Home / அரசியல் / என்ன தான் நடக்கிறது ஏமன் நாட்டில் ?

என்ன தான் நடக்கிறது ஏமன் நாட்டில் ?

“ஏமனில் ஏதோ உள்நாட்டுப் போர் நடக்கிறது,  இத்தனை இந்தியர்கள் மீட்பு, தவிப்பு” உள்ளிட்ட செய்திகளோடு,  தமிழகத்தின் பெரும்பாலான ஊடகங்கள் நிறுத்திக் கொள்கின்றன. உண்மையில் ஏமனில் நடப்பது வெறும் உள்நாட்டுப் போர் என்று மட்டும் வரையறுத்து விட முடியாது. சவுதி அரேபியா, ஈரான், அமெரிக்கா போன்ற மற்ற நாடுகளுக்கும் இப்போரில் பெரும்பங்கு இருப்பதால்,  இந்தப் போரை அவ்வளவு சாதாரணமாக எடை போட்டு விட முடியாது. ஏமனில் அப்படி என்ன நடக்கிறது என்பதைச் சுருக்கமாக முதலில் புரிந்து கொள்ள முயல்வோம்.

2010 ஆம் ஆண்டு தொடங்கிய “அரபு வசந்தம்” என்றழைக்கப்பட்ட மக்கள் போராட்டங்கள் துனிசியா, எகிப்து,லிபியா, ஏமன் உள்ளிட்ட பல அரபு நாடுகளில், சர்வாதிகார அரசுகளை தூக்கியெறிந்து, சனநாயகம் மலரக் காரணமாக இருந்தன. வறுமை, வேலை வாய்ப்பின்மை, ஊழல், சர்வாதிகாரம் ஆகியவற்றை எதிர்த்துக் கிளம்பிய மக்கள் எழுச்சி, பஹ்ரைன், சிரியா, குவைத், ஜோர்டன் வரை புரட்சி அலைகளைக் கிளப்பியது. இந்த புரட்சி அலையில் அதிகாரத்திலிருந்தும் பதவியிலிருந்தும் கீழிறக்கப்பட்டவர் தான்,  ஏமனை 33 ஆண்டுகளாக ஆட்சி செய்த அலி அப்துல்லா சாலிஹ்.

அரபு நாடுகளிலேயே மிகவும் ஏழை நாடு ஏமன் தான். அலி அப்துல்லா சாலிஹ் ஒரு சர்வாதிகாரிக்கான முழுத் தகுதியோடு பதவி வகித்து வந்தார். வாழ்நாள் முழுதும் ஏமனின் அதிபராக அவர் இருப்பதற்கு தோதாகச் சட்டத்தைத் திருத்தியமைக்க முயன்றார். அல்லது தனக்குப் பின் வாரிசான அகமதுவை அதிபராக்க முயன்றார். எல்லா மட்டங்களிலும் ஊழல், சர்வாதிகாரப் போக்கு, மனித உரிமை மீறல்கள், அமெரிக்க ஏகாதிபத்திய நாடுகளின் சார்புநிலை என அவர் மீதான குற்றச்சாட்டுகள் பெருகிக் கொண்டே இருந்தன. ஏமனின் வட பகுதியில் உள்ள ஷியா பிரிவான ஹூதி படையினர் 2004 ஆம் ஆண்டு முதல், அதிபர் சாலிஹ்க்கு எதிராக போராடி வருகின்றனர். 2010 ஆம் ஆண்டு அரபு வசந்தத்தின் போது, ஹூதி போராளிகளோடு, தென்பகுதி ஏமன் கிளர்ச்சியாளர்களும் பழங்குடியினரும் இணைந்து,  அதிபர் சாலிஹ்க்கு எதிராக  போராட்டத்தில் குதித்தனர். அது மட்டுமின்றி, அமெரிக்க மேற்குலகுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக கருதப்படும் அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு, ஏமனின் பிரதான பகுதிகளான ஹத்ராமவுத், ஷப்வா, பய்தா, அப்யான் உள்ளிட்ட இடங்களில் வேகமாக வளர்ந்து வர ஆரம்பித்தது. ஏமனின் பொது மக்களும், பழங்குடியினருமாக‌ உச்சமடைந்த போராட்டத்தை, அதிபர் சாலிஹ் இன் அரச படையினர், கொடூரமாக ஒடுக்கத் தொடங்கினர். கணிசமான அளவில் மக்கள் கொல்லப்பட்டனர். இருந்தாலும் மக்கள் போராட்டத்தின் எழுச்சி,  அதிபர் சாலிஹை, ஒருவழியாக பணிய வைத்தது. துணை அதிபரான “அப்த் ரப்பூ மன்சூர் ஹாதி” ஏமனின் புதிய அதிபராக பொறுப்பேற்றார்.

yeman map

ஆட்சி மாற்றம் நடந்தாலும், காட்சிகளில் எந்த மாற்றமும் இல்லாமல் போனது. ஹாதி பொறுப்பேற்றாலும்,அரசை பின்னால் இருந்து இயக்குபவராக முன்னாள் அதிபர் சாலிஹ் இருந்தார். ஒரு கட்டத்தில் அரசை எதிர்த்து முன்னேறிய ஹூதி கிளர்ச்சியாளர்கள்,  ஏமனின் தலைநகரான சனாவைக் கைப்பற்றினர். அதிபரான ஹாதி, சனாவை விட்டு வெளியேறி, ஏடன் எனும் நகருக்குள் தஞ்சமடைந்தார். சனாவை ஹூதி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினாலும், ஏடனை தற்காலிக ஏமனின் தலைநகராகக் கொண்டு தான் அதிபராக நீடிக்கிறேன் என அதிபர் ஹாதி அறிவித்தார். தற்போது ஏடனை விட்டு அவர் சவுதி நாட்டின் ரியாத்துக்கு தப்பி ஓடி விட்டதாகவும் தகவல்கள் வருகின்றன.

ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஏமன் நாடு முழுதும் பரவி வருவதும்,  அவர்களோடு அல்கொய்தா, மற்றும் ஏமன் பழங்குடியினர் போராடி வருவதும் ஏகாதிபத்திய நாடுகளை எச்சில் விழுங்க வைத்திருக்கின்றன. தொடக்க கால கட்டங்களிலேயே ஏமன் அரசுக்கு மூன்று புறங்களில் இருந்து எதிர்ப்புகள் இருந்து தான் வந்திருக்கின்றன‌. வடக்கில் ஹூதி கிளர்ச்சியாளர்களும், தெற்கில் ஏமன் கிளர்ச்சியாளர்களும், அரேபிய தீபகற்பத்தில் முகாமிட்டிருக்கும் அல்கொய்தா அமைப்பும் ஏமன் அரசுக்கு தொடர்ந்து சிம்ம சொப்பனாக இருந்திருக்கின்றன. தற்போது ஏமன் தலைநகர் சனாவையும்,  ஏமனின் மற்ற பகுதிகளையும் கைப்பற்றியிருக்கும் ஹூதி புரட்சியாளர்களை அழிக்கும் முகமாக சவுதி அரேபிய அரசு, வான்படைத் தாக்குதல்களைத் தொடங்கியிருக்கிறது. இத்தாக்குதல்களில் குறிப்பிட்டத்தக்க அளவு பொது மக்களும் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

 சர்வாதிகார அரசை எதிர்த்து ஹூதி கிளர்ச்சியாளர்கள் போராடுகின்றனர். இங்கே சவுதி அரசுக்கு என்ன வேலை? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. இங்கு தான் இருக்கிறது சர்வதேச அரசியலின் இடியாப்பச் சிக்கல். உலகின் எந்த மூலையில் போர் நடந்தாலும் அமெரிக்காவுக்கு அதில் முழுமையாகவோ அல்லது கணிசமாகவோ ஒரு பங்கு இருக்கும். அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் ஒரு முக்கியமான கிளை,  அரேபிய தீபகற்பத்தில் இருப்பதாக அமெரிக்கா நம்புகிறது. அது மட்டுமின்றி, தன்னுடைய எண்ணெய் தேவைகளுக்கு வசதியாக‌ வளைகுடா நாடுகளில் எந்த இடத்தில் உட்கார இடம் கிடைத்தாலும், துண்டைப் போட்டு வைத்துக் கொள்வது,  அமெரிக்காவின் வழக்கமான உத்திகளில் ஒன்று. 2001 ஆம் ஆண்டிற்குப் பிறகு, “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” என்ற தனது பரப்புரை வடிவத் திட்டத்தில், ஏமன் அதிபர் சாலிஹை சம்மதிக்க வைத்து,  ஏமனிலும் ஓரிடத்தை உறுதி செய்தி கொண்டது .”பயங்கரவாதத்திற்கெதிரான போர்” என்று அமெரிக்கா ஏமனுக்குள் நுழைந்திருப்பதையும், அமெரிக்க சவுதி அரசுகளுக்கு ஆதரவாக செயல்படும் கைக்கூலி அரசாக ஏமன் நடந்து கொள்வதுமே, அல்கொய்தா ஏமன் அரசை எதிர்ப்பதன் முக்கிய காரணமாகும்.

 ஆகவே ஏமனை மற்ற தனது எதிரிகள் விழுங்காமல் பார்த்துக்  கொள்ள வேண்டியது அமெரிக்காவின் தலையாய பணி. ஆகவே வளைகுடா பகுதியில் தனது செல்ல அடிமையான சவூதி அரேபியாவின் மூலம் ஹூதி கிளர்ச்சியாளர்களை ஒடுக்க,  ஏமனில் தற்போது வான்படைத் தாக்குதல்களை ஏவியுள்ளது. ஆகவே அமெரிக்க பிரிட்டன் போன்ற பெரியண்ணன்களின் விருப்பங்களை நிறைவேற்ற களமிறங்கியுள்ளது சவுதி அரேபியா. அது மட்டுமின்றி,  தொடக்கம் முதலே ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் உதவி செய்து வருகிறது.  ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஏமனைக் கைப்பற்றுவது என்பது, ஈரானின் கை ஏமனில் ஓங்குவதற்கு வழி வகுக்கும். வளைகுடா பகுதியில் ஈரான் வலுப்பெறுவது சவுதி அரசுக்கு தலைவலியை ஏற்படுத்தும் ஒரு விஷயம் மட்டுமல்ல. அதன் மூலம் அமெரிக்கா எனும் ஒற்றை மைய‌ அதிகாரத்துக்கு எதிராக ஒரு மிகப்பெரிய சவாலையும் முன் வைக்கிறது ஈரான்.

 கடந்த மார்ச் 26 ஆம் தேதி முதல், ஏமன் முழுவதும் ஹூதி கிளர்ச்சியாளர்களையும், அரசுக்கு எதிராகப் போராடி வரும் பழங்குடியினரையும் குறி வைத்து தாக்குதல்களைத் தொடங்கியிருக்கிறது சவுதி அரசு. இந்தத் தாக்குதல்கள் நிச்சயம் அமைதியை நிலை நாட்டப்போவதில்லை என அறிவியல் விஞ்ஞானிகளின் கருதுகின்றனர். சவுதி அரசோ, ஈரான் அரசோ உருக்குலைந்து கிடக்கும் ஏமன் தேசத்தில் அமைதியை ஏற்படுத்தப் போவதில்லை.பெருவாரியான ஏமன் மக்கள் பங்கேற்று அமையும் முழுமையான சனநாயக அரசால் மட்டுமே இழந்த அமைதியை மீட்க முடியும்.

 -அ.மு.செய்யது

இளந்தமிழகம் இயக்கம்

About அ.மு.செய்யது

One comment

  1. /தொடக்கம் முதலே ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் உதவி செய்து வருகிறது. ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஏமனைக் கைப்பற்றுவது என்பது, ஈரானின் கை ஏமனில் ஓங்குவதற்கு வழி வகுக்கும்//

    இது ஈரானுக்கும் சவூதி அரேபியாவுக்கும் யார் சட்டம்பிள்ளை என்ற போட்டி : அதில் ஹூதி ஷியாவின் பிரிவினர் என்று சுன்னி முஸ்லிம்களின் சவூதி அடக்க நினைக்கிறது. நம் இஸ்லாமிய பிரிவுகளுக்கு இடையேயான போரிலும் அமெரிக்கவை இழுக்கவேண்டாம். இஸ்லாமியர்களுக்கு தம்மிடையே உள்ள வேறு பிரிவினரையும் அதே போல வேறு மதத்தினரையும் சகித்துக்கொள்ளும் ,மனப்பான்மையை வளர்ப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*