Home / அரசியல் / ஆந்திர வனப்பகுதியில் 20 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை தேவை

ஆந்திர வனப்பகுதியில் 20 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை தேவை

20 தமிழகத் தொழிலாளர்கள் கடந்த 7 ஆம் தேதி ஆந்திர காவல்துறையால் படுகொலை செய்யப்பட்டனர். ’மோதல் படுகொலை’ என்று ஆந்திர அரசு அறிவித்தது மட்டுமின்றி இது ஒரு தொடக்கம் என்றும் இழப்பீடு கொடுக்க முடியாது என்றும் ஆந்திர அரசுத் தரப்பு இந்த படுகொலையை நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறது. உடல்கள் மீட்கப்பட்ட இடத்தைச் சுற்றி ஐந்து கிலோமீட்டர் சுற்றளவில் செம்மரங்களே இல்லை, தமிழகத் தொழிலாளர்கள் பிடித்து வைத்து ஆந்திராவுக்கே உரிய சித்திரவதைகள் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது தெட்ட தெளிவாக அம்பலமாகியுள்ளது. அதே நாளில் தெலங்கானவில் ஐந்து இசுலாமிய விசாரணைக் கைதிகள் போலி மோதல் கொலையில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். ஆந்திராவும் தெலங்கானாவும் போலி மோதல் படுகொலைகளுக்குப் பேர் போனதாக இருந்து வந்துள்ளது. மாவோயிஸ்ட்கள், மனித உரிமையாளர்கள் என்று பலரும் போலி மோதல் கொலைக்கு ஆளாகியுள்ளனர் என்பது நாம் எல்லோரும் அறிந்ததே. அதிலும் குறிப்பாக இப்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு போலி மோதல் படுகொலைகளுக்கு பேர் போனவர். ஆந்திர, தெலங்கானா அரசுகள் மோதல் படுகொலைகளின் கலாச்சாரம் மிக நீண்டதாக இருக்கிறது.

20killedbyAPpolice

இந்த 5 நாட்களில் தமிழக அரசு பொத்தாம் பொதுவான ஒரு விசாரணை வேண்டும் என்றும் மூன்று இலட்ச ரூபாய் நிவாரணத் தொகையை அறிவித்துள்ளது. இந்த பிரச்சனை ஒரு தொடக்கம் கிடையாது. இதற்கு முன்னமே 9 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சேலம், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், தர்மபுரி ஆகிய ஐந்து மாவட்டங்களில்  இருந்து  ஆயிரக்கணக்கில் மக்கள் மரம் வெட்டும் வேலைக்குப் போவதும் அங்கு காணாமல் போவதும் சிறையில் அடைக்கப்படுவதும் பொறுப்புள்ள ஓர் அரசுக்கு தெரியாமல் இருக்க முடியாது. தெரிந்திருந்தும் இதை ஒழுங்குப்படுத்தி மக்களுக்கு வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த, ஆந்திர அரசுடன் சேர்ந்து கூட்டு முயற்சிகளை மேற்கொள்ள தவறியது இவ்வரசு தன் கடமையில் இருந்து நழுவிக் கொண்டதே ஆகும்.

இப்போது, போலி மோதல் படுகொலை என்பது ஊடகங்கள் வாயிலாக, வெளிவரும் உண்மை தகவல்களின் மூலமாகவும் திட்டவட்டமாக அம்பலப்பட்ட பின்பும் ‘மோதல் படுகொலை’ என்ற நிலைப்பாடுகூட எடுக்காமல், ஆந்திர அரசைக் கண்டிக்காமல், உரிய புலனாய்வுக்கு கோராமல், துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தை எந்த ஒரு  அமைச்சரும் சென்று பார்வையிடாமல் உணர்வற்ற ஓர் அரசாக சரியான எதிர்வினை ஆற்றாமல் இருக்கிறது..தமிழர்கள் எத்தகைய கையறு நிலையில் இருக்கிறார்கள் என்பதை மீண்டும் ஒரு முறை வரலாறு உணர்த்துவதாக இது இருக்கிறது.

எப்போதும் போல இந்திய ஒன்றிய அரசு வேடிக்கைப் பார்க்கிறது. நம்மைப் பொருத்தவரை இது புதிதுமல்ல, வியப்புமல்ல. பழகிப் போன ஒன்றுதான்.

இந்தத் திட்டமிட்டப் படுகொலைகளை இளந்தமிழகம் இயக்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது.மேலும், சுட்டுக்கொல்லப்பட்டத் தமிழகத் தொழிலாளர்களின் நீதிக்காகவும், இது போன்று வருங்காலத்தில் தொடராமல் இருப்பதற்கும் பின்வரும் கோரிக்கைகளை தமிழக, ஆந்திர, இந்திய ஒன்றிய அரசுகளிடம் இளந்தமிழகம் இயக்கம் விடுக்கின்றது.

கோரிக்கைகள்:

  • ஆந்திராவில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். படுகொலையில் ஈடுபட்ட காவல் துறை அதிகாரிகளைப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, கைது செய்யப்பட வேண்டும். அடக்கம் செய்யப்படாமல் இருக்கும் ஏழு உடல்களையாவது மறு பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும். ஊடகங்களில் வெளி வந்த தகவல்களின்படி படுகொலை செய்யப்பட்டதற்கு ஒருநாள் முன்பு தமிழக எல்லைக்குள் வைத்து தமிழகத் தொழிலாளர்கள் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது அம்பலமாகியுள்ளது. எனவே, ஆள் கடத்தல், கொலை ஆகிய பிரிவுகளில் தமிழக அரசு வழக்குப் பதிவு செய்து அக்கொலைக்கு தூண்டியவர்கள் என்ற பட்டியலில் ஆந்திர வனத்துறை அமைச்சர், ஆந்திர முதல்வரை இணைக்க வேண்டும். இந்த படுகொலைகளை விசாரிக்க, நடுவண் அரசின் குற்றப் புலனாய்வுத்துறைக்கு (சிபிஐ) உடனடியாக மாற்றி புலனாய்வு நடத்த வேண்டும்.
  • முதலாவதாக, ஆந்திராவைப் பொறுத்தவரை மிக நீண்ட மோதல் படுகொலை கலாச்சாரம் இருக்கிறது. ஆட்களை பிடித்து வந்த முகத்தை எரித்து, அடித்து துன்புறுத்தி, பல்வேறு  சித்திரவதைகளுக்கு உட்படுத்தி படுகொலை  செய்துவிட்டு ’மோதல் படுகொலை’ என்று சொல்லிவிடுவார்கள்,  இதற்கெல்லாம் சிறப்புப் பயிற்சிப் பெற்ற “grey hounds’ படையணி ஆசிய அளவில் பிரபலமானதாகும். வேறு மாநிலங்களில் கைது செய்து ஆந்திராவுக்கு கொண்டு சென்று கொலை செய்வதும் அவர்களுக்கு வழக்கமானதாகும். இரண்டாவது, இந்த குறிப்பிட்ட செம்மரக் கடத்தல் விவகாரத்தில் இதற்கு பின்னணியில் இருக்கும் மாஃபியாக்கள் அரசியல் கட்சிகளாலும், அரசாலும் பாதுகாக்கப்பட்டு வருகிறார்கள். மாஃபியாக்களுக்கு இடையிலான மோதலிலும் போட்டியிலும் ஆந்திர அரசு ஒரு கருவியாக பயன்படுவதும் தமிழகத் தொழிலாளர்கள் பலியிடப்படுவதே நடந்துள்ளது. இதற்குப் பின்னணியில் செயல்பட்டுவரும் கடத்தல் மாஃபியாக்கள், அரசியல் பெரும் புள்ளிகள், இடைத் தரகர்கள், சர்வதேச வலைப்பின்னல்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து தண்டனைக்குள்ளாக்க வேண்டும். மூன்றாவதாக இந்த குறிப்பிட்ட படுகொலையிலும் உயர் அதிகாரிகள், அமைச்சர்கள், முதல்வர் வரை பங்கு பெற்றிருக்க வாய்ப்பிருப்பதாகவே தெரிகிறது. எனவே, இந்த விசாரணையைப் பணியில் இருக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் தலைமையில் நடத்தி கொல்லப்பட்டத்  தொழிலாளர்களுக்கு நீதி கிடைத்திடவும் கடத்தலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவும் வேண்டும். குசராத் கலவரங்களின் போது அதிகாரிகள் ‘call records’ நீதிமன்றத்தின் மூலமாக பெறப்பட்டு எந்த உயர்மட்டம் வரை படுகொலைகளின் பங்கு இருக்கிறது என்பது வெளிச்சத்திற்கு வந்தது. இதுவே டீஸ்டாவை மோடி பழிவாங்க துடிப்பதற்கான காரணங்களில் ஒன்றாகும். எனவே, இந்த கொலை வழக்கிலும் உயர் அதிகாரிகள் “அழைப்பு பதிவுகளைப்” பெற்று உண்மையை வெளிக் கொணர வேண்டும்.
  • 2000 பேருக்கு மேல் தமிழகத் தொழிலாளர்கள் ஆந்திர சிறையில் அடைப்பட்டிருக்கும் செய்திகள் உறுதியாகின்றன. இதில் கிராமங்களில் எத்தனை பேர் காணவில்லை, அதில் எத்தனை பேர் சிறையில் இருக்கின்றார்கள் என்ற ஒரு கணக்கெடுப்பு எடுத்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். ஆந்திர சிறையில் இருப்பவர்களைத் தமிழக அரசு மீட்க வேண்டும், மேலும் காணாமல் போனவர்களைக் கணக்கில் எடுத்து வழக்குப் பதிவு செய்து கண்டுபிடிக்க வேண்டும்
  • மேற்படி ஐந்து மாவட்டங்களில் உள்ள பழங்குடி மக்கள் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிசெய்யும் வகையில் தமிழக அரசு உடனடியாக சிறப்புத் திட்டங்களை அறிவித்து விரைவாக நடைமுறைப்படுத்த வேண்டும். இல்லையேல், மீனவர் சிக்கல், சந்தனமர கடத்தல் சிக்கல் போல் இதுவும் ஒரு தொடர் சிக்கலாகிவிடும்.

இக்கோரிக்கைகளை வென்றெடுக்க அணி திரளுமாறு தோழமை இயக்கங்களையும் தமிழக சனநாயக ஆற்றல்களையும் மனித உரிமை செயற்பாட்டாளர்களையும் கேட்டுக்கொள்கிறோம்.

தோழமையுடன்,

செந்தில்

ஒருங்கிணைப்பாளர்,

இளந்தமிழகம் இயக்கம்

About விசை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*