Home / ஈழம் / இலங்கை புறக்கணிப்பு / தமிழர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட காணி  ஆடம்பர சுற்றுலா விடுதிகளாக மாற்றப்பட்டுள்ளது

தமிழர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட காணி  ஆடம்பர சுற்றுலா விடுதிகளாக மாற்றப்பட்டுள்ளது

 

The Oakland Institute  என்ற  சுதந்திரமான சிந்தனை அமைப்பு  இலங்கை பற்றிய ஒரு கட்டுரையை அண்மையில் வெளியிட்டுள்ளது.  அதன் தலைப்பு  சிந்தனை மையம் வடக்கிலும் கிழக்கிலும் நடக்கும் ஒடுக்குமுறையை சிறிலங்கா மறுப்பதை கடுமையாகக் கண்டிக்கிறது (Think Tank Slams Sri Lanka’s denial of on going oppression in  North and East) என்பதாகும். அதனை ரொறன்ரோ ஸ்ரார் (Toronto Star) நாளேடு   தமிழர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட காணி  ஆடம்பர சுற்றுலா விடுதிகளாக மாற்றப்பட்டுள்ளது” எனத்  தலைப்பிட்டு மறு பிரசுரம் செய்ததோடு கட்டுரையில் காணப்பட்ட குற்றச்சாட்டுக்கள் பற்றி  ஒட்டாவாவில் உள்ள சிறிலங்கா தூதரகத்தின் பதில்   தூதுவர்  மாண்புமிகு வருண வில்பத்த அவர்களை நேர்காணல் கண்டு அவரது மறுப்பையும் வெளியிட்டுள்ளது.

 

இது தொடர்பாக தமிழ்ப் படைப்பாளிகள் கழகத் தலைவர் திரு வே. தங்கவேலு ஒரு கடிதத்தை சிறிலங்கா தூதுவருக்கு அனுப்பி வைத்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

 

நீங்கள் ரொறன்ரோ ஸ்ரார் நாளேட்டில் வெளிவந்த “தமிழர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட காணி  ஆடம்பர சுற்றுலா விடுதிகளாக மாற்றப்பட்டுள்ளது”  என்ற செய்தி அடிப்படையற்றது,  உறுதிப்படுத்தப்படாதது என மறுத்துள்ளீர்கள்.

 

மேலும் நீங்கள் வடக்கில் 20,000 ஏக்கர் காணியை விடுவித்திருப்பதாகக் கூறுகிறீர்கள். ஆனால் இடம்பெயர்ந்த  தமிழ் மக்களுக்குச் சொந்தமான  இன்னும் பல ஆயிரம் ஏக்கர் காணி விடுவிக்கப்படாது இருக்கின்றன. இதைவிட மோசமான காரியம் என்னவென்றால் அரசு தொடர்ந்து “இராணுவ தேவைகளுக்கு” ஆக தனியார் காணிகளைக்  கைப்பற்றி வருகிறது.  மீள்குடியமர்த்தப் படுவதற்கு கண்ணிவெடிகள் அகற்றப்படவில்லை என இராணுவம் சொல்கிறது. ஆனால் அது உண்மையான  காரணமல்ல.

 

கடந்த மார்ச்சு   25 இல் சனாதிபதி மைத்திரிபால சிறிசேனா, பிரதமர் இரணில் விக்கிரமசிங்கி மற்றும் முன்னாள் சானதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க  குமாரதுங்கா ஆகியோர் வலிகாமம் வடக்குக்கு நேரில் சென்று  425 ஏக்கர் காணிகளுக்கான உறுதிகளை  உரிமையாளர்களிடம் கையளித்தார்கள்.  இந்த 425 ஏக்கர் காணி,  2013 இல் இராணுவம்  1964 ஆம் ஆண்டு  காணி சுவீகரிப்புச்  சட்ட எண்  28 இன் கீழ் கைப்பற்றிய   8,382 ஏக்கர் காணியின் ஒரு பகுதியாகும்.

 

அதன் பின்னர் பல கிராம சேவர்கள் பிரிவுகளை உள்ளடக்கிய 608 ஏக்கர் காணி மீள்கையளிக்கப்பட்டது. எனவே எஞ்சிய 5,349 ஏக்கர் காணி இன்னமும் விடுவிக்கப்படவில்லை. இதில் மாவட்டபுரம், மயிலிட்டி, கட்டுவன், தெல்லிப்பளை போன்ற ஊர்கள் அடங்குகின்றன. இராணுவம் தொடர்ந்து இத்தாவில், முகமாலை, நாகர்கோயில், பலாலி மற்றும் அரியாலையில் சில பகுதிகளை ஆக்கிரமித்து நிற்கிறது.

முல்லைத் தீவு மாவட்டம் கொக்கிளாய் கிராமத்தில்  தமிழர்களுக்கு சொந்தமான காணிகளில் ஒரு புத்த கோயில் கட்டப்படுகிறது.  அந்த இடத்துக்கு வட மாகாண சபை ரி. இரவிகரன் போனபோது 20 க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் அந்தப்  கோயிலைக் கட்டும் பணியில் ஈடுபட்டிருப்பதைக் கண்டார்.

unnamed (2)

கடந்த மார்ச் மாதம்வரை வலிகாம்ம் வடக்கில்  இடம்பெயர்ந்த மக்கள் தமிழ் தங்கள் காணிகளில் மீள்குடியேற அனுமதி வழங்கப்படவில்லை. இது அவர்களது அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகும்.  இந்த மக்கள் கடந்த 25 ஆண்டுகளாக இடம்பெயர்ந்து வாழ்கிறார்கள்.  கடந்த காலத்தில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள்  தமிழ்மக்கள் காட்டிய எதிர்ப்பைக் குறைக்க   அவர்களை பொருளாதார அடிப்படையில் பலவீனப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளன.

1990 இல் இராணுவம் மேற்கொண்ட படை நடவடிக்கையை அடுத்து  8,382 ஏக்கர் காணியை ஆக்கிரமித்துக் கொண்டது. இதனால் சுமார் 10,000 குடும்பங்களைச் சேர்ந்த 29,000 பேர் உள்ளக இடப்பெயர்வுக்கு ஆளானார்கள். இவர்கள்  கடந்த 25 ஆண்டுகளாக நலன்புரி மையங்களிலும் தற்காலிக குடிசைகளிலும்  வாழ்ந்து வருகிறார்கள். வாழ்ந்து வருகிறார்கள் என்று சொல்வதற்குப் பதில் வறுமையிலும் ஏழ்மையிலும் உழன்று வருகிறார்கள் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.

இப்படி இராணுவம் அபகரித்த காணிகளில் காணப்பட்ட வீடுகள், பள்ளிக்கூடங்கள், தேவாலயங்கள், கோயில்கள் மற்றும் மருத்துவமனைகள் ஆகியவற்றை இராணுவம் இடித்துத்தள்ளிவிட்டது. இடித்துவிட்டு அங்கே இராணுவ குடியிருப்புக்கள், நலவாழ்வு விடுதிகள், ஆடம்பர ஹோட்டல்கள், உணவகங்கள், விளையாட்டு மைதானங்கள், நீச்சல் தடாகங்கள், மாளிகைகள், புத்த கோயில்கள், போர் நினைவுத் தூபிகள் போன்றவற்றை கட்டியுள்ளது.

காணிகள் அதன் சொந்தக்காரர்களிடம் மீள்கையளிக்கப்படுவதை இராணுவம் தடுக்கிறது என்பது கண்கூடாகத் தெரிகிறது.  ஆயிரக்கணக்கான ஏக்கர்  காணிகளில் இராணுவத்தினர் விவசாயம்,  கால்நடை வளர்ப்பு, தோட்டம் செய்கின்றனர். அதில் விளையும் பொருட்களை காணிச் சொந்தக்காரர்களுக்கே விற்கிறார்கள்!  இதனால் இராணுவம் அந்தக் காணிகளை தன்னலம் காரணமாக  விடமுடியாத நிலையில் உள்ளது.

 

1983 க்கு முன்னர் வலிகாமம் வடக்குப் பிரிவில் 83,619 பேர்  கொண்ட  25,351 குடும்பங்கள் வாழ்ந்தன. இவர்கள் எல்லோரும் தமிழர்கள் ஆவர்.  இவர்களில் 60 விழுக்காட்டினர் தோட்டக்காரர்கள். மேலும் ஒரு 30 விழுக்காட்டினர் மீனவர்கள். எஞ்சியவர்கள் அரச  உத்தியோகத்தவர்கள் மற்றும்  சிறுதொழில் அதிபர்கள்.

 

இராணுவம் முகாம்களில் இருந்து  முன்னேறியபோது மக்களுக்கு  முன்னறிவித்தல் எதுவும் கொடுக்கப்படவில்லை. மக்கள் ஆச்சரியப்பட்டுப் போனார்கள்.  இராணுவம் பார ஊர்திகளைப் பயன்படுத்தி தங்களுக்குத் தேவைப்பட்ட வீடுகளைத் தவிர்த்து ஏனைய வீடுகளை இடித்துத் தள்ளியது. பாதுகாப்புவேலி மற்றும் பதுங்கு குழிகளை அமைத்தார்கள். பின்னர் நெருக்கமான குடியிருப்புக்களை ஊடறுத்து புதிய பாதைகளைத் திறந்தார்கள். வலிகாமம் வடக்குப் பிரிவு ஓரளவு பொருளாதாரத்தில் மேம்பட்டு  இருந்ததால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் சொந்தமாக வீடு இருந்தது. அது அவர்கள் உழைத்துக் கட்டிய வீடு. அந்த வீடுகளில் 75 விழுக்காடு வீடுகள் சிமெந்தாலும்    சாந்தாலும் கட்டப்பட்டவை.

 

மே 2009 இல் போர் முடிவுக்கு வந்தாலும் இராணுவம் தொடர்ந்து தமிழ்மக்களுக்கு சொந்தமான காணிகளை அபகரித்து வந்தது.

 

682 படையணி முகாமிட்டிருக்கும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு முன்னால் உள்ள 19 ஏக்கர் காணியில் செல்லம்மாவுக்குச் சொந்தமாக ஒரு ஏக்கர் காணி உள்ளது. அந்தக் காணியில் 4 வீடுகளும் கடை ஒன்றும் உள்ளன. 2011ஆம் ஆண்டு சொந்த இடத்தில் குடியேற்றுவதாக அறிவித்ததால், இறுதிக் காலத்தில் சொந்த வீட்டில் வாழலாம் என்ற கனவுடன் வந்த அவருக்கு சிறிலங்கா  இராணுவத்தினர் வீடுதர மறுத்து விட்டனர். “பிரபாகரன் இந்த இடத்தில இருந்தா வீட வந்து கேட்பியலோ? உங்களுக்கு வீடு தர ஏலாது, காணி தர ஏலாது. எங்கயாவது போங்கோ” என்று இராணுவ அதிகாரி ஒருவர்  சொன்னதாக செல்லம்மா கூறுகிறார். இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டிருக்கும் காணி இருக்கும் இடத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தொலைவில் 8,000 ரூபா வாடகைக்கு மகள்மார், மருமகனுடன் செல்லம்மா வாழ்ந்து வருகிறார். அடிக்கடி காணியை மீட்பதற்கான போராட்டங்களிலும் இராணுவ முகாமுக்குச் சென்றும் பேசி வந்திருக்கிறார்.

unnamed (1)

ஒரு நாள் அந்த இடத்தை அளக்க நிலவளவாளர்கள் போயிருக்கிறார்கள். ஊர் மக்கள்  சேர்ந்து அளக்க விடாமல்  மறியல் போராட்டம் நடத்தினார்கள். அந்த இடத்துக்கு மண்ணெண்ணையும் நெருப்பு பெட்டியும் கொண்டு போன செல்லம்மா எதிர்ப்பை  மீறி அந்த  இடத்தை  சுவீகரித்தால்   அவர்களுக்கு முன்னால்  தீக்குளித்துச் சாகத்  தயாராக இருந்தார்.

 

கடந்த ஆண்டு இறுதியில் கணவர், இந்த ஆண்டின் தொடக்கத்தில் மூத்த மகள் என இரு இழப்புக்களைச் சந்தித்து நொந்துபோயிருந்தாலும் மீளவும் காணியைப் பெற்றுக்கொள்ளும் போராட்டத்தில் செல்லம்மாவிடம் கொஞ்சமும் தொய்வைக்  காணமுடியவில்லை. “ஒரு தடவை இராணுவத்திட்ட கேட்டு அவர் வீட்ட போய் பார்த்திட்டு வந்தவர். வந்து 9 நாள்ல இறந்திட்டார். அங்க போய் என்னத்த பார்த்தாரோ தெரியல்ல. ஏக்கத்தோடதான் இருந்தவர். சாக முதல்ல, செத்தா அந்த வீட்ல தன்ன வைக்கச் சொல்லி அடிக்கடி சொல்லுவார்” என்றார்.

 

“இவர் இறந்து ஒன்றரை மாதத்துக்குப் பிறகு என்ட மூத்த மகளும் கிட்னி பழுதாகி  இறந்தவிட்டா. அவட சடலத்தை  எடுத்தன்டு பொலிஸ் கோர்ட் ஓடர் ஒன்ட எடுத்து வந்து காட்டினவ. காணிக்கு போகவேண்டுமென்டு எந்தவித போராட்டமும் செய்யாமல் காரியங்கள் செய்ய வேண்டுமாம். எங்கட சொந்த வீட்ட சடலத்தை வைக்க முடியாம கோர்ட் ஓடர் எடுக்கினம்”  என செல்லம்மா கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் அழுதார்.

 

இப்படியான சோகக் கதைகள் ஆயிரக் கணக்கில் உள்ளன.  ஆட்சி மாறினாலும் அதிகாரிகள் மாறவில்லை.  மக்கள் தொடர்ந்து வறுமையிலும் ஏழ்மையிலும் உழல்கிறார்கள்.

 

எனவே வடக்கில் வசந்தம் வீசுகிறது எனக் காட்டுவது உண்மைக்கு மாறானது.  நிலைமை அப்படியல்ல. நல்லாட்சி நடக்கும் என்று உறுதிபடச் சொல்லும் கொழும்பு அரசு  பதில் தூதுவரது  மறுப்புக்களை ஏற்றுக் கொள்ளாது.

 

சனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் அரசு தமிழ் மக்களுக்கு மே 2009 க்கு முன்னரும் பின்னரும் இழைத்த பிழைகளை கழைய உண்மையிலேயே சிரத்தையாக உள்ளது. ஆனால் அவரது முயற்சிக்கு இராணுவம் ஆதரவு தர மறுக்கிறது.  அதுதான் இன்றைய யதார்த்தமாகும்.

 

அரசு தமிழர்களது உரிமைகளைத் தொடர்ந்து மறுத்தால்  மனித உரிமை அமைப்புக்களும் அரச சார்பற்ற அமைப்புகளும்   குற்றம் சுமத்தவே செய்வார்கள்.

கனடாவைப் போல்  நாட்டின் குடிமக்கள்  எல்லோரும் ஓர் விலை, எல்லோரும்  மன்னர்கள் என   ஒப்புரவோடும் ஒத்த உரிமையோடும்  அரசு நடத்த வேண்டும். நடத்தத் தவறிளால் சிறிலங்காவில்  நிரந்தர சமாதானமோ மீள் நல்லிணக்கமோ  ஏற்பட  அடியோடு வாய்ப்பில்லை.

—தமிழ் படைப்பாளிகள் கழகம்

About சிறப்பு கட்டுரையாளர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*