Home / அரசியல் / இனப்படுகொலையின் வாயிலில் நிற்கும் ரோஹிங்கியா முஸ்லிம்கள்

இனப்படுகொலையின் வாயிலில் நிற்கும் ரோஹிங்கியா முஸ்லிம்கள்

 

மியான்மரின் ராக்கைய்ன் மாகாணத்தில் ஒரு சிறுபான்மையினராக ரோஹிங்கிய முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். ரோஹிங்கியா என்பது அவர்கள் பேசும் மொழி. இம்மக்கள் பர்மிய‌ நாட்டின் மண்ணின் மைந்தர்கள் என்பதை சாட்சியங்களோடு நிறுவும் ஏராளமான வரலாற்றுக் குறிப்புகள் இருப்பதாக சமூக மனித உரிமைப் போராளியும் இனவெறி எதிர்ப்பாளருமான டெஸ்மாண்ட் டூட்டு குறிப்பிடுகிறார். இருந்தாலும் அவர்கள் வங்க தேசத்திலிருந்து சட்ட விரோதமாக பர்மாவில் குடியேறிவர்கள் என்றும் அவர்கள் பெளத்தத்திற்கு எதிரானவர்கள் என்றும் கூறி அவர்கள் மீது கொடும் வன்முறையைத் தொடர்ந்து கட்டவிழ்த்து விடுகின்றது  பர்மிய அரசும் அதனைப் பின்னின்று இயக்கும் பெளத்த பேரினவாதமும். வரலாற்று ரீதியாக சில வேறுபாடுகள் இருந்தாலும், ஈழத்தில் தமிழினம் அனுபவித்த எல்லா இன்னல்களுக்கும் சற்றும் குறைவில்லாதது ரோஹிங்கிய முஸ்லிம்கள் இன்று அனுதினமும் அனுபவிக்கும் கொடுமைகள். அடிப்படை ஒற்றுமை என்னவென்றால், இரு பக்கங்களிலும் இனக்கொலையை அரங்கேற்றுவது புத்த பிக்குகள் தான். வரலாற்று அநீதியின் இருண்ட இப்பக்கங்களை உலகம் மிக வேகமாக புரட்டிக் கொண்டிருக்கிறது.

monk-NO-Rohingya-Muslims

1982-ம் ஆண்டு மியான்மரில் ஜெனரல் நே வின் அரசு,  ரோஹிங்கிய இன‌ மக்களுக்கான குடியுரிமையை மறுத்தது. “ரோஹிங்கியா” என்ற சொல்லைக் கூட பயன்படுத்த அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. “வங்காளிகள்” என்று தான் அவர்களை அழைக்க வேண்டும் எனச் சட்டம் இயற்றப்பட்டது. இதன் மூலம் மியான்மர் மக்களிடையே இச்சிறுபான்மை இனத்தவரை “வந்தேறிகள்” என அடையாளப்படுத்தி அந்நியப்படுத்தும் திட்டம் வெற்றிகரமாக முடுக்கி விடப்பட்டது.

 

ரோஹிங்கியா இன முஸ்லிம்கள்,  ஒரு புத்த மதப் பெண்ணை பாலியல் வல்லுறவு செய்து விட்டார்கள் என ஒரு வதந்தி பரப்பபட்டு, ரோஹிங்கியா இன‌ மக்களின் மீது வெறுப்பு விதைக்கப்பட்டது. 2012 ஆம் ஆண்டு,ஜூன் 10 ஆம் நாள் மியான்மர் அரசு அவசரநிலை பிரகடனம் செய்ததை அடுத்து,  ராக்கைய்ன் பெளத்தர்கள் அதை வசதியாகப் பயன்படுத்திக் கொண்டனர். ஊரடங்கு உத்தரவினால் வீட்டிற்குள்ளே முடங்கிக் கிடந்த ஆயிரக்கணக்கான‌ ரோஹிங்கியா முஸ்லிம்களைக் கொன்றனர். எஞ்சியவர்களை வீட்டை விட்டு விரட்டியடித்தனர். வீடுகள், கடைகள், கல்வி நிலையங்கள், வங்கிகள் என அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்டன. இராணுவம் காவல்துறையும் இத்தாக்குதல்களுக்கு துணை நின்றது.

hqdefault

 

உள்நாட்டில் வாழ வழியின்றி உயிருக்குப் பயந்து படகுகளில் தப்பியோடிய ரோஹிங்கிய முஸ்லிம்கள் வங்கதேசத்தின் கதவுகளைத் தட்டினர். ஏற்கெனவே 3 லட்சம் அகதிகள் வங்கதேசத்தில் இருப்பதாக,  அவர்களை ஏற்க மறுத்து விட்டது வங்கதேச அரசு. நடுக்கடலில் படகுகளில் உணவின்றி, நீரின்றி எண்ணற்ற மக்கள் உயிரிழந்தனர். இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து என ஒவ்வொரு நாட்டின் கதவுகளை அவர்களைத் தட்டிக் கொண்டே இருக்கின்றனர். இதில் மலேசியா – தாய்லாந்து எல்லைப் பகுதியில் ஆள் கடத்தல் கும்பலிடம் சிக்கி பலர் அவதிப்பட்டும், உயிரிழந்தும் வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன் தினம் தாய்லாந்து – மலேசிய எல்லைப்பகுதியில் கைவிடப்பட்ட பல ஆள்கடத்தல் கும்பல்களின் முகாம்களும் அங்கு சடலங்கள் பல புதைக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்தது. எப்படியும் இறப்போம் எனத் தெரிந்தும் கூட்டங்கூட்டமாக அவர்கள் படகுகளில் ஏறுவதற்கு யார் காரணம்?

 

“ரோஹிங்கிய முஸ்லிம்கள் பெளத்தத்தை மதிக்காதவர்கள். அவர்கள் இம்மண்ணில் வாழத் தகுதியற்றவர்கள்” என்று அறைகூவல் விடுப்பதன் மூலம்  பெளத்த பேரினவாதம் அவர்களைத் தரம் பிரித்து அவர்களை முற்றாக அழித்தொழிக்கும் செயல் திட்டத்திற்கு வந்து விட்டது.. மியான்மரில் 1.3 மில்லியன் மக்கள் தொகை கொண்ட‌ரோஹிங்கியா மக்கள் கொடும் ஒடுக்குமுறைகளுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். வாக்குரிமை கிடையாது. உயர்கல்வி, மருத்துவம், வேலை, கடவுச்சீட்டு என எதுவும் அவர்களுக்கு கிடையாது. உள்நாட்டிலேயே ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு இடம் பெயர அரசிடம் அனுமதி பெற வேண்டும். திருமணம் செய்து கொள்ள இராணுவத்தின் நான்கு எல்லைகளிடமும் அனுமதி பெற வேண்டும். 2குழந்தைகளுக்கு மேல் அவர்கள் குழந்தை பெற்றுக் கொள்ளக் கூடாது. அவர்கள் நிலங்களை அரசு நினைத்தால் பிடுங்கிக் கொள்ளவும் முடியும்.

 

பாலம் கட்டுதல், பாதைகளை சீரமைத்தல் மற்றும் அபாயகரமான கடினமான வேலைகளில்,  குறைந்த கூலியில் கொத்தடிமைகளாக வேலை செய்ய ரோஹிங்கியா முஸ்லிம்கள் நிர்பந்திக்கப்படுகிறார்கள். 7 வயது குழந்தைகள் முதல் இத்தகைய தொழில்களில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இது மட்டுமின்றி, காவல்துறை நினைத்தால், எந்நேரமும் இம்மக்களின் வீடுகளில் புகுந்து சோதனை செய்யும். ஒன்றாகக் கூடினால் துப்பாக்கிச் சூடும் நடத்தியும் கொலை செய்யும்.

 

இத்தகைய கொடும் ஒடுக்குமுறைகளுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் ஒரு சமூகம் கொதித்தெழுவது இயல்பு. ஆனால் அவர்களை வழி நடத்த, பாலஸ்தீனத்தைப் போல, ஈழத்தைப் போல ஒரு தலைவன் உருவாகியிருக்கவில்லை. ஆங் சாங் சூயிகி இருக்கிறார். ஆனால் அவர் அமைதியாக இருக்கிறார். 2013 இல் பிபிசிக்கு அளித்த ஒரு நேர்காணலில் வன்முறைக்கு இரண்டு தரப்புமே காரணம் என அநியாயமாக உண்மையை மறுக்கிறார். இதற்கு அவர் மெளனமாகவே இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

Rohingya Muslims flee violence in Myanmar

இரு தரப்புமே பாதிப்புகளுக்கு உள்ளாக்கப்படுவதாக அவர் கூறும் குற்றச்சாட்டு துளியும் உண்மையில்லை. ரோஹிங்கியா மக்களைப் போல, பெளத்தர்கள் நாடு நாடாக நடுக்கடலில் தத்தளிக்கவில்லை. பெளத்தர்கள் ஒரு போதும் மியான்மரின் அகதி முகாம்களில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டதில்லை. உலகிலேயே கடுமையாக ஒடுக்கப்படும் ஒரு சிறுபான்மை இனமாக, ஐ.நாவால் பெளத்தர்கள் அடையாளப்படுத்தப் படவில்லை. பசியிலும் நோயிலும் அவர்கள் செத்து மடியவில்லை. இனக்கொலைக்கும் ஆட்கடத்தலுக்கும் அவர்கள் இரையாகவில்லை. பிறகு ஏன் ஆங் சாங் சுயிகி பேரினவாத பெளத்தர்களையும் ஒடுக்கப்படும் ரோஹிங்கியா முஸ்லிம்களையும் ஒரே தட்டில் வைத்து எடை போடுகிறார். மிக மோசமான இக்கையறு நிலைக்கு நிச்சயம் ஆங் சாங் சூயிகியால் தீர்வு காண முடியும் என தலாய் லாமா நேற்று தெரிவித்திருக்கிறார். கடந்த காலங்களில் இது குறித்து சூயிகிடம் பேசும் போது இந்த விவகாரம் மிகவும் சிக்கலானது என்றும் பர்மியர்கள் வாழும் நாட்டில், இதனை கையாளுவதில் பல பிரச்சினைகள் இருப்பதாகவும் சூச்சி தன்னிடம் தெரிவித்ததாகவும் தலாய் லாமா கூறுகிறார்.

 

25 ஆண்டுகளுக்கு முன்பு சூயி கி சமாதானத்துகான நோபல் பரிசு வென்றதை ரோஹிங்கியா இன மக்கள்,  இன்று முற்றிலுமாக மறந்து விட்டிருப்பர். சர்வாதிகாரத்தை எதிர்த்து ஜனநாயகத்துக்காகவும் மனித உரிமைகளுக்காகவும் போராடிய ஒரு தலைவர்,  கடந்த சில ஆண்டுகளாகவே பெரும்பான்மை பெளத்த இன மக்களின் பக்கமே நின்று பேசி வருகிறார். ரோஹிங்கியா இன மக்கள் ஒடுக்கப்படுவது குறித்துப் பேசினால்,  2016 அதிபர் தேர்தலில் தனக்கு ஆதரவான‌ பெளத்த வாக்குகள் குறைந்து விடுமோ என்பது சூயி கியின் கணக்கு. மேலும் தான் தேர்தலில் நிற்கவே இராணுவத்தின் ஆதரவு தேவை என்பதால், ஒரு இனப்படுகொலையை முழுமையாக‌ வெளிப்படுத்தவோ, கண்டனம் தெரிவிக்கவோ அவருடைய அரசியல் லாபநட்டக் கணக்கு இடம் கொடுக்கவில்லை. கொள்கைகளை விட  பதவியும் அதிகாரமும் சூயிகிக்கு முதன்மையாகப்படுகின்றன. கண்ணெதிரே மற்றுமோர் இனப்படுகொலையை நோக்கி இவ்வுலகம் சென்று கொண்டிருக்கிறது. அநீதிக்கெதிரான வார்த்தைகளற்ற மெளனமும் ஒரு இனப்படுகொலை தானே. மெளனம் தான் வன்முறையின் மறுவடிவமாக, புத்த பிக்குகளின் கொலைக்கரங்களில் அவதாரம் எடுக்கிறது.

 

அ.மு.செய்யது

இளந்தமிழகம் இயக்கம்

About அ.மு.செய்யது

One comment

  1. syed article is an eye open of the ongoing genocide in myanmar…. we need to raise serious doubts about the struggle that is lead by aang san suu kyi and the nobel prize ……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*