Home / அரசியல் / ம‌ர‌ண‌ த‌ண்டனை தேவையா? ஒரு விவாத‌ம்

ம‌ர‌ண‌ த‌ண்டனை தேவையா? ஒரு விவாத‌ம்

மரணம் குறித்த எந்தச் சலனமும் அவனிடத்தில் இல்லை. தனது இறுதி நாட்களை, ஓவியங்கள் வரைந்து கழிக்கப் போவதாக உலகுக்கு அறிவித்தான். மரண தண்டனைக்காகக் காத்திருக்கும் தன் சக சிறைத் தோழன்,இரண்டு நாட்களுக்கு முன் அவன் காதலியை மணம் புரிந்து கொண்ட வேளையில், இவன் ஆவேசமாக ஓவியங்களை வரைந்த படி இருந்தான். சுட்டுக் கொல்லப்படப் போகும் பட்டியலில் காத்திருக்கும் அந்த பத்து பேருக்குமாக உலகமே கண்ணீர் வடித்து போராடிக் கொண்டிருந்த போதும், அவன் மெளனமாக ஓவியங்களை மட்டுமே வரைந்து கொண்டிருந்தான். குருதிச் சிவப்போடு எரியும் ஒரு இந்தோனேஷியக் கொடியும் அவன் ஓவியங்களின் பட்டியலில் இருந்தது. தன்னைச் சுட்டுக் கொல்லப் போகும் அந்த துப்பாக்கி மனிதனைப் பார்த்துக் கொண்டே நான் சாக வேண்டும் என்பது மட்டுமே அவனுடைய கடைசி விருப்பமாக இருந்தது. ஒரு குற்றவாளியைக் கைது செய்தார்கள். திருந்தி வாழ நினைத்த ஒரு இளம் கலைஞனைக் கொலை செய்தார்கள். உலகின் எல்லையற்ற குரூரத்தின் கருணை தான் அவனுடைய இறுதி விருப்பத்தை நிறைவேற்றியிருக்கக் கூடுமென நினைக்கத் தோன்றுகிறது.

2005 ஆம் ஆண்டு போதைப் பொருள் கடத்திய வழக்கில், வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த பத்துப் பேர் இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்டனர். அவுஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த ஈழத்தமிழரான மயூரன் சுகுமாரன் மற்றும் ஆண்ட்ரூ சென் உள்ளிட்ட பத்து பேருக்கு 2011 ஆம் ஆண்டு இந்தோனேஷிய உச்சநீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. 2014 ஆம் ஆண்டு, குற்றம் சாட்டப்பட்டவர்களின் கருணை மனுவை, அந்நாட்டின் அதிபர் நிராகரித்ததையடுத்து, கடந்த வாரம் ஏப்ரல் 29 ஆம் தேதி, ஒன்பது பேருக்கு (இந்தோனேஷிய பெண் நீங்கலாக) மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. மத்திய ஜாவாவில் உள்ள நுசா கம்பங்கன் என்ற தீவில் ஒன்பது பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஒவ்வொரு முறை மரண தண்டனை நிறைவேற்றப்படும் போதும், மரண தண்டனை சரியே என்றும் தண்டனைகள் கடுமையானால் தான் குற்றங்கள் குறையும் என்றும் அபத்தமான ஒரு கருத்தியல் முன் வைக்கப்படுகிறது. டெல்லியில் ஒரு கூட்டுப் பாலியல் கொடூரம் ஏற்படுத்திய தாக்கம், ‘இந்த மாதிரியான ஆட்களைத் தூக்குலதான் போடணும்’ என்ற கொந்தளிப்பை சமூகத்தில் விதைக்கிறது. “இக் கொடூரர்களின் ஆணுறுப்பை வெட்டியெறிய வேண்டும்” என்று சினிமா நடிகைகள் சமூக வலை தளங்களில் பொரியுமளவுக்கு இக்கொந்தளிப்பு நீள்கிறது.

குற்றங்களின் ஊற்றுக்கண் எது?

வர்க்கங்கள் உருவான போது அரசுகள் தோன்றியதாக லெனினின் “அரசு” நூலில் படித்திருப்போம். அரசுகள் உருவான‌ போதே, இரட்டைக் குழந்தையாய் “குற்றங்களும்” சேர்ந்தே பிறந்தன. ஏழை பணக்காரன் என்ற வர்க்க வேறுபாடுகளே குற்றங்கள் பல்கிப் பெருக காரணமாக அமைந்தது. சக மனிதனின் உழைப்பை உறிஞ்சி,செல்வம் சேர்க்கத் தொடங்கிய முதல் மனிதனிலிருந்து “குற்றம்” மனித வாழ்வின் பிரிக்க முடியாத அங்கமாகி விட்டது.

உற்பத்திக் கருவிகளின் வளர்ச்சி, அபரிமிதமான செல்வம் ஓரிடத்தில் குவியக் காரணமாக அமைந்தது. செல்வம் அதிகரிக்க அதிகரிக்க‌, அபகரிப்புகளும் அதிகரித்தன. அதிகமாக அபகரித்த ஒருவனிடமே செல்வம் மீண்டும் மீண்டும் சென்று சேர்ந்தது. அதிகமாக குவிந்த செல்வத்தை பாதுகாக்க, அவன் படைகளை வைத்துக் கொண்டான். அவனே சட்டங்களை எழுதினான். எல்லாவற்றையும் அவனே தீர்மானித்தான். அதிகாரம் தனக்கு மட்டுமே உரியது என்று உரக்கக் கூவினான். அவனே எல்லா உடமைகளையும் அபகரித்ததால் மற்ற மக்கள் ஏதும‌ற்ற‌ ஏழைக‌ளாய், கொடூரமாக‌ ஒடுக்க‌ப்ப‌ட்ட‌ன‌ர்.

cuerda-ejecucion

இப்ப‌டியாக‌ உட‌மை வ‌ர்க்க‌ங்க‌ளின் கொள்ளையால் மக்கள் ஓட்டாண்டிக‌ளாக‌ப் ப‌டுகின்ற‌னர். அவ‌ர்க‌ளிட‌மிருந்து க‌ல்வி,சுகாதார‌ம், வாழ்க்கைக்கான‌ பாதுகாப்பு என‌ அனைத்தையும் ப‌றித்து விட்டு, சக மனிதனோடு இருக்கும் உறவுகளை அழித்து க‌டைசியில் அவ‌ர்க‌ளை ஒரு க‌ச‌ப்பான‌ க‌ர‌டுமுர‌டான‌ வாழ்க்கைப் போராட்ட‌த்தில் த‌ள்ளி விடுகின்ற‌ன‌. த‌ம்மைப் போன்ற‌வ‌ர்க‌ளின் துய‌ருக்கு இந்த‌ச் சுர‌ண்ட‌ல் தான் கார‌ண‌ம் என்ற‌றியாத‌ ம‌க்க‌ளில் ஒவ்வொருவ‌ரும் த‌ன்னைச் சுற்றிய‌ அனைத்து ம‌னித‌னையும் போட்டியாளனாக‌ பாவிக்க‌த் தொட‌ங்குகின்ற‌ன‌ர். ஓட்டாண்டிக‌ளாக்க‌ப்ப‌ட்ட‌ ம‌க்க‌ளின் எதிர்வினை இருவேறு வித‌மாக‌ ந‌ட‌க்கிற‌து. ஒரு பிரிவு த‌ற்கொலை, பிச்சையெடுத்த‌ல், ம‌னப்பிற‌ழ்வுக்குள்ளாத‌ல் என்று தன்னைத் தானே வ‌ருத்தி அழிகிற‌து. இன்னொரு பிரிவு திருட்டு, கொள்ளை என்ற‌ சிறு குற்ற‌ங்க‌ளாக‌த் தொட‌ங்கி, ஒரு க‌ட்ட‌த்தில் தொழில்முறை குற்ற‌வாளிக‌ளாக‌ உருமாறுகின்ற‌ன‌ர். இதனை ஒருவ‌கையில் அமைப்பாக்க‌ப்ப‌டாத‌, திசை வ‌ழி தெரியாத‌, ல‌ட்சிய‌மில்லாத ஒரு வ‌ர்க்க‌ப்போராட்ட‌ம் என‌லாம். அத‌னால் தான் திருட்டை “மூல‌த‌ன‌த்திற்கெதிரான‌ முத‌ல் தாக்குத‌ல்” என்றார் கார்ல் மார்க்ஸ்.

தனது சுரண்டலை மறைக்க ஆளும் வர்க்கம் எப்போதுமே குற்றங்களுக்கு தனி நபரையே பொறுப்பாளியாக்குகிறது. எமது ஆட்சி எப்போதுமே சரியானது தான். கெட்டவர்களான குற்றவாளிகள் அதில் முளைக்கிறார்கள். அவர்களை களையெடுப்பதன் மூலமே இந்த உன்னதமான சமூகத்தை நாங்கள் காக்கிறோம் என்பது தான் ஆளும் வர்க்கங்கள் நமக்கு சொல்ல வரும் செய்தி. டெல்லி கூட்டுப்பாலியல் வன்புணர்வுக் குற்றவாளிகளை தூக்கிலிட்டு விட்டால், இந்த நாட்டில் இனிமேல் பாலியல் குற்றங்களே நடக்காது என்று வாதிடுவது எவ்வளவு அபத்தமோ அவ்வளவு அபத்தமானது ஆளும் வர்க்கங்களின் கருத்து.

மரண தண்டனைக்கு உள்ளாகும் நபரைத் தவிர சமுதாயம் மேன்மையாக இருக்கிறது என்று அனைவரும் நம்ப வேண்டும். அதாவது அவர்களால் உருவாக்கப்பட்ட இந்த ஏற்றத்தாழ்வான சுரண்டல் சமூக அமைப்பை யாரும் குறைகூறக் கூடாது. ஒருவ‌ன் வ‌ன்புண‌ர்வுக் குற்ற‌ம் செய்தால், அவ‌ன் பிற‌ப்பிலிருந்தே காம‌க் கொடூர‌ மிருக‌மாக‌வே பிற‌ந்தவ‌ன் என்று சித்த‌ரிக்கிற‌து இந்த‌ ஆளும் வ‌ர்க்க‌ம். ஏழையாக‌ இருப்ப‌வ‌னுக்கு சேமிப்புப் ப‌ழ‌க்க‌ம் இல்லை, முன்னாள் ம‌த்திய‌ அமைச்ச‌ர் ச‌ர‌த் ப‌வார் சொன்ன‌து போல‌, த‌ற்கொலை செய்து கொள்ளும் விவசாயிக‌ள் அனைவ‌ரும் சோம்பேறிக‌ள். இப்ப‌டித்தான் குற்ற‌ங்க‌ளை ஆளும் வ‌ர்க்க‌ம் பார்க்கிற‌து. இப்ப‌டித் தான் பார்க்க‌ வேண்டும் என்று ம‌க்க‌ளையும் ப‌ழ‌க்குகிற‌து. குற்ற‌ங்க‌ளைத் த‌னிந‌ப‌ர் பொறுப்பாக்கி, ச‌மூக‌ ஏற்ற‌த் தாழ்வை ம‌க்க‌ளின் க‌ண்க‌ளிலிருந்து ம‌றைக்க‌ப் பாடுப‌டுகிற‌து. பணக்காரர்கள் சட்டத்தை ஆள்கின்றார்கள். சட்டம் ஏழையை ஆள்கின்றது என்ற சொல்வடை எவ்வளவு பொருத்தமானது.

ம‌ர‌ண‌ த‌ண்ட‌னையால் குற்ற‌ங்க‌ள் குறைந்து விடுமா?

ம‌ர‌ண‌ த‌ண்ட‌னையால் குற்ற‌ங்க‌ள் குறைந்து விடும். மர‌ண‌ த‌ண்ட‌னைக‌ள் அச்ச‌ உண‌ர்வைத் தோற்றுவிக்க‌க் கூடிய‌வை என்ற‌ க‌ருத்து நம் எல்லோருக்குள்ளும் இருந்து ஆட்டிப்ப‌டைக்கிற‌து. மர‌ண‌ த‌ண்ட‌னை என்ற‌வுட‌ன் ச‌வுதியைப் பார், குவைத்தைப் பார் என்று ந‌ம்மில் ப‌ல‌ர் கை காட்ட‌ ஆர‌ம்பித்து விடுவ‌ர். ம‌ர‌ண‌ த‌ண்டனை அச்ச‌த்தைத் தோற்றுவிக்கும் என்றால், இந்நேர‌ம் ச‌வுதி அரேபியாவில் ம‌ர‌ண‌ த‌ண்ட‌னை வ‌ழ‌க்குக‌ளே இல்லாம‌ல் போயிருக்க‌ வேண்டும். ஆனால் க‌ட‌ந்த நான்கு ஆண்டுக‌ளாக‌ ச‌வுதி அரேபியாவில் ம‌ர‌ண‌ த‌ண்ட‌னைக‌ள் அதிக‌ரித்த‌ வ‌ண்ண‌ம் இருப்ப‌தை, ஆம்னெஸ்டி எனும் ப‌ன்னாட்டு ம‌னித‌ உரிமை நிறுவ‌ன‌ம் எடுத்த புள்ளி விவ‌ர‌ங்க‌ள் நமக்கு காட்டுகின்ற‌ன‌.

images

உண‌ர்ச்சி வேக‌த்தில் செய்ய‌க்கூடிய‌ குற்ற‌ங்க‌ள், ஆதாய‌த்தை நோக்கி செய‌ல்ப‌டும் குற்ற‌ங்க‌ள்,ல‌ட்சிய‌க்குற்ற‌ங்க‌ள், ம‌ன‌ப்பிற‌ழ்வுக் குற்ற‌ங்க‌ள் என அனைத்து வ‌கை குற்ற‌ங்க‌ளை இவ்வாறு ப‌குத்துப் பிரித்தால், எந்த‌ வ‌கைக் குற்ற‌மும் ம‌ர‌ண‌ த‌ண்ட‌னைக‌ளைக் குறித்து அஞ்சி நிற்ப‌தில்லை. ஆக‌வே ம‌ர‌ண‌ த‌ண்ட‌னைக‌ளால் ஒன்றும் செய்ய‌ முடிவ‌தில்லை. வரலாறும் அதன் அடிப்படையிலான புள்ளி விவரங்களும் முழு முற்றான ஆதாரங்களுடன் ஒன்றை நிரூபித்துள்ளன. தண்டனையால் உலகம் அச்சுறுத்தப்படவோ குற்றங்கள் குறைக்கப்படவோ இல்லை. மாறாக‌, த‌ண்ட‌னை முறைக‌ள் க‌டுமையாக‌ இல்லாத‌ நாட்டில் குற்ற‌ங்க‌ள் ஊற்றெடுப்ப‌தில்லை. முன்பே குறிப்பிட்ட‌து போல‌, ச‌மூக‌ பொருளாதார‌ ஏற்ற‌த்தாழ்வுக‌ள் கொண்ட‌ சுர‌ண்ட‌ல் அமைப்பே, குற்ற‌ங்க‌ள் பெருக‌க் கார‌ண‌மாக‌ இருக்கின்ற‌ன‌.

மரண தண்டனைகள் யாருக்கு அதிகம் வழங்கப்படுகின்றன?

“எழுத்தில் என்ன தான் எழுதப்பட்டிருந்தாலும் மரண தண்டனை, எப்போதுமே பலவீனமானவர்களுக்கும் ஏழைகளுக்கும் சிறுபான்மையினருக்கும் எதிராகத் தான் பயன்படுத்தப்படுகிறது” பாட்பிரவுன் முன்னாள் கனடா ஆளுனர்.

நீதியான ஆட்சி என்று உலகின் எந்தவொரு அரசையும் நம்மால் காட்ட முடியுமா? அப்படியிருக்கும் பட்சத்தில் அவர்கள் அளிக்கும் தீர்ப்புகளும் தண்டனைகளும் மட்டும் எப்படி நூறு விழுக்காடு சரியென்று ஒருவரால் வாதாட முடியும்? அநீதியான பாரபட்சமான குற்றவியல் விசாரணை நடைமுறைகளும் காவல்துறையும் ஊழல் மலிந்து கிடக்கும் அரசமைப்பும் கொண்ட இந்திய நாட்டில் ஒரு மரண தண்டனை நிறைவேற்றப்படுமானால், அத்தண்டனையை எப்படி திரும்பப் பெறமுடியும். இறுதி வரை குற்றங்கள் நிரூபிக்கப்படாமல், பயங்கரவாதத்தோடு துளியும் தொடர்பில்லாதவர் என நீதிமன்றங்களாலேயே தீர்ப்பளிக்கப்பட்ட அஃப்சல் குருவுக்கு, கூட்டு மனசாட்சி என்ற பெயரில் தீர்ப்பளிக்கப்பட்டது, பாரபட்சமான நீதிக்கு ஒரு சரியான எடுத்துக்காட்டு.

2007-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அவையில் தூக்குத் தண்டனைக்கு எதிராக ஒரு தீர்மானம் வந்தபோது, அதை ஆதரித்து 104 நாடுகள் கையெழுத்திட்டன. எதிர்த்துக் கையெழுத்திட்ட 39 நாடுகளில் இந்திய அரசும் ஒன்று. விடுதலை பெற்ற நாளிலிருந்து ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் யாராவது இந்திய நாட்டில் தூக்கிலிடப்பட்டிருக்கிறார்களா? இசுலாமியர்கள்,தலித்துகள், வழக்குகளைக் கையாள வசதியில்லாத ஏழைகள் இவர்கள் தான் மரண தண்டனை உள்ளிட்ட அனைத்து தண்டனை முறைகளுக்கும் உள்ளாகியிருக்கிறார்கள். மாறாக, எத்தனை கொலைகள் செய்தாலும் ஆட்சி பீடத்தில் ஏறி பிரதமர் ஆனவர்களும் இங்கே இருக்கிறார்கள் அல்லவா? சட்டத்தின் மூலம் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனைகள் குறைவு தான் என்றாலும் அரசுக்கு எதிராக போராடும் மக்களை மாவோயிஸ்டுகள் என்ற பெயரில் அழித்தொழிக்கும் வேலையையும், போலி மோதல் கொலைகள், கொட்டடிக் கொலைகள் என்று தன் கோர முகத்தை அவ்வப்போது காட்டி வரும் இந்திய அரசையும் அம்பலப்படுத்த வேண்டியிருக்கிறது.

எதற்கெடுத்தாலும் சவுதி அரசின் தண்டனை முறைகளைப் பாருங்கள் என என் இசுலாமிய நண்பர்கள் பெருமை பேசுவார்கள். 27 வயதான ஏழை இலங்கைப் பெண் ரிசானா நஃபிக், தான் வேலை செய்யும் வீட்டில் குழந்தைக்கு பால் கொடுக்கும் போது மூச்சுத் திணறி இறந்து விட்டது என்ற காரணத்திற்காக, கொலை வழக்குத் தொடுக்கப்பட்டு ( பத்து ஆண்டுகள் சிறை தண்டனைக்குப் பின்) சிரச்சேதம் செய்து சவுதி அரசால் கொல்லப்பட்டாள். அடுத்த வாரமே, ஒரு இமாம், 5 வயது குழந்தையை வல்லுறவு செய்த வழக்கில் விடுதலை செய்யப்பட்டார். காரணம் அவர் சவுதி நாட்டின் ஷேக்குகளில் ஒருவர். அதாவது ஏழைகள், மூன்றாம் உலக நாடுகளின் குடிமக்கள் என்றால் அவர்களுக்கு ஒரு நீதி. இதுவே அமெரிக்கா, ஐரோப்பா என்றால் தனது ஷரீ அத் சட்டத்தின் முகத்தை திருப்பிக் கொள்ளும் நாடு தான் சவுதி அரேபியா. கொலைக்கு கொலை தான் தண்டனை என்றால் அவர்கள் ஏன் லட்சக்கணக்கான குழந்தைகளையும் பெண்களையும் கொல்லும் இசுரேலிய அரசையும் அமெரிக்க அரசையும் சிவப்புக்கம்பளம் விரித்து வரவேற்கிறார்கள்?

———

மரண தண்டனைக்கெதிராக போராடிய வீர வரலாறுகள் நம் தமிழகத்துக்கு உண்டு. மரண தண்டனைக்கு எதிராக தன் உயிரையே ஈகம் செய்யக் கூடிய செங்கொடிகள் நம் மண்ணில் உண்டு. முருகன் சாந்தன் பேரறிவாளனுக்காக மட்டுமின்றி அப்சல் குருவுக்காகவும், புல்லருக்காகவும் களம் காணும் வழக்கம் கொண்டவர்கள் நாம். தன் வாழ்நாளின் இறுதி நிமிடங்கள் வரை, மரண தண்டனைக்கெதிராக குரல் கொடுத்த நீதியரசர் வீ. ஆர்.கிருஷ்ணய்யரின் தீர்ப்புகளும் பேச்சும் எழுத்தும், நாம் ஏன் மரண தண்டனையை எதிர்க்க வேண்டும் என்ற கருத்தைத் தெளிவாக புரிய வைக்க போதுமானதாக இருக்குமென நம்புகிறேன். தண்டனைகள், குற்றம் புரிந்தவர்கள் திருந்த அளிக்கும் ஒரு வாய்ப்பாக இருக்க வேண்டுமே தவிர, குற்றம் புரிந்தவர்களை அழித்தொழிக்கும் ஒரு கொள்கையாக இருக்கக் கூடாது. ஒரு சிறைக்கைதியை எப்படி நடத்துகிறோம் என்பதைப் பொறுத்து தான் ஒரு நாகரீகமான சமுதாயத்தை அடையாளம் காண முடியும் என்கிறார் கிருஷ்ணய்யர்.

அ.மு.செய்யது
இளந்தமிழகம் இயக்கம்

About அ.மு.செய்யது

One comment

  1. Well written article.
    Lets unite and fight together to abolish death penalty in India and everywhere

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*