Home / கலை / ஆயா சுட்ட தோசையே நல்லாயிருந்துச்சி! – காக்கா முட்டை…

ஆயா சுட்ட தோசையே நல்லாயிருந்துச்சி! – காக்கா முட்டை…

1991 ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்திய பொருளாதாரம் உலகமயமாக்கலை நோக்கி ஓடிக் கொண்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக புகுத்தப்பட்ட புதிய தாராளவாதக் கொள்கைகள் நம்முடைய சந்தையை திறந்துவிட்டது. திறக்கப்பட்ட சந்தையில் நுகர்வுப் பொருட்களாக கணிப்பொறியும், மின்னணு சாதனங்களும் மட்டும் வரவில்லை. நாம் உண்ணும் உணவு, உடுத்தும் உடை, இருக்கும் இடம், கல்வி, மருத்துவம் என அனைத்தும் சந்தையில் விற்பனைக்கு கடை விரிக்கப்பட்டது. பணம் உள்ளவர்களுக்கு மட்டும் சரியான பொருளும், உரிய தரமும் கொடுக்கப்படும் என்ற நிலை உருவாக்கப்பட்டது.

அதிகமான மக்கள் நெருக்கியடித்துக் கொண்டு வசிக்கும் பெருநகரங்களில் புதிது புதிதாக கட்டிடங்கள் உருவாகும் போது அங்கு குடிசைகளிலோ, தெருவோரங்களிலோ குடியிருக்கும் அடித்தட்டு மக்களின் வாழ்வு பெயர்ததெடுக்கப்படுகிறது. இப்படி சென்னையில் மட்டும் பெயர்த்தெடுக்கப்பட்ட ஏராளமான மக்கள் வேறு பல இடங்களில் குடியேறியுள்ளனர்.

இந்த நடைமுறையின் வழியில் பெருநகரங்களில் முளைத்து இன்று பெரும்பாலான நகரங்களில் கிளைவிட்டு படர்ந்துள்ள சங்கிலித் தொடர் துரித உணவகங்கள் நம்முடைய சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கம் அபிரிமிதமானது.

சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டும், பயன்படுத்தப்படாமலும், சென்னை மாநகரத்தின் முக்கியப் பகுதியில் ஒரு இடம் இருக்கிறது. அங்கு உள்ள மரத்தில் ஒரு காக்கா கூடு கட்டியிருக்கிறது.

தினமும் கோழி முட்டை வாங்க காசில்லாத நிலையில், காக்கா முட்டையை குடித்து வருகிறார்கள் இரு சிறுவர்கள். திடீரென்று ஒரு நாள், நகரத்தின் முக்கியப் பகுதியில் இருக்கும் அந்த இடத்தை ஒரு சங்கிலித் தொடர் உணவகம் விலைக்கு வாங்கி தன்னுடைய பிட்சா கடையைத் திறக்கிறது. அந்த பிட்சா கடையைத் திறக்க வரும் நடிகர், பிட்சா தின்பதைப் பார்த்து, சிறுவர்களுக்கும் பிட்சா சாப்பிடும் ஆசை தொற்றிக் கொள்கிறது.

FB_IMG_1433395731900

பிட்சா சாப்பிட ஆசைப்பட்ட சிறுவர்கள் அதற்காக செய்யும் முயற்சிகள், அதில் தெறிக்கும் அடித்தட்டு மக்களின் நேர்மை, சுயமரியாதை ஆகியவற்றை இயல்பாக சொல்லியிருக்கும் படம்தான் ” காக்கா முட்டை”.

படத்தில் காக்கா முட்டையாக நடித்திருக்கும் இரு சிறுவர்களும் மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். சிறுவர்கள் மட்டுமின்றி ரயில்வே துறையில் வேலை பார்ப்பவராக வரும் நடிகர், சிறுவர்களின் அம்மாவாக நடித்திருப்பவர், பேரப்பசங்க காக்கா முட்டையாவது குடித்துக் கொள்ளட்டும் என சொல்லும் ஆயா என அனைத்துப் பாத்திரங்களின் தேர்வும் கச்சிதம்.

“அடித்தட்டு மக்கள் வாழும் பகுதியில் கடையைத் திறந்து குழந்தைகளை உசுப்பி விடுறாங்க” , ” சிம்பு, பிட்சா-தான் தின்பானா, இந்த ரசம் சாதம் எல்லாம் சாப்பிடமாட்டானா ?” , ” ரேசன் கடையில டிவி கொடுத்தாங்க, அரிசி அடுத்த வாரம்தான் கிடைக்குமாம் ” போன்ற வசனங்கள் நம்முடைய நடைமுறை வாழ்க்கையையும், மக்களின் தேவையைப் புரிந்து கொள்ளாத அரசியலையும் தோலுரித்துக் காட்டுகிறது.

பிட்சாவின் படத்தைப் பார்த்து தோசை மாவில் பிட்சா செய்ய முயற்சிக்கும் பாட்டி, என்னுடைய சிறுவயதில் கடையில் விற்கும் ப்ரைட் ரைசின் விலை கருதி வீட்டிலேயே செய்து கொடுத்த என் அம்மாவை நினைவூட்ட தவறவில்லை.

எப்படியாவது பிட்சா சாப்பிட வேண்டும் என்று சிறுவர்கள் நினைத்தாலும், அவர்களின் சுய மரியாதையையோ, நேர்மையையோ விட்டுக் கொடுக்காமல் கிடைத்த வேலையைச் செய்வது எளிமையாக உணர்த்தப்படுகிறது.

காசு சேர்த்து பிட்சா சாப்பிடலாம் என்று கடைக்குப் போகும் சிறுவர்களை, குப்பத்தில் இருந்து வருகிறார்கள் என்கிற காரணத்தால் அடித்துவிடுகிறார் கடையின் மேற்பார்வையாளர்.படித்து, பட்டம் பெற்று காசு சம்பாதித்துவிட்டாலும், வர்க்க அடிப்படையிலும், சாதி அடிப்படையிலும் புறக்கணிக்கப்படும் அனைவருக்குமான காட்சி அது.

FB_IMG_1433483994274

ஒரு முக்கியமான சிக்கலை வெற்று விவாதங்களாக மாற்றும் ஊடகங்களின் உண்மை முகத்தையும், பாதிக்கப்பட்டவர்களின் முகத்தைக் கூட அறியாமல் செயல்படும் அவர்களின் டிஆர்பி வெறியையும் முகத்தில் அறையும் காட்சிகள் கூடுதல் பலம்.

பல்வேறு தொடர் முயற்சிகளுக்குப் பிறகு, பிட்சாவை சாப்பிடும் காக்க முட்டைகள் சொல்கிறார்கள் ” ஆயா சுட்ட தோசையே நல்லாயிருந்துச்சில்ல…”

நுகர்வுப் பண்பாட்டின் மூலம் நம்முடைய வாழ்வின் வேர்கள் பெயர்த்தெடுக்கப்படுவதைச் சொல்லும் திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கும் கூட வணிகரீதியாக, நுகர்வுச் சந்தையில் வெற்றி பெற்ற தனுசும், வெற்றிமாறனும் தேவைப்படுகிறார்கள் என்பதுதான் உலகமயமாக்கல் நம்முடைய வாழ்வில் ஏற்படுத்தியுள்ள ஆகப்பெரிய தாக்கம்.

ஆயா சுட்ட தோசையே நல்லாயிருந்துச்சி-னு காக்கா முட்டைகள் உணர்ந்து கொண்டது போல விளம்பரங்கள் மூலம் நம்மீது எதையும் திணித்துவிடக் கூடிய அளவில் நாம் பலவீனப்பட்டுள்ளோம் என்பதை நாம் உணர வேண்டிய தருணமிது. அப்படி உணராமல் இருக்கும் பொருட்டு, ஈமுக் கோழி, மேகி நூடுல்ஸ், சென்னை அமிர்தா, புரட்சி பேசும் கல்யாண் நகைக்கடை என நம்மை சுரண்ட நிறுவனங்கள் தயாராகவே இருக்கின்றன. இவ்வளவு ஏன், கண்கவர் விளம்பரங்கள் மூலம் மட்டுமே ஆட்சியைப் பிடிக்க முடிந்த நாட்டில் தானே நாம் இருக்கிறோம்.

உலகமயமாக்கல் சூழல் என்பது தவிர்க்கவே முடியாமல் நம்முடைய அன்றாட வாழ்வில் கலந்துவிட்ட இன்றைய நிலையில் நாம் நம்முடைய வேர்களைத் தக்க வைக்க உறுதியாகப் போராட வேண்டும் என்று அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது ” காக்கா முட்டை”.

கதிரவன்
இளந்தமிழகம் இயக்கம்

About கதிரவன்

2 comments

  1. வசுமதி

    நல்ல பதிவு. உலக மயமாதலை யாரும் தடுக்க முடியாது ஆனால் அரசு மக்களை தயார் படுத்தியிருக்க வேண்டும்.

  2. Good political review of Kaaka muttai

    Kathiravanukku vaazhthugal

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*