Home / பொருளாதாரம் / இயற்கை வளம் / ஊர்க்குருவிகள் – போடிப் பயணம்

ஊர்க்குருவிகள் – போடிப் பயணம்

ஊர்க்குருவிகள் – போடிப் பயணம்

 

ஊர்க்குருவிகளின் மூன்றாவது பயணத்திற்காக குறிஞ்சி நிலமான மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள தேனி மாவட்டம் போடி சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு கடந்த 04, 05 ஏப்ரல் 2015 சனி மற்றும் ஞாயிறு பயணம் மேற்க் கொண்டோம்.

”மண்ணையும் மக்களையும் நோக்கிய” ஊர்க்குருவிகள் பயணத்தின் நோக்கமானது தமிழகத்தின் பல மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் இன்று சென்னை உள்ளிட்ட நகரங்களில் வேலைகளுக்காக இடம் பெயர்ந்துள்ளனர். இவர்கள் நகர வாழ்க்கையில் இருந்து தற்காலிகமாக தங்களை விடுவித்துக் கொண்டு பிற மாவட்டங்களில் உள்ள மக்களின் வாழ்க்கை முறையையும், அவர்களின் வரலாற்றையும் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பது தான்.

அந்த வகையில் இந்த மூன்றாவது பயணத்தில் போடி அருகே உள்ள பொட்டிபுரம் அம்பரப்பர் மலை, முல்லைப் பெரியாறு அணை குறித்து தெரிந்து கொள்வதற்காக தேர்வு செய்தோம்.

வெள்ளிக்கிழமை 03 ஏப்ரல் 2015 இரவு சென்னை, பெங்களூரு, கோவை, மதுரை உள்ளிட்ட இடங்களில் இருந்து 19 தோழர்கள் தேனி மாவட்டம் போடியை நோக்கி பேருந்தில் புறப்பட்டோம். சனிக்கிழமை அதிகாலை போடியை அடைந்த நாங்கள் மலை அடிவாரத்தில் இருந்த சிலமலை எனும் ஊரில் தங்கினோம்.

நாள் – ஒன்று | காலம் – காலை | இடம் – புதுக்கோட்டை, போடி

இப்பூமியை கடல் சூழ்ந்திருப்பது போல தேனி மாவட்டத்தை மேற்குத் தொடர்ச்சி மலைகள் சூழ்ந்திருக்கின்றன. அதன் மலையடிவாரத்தில் நூற்றுக்கணக்கான காற்றாலைகள் மின் உற்பத்திக்காக சுழன்று கொண்டிருந்தன. காலை சிலமலையில் இருந்து புறப்பட்ட நாங்கள் புதுக்கோட்டை எனும் சிற்றூரை நோக்கி எங்கள் பயணத்தை தொடங்கினோம். செல்லும் வழி எங்கும் தக்காளி, வெங்காயம், முந்திரி, பருத்தி, கத்திரிக்காய் உள்ளிட்ட புன்செய் பயிர்கள் பியிரிடப்பட்டிருந்தன.

11050773_1570026949929211_3143931541650062578_n

பொட்டிபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பொட்டிபுரம், குப்பனாசாரிப்பட்டி ,சின்னபொட்டிபுரம், ராமகிருஷ்ணாபுரம் ,புதூர் புதுக்கோட்டை உள்ளிட்ட சிற்றூர்களைச் சேர்ந்த மக்கள் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் தங்கள் குல தெய்வமாக போற்றும் அம்பரப்பர் மலைக்கு பொங்கல் வைத்து கெடா வெட்டி தங்கள் குலவழிபாட்டு முறையில் வழிபடுகின்றனர். இந்த அம்பரப்பர் மலையை குடைந்து தான் இந்திய நியூட்ரினோ கூராய்வகத்தை ரூ 1500 கோடி செலவில் நிறுவ இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.

10429242_1570027143262525_1622377901998487615_n

நாங்கள் சென்றிருந்த சனிக்கிழமை நாளில் ஊர் மக்கள் கூடி அம்பரப்பர் மலைக்கு பொங்கல் வைத்து மலை உச்சியில் விளக்கேற்றி கொடி ஏற்றி வழிபடும் விழாவாகும். புதுக்கோட்டை ஊர் மந்தையில் பாரம்பரிய உடை அணிந்து பொங்கல் வழிபாட்டிற்கு தேவையான பொருட்களை கூடையில் சுமந்தபடி ஊர் மக்கள் அம்பரப்பர் மலைக்கு ஊர்வலமாகச் செல்ல கூடியிருந்தனர். ஊர்வலம் புறப்படுவதற்கு முன் ஊர் மந்தையில் தேவராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. தங்கள் பாரம்பரிய இசைக்கருவியுடன் பெரியவர்கள், சிறியவர்கள், என அனைவரும் ஒன்று கூடி தேவராட்டத்தில் தங்கள் கலை உணர்வுகளை வெளிப்படுத்தினர்.

11040852_1570026753262564_9198307746266347305_n

இதே இடத்தில் கடந்த வாரம் ஊர் மக்கள் கூடி அம்பரப்பர் மலைக்கு வழிபட செல்ல முயன்ற பொழுது நியூட்ரினோ திட்டத்தைக் காட்டி காவல்துறையினர் ஊர் மக்கள் மலையை நோக்கிச் செல்ல அனுமதி மறுத்துவிட்டனர். நியூட்ரினோ திட்டத்திற்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்த பிறகு அம்பரப்பர் மலையை தற்காலிகமாக காத்த அந்தத் தடையை கொண்டாடுவதற்கும் இத்தடை நிரந்திரத் தடையாக வேண்டும் என அம்பரப்பரிடம் வழிபடவும் இப்பொழுது முன்னரை விட மேலும் பல  சுற்றுவட்டார மக்கள் நியூட்ரினோ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக திருவிழாவில் கூடியிருந்தனர். வண்ணப் பொடிகள், வண்ண உடைகள், நிறைய செய்தியாளர்கள், காவல்துறையினர் என தேவராட்டத்துடன் ஊர் மந்தை பரபரப்புடன் காணப் பட்டது. பங்குனி வெயில் உச்சிக்கு ஏற காலை 10 மணிக்கு மேல் ஊர்மக்கள் அம்பரப்பர் மலையை நோக்கி ஊர்வலத்தை தொடங்கினர்.

புதுக்கோட்டை ஊருக்கு வெளியில் சாலையின் இருவழியிலும் கருவேல மரங்கள் படர்ந்துள்ளன. அந்த கருவேல மரங்களுக்கு நடுவே இடப்புறமாக செல்லும் மண்பாதையை தொடர்ந்தால் சற்று தொலைவில் நியூட்ரினோ ஆய்வகத்துக்கு என செம்மண்ணால் பரந்த அளவில் நான்கு வழி சாலை அமைக்கப்பட்டிருக்கின்றது. அந்த செம்மண் சாலைதான் நம்மை நியூட்ரினோ ஆய்வக கட்டுமான பணியிடத்திற்கு நம்மை இட்டுச் செல்கின்றது. முன்னர் அம்பரப்பர் மலைக்கு செல்லும் ஒற்றை அடிப்பாதையான அந்த வழி இப்பொழுது நியூட்ரினோ ஆய்வக கட்டுமான தளத்திற்கு செல்லும் வழியாக மாற்றப்பட்டிருக்கின்றது. ஊர்வலமாகச் சென்ற மக்களுடன் அம்பரப்பர் மலையை காணப்போகும் ஆவலில் வெயிலை மறந்து நாங்களும் வேகமாக நடைபோட்டோம்.

செம்மண் சாலையை கடந்த நாங்கள் அம்மக்களின் நம்பிக்கையாக உயர்ந்து நிற்கின்ற அம்பரப்பர் மலை அடிவாரத்திற்கு வந்தடைந்தோம். அம்பரப்பர் மலையைச் சுற்றி உள்ள ஏழு மலைகளை இங்குள்ள மக்கள் தங்கள் குலதெய்வமாக கருதுகின்றனர். மலை அடிவாரத்திற்கு சற்று தள்ளி ஒரு சிறிய ஓலைக் குடில் அமைக்கப்பட்டிருக்கின்றது. அங்கு அந்த ஏழு மலைகளை குறிக்கும் விதமாக ஏழு கற்களை நட்டுள்ளனர். அருகில் ஊர்மக்கள் தாங்கள் கொண்டுவந்திருந்த பொருட்களை இறக்கி வைத்து பொங்கல் வைப்பதற்கான வேலைகளை தொடங்கினர். பூசாரிகள் சிலைகளை வழிபாட்டிற்கு தயார் செய்து கொண்டிருந்தனர். பெண்கள் தங்கள் கொண்டு வந்திருந்த பொருட்களை இறக்கி வைத்து பெரிய பாத்திரங்களில் பொங்கல் வைக்கத் தொடங்கினர். குடிலுக்கு அருகே தேவராட்டமும் தவில் இசையும் தொடர்ந்து கொண்டிருந்தது. ஊர்மக்களில் சிலர் தேர்தெடுக்கப்பட்டு அவர்கள் அம்பரப்பர் மலை உச்சிக்கு ஏறிச் சென்று அங்கு விளக்கு ஏற்றி வெள்ளை கொடி ஏறச் சென்றன்ர். அந்தப் பகுதி எளிய மக்களின் திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. அம்மக்களின் பழக்கவழக்கம் தொன்றுதொட்டதாக இன்றும் பெரிதும் மாற்றமடையாமல் உள்ளது. உதாரணமாக, தங்கள் மேய்ப்பு கூட்டத்தில் இருக்கும் மாடுகளிடம் இருந்து இன்றும் இவர்கள் பால் கறப்பதில்லை.

நாங்கள் நியூட்ரினோ திட்டத்தால் ஏற்படப் போகும் விளைவுகள் குறித்து அங்கு நாம் சந்தித்த தோழர்களும், உள்ளூர் மக்களும் பல்வேறு செய்திகளை நம்மிடம் பகிர்ந்து கொண்டனர். குறிப்பாக, விவசாயிகள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த தோழர் மாறன், கலீலியோ அறிவியல் இயக்கத் தோழர் சத்தியமூர்த்தி ஆகியோர் இந்திய அரசின் நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்தின் உண்மையான பக்கத்தையும், அத்திட்டம் காலம் காலமாக அப்பகுதியில் வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து அவர்களை அம்மண்ணைவிட்டு விரட்டியடிக்கப்போகும் திட்டமாக இருக்கப் போகிறது என்பதையும்பற்றி விரிவாக விளக்கினர். ஊடக நண்பர்கள் பொது மக்களிடம் இருந்து திருவிழா குறித்தும் நியூட்ரினோ திட்டத்திற்கான மக்களின் எதிர்ப்பு குறித்தும் தொடர்ந்து செய்தி சேகரித்துக் கொண்டிருந்தனர். சிலர் திருவிழாவை நேரலையிலும் ஒளிபரப்பிக் கொண்டிருந்தனர். காவல்துறையினர் திருவிழா செய்திகளில் மட்டும் கவனம் செலுத்துமாறும் நியூட்ரினோ திட்டத்திற்கு மக்கள் இடையே இருக்கும் எதிர்ப்பை செய்தியாக்க வேண்டாம் எனவும் ”அறிவுரை’ வழங்குவதாக அங்கிருந்தவர்கள் கூறிக் கொண்டிருந்தனர்.

11062768_1570026906595882_4178650319560401245_n

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ஆண்டிற்கு ஆறு மாதங்கள் கடுமையான காற்று வீசுகின்றது. அதனால் தான் மின் உற்பத்திக்காக மலை அடிவாரம் நெடுகிலும் காற்றாலைகள் நிறுவப்பட்டிருக்கின்றன. அம்பரப்பர் மலை அடிவாரத்தில் வீசும் பலத்த காற்று ஊருக்கு பாதிப்பை ஏற்படுத்துவதை தடுக்கும் அரணாக அங்கு கருவேல மரக்காடுகள் இருந்துள்ளன. ஆனால் நியூட்ரினோ திட்டத்திற்கு சாலை அமைப்பதற்காக இந்தக் காட்டை அழித்து முதல் கட்ட சாலை பணிகளை அரசு முடித்து விட்டது. ஆனால் இரண்டாம் கட்ட சாலை அமைக்க அதாவது கருவேல காட்டை அழிக்க அரசு சார்பில் ஒப்பந்தம் கோரப்பட்ட பொழுது நியூட்ரினோ திட்டம் குறித்தும் அதனால் தங்கள் பகுதிக்கு ஏற்படப் போகும் சுற்றுச் சூழல் ஆபத்து குறித்தும் விழிப்புணர்வு பெற்ற மக்கள் யாரும் இந்த கருவேலங் காட்டை அழிக்கும் ஒப்பந்த ஏலத்தில் கலந்து கொள்ளாது புறக்கணித்து விட்டனர்.

நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தபின் மலையடிவாரத்தில் கட்டுமானப் பணிகள் அபபடியே நிறுத்தப்பட்டுள்ளன. தொடக்கத்தில் அரசு அதிகாரிகள் நியூட்ரினோ திட்டத்தால் அப்பகுதி மக்களுக்கு நன்மைகள் வந்தடையும் என்று கூறி தான் உள்ளூர் மக்களிடையே பரப்புரை மேற்கொண்டுள்ளனர். ஆனால் நியூட்ரினோ அய்வகத்திற்கு செல்லும் வழியில் இருக்கும் நீரோடைக்கு மேல் செல்லும் பாலம் கட்டுமானப் பணி, ஊருக்கு தண்ணீர் இல்லாத பொழுது இத்திட்ட பயன்பாட்டிற்கு என இரண்டு இலட்சம் லிட்டர் கொள் அளவு கொண்ட தண்ணீர் தொட்டி கட்டிமுடிக்கப்பட்டது, தங்கள் பாரம்பரிய தொழிலான மேய்ச்சல் தொழிலுக்கும் கால்நடைகளுக்கும் அப்பகுதியில் இடம் மறுக்கப்படுவது. கருவேலங் காட்டை அழித்து சாலை அமைப்பது, அம்பரப்பரை வழிபட அனுமதி மறுப்பது என இத் திட்டத்தின் வருகை மூலம் அரசின் தொடர் நடவடிக்கைகள் தங்கள் வாழ்வாதாரத்தை கேள்விக்குள்ளாக்கி இருப்பதை ஊர்மக்களுக்கு தற்பொழுது முழுமையாக விளங்கிக் கொண்டனர். .

11046537_1570026626595910_8754819285850198580_n

அதனால் அம்பரப்பர் மலையை குடைய அனுமதிக்க கூடாது, தங்கள் வழிபாட்டு உரிமையை பாதுகாக்க வேண்டும், தங்கள் பகுதிக்கு அச்சுறுத்தலாக மாறக்கூடிய நியூட்ரினோ திட்டத்தை தடுக்க வேண்டும் என ஊர் மக்கள் அனைவரும் மிகவும் எழுச்சியுடன் திருவிழாவில் கலந்து கொண்டனர். குறிப்பாக அப்பகுதி பெண்கள்  மிகவும் உறுதியுடனும் கோபத்துடனும் இத்திட்டத்தை எப்படியாவது தடுத்து அம்பரப்பர் மலையை காப்போம் என்றனர்.

விளக்கேற்ற மலையேறியவர்கள் உயரமான அதன் உச்சியை ஒன்றரை மணிநேரத்தில் சென்றடைந்தனர். அங்கு விளக்கேற்றி கொடி அசைக்கப்பட்டவுடன் அடிவாரத்தில் பொங்கல் பொங்க வந்திருந்த அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. நாங்களும் பொங்கல், பழம், தேங்காய் உண்டு எங்கள் பகல் உணவை முடித்துக் கொண்டோம். அதன்பின் ஊர்பெரியவர்கள் அனைவரும் தரையில் அமர்ந்திருக்க அவர்களை பாரம்பரிய உடை அணிந்த பெண்கள் சுற்றி நின்றனர். தங்கள் பூர்விக மொழியில் அம்பரப்பர் மலையை தொழுது வழிபாட்டைத் தொடர்ந்தனர். வழிபாடு முடிந்ததும் சில பெண்கள் கூடி நின்று இத்திட்டத்தை தடுத்து நிறுத்துவோம், அம்பரப்பர் மலையை காப்போம் என்று எழுச்சியுடன் முழக்கமிட்டு கலைந்தனர்.

11130145_1570026769929229_1275274736984415710_n

பின்னர் அங்கிருந்த உழவூர்தியில் ஊர்மக்களுடன் சேர்ந்து புதுக்கோட்டை வந்த நாங்கள் அங்கிருந்து போடிக்கு மேற்கே 18 கி.மி தொலைவில் இருக்கும் குரங்கணிக்குச் செல்ல புறப்பட்டோம்.

ஆயிரமாண்டுகளாய் வளர்ந்து நிற்கின்றது அம்பரப்பர் மலை.

நியூட்ரினோவால் அம்மலையை மட்டும் அரசு துளையிடப் போவதில்லை.

அங்குள்ள மக்களின் மீதும் அவர்களின் வாழ்க்கை மீதும் தான்

மலையை காப்பதே அம்மக்களைக் காப்பதாகும்!

நாள் – ஒன்று | காலம் – மாலை | இடம் – குரங்கணி

இரு குழுவாக பிரிந்த நாங்கள் சிலர் பேருந்திலும் சிலர் சீருந்திலும் பிரிந்து குரங்கணி நோக்கி பயணமானோம். போடியில் இருந்து குரங்கணிக்கு ஒரே ஒரு அரசுப் பேருந்து தான் உள்ளது. பேருந்து கட்டணம் ரூ.10. குரங்கணி செல்லும் மலைப்பாதையில் பேருந்து மேற்குத் தொடர்ச்சி மலைக்குள் ஏறத் தொடங்கியது. இயற்கை அழகை காண பேருந்து சாளரம் ஓரமாக அமர்ந்து வருமாறு பேருந்து நடத்துநர் எங்களுக்கு யோசனை கூறினார். வழியில் கும்கி, மைனா திரைப்படங்கள் எடுக்கப்பட்ட படப்பிடிப்பு தளங்களையும் அவரே காட்டி இடங்கள் குறித்து விளக்கிக் கொண்டு வந்தார். நாங்கள் கோடையில் பயணம் செய்தாலும் சுற்றிலும் மலை சூழ மெல்லிய ஈரம் எங்களைப் பற்றிக் கொண்டது. மெல்லிய சாரலும் இருளும் சூழ நாங்கள் குரங்கணி வந்து இறங்கும் பொழுது மாலை 5 மணி ஆகிவிட்டது. கடைசி வண்டி 6.05 க்கு எனவும் ஒரு மணிநேரத்திற்குள் திரும்பி வந்துவிடவும் வேண்டும் எனவும் பேருந்து நடத்துனர் எங்களிடம் கூறிச் சென்றார்.

குரங்கணிக்கு மேல பேருந்து வசதியோ, சாலை வசதியோ இல்லை. அங்குள்ள மக்களிடம் பேசிய பொழுது மலையில் மூன்று மணிநேரம் ஏறினால் மூனாறுக்குச் சென்று விடலாம் என்றார்கள். ஆனால் அது வனவிலங்குகள் ஆதிகம் உலாவும் பகுதி குறிப்பாக புலியும், கரடியும் என கூறினர்.  மேலே மலையில் உள்ள சிற்றூர்களில் வசிக்கும் மக்கள் நடந்தும் கழுதைகளில் பொதியை ஏற்றிக் கொண்டும் தான் ஊருக்குச் செல்கின்றனர். இந்த மலைகளில் எங்கும் உயர்ந்து நிற்கும் மரங்களும் தோட்டங்களும் நிறைந்திருக்கின்றன. ஆனால் நாம் கூர்ந்து கவனிக்க வேண்டியது இந்த மலைகளில் பல இடங்களில் பெருநிலங்கள் இன்றும் பல்மரக்காடுகளாக இல்லாமல் பெருந் தோட்டங்களாகவே உள்ளன. அதாவது பாக்கு, காபி, ஏலக்காய், தேயிலை தோட்டம் என பெரும்பாலும் பெருந்தோட்டங்களாகவே இம்மலைகள் அமைந்திருக்கின்றன. நாம் வெளியில் இருந்து பார்ப்பவை பலவும் பல்மரங்கள் நிறைந்த காடுகளாக இருப்பது இல்லை. இது வெள்ளைக்காரர்கள் இந்த மலைப்பகுதியை பிடித்து பயிரிட்டு பொருட்களை வெளிநாடுகளுக்கு கடத்திய காலம் தொட்டு தொடர்ந்து வருகின்றது.

கடும் உழைப்பாளிகளாக இருக்கும் இங்குள்ள மக்கள் மலைகளில் நீண்டநாள் வேலைக்குச் செல்கின்றனர். வேளாண் தொழிலை நம்பி இருக்கும் இந்த மக்களிடம் எத்தனை பேருக்கு நிலங்கள் பிரித்துக் கொடுக்கப்பட்டிருக்கின்றது என்பது தெரியவில்லை. பலர் மூனாறு செல்லும் வழியில் உள்ள கேரளப் பகுதிகளில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் வேலைக்குச் செல்கின்றனர். எந்தத் தோட்ட உரிமையாளர்களும் இங்கு தோட்டங்களில் இருப்பதில்லை. குறிப்பாக கடும் மழைக்காலங்களில் இங்குள்ள அட்டைகளுடன் வாழ்க்கை நடத்துவது மிகவும் கடுமையான வாழ்க்கை முறைதான். இத்தனையும் கடந்து மக்கள் தங்கள் பூர்விக இடங்களில் இயற்கையோடு இயற்கையை பாதுகாத்து வாழ்ந்து வருகின்றனர்.

கோடை என்பதால் குரங்கணி அருவியில் குறைவான தண்ணீரே வழிந்தோடிக் கொண்டிருந்தது. நாங்கள் அனைவரும் அருவியின் பாதையில் மேலேறி தடாகம் போன்றொரு இடத்தில் குளிக்கச் சென்றோம். அது அருவி என்பதைவிட பாறைகள் நிறைந்த ஆற்றுப் பாதை என்றே சொல்லவேண்டும். கடும் மழைக் காலங்களில் பெரு வெள்ளம் வரும் பொழுது இங்கு குளிப்பது பாதுகாப்பானதா என்று தெரியவில்லை.

நகரங்களில் செயற்கையாய் உருவாக்கப்பட்ட நீர்பூங்காக்களில் களிக்கப் போகும் மக்கள் அங்குள்ள செயற்கை அருவிக்கு குளிக்கும் பொழுது கட்டுப்பாடுகள் காரணமாக சிகைக்காய் போன்றவைகளை நெகிழிப் பைகளில் எடுத்துச் செல்வதில்லை. ஆனால் இயற்கையாய் அமைந்துள்ள இது போன்ற அருவிகளில் கட்டுப்பாடுகள் இருந்தாலும் கண்காணிக்க ஆட்கள் இல்லாததால் குளித்து முடித்துவிட்டு நெகிழிப் பைகளை அருவியில் கலந்து விடுகின்றனர். அது அருவியின் பாதைவழி ஆற்றுக்குச் சென்று விடுகின்றது. மேலும் இது போன்ற அருவிகள் இளைஞர்கள் மது அருந்திக் சீரழியும் ஒரு இடமாகவும் பயன்படுத்தப்படுகின்றது அதற்கு குரங்கணியும் விலக்கல்ல. வனத்துறையினர் தொடர் கண்காணிப்பில் இல்லாததால் நெகிழிப்பைகளை பயன்படுத்தி அருவியை மாசுபடுத்துதல், மது அருந்துதல் என்பது காணக்கூடியதாக இருந்தது.

11110805_1569082503356989_3636516905791666889_n

குரங்கணி என்பது மிகவும் எளிமையான ஒரு சிற்றூர். இயற்கையோடு பொழுதைக் களிப்பதற்கு மிகவும் பொருத்தமான இடம். இங்கு இயற்கையான அருவி அமைந்திருப்பதால் அது சுற்றுலாத் தளமாகிவிட்டது. குளித்துவிட்டு திரும்பிய நாங்கள் பேருந்து வருவதற்கு முன்னரே கீழ் இறங்கி பேருந்துக்காக காத்திருந்தோம். நகரங்களில் அதிக காசு கொடுத்து வாங்கினாலும் சுவை குறைவாக இருக்கும் தின்பண்டங்கள் சிற்றூர்களில் குறைவான விலைக்கு அதிக சுவையுடன் இருக்கும். அதற்கு குரங்கணியில் இருக்கும் தேநீர் கடையும் ஒரு சிறந்த உதாரணம். எல்லா சிற்றுரைப் போல இங்கும் மக்கள் குழாய் நீரைத்தான் குடிநீராக பயன்படுத்துகின்றனர். அது புட்டிகளில் அடைக்கப்பட்ட செயற்கையான தாதுநீரைவிட பலமடங்கு சுவையாக இருந்தது.

அந்த மாலைப் பொழுதில் அங்கு அருவிகளில் குளித்த நாங்கள் குரங்கணியின் அருமையை முழுமையாக விளங்கிக் கொள்ளவில்லை. அடுத்தநாள் தேக்கடியில் எங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் தான் குரங்கணி எளிமையானதாக இருந்தாலும் எவ்வளவு அழகானதாக இருந்தது என்பதை சற்று காலம் கடந்து எங்களுக்கு உணர்த்தியது.

இரவு இருப்பிடம் திரும்பிய நாங்கள் அடுத்த நாள் சுருளி பயணத்திற்கு திட்டமிட்டு விட்டு உணவுக்குச் சென்றோம். பின்னர் அருவியில் குளித்த களைப்பில் சிலர் உறங்கச் செல்ல சிலர் அருகில் உள்ள சில்லுமரத்துப்பட்டி ஊர் திருவிழாவிற்குச் சென்றனர்.

நாள் – இரண்டு | காலம் – காலை | இடம் – சுருளி

இன்று எங்கள் காலைப் பொழுதை சுருளி அருவியில் குளியலுடன் தொடங்குவதாகத் திட்டம். அதனால் காலை ஏழு மணிக்கு போடியில் இருந்து சுருளி நோக்கிப் புறப்பட்டோம். சுருளி மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் இருக்கும் சிற்றூர். சுருளி அருவி மலைப்பாதையில் சிறிது தொலைவு நடந்து சென்றடைய வேண்டிய இடம். சுருளிக்குச் செல்லும் வழியில் சாலையின் இருபுறங்களிலும் கொடி முந்திரி, தென்னை, வாழை, மாங்காய் தோட்டங்கள் நிறைந்திருந்தன. இந்தப் பகுதிகளில் இருந்து தான் தொழிலாளிகள் பலர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள தோட்டங்களுக்கும் கேரளாவில் உள்ள தோட்டங்களுக்கும் வேலைக்கு செல்கின்றனர். இந்தத் தொழிலாளிகளும் இங்கிருந்த விவசாயிகளும் தான் முல்லைப் பெரியாறு அணையை காக்க வேண்டூம் என்று பல்லாயிரக்கணக்கில் கூடி தமிழக – கேரள எல்லையான குமுளி சென்று முற்றுகைப் போராட்டம் நடத்தியவர்கள். இன்று மிக எளிமையாக தங்கள் தோட்ட வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தனர்.

கோடைக்காலத்தில் அருவியில் தண்ணீர் சற்று வருமா என்ற ஐயத்துடனே நடக்கத் தொடங்கினோம். குரங்கணியை விட சுருளி அருவியில் தண்ணீர் அதிகமாகவே விழுந்து கொண்டிருந்தது. அதற்கு ஏற்றார் போல மக்களும் காலை முதல் அருவியில் குவியத் தொடங்கினர். அருவி செல்லும் வழியில் முன்னர் இருந்ததை விட வனத்துறையினர் இப்பொழுது சில கட்டுப்பாடுகளையும் அருவி மேம்ப்பாடு நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருந்தனர். அதனால் அனைவரும் மலையின் அடிவாரத்திலேயே வண்டிகளை நிறுத்திவிட்டு அருவிக்கு நடந்து செல்ல வேண்டும். அது அருவி செல்லும் வழியை சற்று பாதுகாப்பானதாக மாற்றியிருந்தது. ஆனால நாங்கள் அருவிக்கு அருகே ஏறிக் கொண்டிருந்த பொழுது அங்கே இரண்டு சீருந்துகள் நின்று கொண்டிருந்தன. வண்டியின் முன் வனத்துறை என எதுவும் குறிப்பிட்டிருக்கவில்லை. மாறாக அ.தி.மு.க கொடி பறந்து கொண்டிருந்தது. சட்டத்திற்கு முன் நாங்களும் நீங்களும் ஒன்றல்ல என அந்த வண்டிகள் எங்களைப் பார்த்து கூறுவதாக எங்களுக்குத் தோன்றியது.

மேலே அருவிக்கு அருகே வந்தவுடன் இன்னுமொரு துயரமான காட்சி எங்களை வரவேற்றது. அருவியில் குளிக்க வரும் மக்கள் மிக அதிக அளவில் நெகிழிப் பைகளை அருவியைச் சுற்றி வீசிச் சென்றிருந்தனர். இந்த நெகிழிப் பைகள் குப்பைக் குன்றுகள் போல குவிந்து கிடந்ததன. இன்னுமொரு அவலம் என்னவென்றால் குளிக்க வருபவர்கள் தங்கள் உடைகளில் ஏதாவது ஒன்றை அருவியில் வீசிச் செல்கின்றனர். இயற்கையான அருவி விழும் அந்தப் பகுதியை ஒரு துணிமேடாக குவிந்து அருவியின் நீர் விழுந்து தங்கி ஓடு பகுதியை பார்க்கவே சகிக்க முடியாத ஒரு இடமாக மாற்றி இருந்தது. வனத்துறை அதிகாரிகள் யாரும் அங்கி கண்காணிப்பில் இல்லை ஒருவேலை ஞாயிற்றுக்கிழமை என்பதால் இருக்கக் கூடும். இவை எல்லாவற்றையும் கடந்து குளிரூட்டிய ஒரு இன்பமான குளியலை சுருளி அருவி எங்களுக்கு அருளியது. சுருளி அருவிக்கு மேலே குகைகள் இருப்பதாக கூறியிருந்தனர். மலையேற்றத்திற்கு திட்டமிட நாம் அங்குள்ள மக்களை கேட்டபொழுது சில மாதங்களுக்கு முன் வனப்பகுதியில் நகைக்காக ஆண் பெண் இணையர்கள் இருவர்கள் திருடர்களால் கொல்லப்பட்டதாகவும் அதனால் யாரும் இப்பொழுது மலை ஏறுவதில்லை என எங்களை எச்சரித்தனர்.

மலையேற்ற திட்டத்தை கைவிட்டு அங்கிருந்து திரும்பிய நாங்கள் வழியில் கொடி முந்திரி தோட்டம் ஒன்றில் அமர்ந்து ஏற்கனவே வாங்கி வந்திருந்த காலை உணவை பகிர்ந்து கொண்டோம். பின்னர் அங்கிருந்து குமுளி வழியாக கேரளாவில் உள்ள தேக்கடியை நோக்கி புரப்பட்டோம்.

எளியவர்களுக்கு ஏற்ற எளிமையான அருவி சுருளி அருவி.

நாம் அடுத்தமுறை அழகான சுருளிக்கு வர இந்த முறை அருவியை பாழாக்காமல் செல்ல வேண்டியது நமது பொறுப்பு

நாள் – இரண்டு | காலம் – நண்பகல் | இடம் – கேரள மாநிலம் – தேக்கடி

முல்லைப் பெரியாறு அணையக் காண்பதற்காக சுருளியில் இருந்து தேக்கடி நோக்கி விரைந்தோம். குமுளி கடந்து தேக்கடிக்குள் நுழையும் பொழுதே வண்டிக்கும் நமக்கும் கேரள வனத்துறையிடம் கட்டணம் செலுத்திச் சென்றோம். உள்ளே சென்றதன் பிறகு நடைபெற்றவை அனைத்தும் ஏமாற்றமே. முல்லைப் பெரியாறு அணையை பொதுமக்கள் பார்வையிட வேண்டும் என்றால் அது கேரள அரசின் சுற்றுலா துறை நடத்தும் படகுக் குழாம் படகில் சென்று தான் காண முடியும். அதுவும் அணையின் மதகுக்கு தொலைவில் இருந்து தான் காட்டப்படும். மேலும் விசாரித்த பிறகு தான் தெரிந்தது பல மாதங்களுக்கு முன்னரே கேரள அரசு சுற்றுலாப் பயணிகளை அணையின் மதகுப் பகுதிக்கு அழைத்துச் செல்வதை நிறுத்திவிட்டது என்பது. இதன் மூலம் பொதுமக்கள் யாரும் அணையை தொலைவில் இருந்து பார்க்கும் வாய்ப்பை கூட கேரள அரசு பறித்துவிட்டதை உணர முடிந்தது. அணையை பார்க்க முடியாது என்றால் வெறும் படகுப் பயணத்திற்கு போக விரும்பவில்லை நாங்கள்.

பின்னர் அங்கிருந்த சுற்றுலா முகவர்கள் செல்லார் கோவில், பாண்டிக் குழி, மிளகுத் தோட்டம்  உள்ளிட்ட நான்கு இடங்களை காண்பதற்காக ஒரு வண்டிக்கு ரூ.1300 வாங்கிக் கொண்டு அழைத்துச் சென்றனர். நம்மூர் கொடைக்கானலில் டம் டம் பாறையில் இருந்தும், கோக்கர் வாக் பகுதியில் இருந்தும் மலைத் தொடர்களை காண முடியும். அதுபோன்ற மலைத் தொடர்களை உச்சியில் நின்று முதன்மையான சுற்றுலாத் தளம் போல உடன் வந்திருந்த வழிகாட்டிகள் காட்ட நாங்கள் எதிர்பார்த்து வந்ததைவிட எங்களுக்கு ஏமாற்றமே விஞ்சியது. நேற்றைய நாள் குரங்கணிக்கு சென்றிருந்த பொழுது அடைந்த மகிழ்ச்சியை இங்கு ஒப்பிட்டு பார்க்கும் பொழது சிரிப்பதா அழுவதா என்ற நிலைக்குச் சென்றோம். விட்டால்போதும் என்று மாலையில் குமுளி மலையடிவாரம் நோக்கி விரைந்தோம்.

தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களுக்கு குடிநீர் தருவது முல்லைப் பெரியாறு அணை என்பதறிவோம்!

இனி தொலைவில் இருந்து கூட அணையை நாம் காணமுடியாது என்பதை எத்தனை பேர் அறிவோம்!

11068051_1569082543356985_24066694835643289_n

 

நாள் – இரண்டு | காலம் – மாலை | இடம் – பென்னிக்குக் நினைவிடம்

முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது அதனை இடிக்கவோ, புதிய அணையை கட்டவோ கேரள அரசை அனுமதிக்க மாட்டோம், முல்லைப் பெரியாறு அணையைப் பாதுகாப்போம் என தேனி மாவட்ட மக்கள் பெருந்திரள் போராட்டங்களும், தமிழக – கேரள எல்லையை முற்றுகையிடும் போராட்டங்களும் கடந்த 2011 ஆம் ஆண்டு நடத்தினர். அப்பொழூது தமிழக அரசு முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ஆங்கிலேய பொறியாளார் கர்னெல் பென்னிக்குற்கு குமுளி அடிவாரத்தில் நினைவிடம் கட்ட திட்டமிட்டு அது கடந்த அண்டு திறக்கப்பட்டது. தேக்கடியில் இருந்து திரும்பிய நாங்கள் பென்னிக்குக் நினைவிடத்திற்குச் சென்றோம். முல்லைப் பெரியாறு அணையின் வரலாற்றை அறிந்து கொள்ளும் ஒரு ஆய்விடமாக இந்த நினைவிடம் இன்று நம்முன் நிற்கின்றது. இங்குள்ள பென்னிக்குக் சிலை தேனி உள்ளிட்ட மாவட்டங்களின் சமுகப் பொருளாதாரத்தை உயர்த்திக் காட்டிய பெரும் வரலாற்றை தமிழக மக்களுக்கு நினைவூட்டும் அருங்காட்சியமாக இருக்கின்றது.

மேற்குத் தொடர்ச்சி மலையின் இயற்கை வளங்கள் தேனி மாவட்டத்தை பல வகைகளில் செழிப்பான இடமாக மாற்றியிருக்கின்றது. அதன் பயனை தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் உள்ள மக்களும் அனுபவித்து வருகின்றோம். இந்த மாவட்டத்தின் இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டியது தமிழக மக்களின் கடமையாகும். குறிப்பாக ”வளர்ச்சித்” திட்டங்கள் என்ற பெயரில் மேற்குத் தொடர்ச்சி மலையை அழிக்க வரும் திட்டங்களையும் அனுமதிக்காது மலையையும் மக்களையும் காக்க வேண்டியது தமிழக மக்கள் அனைவரின் பொறுப்பாகும்.

நம் எதிர்காலத் தலைமுறைக்கு

வளமிக்க தமிழகத்தை அப்படியே விட்டுச் செல்வது நமது கடமையாகும!

ஏனெனில் அப்படித்தான் அது நமக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

ஊர்க்குருவிகளின் பயணம் தொடரும்…

பயணக் கட்டுரையாளர்

ச.இளங்கோவன் – ஊர்க்குருவிகள்

+91 98844 68039

https://www.facebook.com/oorkuruvigal

இப்பதிவு பூவுலகு ஏப்ரல் மாத இதழில் வெளியாகியுள்ளது. பூவுலகு தோழர்களுக்கு எங்கள் நன்றிகள்…

About இளங்கோவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*