Home / கலை / விடுதி – வசுமதி ராஜமார்த்தாண்டன்.

விடுதி – வசுமதி ராஜமார்த்தாண்டன்.

முந்தைய இரவில் என்ன நடந்ததென்பதை இப்போதும் புரிந்து கொள்ள முடியவில்லை, ஜன்னல் வழியாய் பால்யத்திலிருந்து நான் பார்த்த மேகமும் நிலவும் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியேதான் இருக்கிறது. மனிதர்களால் மட்டும் எப்படி மாறிவிட முடிகிறது. இத்தனை வருடத்தில் ஒருமுறை கூட அண்ணன் என்னிடம் இப்படி நடந்து கொண்டிருக்கவில்லை. பதறி எழுந்த அந்தப் பின்னிரவு நடுக்கம் இன்னும் தொடர்கிறது. பயமாக இருக்கிறது. யாரிடமாவது சொல்லலாமாவென நினைத்தாலும் இன்னொருமுறை அந்த விசயத்தை நினைத்துப் பார்க்கும் தைரியம் இல்லை. உடன் பிறந்த அண்ணனும், ரிக்க்ஷாக்கார அண்ணன் செய்ததும் ஒன்றோ? விட்டத்தை பார்ப்பது ஆறுதல் அளித்தது.

“ஸ்கூலுக்கு டைம் ஆச்சு, சீக்கிரம் சாப்பிட வா” ஏதோ வேலையாய் கிச்சனிலிருந்த அம்மா கூப்பிட்ட குரலுடன், வேறு வழியில்லாமல் உலகத்தின் மீதும் மனிதர்களின் மீதும் எந்த நம்பிக்கையும் இன்றி இந்த நாள் தொடங்கியது. தலை இன்னும் முழுமையாய் வாரப்படாமல் இருந்தது. பாப் கட் வெட்டிக் கொள்ள ரொம்ப ஆசை. வெயிலுக்கு இம்சை இல்லாமல் இருக்கும். அம்மாவிடம் ஏற்கனவே கூறி இரண்டு மூன்று முறை சொல்லி திட்டு வாங்கிக் கொண்டேண்.

“பொம்பளப் புள்ள மாதிரி இருடி…. பாப் கட் பன்றாளாம், பெரிய வெள்ளக்கார துரைவீட்டுப் புள்ள பாரு…” அம்மா மண்டையில் குட்டியது மீண்டும் உரைத்தது.அதிலிருந்து அம்மாவிடம் பாப்கட் விசயத்தைச் சொல்லிக் கொள்ளவில்லை.

களைந்து கிடந்த தலையைப் பார்த்த அம்மாவுக்கு முகம் ஒரு நொடி மாறியது. தேங்காய் சட்னிக்கு இட்லியை தொட்டு சாப்பிடத் துவங்கினேன். தலையைப் பின்னால் நின்று அம்மா சரி செய்தாள். இட்லியை விழுங்க முடியாத அளவுக்கு தலை வலித்தது. இரண்டு மூன்று பெரிய துண்டுகளாய் வேகமாய் விழுங்கினேன். புத்தகப் பையைத் தூக்கிக் கொண்டு கிளம்பப் போகும்போது

“அண்ணன் எங்கடி? எழுந்துட்டானா இல்லையா?…”

எனக்கு ஒரு நொடி நழுக்கென எதையோ விழுங்கியது போலிருந்தது. தடுமாறி சமாளித்துக் கொண்டு “எனக்குத் தெரியாது…அவன் எங்க போனா எனக்கென்ன…” கோபத்தை கக்கி விட்டு அடுத்த கேள்வியை எதிர்கொள்ளத் திராணியற்று ஓடினேன்.

ரொம்ப அன்பான அம்மா. அடிக்கடி அழுவாள், காரணம் கேட்டால் சொல்ல மாட்டாள். அவள் கண்ணிரை நான் பலமுறை துடைத்து விட்டுருக்கிறென், அணைத்துக் கொள்வாள். “உனக்காகத் தான் உயிர் வாழ்கிறேன்” என்பாள்.

பழைய ஸ்கூலில் படிக்கும் போது ரிக்க்ஷாக்கார அண்ணனிடமிருந்து தப்புவிக்க எடுத்த முயற்ச்சிகள் எல்லாம் மன‌க்கண்ணில் ஓடியது. பழைய ஸ்கூல் வீட்டிலிருந்து தூரம் அதிகம். பக்கத்திலிருந்த பிள்ளைகளோடு சேர்ந்து நடந்து போவேன். நடந்து போகிற வேகத்தை விட கொஞ்சம் அதிகமான தூரம்தான் ஆனாலும் உடன் வரும் இரண்டு பிள்ளைகளோடு பேசியபடியே போக மிகவும் பிடிக்கும். அதுவும் கூட சில நாட்களுக்குப் பின் நின்று போனது. அந்தப் பிள்ளைகள் ரிக்ஷாவில் போகத் துவங்கினர். அப்பாவிற்கு ரிக்ஷாவில் அனுப்பி வைக்கிற அளவுக்கு வசதியிருந்தும் ரிக்ஷாவிற்க்கு காசு கொடுக்க மன‌மில்லை – என் எதிற்காலத்துக்கு பணம் சேர்த்து வைக்க வேண்டிய கடமை காசு கொடுக்கத் தடுத்து. இருந்தாலும், குமார் அண்ணன் என்னை ரிக்ஷாவில் கூட்டிச்சென்றான். குமார் அண்ணன் தெய்வமாய் தெரிந்தான் முதலில், குமார் அண்ணனின் வேறு நோக்கம் ஈரிரு வாரங்களில் புலப்பட்டது – ரிக்ஷாவில் எனக்கென்று இடம் ஓதுக்கப்பட்டது குமார் அண்ணனின் கை விடுவதற்க்கு வசதியாக. மற்ற பிள்ளைகள் அவ்விடம் உக்காந்தால் குமார் அண்ணன் “இது ரிக்ஷாக்கு பைசா குடுக்காதவர்கள் உட்காருமிடம், நீ ரிக்ஷாக்கு பைசா வாங்கி வா” என்று மாற்றி உட்கார வைத்து விடுவான். மற்ற பிள்ளைகளுக்கு என்ன நடக்கிறதென்று தெரிந்திரிக்கவில்லை.
வீட்டில், ரிக்ஷாக்கு பைசா கொடுக்க சொல்லி எவ்வளவோ அழுதாகி விட்டது, அப்பாவின் பிடிவாதத்திற்கு அளவே இல்லை. தினமும் குமார் அண்ணனின் தொந்தரவிலிருந்து தப்பிக்க ரிக்ஷாவில் போவதைத் தவிர்த்தேன். .அதனாலேயே தாமதமாக எழுவதும், இல்லாத காய்ச்சலை வரவைப்பதும் எனக்கு வழக்கமானது. மாலையில் ரிக்க்ஷா பள்ளிக்கு வரும் நேரத்தில் வேறு க்ளாசில் ஓளிந்துக் கொள்வதும் பின் நடந்தே வீடு திரும்புவதும் என்னைக் காப்பாற்றிக் கொள்வதற்கான எளிய வழிகளாயிற்று. சமயங்களில் அம்மாவிடம் மறைமுகமாக சொல்ல முயற்ச்சித்தேன்.

10699219_1521297028130722_2077059201_n

“ரிக்ஷாவுல போகப் புடிக்கலம்மா… நான் நடந்து போறேன்…”

“லூசு மாதிரி பேசாத பாப்பா… எவ்ளோ தூரம் நடந்து போவ?…”

“அப்போ சைக்கிள் வாங்கி கொடும்மா…சைக்கிள்ல போறேன்… ரிக்ஷா வேணாம்மா…” துரதிர்ஸ்டவசமாக அம்மா அவளிடம் அதற்கான காரணத்தை கேட்கத் தெரிந்திருக்கவில்லை.அம்மா பாவம் – ரொம்ப வெகுளி ..அம்மாவைப் பொறுத்தவரை இன்னும் நான் குழந்தைதான். இந்த உலகமும் அவளை அப்படித்தான் பார்க்க வேண்டுமென அவள் நம்பியிருக்க வேண்டும். அந்த ஒரு வருடம் எனக்கு நரக வேதனை. – நிறைய நிறைய பொய் சொல்ல கற்றுக் கொண்டேன் . அந்த ஸ்கூல் சரியில்லையென அடுத்த வருடம் வேறு ஸ்கூலுக்கு என்னை மாற்றினார்கள். புது ஸ்கூலுக்கு ரிக்க்ஷா தேவையில்லை என்பது அம்மாவின் முடிவு, ஓரே கொண்டாட்டம்.

புது ஸ்கூல் நடக்கும் தூரம் தான், மற்ற பிள்ளைகளுடன் ஆளுக்கொரு கல்லை தேர்ந்தெடுத்து, கல்லை தள்ளிக் கொண்டும் துரத்திக் கொண்டும் நடப்பது ரொம்ப பிடிக்கும்.இனி தனக்கு அந்த மாதிரி எதுவும் நடக்கப் போவதில்லையென நான் ஆறுதலடைந்திருந்த நேரத்தில் தான் இப்போது வீட்டிற்குள்ளேயே அதே பிரச்சனை. வெளியிருக்கும் பிரச்சனையை எப்படியோ சமாளித்தாயிற்று, வீட்டிலிருக்கும் இந்தப் பிரச்சனையை எப்படி சமாளிப்பது? அழக்கூட நேரமில்லை. அம்மாவிடம் சொல்லலாமா,வேண்டாமா என்று தெரியவில்லை.அம்மாவிடம் சொன்னால் அப்பாவுக்கு தெரியவரும், அப்பா அம்மாவைத் தான் திட்டுவார்- படிக்காதவள், உலகம் தெரியாதவள், பிள்ளைகளை வளர்க்க தெரியாதவளென்று.

அம்மாவுக்கு எழுதப் படிக்கத் தெரியாது. படிப்பறிவற்றவர்கள் இவ்வுலகில் வாழத் தகுதியற்றவர்கள் என்பது அப்பாவின் எண்ணம். அதனாலேயே அம்மாவை எடுத்ததற்கெல்லாம் திட்டுவார், அம்மா அழுவாள்.வீட்டுக்கு போகவே பிடிக்கவில்லை. அம்மாவை அழவிடக் கூடாதென்று உறுதி மட்டும் இருந்தது.

இப்பொழுது,வீட்டிற்குள்ளேயே ஓரு ரிக்ஷா அண்ணா. ஒரே வீட்டிற்குள்ளேயே இருந்தாலும் முடிந்தவரை அண்ணனைப் பார்ப்பதைத் தவிர்த்தேன்.அவனிடமிருந்து தப்பிக்க வேண்டியே மாலையில் கபடி விளையாடத் துவங்கினேன். வகுப்பு முடிந்தவுடன் கபடி விளையாடுவது பிடித்துப் போனது. தன்னுடலை இறுகப் பிடிக்க வரும் எல்லோரிடமிருந்தும் தப்பித்து எல்லைக் கோட்டை அடையும் போது தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் எல்லா வலிமையும் எனக்கு இருப்பதான உறுதி ஏற்படும். அதனாலேயே கபடி விளையாட்டு முடியவே கூடாதென்று கடவுளிடம் வேண்டுவேன். ஆனால் நான் எதிர்ப்பார்த்தது மாதிரி இல்லை, விளையாட்டு முடிந்தது. தோழிகள் எல்லாரும் புத்தகப் பையுடன் காத்துக்கொண்டிருந்தார்கள். ஆளுக்கொரு கல்லை தேர்ந்தெடுத்துக் கொண்டு கல்லை காலால் தள்ளிக் கொண்டே நடந்தோம். அம்மாவை எந்த விஷயமும் கஷ்டப் படுத்தக்கூடாது, என்னை நானே பாதுகாத்துக் கொள்வதென்ற முடிவோடு புது தெளிவும் தைரியமும் பிறந்தது. நான் உதைத்த கல் வெகுதூரம் பறந்தது.

வீட்டிற்க்குள், அம்மாவுடனேயே இருந்தேன். அம்மாவோடு வீட்டு வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தேன். முக்கியமாக, தூங்கும் போது அம்மாவுடனேயே தூங்கினேன்.

“பாம்பு கன‌வுல வருதும்மா, பயமா இருக்கு…பக்கத்துல வருது…எம்மேல ஏறுது,ஊறுது… உடம்பல்லாம் நடுங்குது” என்று உண்மையை பொய்யோடு உருவகித்தேன்.

image12345

அம்மா சந்தேகப் படவில்லை. நீண்ட நாட்களுக்குப் பிறகு நிம்மதியாகத் தூங்க முடிந்தது. அம்மாவுக்கும் கொஞ்சம் ஆறுதலாகவும் வேலைப்பழுவும் குறைந்தது.

கொஞ்ச நாள் கழிந்தது பிரச்சனையில்லாமல்,ஓருநாள் குளிக்கும் போது, யாரோ எட்டிப் பார்க்கும் பிரமை எட்டியது. பாத்ருமின் – மூலையில் ஒளிந்து கொண்டென். சிறிது நேரத்தில் யாரோ குதித்து ஓடுவது கேட்டது. மூலையில் இருந்து எழுந்திருக்க தைரியமில்லை. சில மணி நேரம் கழித்து, அம்மா குரல் கொடுத்தாள் குளிக்கும் சத்தம் கேட்கவில்லையென்று, தண்ணி ரொம்ப குளிருதென்று மீண்டும் பொய் சொன்னென்.

அம்மா “நாளைக்கு – தண்ணீரை சுடவைத்து தர்ரேம்மா”. சரியென்றேன் அழுகுரல் வெளிவராமல்.

என் துரதிரஷ்டத்திற்கு என்னை ரொம்ப பிடித்து விட்டது போலும். சில நாட்களில் அம்மா பக்கவாதத்தில் படுத்தாள். வீட்டில் வேலைகளுக்கென அத்தை வரவழைக்கப்பட்டாள் அத்தையிடம் ஒட்டிக் கொண்டேன் என்னை பாதுகாப்பதற்க்காக. சமையல் தெறியவில்லை-னு அப்பா அடித்துப் பிரிக்க ஆரம்பித்தார் – விரக்தியை விரட்ட எளிய வழி போலும், நான் என் விரக்தியை எப்படி விரட்டுவது. அம்மாவிற்க்கு நான் அடிவாங்குவதை பார்க்க முடியவில்லை, வலியால் துடித்தாள், சமயங்களில் அப்பாவிடம் இருந்து பாதுகாக்கும் பொழுது அம்மாவும் சேர்ந்து அடி வாங்கினாள்.

சில நாட்களுக்குப்பின் நான் வாங்கும் அடியை சகிக்க முடியாமல்,என்னை விடுதியில் சேர்த்துவிடச் சொல்லி அம்மா அப்பாவிடம் மன்றாடினாள், பலனில்லை, பக்கவாத மாத்திரையை சாப்பிடாமல் போர்க்கொடித் தூக்கினாள் . அப்பாவிற்கு மகளைப் பிரிந்து இருப்பதில் பெரிய வருத்தம் எதுவுமில்லை வேறு வழியில்லாமல் ஒத்துக் கொண்டார். அம்மா போர்க்கொடி பலனிளித்தது. புது பள்ளி, புது விடுதி என்னை தத்தெடுத்துக் கொண்டது. அந்த ஆண்டு விடுதியில் புதிதாக சேரவந்த மாணவிகள் அழுதார்கள்,வீட்டை பிரிந்து, குடும்பத்தை பிரிந்து விடுதியில் தங்க பயந்தார்கள், எனக்கு இந்த காரணங்கள் சிரிப்பை பரிசளித்தது. இந்த மகத்தான நாளை ,இன்ப அதிர்ச்சியை எதிர்ப்பார்க்கவேயில்லை. இனி என்னை யாரும் எதுவும் செய்துவிட முடியாது – பாம்பும் கனவில் வாராது, காய்ச்சலும் வராது. விடுதி அரன்மனையானது, விடுதியின் சுவர்களும் நானும் சிரிப்பை பரிமாரிக்கொண்டொம், நன்றி சொன்னேன் விடுதிக்கும் மற்றும் அம்மாவுக்கும்.

—- வசுமதி ராஜமார்த்தாண்டன்

About வசுமதி

5 comments

 1. Selvakumar Vaiyapuri

  Hi Vasumathi,

  Simple words and strong weight in my heart.

  Keep it up.

  Natpudan

  Selva

 2. அழுத்தமான வரிகள் அடங்கிய உண்மைகள்.அன்பு வணக்கங்கள் உங்களுக்கு.நல்ல எழுத்து முயற்சி,அடுத்த எழுத்தை படிக்க ஆவல்.

 3. Nalla Pathivu …. Arumaiyaga Ullathu

 4. சிறப்பான பதிவு !
  தோழர் வசுமதிக்கு வாழ்த்துகள் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*