Home / அரசியல் / சுஷ்மா சுவராஜ் – லலித் மோடி சிக்கலும், இந்திய அரசும்

சுஷ்மா சுவராஜ் – லலித் மோடி சிக்கலும், இந்திய அரசும்

ஐ.பி.எல்.கிரிக்கெட் போட்டியில் பலநூறு கோடிகள் ஊழல் முறைகேட்டில் ஈடுபட்ட வழக்கில் இருந்து தப்பிக்க லலித் மோடி கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவிலிருந்து வெளியேறி லண்டனில் உல்லாசமாக வாழ்ந்து வ‌ருகின்றார். அவரை தேடப்படும் குற்றவாளி என இந்தியா அறிவித்துள்ளது.

இந்நிலையில் போர்ச்சுக்கல் நாட்டில் சிகிச்சை பெற்று வரும் தன் மனைவியைப் பார்ப்பதற்குச் செல்ல இங்கிலாந்து அரசிடம் அனுமதி கேட்கிறார் லலித் மோடி. இந்தியாவால் தேடப்படும் குற்றவாளி என்பதால் அனுமதி வழங்குவதில் சிக்கல் எழுகிறது.

அதன்பின் “லலித் மோடிக்கு விசா உட்பட பயண ஆவணங்கள் வழங்க இங்கிலாந்து குடியேற்ற துறைக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நெருக்கடி கொடுத்தார். நானும் பரிந்துரை செய்தேன்” என்று இந்திய வம்சாவளி இங்கிலாந்து எம்.பி. கீத் வாஸ் கூறியுள்ளார்.

இது குறித்து விளக்கமளித்துள்ள சுஷ்மா சுவராஜ், “லலித் மோடியின் மனைவிக்கு புற்று நோய். மனிதாபிமான அடிப்படையில் நான் பரிந்துரை செய்தேன்” என்று கூறியுள்ளார்.

sushma-swaraj-lalit-modi-pti-650_650x400_41434289410

ஒரு ஊழல் வழக்கில் தேடப்படும் குற்றவாளிக்கு ஆதரவாக செயல்பட்டதற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பதவி விலக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட அனைவரும் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் ஆளும் பா.ச.க.வும், ஆர்.எஸ்.எஸ்.சும் சுஷ்மா சுவராஜிற்கு ஆதரவாக இது அவரது தனிப்பட்ட முடிவல்ல, இந்திய அரசின் நிலைப்பாடே இதுதான் என அறிக்கை விட்டு அவரை பாதுகாத்து வருகின்றன.

நமது கேள்வியெல்லாம் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் உயிருக்கு போராடும் நிலையில் விசா வழங்காமல் திருப்பி அனுப்பியதே இந்திய அரசு அப்போது ஏன் மனிதநேயம் பார்க்கவில்லை? அரசியலாக மட்டும் ஏன் பார்த்தது?

விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகர் ஆன்றன் பாலசிங்கம் மேல்சிகிச்சைக்கு இந்தியா வர அனுமதி கோரினாரே… அப்போது எங்கே போனது அதன் மனித நேயம்?

பத்தாண்டுகள் செய்யாத குற்றத்திற்காக கோவைச் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் நிரபராதி என்று விடுதலையான அப்துல் நாசர் மதானி, மீண்டும் ஒரு பொய் வழக்கில் பெங்களூரு சிறையில் உடல் நிலை முடியாத நிலையில் பிணை கேட்டபோது ஏங்கே உங்கள் மாந்த நேயம்? இன்றும் கூட 90% உடல் செயலற்ற நிலையில் இருக்கும் பேராசிரியர்.சாய் பாபா அவர்களுக்கு மருத்துவம் செய்யக்கூட அனுமதியளிக்காமல், சித்ரவதை செய்யும் “அண்டா சிறையில்” அடைத்து கொடுமைப்படுத்தி வருகின்றது இதே மத்திய அரசு. இப்படி எத்தனை ஆயிரம் அரசியல் கைதுகள், வாதாட வழியில்லாத ஏழைகள், ஒடுக்கப்பட்டோர், சிறுபான்மையினர், அப்பாவிகள், இந்திய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளார்கள்… இவர்கள் மேலெல்லாம் இந்திய அரசின் மனித நேயம் ஏனோ திரும்புவதேயில்லை?

24 ஆண்டுகள் கொடுஞ்சிறைப்பிடியில் வாடுகிறார்களே பேரறிவாளன் உட்பட எழுவர், அவர்களை விடுவிக்க உச்ச நீதிமன்றமும், தமிழக அரசும் ஆணை பிறப்பித்த பின்னும் இந்திய அரசு தடை கோரி நிறுத்தியுள்ளதே. இதற்கெல்லாம் உங்கள் மனித நேய அகராதியில் இடம் கிடைக்காதா?

இடம் கிடைக்காது. ஏனென்றால் இவர்களெல்லாம் லலித் மோடி போன்று பல நூறு கோடி ஊழல் செய்து “மாட்டி”, வெளிநாட்டுக்குத் தப்பியோடிய கோடீஸ்வரர்கள் இல்லையே.

இந்தியாவை உள்நாட்டு, வெளிநாட்டு முதலாளிகளுக்கு கூவி கூவி விற்கும் பா.ச.க.வும் அதன் தாய் அமைப்பு ஆர்.எஸ்.எஸ்.சும் சுஷ்மா சுவராஜ்ஜை காப்பாற்ற முனைவதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஆனால் காங்கிரஸ் அவரை காப்பாற்றாமல் எதிர்ப்பது போல் நடிப்பதுதான் நகைமுரண். எல்லோருக்கும் மனித நேயம் காட்டாமல் ஊழல்வாத பெரும்பணக்காரர்களுக்கு மட்டும் மனித நேயம் காட்டுவதில் காங்கிரஸ், தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் ஆட்சியில் இருந்த போது எல்லோரும் பா.ச.க., ஆர்.எஸ்.எஸ்.க்கு சளைத்தவர்கள் அல்லர் என்பதே வரலாறு நமக்கு கற்றுக்கொடுத்த பாடம்.

FB_IMG_1434106910362 (1)

ஊழலில் சிக்கியவர்களுக்கு ஆதரவான செயல்பாடு, பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாக தொழிலாளர் நல சட்டங்கள் தளர்வு, பெருமுதலாளிகளுக்கு பல்லாயிரம் கோடி மானியம், நடுத்தட்டு மக்களுக்கு பெட்ரோல்-டீசல்- சமையல் எரிவாயு-ரேஷன் மானியங்கள் ரத்துசெய்ய நடவடிக்கை, பெட்ரோல்-டீசல் விலையை பன்னாட்டு விலையைவிட பலமடங்கு இலாபத்தில் விற்க அனுமதி, விலைவாசி உயர்வு, விவசாயத்தை அழித்து தொழில் “வளர்ச்சி” “மேக் இன் இந்தியா” என பன்னாட்டு பெருமுதலாளிகளுக்காக நில அபகறிப்புச் சட்டம், மாநிலங்களைவில் நிறைவேறாத போது அவசர (யாருக்கு அவசரம்?) சட்டம், நகரத்திலும் கிராமத்திலும் பெருகும் வேலை வாய்ப்பின்மை, அறிவியலுக்கு புறம்பான இந்துத்துவ அடிப்படைவாத கல்வி திணிப்பு, இவற்றையெல்லாம் மடைமாற்ற தங்கள் எசமானர்களான நோக்கியா, ரிலையன்ஸ் போன்ற பன்னாட்டு முதலாளிகள் விரைவில் பல இலட்சம் கோடிகள் இலாபத்தைப் பெருக்கி மக்கள் போராடுமுன் அந்த இடத்தைவிட்டு வெளியேற நாள்தோறும் பா.ச.க. எம்.பி.க்களாலும் ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி அமைப்புகளாலும் பரப்பப்படும் மதவெறி – சாதிவெறி பேச்சுக்கள், வன்முறைகள், கருத்துரிமை கழுத்தறுப்பு என இவைகள் தான் பா.ச.க.வின் ஓராண்டு சாதனையாக இருக்கின்றன.

முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசின் தோல்வியடைந்த, மக்களை பாதாளத்தில் தள்ளிய உலகமய பொருளியல் கொள்கைக்கு மாற்றாக பெருமுதலாளிகள் ஊடகங்கள் மூலமாக காட்டிய மற்றுமொரு சோளக்காட்டு பொம்மைதான் மோடி (என்ன மன்மோகனுக்கு செல்ஃபி எடுக்க பயிற்சி கொடுக்கப்படவில்லை, அவ்வளவுதான்). மோடியை வைத்து பா.ச.க. காட்டும் வித்தையெல்லாம்…

பாம்பும் சாகக் கூடாது, கம்பும் உடையக் கூடாது. என்பது தான்.

எங்களின் ஓராண்டு கால ஆட்சியில் ஊழலை எதிர்கட்சியினால் கூட சுட்டிக்காட்ட முடியாது என முழங்கிய மோடியும், பா.ச.க-வினரும் ஜெயலலிதாவை விடுவித்து வாழ்த்து கூறினர். இன்று ஊழல்வாதி லலித் மோடியை தப்பிக்க வைக்க முயற்சி செய்யும் சுஷ்மாவையும் பாதுகாக்கின்ற‌னர், இதைத் தான் “பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன்” என்பார்கள். இது புனிதமான, கறைபடியா தாமரையல்ல….கறைபடித்து, அழுக்கேறிய தூக்கியெறியப்பட வேண்டிய‌ தாமரை.

– வினோத் களிகை.

About வினோத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*