன்று இருக்கிறது. இவ்விரண்டு தரப்பும் இணைந்து செயல்பட வேண்டிய பொது நியாயம் என ஒன்று இருக்கிறது. அதில் நம் உரிமையும் இருக்கிறது. நாம் நிறுவனங்களுக்கு எதிரானவர்கள் அல்ல நண்பனே! நிறுவனங்கள் செயல்படும் வெளிப்படைத் தன்மையற்ற விதத்திற்கும், பின்பற்றும் கொள்கைகளுக்குமே எதிரானவர்கள்.

தீடீர், தீடீரென நாளிதழ்களில் வரும் பெரிய அளவிலான வேலை இழப்புகள் மட்டும் நம்முடைய சவால்கள் அல்ல நண்பனே!

அன்றாட நிகழ்வாகிப் போயிருந்தாலும், பெரிய எண்ணிக்கையில் நடைபெறும் போது மட்டும் நாளிதழ்களில் செய்தியாகிறது. பெரிய எண்ணிக்கையில் நடைபெறும் பணிநீக்கங்களுக்கு மட்டும் வினையாற்றினால் போதாது. ஒரே ஒரு ஐ.டி ஊழியர் பாதிக்கப்பட்டாலும், நம் உரிமை அங்கு சவக்குழிக்கு அனுப்பப்படுகிறது என்பதை உணர்ந்து நாம் போராட வேண்டும்.

பெருநிறுவனங்களை எதிர்த்து சாமானியர்களான நாம் போராடுவது அத்தனை எளிதல்ல எனப் பதறும் உன் குரல் எனக்குக் கேட்காமல் இல்லை. நீயும், நானுமாக நாம் வெறும் இரண்டு பேர்தான்; ஆனால், ஐ.டி ஊழியர்களாக இந்தியா முழுக்க நாம் 35 லட்சம் பேர் பணி புரிகின்றோம்.

unnamed

எப்படி கணக்கிட்டாலும் ஐ.டி நிறுவனங்களின் எண்ணிக்கை என்பது ஒரு லட்சத்தைத் தொடாது. அதிகபட்சமாக எடுத்துக் கொண்டாலும், ஒரு லட்சம் நிறுவனங்களிடம் இருந்து நம்முடைய உரிமைகளைப் பாதுகாக்க 35 லட்சம் பேராக நம்மால் கண்டிப்பாக முடியும் நண்பனே!

நம்முடைய உரிமைகளுக்காக நாம் ஒருங்கிணைவதில்தான் இருக்கிறது நம்முடைய வெற்றி.

நிறுவனங்கள் முதலீடு செய்திருக்கின்றன, அவர்களுக்கு வேலைக்குத் தேவை என்கிற போதுதானே, நம்மை வேலைக்கு எடுப்பார்கள் என்று நம்மிடையே இருக்கும் சில நண்பர்கள் கேட்கத்தான் செய்கிறார்கள்.  தேவையின் போது எடுத்துக் கொண்டு, தேவை முடிந்தவுடன் வீட்டுக்கு அனுப்புவதற்கு நாம் ஒன்றும் அடிமைகள் அல்ல. நிறுவனங்கள் ஒன்றும் நட்டத்திலும் இயங்கவில்லையே!.

தனக்கு தேவையான போது ஊழியர்களை பணிக்கு அமர்த்தும் நிறுவனங்கள், அவர்கள் நினைத்த கணத்தில் வேலையை விட்டு துரத்தும் (HIRE & FIRE ) கொள்கையை நாம் ஒன்றிணைந்து உடைக்க வேண்டும். ஆணும், பெண்ணும் சமத்துவத்தோடும், பாதுகாப்போடும் பணிபுரியும் பணியிடத்தை உருவாக்கக நாம் ஒன்றிணைய வேண்டும்.

மேலாளர்களையும், பணியாளர் சார்ந்திருக்கும் விநியோகக் குழுவையும், பெல் வளைவுசார் தரம் பிரித்தலையும் (BELL CURVE FITTING) முற்றிலும் சார்ந்தே இருக்கும், வெளிப்படைத் தன்மையே இல்லாத, சாதி, மதம், மொழி என அனைத்துக் கூறுகளும் வினையாற்றும் திறன் மதிப்பீட்டு (PERFORMANCE APPRAISAL) முறையை கேள்விக்குள்ளாக்க வேண்டும் தோழனே!.

தொழிலாளர்களின் நலன் காக்கும், பெண் ஊழியர்களின் உழைப்பை அங்கீகரிக்கும், மகப்பேறு போன்ற விடுமுறைகள் பெண் ஊழியர்களின் அடிப்படை உரிமையாகப் பார்க்கும் நிறுவன செயல்பாட்டு ஒழுங்கை உருவாக்க நாம் ஒருங்கிணைவது அவசியம்.

உன்னையும் என்னையும் போன்ற ஐ.டி ஊழியர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து போராடும் நிலையை நோக்கியே நாம் முன்னேற வேண்டும். நீயும் நானுமாக அல்ல! ஐ.டி பணியாளர்களுக்கான மன்றம் (Forum For IT Employees) என்கிற அமைப்பாக நாம் முன்னேற வேண்டும்.

About விசை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*