Home / அரசியல் / ஆந்திர வனப்பகுதியில் 20 தமிழகத் தொழிலாளர்கள் சட்டவிரோதமாகப் படுகொலை ; தமிழக அரசு மெத்தனம் 
08-1428494054-andhra-encounter989

ஆந்திர வனப்பகுதியில் 20 தமிழகத் தொழிலாளர்கள் சட்டவிரோதமாகப் படுகொலை ; தமிழக அரசு மெத்தனம் 

நேற்று செவ்வாய்க்கிழமை  (07 ஏப்ரல் 2015) ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள சேசாசலம் வனப்பகுதியில் தமிழகத்தைச் சேர்ந்த செம்மரங்கள் வெட்டும் கூலித் தொழிலாளிகள் 20 பேரை  நன்கு திட்டமிடப்பட்ட ஒரு நடவடிக்கையில் ஆந்திராவின் செம்மரக் கடத்தல் தடுப்புப் பணி படையணியும் ஆந்திர மாநில வனத்துறையினரும் இணைந்து சுட்டுக் கொன்றுள்ளனர். மேலும் ஒரு தற்காப்பு நடவடிக்கையில் இந்த படுகொலை தாக்குதலை மேற்கொண்டதாக உண்மையை மறைத்து ஊடகங்களுக்கு செய்தி கொடுத்துள்ளனர்.

தொழிலாளிகள் சுடப்பட்ட இடத்திலிருந்து ஊடகங்களுக்கு செய்தி அளித்த அதிகாரிகள் கூறியதாவது, சேசாசலம் வனப்பகுதிக்குள் சட்டவிரோதமாக செம்மரம் வெட்ட பெருந்தொகையானவர்கள் நடமாடுவதாக செய்தி கிடைத்ததாகவும். தகவல் அறிந்த படையணியினர் சம்பவ இடத்திற்கு சென்று செம்மரம் வெட்டுபவர்களைச் சரணடைய வலியுறுத்தியதாகவும். ஆனால் மரம் வெட்டுபவர்கள் தங்களை நோக்கி கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால் தற்காப்புக்காக சுடத்தொடங்கியதாகவும் தெரிவித்துள்ளனர்.

20 பேர் திட்டமிட்டுப் படுகொலை: 

மரம் வெட்டுபவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இருந்ததாக கூறும் அதிகாரிகள் இந்த தாக்குதல் இரண்டு இடங்களில் நடைபெற்றதாக கூறியுள்ளனர். சீனிவாச மங்காபுரம் எனும் இடத்தில் 11 பேரும் சிரிவாரிமெட்டு எனும் இடத்தில் 9 பேரும் இத்தாக்குதலில் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ள படையணி அதிகாரிகள் மேலும் பலர் தப்பித்து காட்டுக்குள் ஓடிவிட்டதாகவும் கூறியுள்ளனர். இத்தாக்குதலில் ஒருவர்கூட காயம் அடைந்த நிலையில் மீட்கப்படவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. தாக்குதல் நடந்ததாக கூறப்படும் இடத்தில் இருந்து வெளிவந்திருக்கும் படங்களில் அருகருகே சிதறிக் கிடக்கும் தொழிலாளர்களின் உடல்கள், உடல்களில் இருக்கும் எரிகாயங்கள், ஒழுங்காக சிதறிக்கிடக்கும் உடைகள், செருப்புகள், பழைய செம்மரக் கட்டைகள் ஆகியவற்றை பார்க்கும் பொழுது இது திட்டமிடப்பட்டு வேறு எங்கோ தாக்குதல் நடத்தப்பட்டு குறிப்பிட்ட அந்த இடத்தில் வைத்து படங்கள் எடுக்கப்பட்டது வெட்ட வெளிச்சமாகின்றது.

உலகிலேயே ஆந்திராவில் உள்ள சித்தூர், கடப்பா, கர்னூல், நெல்லூர் ஆகிய நான்கு மாவட்டங்களுக்குட்பட்ட வனப்பகுதியில் தான் செம்மரங்கள் உள்ளன. ஏறத்தாழ 4.67 லட்சம் ஹெக்டேர் பரப்பில் இந்த செம்மரங்கள் இங்கு இருக்கின்றன. இம்மரங்களை வெட்டுவதற்கு தமிழகத்தின் வேலூர், திருவண்ணாமலை, சேலம், தருமபுரி, காஞ்சிபுரம், விழுப்புரம் போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த கூலி ஆட்கள் பெரும்பாலும் ஈடுபடுத்தப் படுகிறார்கள். இவர்களில் பெரும்பாலும் பழங்குடியின மக்கள் உள்ளடக்கம். பல நேரங்களில் இடைத்தரகர்கள் மூலம் கட்டிட கட்டுமானத் தொழிலுக்கு என அழைத்துச் செல்லப்படும் தொழிலாளிகள் ஆந்திர வனப்பகுதிகளுக்கு கொண்டுவரப்பட்டு செம்மரம் வெட்டும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.  செம்மரம் கடத்தல் அதிக வருமானத்தைத் தரும் தொழிலாக இருப்பதால் செம்மரக் கடத்தல் கும்பல்களின் கொள்ளையர்களும் இடைத்தரகர்களும் அதிகக்கூலி என ஆசை காட்டியும் தமிழகத்தில் இருந்து தொழிலாளிகளை  அழைத்துச் செல்கின்றனர்.

சர்வதேச அளவில் இந்த செம்மரங்களுக்கு கூடுதல் மதிப்பும் அதிக தேவையும் உள்ளது. ஆந்திர அரசே செம்மரங்கள் ஏலத்தின் மூலம் ஆண்டு தோறும் ரூ. 1000 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டி வருகின்றது. அதே வேளை இந்த செம்மரங்களைச் சட்டவிரோதமாக வெட்டி கடத்தும் தொழிலும் கொள்ளை வருமானம் ஈட்டும் தொழிலாக கடந்த பல ஆண்டுகளாக இருந்து வருகின்றது. ஒருபுறம் செம்மரங்கள் கடத்தப்படுவதைத் தடுத்து மரக்கட்டைகளை பறிமுதல் செய்வதாக ஆந்திர வனத்துறை கூறிவருகின்றது. கடந்த சில ஆண்டுகளாக கடத்தல்காரர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 4,160 டன் செம்மரக் கட்டைகள் கடந்த திசம்பர் மாதம்  அரசு சார்பாக ஏலம் விடப்பட்டன.20killedbyAPpolice

மற்றொருபுறம் அப்பு (அண்மையில் காலமானவர்), கொல்லம் கங்கி ரெட்டி (அண்மையில் இண்டர்போலால் மெரிசியசில் வைத்து கைது செய்யப்பட்டவர்) போன்ற கடத்தல்காரர்கள் மூலம் இந்தக் கடத்தல்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.  ஆந்திரா – மணிப்பூர் – மியான்மர் (பர்மா) வழியாக சீனா மற்றும் தென்கிழக்காசிய நாடுகளுக்கும். மும்பை, தில்லி வானூர்தி நிலையங்கள் மூலம் மேற்குலக நாடுகளுக்கும், தமிழக கடற்கரை வழியாக இலங்கைக்கும் என உலகம் முழுவதும் இந்த மரங்கள் சட்டவிரோதமாக கடத்தப்பட்டு வருகின்றன. இந்த வழித்தடங்களில் வனத் துறையினர், சுங்கத் துறையினர் உள்ளிட்ட பல்வேறு மட்டங்களில் இருக்கும் அதிகாரிகள் துணையுடன் செம்மரக் கொள்ளையர்கள் இந்த செம்மரங்களை கடத்தி வருகின்றனர்.

கடந்த 15 திசம்பர் 2013 ஆம் ஆண்டு திருப்பதி – கடப்பா நெடுஞ்சாலையில் சேசாசலம் வனப்பகுதியில் உள்ள தும்புரு தீர்த்தம் எனும் இடத்தில் செம்மரம் கடத்துபவர்கள் நடத்திய தாக்குதலில் டேவிட் குமார், சிறீதர் எனும் இரண்டு வனத்துறை காவலர்கள் கொல்லப்பட்டனர். இந்தக் கொலைகள் நடந்த அடுத்த நாளே வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கோவிந்த ராஜூ, செவிடன் காளி, இராமசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு கொலையாளிகள் என சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் அடுத்த  24 நான்கு மணி நேரத்திற்குள் ஏறக்குறைய 422 கூலித் தொழிலாளர்களை ஆந்திர காவல் துறையினர் கைது செய்தனர், இவர்கள் பெரும்பாலும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.  இந்தக் கொலை நிகழ்வுக்குப் பிறகு வனப்பகுதியில் பாதுகாப்பில் ஈடுபடும் காவலர்களுக்கு துப்பாக்கி வழங்க ஆந்திர அரசு உத்தரவிட்டது. இதன்பின் ஆந்திர மாநில வனத்துறையும், காவல்துறையும் தமிழகத்தில் இருந்து செம்மரங்கள் வெட்டச் செல்லும் கூலித் தொழிலாளிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திக் கொல்வது தொடர்கதையாக தொடர்ந்து வருகின்றது.

 கடந்த 29 மே 2014 ஆம் ஆண்டு திருப்பதியில் உள்ள நாகபட்லா எனும் இடத்தில் சேசாசல வனப்பகுதியில் காவல்துறையினர் சுட்டதில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 3 தொழிலாளர்கள் பலியானார்கள்.

கடந்த 21 சூன் 2014 ஆம் ஆண்டு கடப்பா மாவட்டம் குக்கல தொட்டி வனப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆந்திர காவல்துறையினர் சுட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் பலியானார்.

கடந்த 02 ஆகத்து 2014 ஆம் ஆண்டு சின்ன கொட்டி கல்லி மண்டலத்தில் சேசாசலம் வனப்பகுதியில் செம்மர கடத்தல்காரர்கள் மரம் வெட்டுவதாக கிடைத்த தகவலின்படி கடத்தலைத் தடுக்கச் சென்ற காவல்துறையினர் சுட்டதில் தமிழகத்தைச் சேர்ந்த மேலும் ஒருவர் பலியானார்.

 கடந்த 06 ஆகத்து 2014 ஆம் ஆண்டு கடப்பா மாவட்டம் ஓபுலவாரி பல்லி மண்டலம் காதேலு வனப்பகுதியில் புதன்கிழமை காலை நூற்றுக்கும் மேற்பட்ட செம்மரக் கடத்தல் கும்பல் மரங்களை வெட்டிக் கடத்துவதாக கிடைத்த தகவலின்படி ஆயுதம் ஏந்திய காவல்துறையினர் அப்பகுதிக்குச் சென்றனர். அங்கு கடத்தல் கும்பல் காவல்துறையினர் மீது கற்களை எறிந்து தாக்குதல் நடத்தியதால் ‘தற்காப்புக்காக’ துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த 2 தொழிலாளர்கள்   பலியானார்கள்.

 செம்மரக் கடத்தலைத் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கடத்தல் மூலம்  கொள்ளை வருமானம் ஈட்டும் உண்மையான கடத்தல்காரர்களைக் கைது செய்யாமல்,  இடைத் தரகர்களை நாட்டில் உலாவ விட்டுவிட்டு மரம் வெட்டுவதற்கு அழைத்து வரப்படும் கூலித் தொழிலாளிகளை தொடர்ந்து ஆந்திர அரசு கொன்று வந்துள்ளது. இதற்கு முன்னர் நடைபெற்ற துப்பாக்கிச் சூடுகள் அனைத்துமே செம்மரம் வெட்டுபவர்கள் தங்கள் மீது கற்களை எறிந்ததாகவும் தற்காப்புக்காக தாங்கள் திருப்பிச் சுட்டோம் எனக் கூறி ஆந்திர காவல்த்துறை தொழிலாளர்களை கொன்ற நிகழ்வாகத்தான் அமைந்துள்ளது. இதன் தொடர்ச்சியாகத்தான் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கடந்த 25 நவம்பர் 2014 ஆண்டு செம்மரக் கடத்தல் தடுப்புப் பணி படையணி ஒன்றைப் புதிதாக பணிக்கு அமர்த்தினார். இந்தப் படையணியின் பொறுப்பு அதிகாரி கந்நா இராவ் தான் சில நாட்களுக்கு முன் சேசாசலம் வனப்பகுதிக்குள் சட்டவிரோதமாக நுழைபவர்களை சுட்டுத்தள்ள ஆந்திர அரசிடம் அனுமதி வாங்கி இருப்பதாக செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். கடந்த 4 ஏப்ரல் 2015 அன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூடிய விரைவில் செம்மரங்களை பாதுகாக்க கடும் நடவடிக்கைகளை எடுக்கப் போவதாக தெரிவித்திருந்தார். இதன் தொடர்ச்சியாகத்தான் இந்தப் படையணி நேற்றைய படுகொலையை நடத்தியுள்ளது.

தமிழக மக்களின் பாதுகாப்பில் பொறுப்பற்று செயல்படுகின்றது தமிழக அரசு :

ஒருபுறம் வட தமிழகத்தில் உள்ள ஏறக்குறைய 6 மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளிகள், பழங்குடிகள் தங்களுக்கான வேலைவாய்ப்பும் பொருளாதாரப் பாதுகாப்பும் தங்கள் சொந்த மாநிலத்தில் கிடைக்காததால் வெளி மாநிலங்களில் இவ்வாறு செம்மரம் வெட்டும் கூலித் தொழிலாளிகளாக செல்வது குறித்து கடந்த பல ஆண்டுகளாக தமிழக அரசு சிறிதும் கவலை கொள்ளவில்லை. அவர்களின் மாற்று பொருளாதாரத்திற்காவும் வாழ்வாதாரத்திற்கும் தமிழக அரசு எந்த முன் நடவடிக்கையும் எடுக்கவில்லை.

semmarakattai

மறுபுறம் ஆந்திர காவல்துறையினர் தமிழக தொழிலாளிகளை அடிக்கடி சுட்டுக் கொல்லும் பொழுது கண்டனம் கூட தெரிவிக்காமல் மெளனமாக அதனை ஆதரித்து வந்துள்ளது தமிழக அரசு. தமிழக தொழிலாளிகளை ஆந்திர அரசு கொல்வதைத் தமிழக அரசு கண்டிக்காததால்தான்  எந்த எதிர்ப்பும் இல்லாமல் இன்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழக தொழிலாளிகள் ஆந்திர சிறைகளில் வாடிக் கொண்டிருக்கின்றனர். தமிழக அரசின் இந்த தொடர் மெளனமும் பொறுப்பற்ற தன்மையும் தான் கைது செய்யப்பட்ட கூலித் தொழிலாளிகள் 20 பேரை திட்டமிட்டு சுட்டுக் கொலை செய்துவிட்டு சண்டையில் பலியானார்கள் என்று கூறும் அளவிற்கு ஆந்திர காவல்துறையினருக்கும் ஆந்திர அரசிற்கும் அதிகாரத்தை வழங்கியுள்ளது.

ஆந்திர அரசு தனது காவல்துறை மற்றும் சிறப்புப் படையணிகள் முலம் இதற்குமுன் ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்த வரலாறு கொண்ட அரசாகத்தான் இருக்கின்றது. இதுவரை இதில் பல கொலைகளுக்கு முழுமையான நீதி கோரி இன்னும் போராட்டம் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது. இதைப் போலவே தெலுங்கானா அரசும் கடந்த சில கிழமைகளுக்கு முன் சிமி இயக்கத்தைச் சேர்ந்ததாகச் சொல்லப்படும் இருவரையும் சில நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டு வந்திருந்த ஐந்து இசுலாமியர்களை திட்டமிட்டு படுகொலை செய்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

எளிய மக்களைக் கொல்லும் அரசுகள்:

இவ்வாறு ஆந்திர அரசின் வரலாறு மக்களை சட்டத்திற்கு புறம்பாக சுட்டுக் கொல்லும் வரலாறு கொண்டதாகத்தான் இருந்து வருகின்றது. ஒருபுறம் செம்மரங்களை வெட்டும் கடத்தல் கும்பல்கள், கடத்தல் முதலாளிகள் தமிழக மரம் வெட்டும் தொழிலாளிகள் உயிரை பணயம் வைத்து கோடிகளில் வருமானம் ஈட்ட ஆந்திர அரசும் செம்மரங்கள் மூலம் கோடிகளில் வருமானம் ஈட்டி வருகின்றது. தமிழக அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையே நம் பழங்குடி மக்களை இந்த மரம் வெட்டும் தொழில் நோக்கி விரட்டுகின்றது இந்தச் சிக்கலின் பின்னணி இப்படி மீக நீண்டதாக இருக்க இதை வெறும் தமிழர்கள் மீதான தெலுங்கு மக்களின் வெறுப்பு என முன்னிறுத்துவது சிக்கலின் அடிப்படை காரணிகளில் இருந்து விலகிச் செல்லவே துணை செய்யும். மேலும் இந்தச் சிக்கலில் பொறுப்பு கூற வேண்டிய ஆந்திர அரசையும் தமிழக அரசையும் தப்பிக்கவே வழிசெய்யும்.

சில ஆண்டுகளுக்கு முன் சென்னை வேளச்சேரியில் ஐந்து  வட இந்திய இளைஞர்களைச் சட்ட விரோதமாக தமிழகக் காவல்துறை சுட்டுக்கொன்றதும் பரமக்குடியில் ஏழு தாழ்த்தப்பட்ட மக்களைச் சுட்டுக்கொன்றது, வீரப்பன் தேடுதல் வேட்டை என்ற பெயரில் வச்சாத்தி கிராமத்தில்  சிறப்புப் படை நடத்திய படுகொலைகள் , பாலியல் வன்கொடுமைகள் ஆகியனவற்றினை நாம் நினைவில் கொள்வது அவசியம். ஆந்திர அரசானாலும் தமிழக அரசானாலும் அப்பாவி மக்களை பலியிட்டு ஆளும் வர்க்கத்தின் அரசியல் – பொருளாதார நலன்களை பாதுகாத்துக் கொள்ளும் கொடிய அரசாகத்தான் உள்ளது என்பது தெளிவு.

தமிழகத் தொழிலாளர்கள் படுகொலை குறித்து தமிழக முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் 20 பேர் சட்டவிரோதமாக கொல்லப்பட்டது அப்பட்டமான மனித உரிமை மீறல் என ஆந்திர அரசிற்கு கடும் கண்டனத்தை தெரிவிக்காது கொல்லப்பட்டவர்கள் தமிழக மக்கள் என்ற உணர்வுவே இல்லாது வெட்கமின்றி அவர்களை சுடாமல் கைது செய்திருக்கலாம் என்று மட்டும் கூறி ”நமபத்தகுந்த  நீதி விசாரணை” தேவை என பொத்தாம் பொதுவாக கூறியிருக்கின்றது தமிழக அரசு. தமிழக அரசு தமிழக மக்களின் பாதுகாப்பிலும் நல்வாழ்விலும் சிறிதும் பொறுப்பற்ற நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றது  என்பதையே ஆந்திர அரசிற்கு தமிழக முதல்வர் எழுதிய கண்துடைப்பு கடிதம் காட்டுகின்றது.

உடனடியாக இந்த திட்டமிடப்பட்ட படுகொலை மீது பணியில் உள்ள உச்சநீதி மன்ற நீதிபதி தலைமையிலான குழு அமைத்து விரைவான விசாரணை மேற்கொள்ள அல்லது நடுவண் அரசின் புலனாய்வு நிறுவனத்தைக் கொண்டு விரைவான விசாரணை நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். படுகொலையைச் செய்த ஆந்திர அதிகாரிகளைப் பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி ஆந்திர அரசை வலியுறுத்த வேண்டும்.

மேலும் திருவண்ணாமலை, வேலூர், தருமபுரி, விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அப்பாவி மக்களைச்  செம்மரம் வெட்ட அழைத்துச் செல்லும் இடைத்தரகர்களை அடையாளங்கண்டு கைது செய்ய வேண்டும். இந்தத்     தொழிலுக்குச் செல்லும் பழங்குடி தொழிலாளிகளுக்கு மாற்று வேலைவாய்ப்புகளை உருவாக்கி அவர்களின் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்ய போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்க எடுக்க வேண்டும்.

- ச.இளங்கோவன்

About இளங்கோவன்

One comment

  1. In my opinion , the workers belong drought prone districts of tamilnadu. Restoring adayar river koovagam river and thousands of chola kings built water bodies will provide humble earnings at their village itself.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>