Home / கலை / மரணங்கள் தீர்மானிப்பதில்லை – பாரதிதாசன்

மரணங்கள் தீர்மானிப்பதில்லை – பாரதிதாசன்

encounter-main2
மரணங்கள்
தீர்மானிப்பதில்லை
எம் பிரேதங்களின்
மீது
விழுந்து…புரண்டு
அழுது …..அழுது
மனதால் மரணித்துப் போன
எம் பெண்டிர்தம்
மரண ஓலங்களை
மேனியெங்கும்
பூசிக்கொண்டு ஓடும்
காற்றிடம் கேள் !
பதில் சொல்லும்
மரணங்கள் தீர்மானிப்பதில்லை
“எச்சைக் கஞ்சியாச்சும்
ஏந்தி வாங்கி
உயிர் படைச்சவளுக்குக்
கட்டக் கடைசியிலே
பசியோடு
பட்டினிப்போட
எந்த நாய்க்கு
மனசு வரும்”

எங்களின்
இரைப்பைகளைப் பற்றித்
தெரிந்து கொள்ளவே
முயற்சிக்கவில்லை
உங்கள் இறையாண்மை !
பிரேதங்கள்
உத்தரவிட்டன
பிரேதங்களுக்கு
பிரேத பரிசோதனை
செய்யச் சொல்லி
பிணமான எங்களின்
உடல்களை.

வனங்கள்
எம் தாத்தாக்களின்
குழந்தைகள்
அவர்களின்
வேர்வைத் தொட்டிலில்
வளர்ந்த சிசுக்கள்.
உங்கள்
துரோண துரோகத்தால் !
கட்டை விரல்களாய்
களவாடப்பட்டது
எங்கள் வனங்களும் !

உன் எசமானர்களின்
கழிவறையில்
மலம்  தின்ற
கொழுப்பில்
அத்து மீறும்
உன் அதிகாரம்
உழைத்து
உயிர்பெற்ற
எம் கஞ்சிச் சோறும்
குருதியாய்
சிவக்கும்.

ராம்பஜன்
சப்தங்களால்
செவிடாக்கப்பட்ட
காதுகளுக்கு
எப்படிக் கேட்கும்
எம் மரண ஓலங்கள்.
அரிச்சந்திர
மகுடங்களில் தொடங்கி
அசோகச் சக்கர
நாற்காலிகள் வரை
பொய்களைக்
காக்கும் பொருட்டே
உடைவாளும் துப்பாக்கியும்
ஒவ்வொரு முறையும்….

மரணங்கள்
தீர்மானிப்பதில்லை
வெறும்
பிணங்களாய்
புதைந்து போகும் – வெறும்
மரணங்கள் தீர்மானிப்பதில்லை….
மீண்டெழும் எம் தலைமுறை
மீண்டும்…மீண்டும்
கோடாரியோடு…!
வெட்டப் போவது
மரங்களையல்ல !

—- பாரதிதாசன் – இளந்தமிழகம்

About பாரதிதாசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*