Home / அரசியல் / இப்போது தப்பித்திருக்கலாம், நீங்கள் வரலாற்றில் சிறை வைக்கப்படுவீர்கள்.

இப்போது தப்பித்திருக்கலாம், நீங்கள் வரலாற்றில் சிறை வைக்கப்படுவீர்கள்.

ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கின் உயர்நீதிமன்ற மேல்முறையீட்டுத் தீர்ப்பு – ஒரு பார்வை.

சல்மான் கான் நடைபாதையில் தூங்கிக்கொண்டிருந்தவர்களை போதையில் மகிழுந்தை ஏற்றிக் கொன்ற வழக்கை விசாரித்து 13 ஆண்டுகள் கழித்து 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை அறிவித்தது மும்பை நீதிமன்றம். தண்டனை அறிவித்தபின் “விரைவாக” செயல்பட்ட நீதிமன்றம் 2 மணி நேரத்தில் பிணை கொடுத்தது, 2 நாளில் தண்டனைக்குத் தடையும் கிடைத்தது.

ஜெயலலிதாவின் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் 18 ஆண்டுகள் ”தீவிர” விசாரணைக்குப் பிறகு கிடைத்த 4 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கு 21 நாட்களில் பிணையும் மேல்முறையீடு செய்ததில் கொஞ்சம் தாமதமாகி(?) கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விடுதலையும் கிடைத்திருக்கிறது. கீழ்மன்றத்தில் இருந்த சாட்சியங்கள், ஆவணங்கள் உயர்மன்றத்தில் எங்கோ விடுமுறைக்கு போய்விட்டனவாம்… அதோடு ஒரு கொடுமை, வருமானத்திற்கு அதிகமாக வெறும் 8.12% தான் ஜெயா சொத்து சேர்த்துள்ளார் என்று தீர்ப்பில் சொல்லியுள்ளார் நீதிபதி.

இந்த இரண்டு தீர்ப்புகளும் நீதி மன்றத்தின் உண்மை முகத்தை மக்களுக்கு ஓரே வாரத்தில் காட்டியுள்ளன!

போகட்டும், அ.தி.மு.க.வினரின் நாடகங்களில் இருந்து நாடு தப்பித்துள்ளது. சட்டம் தன் கடமையை செய்துள்ளது ????? நீ(நி)தி நிலைநாட்டப்பட்டுள்ளது. ஊழல் பற்றிய பேச்சு ஒழிக்கப்பட்டுள்ளது. நல்லது பாரினில் இந்தியா ஒரு பெரிய சனநாயக நாடாயிற்றே.

ஆனால் 1991ல் ராஜீவ் காந்தி படுகொலையில், (ஜெயலலிதா சொத்துக்குவிப்பு, சல்மான் கான் கொலைக்குற்ற வழக்குகளில் சாட்சியங்கள் வலுவாக உண்டு, இதிலோ 2 சிறிய பேட்டரிகளை பெட்டிக்கடையில் வாங்கிய ‘ரசீது’தான் பெரிய சாட்சியம், அது எவ்வளவு போலியாக இருக்கமுடியும் என்பதை பாமரரும் அறிவர்) நிரூபிக்கப்படாத குற்றத்திற்காக தூக்குத்தண்டனை பெற்று, 23 ஆண்டுகள் கடும் போராட்டத்திற்கு பின் கடந்த ஆண்டு உச்சநீதிமன்றமே விடுதலை என்று அறிவித்தும், வெளியில் வராதபடி உச்சநீதிமன்ற அரசியலமைப்பு அமர்வுக்கு அனுப்பி பேரறிவாளன், சாந்தன், முருகன் உட்பட எழுவரை சிறையிலிருந்து வெளியில் வராவண்ணம் கொடுமைபடுத்தி வருகிறது இந்திய அரசும், ஜெயலலிதாவின் தமிழக அரசும். ஓராண்டாகியும் அந்த அமர்வு விசாரணைக்கு கூட இந்த வழக்கை எடுக்கவில்லை. அதே நேரம் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் யார் வழக்கறிஞரை நியமிப்பது என்ற வழக்கை உடனே கையில் எடுத்து தீர்ப்பும் சொன்னது அரசியலமைப்பு அமர்வு. இதற்கு பெயர்தான் சட்டத்தின் முன் அனைவரும் சமம்? இதற்கு பெயர்தான் சட்டத்தின் ஆட்சி? உண்மையில் இது ஒரு சனநாயக நாடுதானா? என்ற ஐயங்களை இந்த நீதிமன்றத் தீர்ப்புகள் நமக்கு ஏற்படுத்தியுள்ளன.

jj-poster

மக்கள் சொத்தை ஊழல் செய்த வழக்கை வைத்தே மக்களிடம் அனுதாபம், தீர்ப்புக்காக மத்திய அரசிடம் தமிழகம் அடமானம்!

வாய்தாக்கள் மேல் வாய்தாக்கள் வாங்கும் பணக்கார முதலைகள், அரசியல் பலசாலிகள் பக்கம் தான் நீதிமன்றம் என்றும் இருக்கும் என்பது இன்று சாதாரண மக்களுக்கும் தெளிவாகியுள்ளது. இருந்தும் மக்கள் சொத்தை ஊழல் செய்து சொத்துக் குவித்த வழக்கை இத்தனை ஆண்டுகள் இழுத்தடித்து தண்டனை பெற்றபின் ”அய்யோ தண்டித்துவிட்டார்கள்” என்று ஒப்பாரி வைத்து மக்களிடமே அனுதாப அலை தேட முயற்சி நடந்தது. மக்கள் பணத்தில் ஆகச்சிறு பங்கை நலத் திட்டங்கள் என்று இலவசமாக கொடுத்ததன் மூலம் பெற்ற அடித்தட்டு மக்களின் செல்வாக்கு தேர்தல் வாக்காக மாற்ற இந்த அனுதாபத்தை ஏற்படுத்துகிறார்கள். ஆனால் இதே நலத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்க சாராயக்கடைகளை நடத்தி அந்தக் குடிகளைக் கெடுப்பதையும் நாம் அறிவோம். இத்தகையச் சூழலில் மாற்று அணி திடமாக இல்லாததும் அ.தி.மு.க.வின் பலத்தை அதிகரிக்கிறது. தி.மு.க., தே.மு.தி.க., காங்கிரஸ் ஏற்கனவே பலவீனமான நிலையில் உள்ளன. ஓட்டு அரசியலில் ஈடுபடும் இடதுசாரி கட்சிகள், ம.தி.மு.க., வி.சி.க., ம.ம.க., பு.த.க., த.வா.க போன்ற கட்சிகள் போராட்டங்களில் மக்கள் பக்கம் நின்றாலும் இதுவரை தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளை நம்பியே தேர்தலை சந்தித்துள்ளன. தங்களை மூன்றாவது மாற்று அணியாக உருவாக்கிக்கொள்ள முன்வருவதில்லை. உடனடியாக பெரிய வெற்றியைப் பெற முடியாது என்றாலும் இந்த அணி அ.தி.மு.க, தி.மு.க.விற்கு மாற்றாக வளர்ச்சி பெற முடியும் என்பதைப் பற்றி யோசிப்பதேயில்லை. பா.ம.க., பா.ச.க. போன்ற கட்சிகள் சாதி அரசியல், மதவாத அரசியல் மூலம் மக்களைத் திரட்டி அ.தி.மு.க.வுடன் பேரம் பேச முயற்சிக்கின்றன. எப்படியாயினும் ஒற்றை பெரும்பான்மை கட்சியாக அ.தி.மு.க வரவாய்ப்பை மேலும் இந்த தீர்ப்பு ஏற்படுத்தியுள்ளது.

இதோடு இந்த தீர்ப்புக்கு பரிசாக மத்திய பா.ச.க அரசிற்கு அ.தி.மு.க. தந்த , த‌ரப்போகும் விலையோ மிக மிக அதிகம். ஏற்கனவே விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் நிலம் பறிக்கும் சட்டத்திற்கு அ.தி.மு.க துணைபோனது இந்தப் பேரத்தில் தான் என்பது நாடறியும். மேலும் மேலும் மத்தியில் அதிகாரத்தை குவிக்கும் மசோதாக்களுக்கும், மாநில உரிமைகளை பறிக்கின்ற சட்டங்களுக்கும் கேள்விகூட எழுப்பாமல் ஆதரவு அளிக்கப்போகிறது அ.தி.மு.க. விவசாயத்திற்கு மாற்றாக மத்திய அரசு காட்டும் “நோக்கியா” போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் “வளர்ச்சி”க்காக தொழிலாளர் நலச் சட்டங்கள் வலுவிழக்கச் செய்துவருவதுடன், நம் முன்னோர்கள் காத்து நமக்களித்த இயற்கை வளங்களை தங்குதடையின்றி சூறையாட சட்டவழியின்படியே திறந்துவிட்டுள்ளது மத்திய பா.ச.க அரசு. அதே போல முன்பு கூடங்குளம் அணு உலைக்கு எதிர்ப்பு பின் ஆதரவு என மாற்றியது போல மீத்தேன் திட்டம், கெயில் எரிவாயு குழாய் திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கு அ.தி.மு.க. ஆதரவு அளித்தாலும் ஆச்சரியமில்லை. கொள்கையளவில் தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க. போன்ற கட்சிகளும் இதற்கு மாறான கட்சிகள் அல்ல. தமிழக மக்களின் உரிமைகளை தங்களது சொந்த நலனுக்காக‌ அடகு வைக்கும் கட்சிகளே இக்கட்சிகள் என்பதை பல காலமாக பார்த்துவிட்டோம்.

komanam_india

மக்கள் புரட்சியே மாற்று!

மொத்தத்தில் மக்கள் தங்களை மூடவுள்ள கல்லறைக்கு தாங்களே குழிதோண்டுவது போன்றது அ.தி.மு.க.விற்கு மீண்டும் ஆதரவு அளிப்பது என்பதை மாற்று அரசியலை முன்னெடுத்துச் செல்பவர்கள்தான் விளக்க கடமைப்பட்டிருக்கிறோம். சரியான மாற்றை முன்வைக்கும்போது மக்கள் நம் பக்கமே உறுதியாக நிற்பார்கள்.

காவல் நிலையம் கையூட்டு அதிமாக கொடுக்கும் பெருஞ்செல்வந்தனுக்கும், உயர்சாதியினருக்கும் வேலைசெய்யும் கட்டப் பஞ்சாயத்து மன்றமாகவே இருந்து வருகிறது. அங்கே ஒடுக்கப்பட்ட சாதியினருக்கோ, சிறுபான்மையினருக்கோ, பெண்களுக்கோ பாதுகாப்பில்லை, இந்நிலையில் காவல் நிலையத்திற்கு போய் வன்கொடுமையை நிறுத்தக்கோர முடியுமா? நீதித்துறையை விட காவல்துறை எந்த அளவிற்கு அரசின் ஏவலனாக இருந்துவருகிறது என்பதை மக்கள் உணர்ந்துவருகிறார்கள். இயற்கை வளங்கள் சூறையாடப்படுவதை எதிர்த்தும், தங்களின் உரிமைக்காகவும் போராடிய மக்களை கொடூரமான அடக்குமுறைக்கு உள்ளாக்கியுள்ளது இந்த அரசின் ஏவல் எந்திரமான காவல்துறை.

ஒருசில நாட்களுக்கு முன்பு சென்னை கே.கே.நகரில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞன் ஒருவனை போக்குவரத்துக் காவலர்கள் கையூட்டு பெறுவதற்காக நிறுத்த முற்பட்ட போது நிறுத்தாததால் அருகில் உள்ள கம்பியில் தள்ளிவிட்டு கொலைசெய்துள்ளார்கள். 100ரூபாய்க்காக இந்த சம்பவம் நடைபெற்றதை அறிந்த அந்த பகுதி மக்கள், இரு காவலர்களை அடித்தே காவல் நிலையம் வரை இழுத்துச் சென்றதுடன் அங்கு நிறுத்தப்பட்ட காவல்துறை வாகனங்கள், காவல் நிலையத்தையும் தாக்கியுள்ளனர். சுமார் 3 மணிநேரம் அந்தப் பகுதி முழுவதுமாக மக்கள் கட்டுப்பாட்டில் இருந்தது. இதுதான் மக்கள் சக்தியின் மகத்தான ஆற்றல். இந்த உலகை, ஊரை தங்கள் கடின உழைப்பால் உருவாக்கிய மக்கள் இந்த அரசும், அரசு இயந்திரங்களும் அநீதியாக செயல்படும் அமைப்புகள் என்று அறிந்ததும் அமைதியாக இருக்க மாட்டார்கள். அமைதியை நிலைநாட்டாமல் ஓயவும் மாட்டார்கள்.

jjcartoon1

ஆகவே மக்கள் சொத்தை களவாடி ஊழலில் சொத்துக்குவிக்கும் அரசியல் பெருச்சாளிகளைத் தண்டிப்பதற்கோ, சாதிய-மதவாத சக்திகளின் ஒடுக்குறையிலிருந்து விடுபடுவதற்கோ, உரிமைக்காக போராடும்போது அடக்குமுறை செலுத்தும் அரசின் இயந்திரங்களான காவல்துறை, இராணுவம் இவற்றைத் தடுப்பதற்கோ, இவற்றை ஏவும் அரசின் பின்னால் இருந்து இலாபத்திற்காக எதையும் செய்யத்துணியும் அதிகாரமிக்க பெருமுதலாளிய தீய சக்திகளிடமிருந்து அதிகாரத்தை கைப்பற்றுவதற்கோ தீர்வாக நீதிமன்றம், சட்டமன்றம், நாடாளுமன்றம் ஆகியவற்றை மட்டுமே நம்பி இருக்காமல் மக்கள் புரட்சிக்கு அணிதிரட்ட வேண்டியுள்ளது. பெருமுதலாளிகளுக்கு மட்டுமே சேவை செய்யும் இந்துத்துவ மத்திய அரசின் சனநாயக விரோத சட்டங்களாலும் டெல்லியில் குவிக்கப்படும் அதிகாரத்தாலும் இன்றையச் சூழல் ஒவ்வொரு நாளும் கனந்துகொண்டிருக்கிறது. சனநாயகத்தை நிலைநாட்டவும், மக்களுக்கு அதிகாரம் கிடைக்கவும் மக்களை விரைவாக அணிதிரட்ட வேண்டியது சனநாயக சக்திகள், இடதுசாரிகளின் உடனடிக் கடமையாகும். மக்கள் போராட்டங்கள் வெல்லும் நாள் அருகில் வந்துகொண்டிருக்கிறது. அப்போது இந்த தீய சக்திகள் வரலாற்றில் சிறைவைக்கப்படுவார்கள்.

எங்கு அளவுக்கு மீறிய, தாங்க முடியாத கொடுமை நடைபெறுகிறதோ அங்கு தான் புரட்சி மலர்கள் வீறு கொண்டு பூக்கும் — தந்தை பெரியார்.

-வினோத் களிகை.

About வினோத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*