Home / அரசியல் / மோடி – சொன்னதும், செய்ததும்! – 1

மோடி – சொன்னதும், செய்ததும்! – 1

2014 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய சனதா அரசு பொறுப்பேற்று 26 மே,2015 உடன் ஓராண்டு நிறைவுறுகிறது. வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடும் அனைத்து கட்சிகளுமே தங்களுடைய பலம், பலவீனங்களை மறைத்து, முந்தைய ஆட்சியின் மீது கூறும் குறைகளை நம்பியே தேர்தல்களைச் சந்திப்பதுதான் இன்றைய வழமையாக இருக்கிறது.

 

கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியை விமர்சித்து, கொள்கை முடிவுகள் எடுக்கப்படாமல் முடங்கி உள்ளது; அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் சுயமாக இயங்க காங்கிரசு கட்சி விடுவதில்லை, அதனால் நாடு அடைய வேண்டிய வளர்ச்சியை எட்டாமல் பின்தங்கியுள்ளது. வளர்ச்சியில் பின்தங்கியிருக்கும் இந்த நிலையில் இருந்து நாட்டை மீட்க ஒரே ஒருவரால்தான் முடியும். அவர்தான் திரு. நரேந்திர மோடி. அவரது ஆட்சியின் கீழ் குஜராத் சிறந்த மாநிலமாக இருந்து வருகிறது என்று பரப்புரை செய்தனர் மோடியும், பாரதிய சனதா கட்சியும்.

 

மோடியால் தான் இந்தியாவை காப்பாற்ற முடியும், அவரால் மட்டுமே நமக்கான வளர்ச்சியைக் கொண்டு வர இயலும் என பாரதீய சனதா கட்சியும், கார்ப்பரேட் ஊடகங்களும் தொடர்ந்து மக்கள் மனதில் பதிய வைத்தன.

 

பிரதமர் மோடியும் தன்னுடைய தேர்தல் பரப்புரைகளில் எல்லாம், காங்கிரசு கட்சியை விளாசித் தள்ளி தம்மால் மட்டுமே இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல இயலும். எங்களுக்கு வாக்களியுங்கள் ” நல்ல காலம் வருகிறது (அச்சே தின்)” என்று நாட்டையே சுற்றி வந்தார்.

 

பாரதீய சனதா கட்சியின் தேர்தல் அறிக்கையும் கூட, “இது மாற்றத்திற்கான நேரம்; இது மோடிக்கான நேரம்” என மோடி எனும் தனிநபரையே முன்னிறுத்தியது.

 

மோடியை முன்னிறுத்தி, பாரதீய சனதா கட்சி அதனுடைய உட்கட்சி சிக்கல்களை எல்லாம் இழுத்துப் பிடித்து வேலை பார்த்து, கார்ப்பரேட் ஊடகங்கள் அனைத்தும் சாதகமான கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு, வளர்ச்சி முழக்கத்தை முன்வைத்து வெற்றி பெற்றது மோடி தலைமயிலான பா.ச.க.

 

மக்களவையில் 281 இடங்கள் பெற்று பெரும்பான்மை பெற்றாலும், மொத்தம் பதிவான வாக்குகளில் வெறும் 31% மட்டுமே பெற்றது பா.ச.க. 1967-ல் காங்கிரசு கட்சி பெற்ற 40.8% வாக்குகள்தான் இதற்கு முன்னர் தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சிக்கு வந்த கட்சி பெற்ற குறைவான வாக்குகள்.

 

வளர்ச்சி முழக்கத்தை முன்வைத்து வெற்றி பெற்ற மோடி, தாம் முன்வைத்த பரப்புரைகளுக்கு ஏற்ப வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்கிறாரா?, அதற்காக அவர் கொண்டுவந்த திட்டங்களும், சட்டங்களும் என்னென்ன?, அதனால் கிடைத்த பயன்கள் மக்களை சென்றடைந்ததா? என்று புரிந்து கொள்வதற்காகவே இந்தக் கட்டுரைத் தொடர்.

 

கடந்த ஓராண்டில் கொண்டு வரப்பட்ட, சமூக நலத் திட்டங்களைப் பற்றி முதலில் பார்ப்போம்.

 

“தூய்மை இந்தியா ” திட்டம் (SWACH BHARAT):

 

    கடந்த ஆண்டு மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2 ஆம் தேதி ” தூய்மை இந்தியா” திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. இது பற்றி அவருடைய வலைதளத்தில், ” தூய்மையான இந்தியாவை உருவாக்குவது தான் மகாத்மா காந்திக்கு நாம் செலுத்தும் நன்றி எனவும் , நாம் ஒவ்வொருவரும் நமது வீட்டை, அலுவலகத்தை, சுற்றுப்புறத்தை, கிராமத்தை என அனைத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்” என்று கூறியிருந்தார்.

 

கையில் துடைப்பத்துடன் பிரதமர் மோடியே சுத்தம் செய்ய தெருவுக்கு வந்தது ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் முக்கிய இடம் பிடித்தது. இதனைத் தொடர்ந்து பாரதீய சனதா கட்சியின் முக்கியத் தலைவர்கள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் என பல்வேறு துறையினரும் துடைப்பத்துடன் தெருவுக்கு வர இந்தியாவே சுத்தமாகிவிடுமோ என்கிற எண்ணம் ஏற்படுத்தப்பட்டது.

 

ஆனால், இரண்டு முக்கியமான விடயங்களை நாம் இங்கு கருத்தில் கொள்ள வேண்டும். ஒன்று, பிரதமர் மோடி கூறியது போல், நாம் அனைவரும் துடைப்பத்தை எடுத்துக் கொண்டு தெருவில் இறங்கி சுத்தம் செய்தால் இந்த நாடு சுத்தம் ஆகிவிடுமா? என்கிற கேள்வி எழுகிறது.

 

மற்றொன்று, சுத்தமான, உயர்மட்ட வேலைகள் அனைத்தும் இந்துக்களுக்கு எனவும், பிற தூய்மையற்ற, கழிவுகள் அகற்றும் பணிகள் எல்லாம் தீண்டப்படாதவர்களுக்கு என்று ஒதுக்குவதே இந்து மதத்தின் சமூக ஒழுங்காக உள்ளது.

modi-broom

அப்படியிருக்கும் போது, நாம் அனைவரும் தெருவுக்கு வந்து சுத்தம் செய்தாலொழிய நாடு சுத்தமடையாது என்று பரப்புரை செய்வது என்பது,  நம் நாட்டில் துப்புரவு பணிகளைச் செய்து வரும் கோடிக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்களின் உழைப்பைப் புறக்கணிக்கும் செயலாகவே உள்ளது.

 

உதாரணமாக, தில்லியில் மட்டும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் குப்பை பொறுக்கும் பணியில் ஈடுபடுவதாகவும், குப்பைகள் பொறுக்குவது முதல் அவற்றைத் தரம் பிரிப்பது என கழிவுகள் அகற்றுவதில் இந்த சிறுவர்களின் பங்கு அளப்பரியது என்று செய்தி வெளியிட்டது இந்துஸ்தான் டைம்ஸ்.

 

“தூய்மை இந்தியா” திட்டம் பற்றி ஊடகங்களில் வெளியான செய்திகளையும், அரசியல்வாதிகளும், பிரபலங்களும் சுத்தம் செய்யும் புகைப்படங்களையும் பற்றி டில்லியின் நகர்ப்புறத்தில் குப்பை எடுக்கும் சஞ்சய் என்னும் சிறுவன், ” இங்கு சுத்தம் செய்யுமாறு துடைப்பத்தை வைத்துக் கொண்டு நிற்பவர்களின் வீட்டில் இருந்து நாங்கள்தான் குப்பைகளை எடுத்து வருகிறோம். இது எங்களுடைய அன்றாடப் பணி.

இதில் பெரிதுபடுத்த எதுவும் இருப்பதாக தெரியவில்லை” என்று இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழில் தெரிவித்திருந்தான்.

 

குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்த போது, 2007 ஆம் ஆண்டு “நிர்மல் குஜராத்” எனும் திட்டத்தைத் தொடங்கினார். அந்தத் திட்டத்தின் இந்திய அளவிலான வடிவம்தான், “தூய்மை இந்தியா” திட்டம்.

 

ஆனால், கடந்த 2007 ஆம் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தால், குஜராத்தின் கழிவுகள் மேலாண்மையிலோ, சுற்றுப்புறச் சூழலிலோ எந்த மாற்றமும் வரவில்லை என்பதை இந்திய அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அறிக்கை உறுதி செய்கிறது. 2009, 2011, 2013 ஆகிய ஆண்டுகளில் மாசுக் கட்டுப்பட்டு வாரியம் நடத்திய ஆய்வில், குஜராத்தின் வாபி, அங்கலேஷ்வர் தொழிற்சாலை பகுதிகள் இந்திய அளவில் மிகவும் மாசடைந்த பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

 

ஆகவே, மின்னணுக் கழிவுகளும், தொழிற்சாலைக் கழிவுகளும் அன்றாடம் அதிகரித்துக் கொண்டிருக்கும் ஒரு நாட்டில் துடைப்பம் எடுத்துக் கொண்டு தெருவில் இறங்கினாலோ, வீடுகளில் கழிப்பறையை வற்புறுத்தி தரும் விளம்பரகளினாலோ சுகாதாரத்தை கொண்டு வந்து விடமுடியும் என்பது போகாத ஊருக்கு வழி தேடுவதுதான்.

 

முத்ரா வங்கி (MUDRA)

 

2015-16 ஆம் ஆண்டுக்கான நாட்டின் நிதிநிலை அறிக்கை, சிறிய மற்றும் குறுந்தொழில்களின் முன்னேற்றத்திற்காக 20000 கோடி ரூபாய் அளவிலான நிதி ஒதுக்கீடு கொண்டு முத்ரா (MUDRA – Micro Units Development and Refinance Agency) வங்கியை அறிமுகம் செய்தது.

 

இதுவரை நிதி சென்றடைய வழிவகையில்லாத 96 விழுக்காடு சிறிய, குறு தொழில் வளர்ச்சிக்கு உதவும் பொருட்டே இந்த வங்கி தொடங்கப்பட்டு இருப்பதாக அரசும், ஊடகங்களும் தெரிவிக்கின்றன.

 

ஆயத்த ஆடை வர்த்தகத்தில் கோலோச்சியிருந்த பானிபட் நகரத்தில், முத்ரா வங்கியின் திட்டம் பற்றின் எந்த ஒரு வியாபாரியும் அறிந்திருக்க வில்லை என்று ப்ரண்ட்லைன் வார இதழில் வெளியான கட்டுரை குறிப்பிடுகிறது.

pm_mudra

ஆனால், இந்த முத்ரா வங்கி என்பது கடந்த காலங்களில் சிறிய, நடுத்தர அளவிலான தொழில்களின் வளர்ச்சிக்காக தொடங்கப்பட்ட வங்கிகளையே நமக்கு நினைவூட்டுகின்றன. இந்தியாவில் சிறிய தொழில்களின் வளர்சிக்கான வங்கி (SIDBI -Small Industries Development Bank of India ), தேசிய வீட்டுவசதி வங்கி (National Housing Bank), தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி (NABARD – National Bank of Agriculture & Rural Development) ஆகிய வங்கிகள் நடைமுறையில் உள்ளன.

 

மோடி தலைமையிலான பா.ச.க-வின் ஆட்சியின் கணக்குக்கு வேண்டுமானால் முத்ரா வங்கியை சொல்ல முடியுமே தவிர, அது எந்த தொழில் முனைவோருக்கு உதவியாக இருக்கும் என்பதற்கு வருங்காலமே பதில் சொல்லும்.

 

 

பிரதமர் மோடியின் மக்கள் நிதித் திட்டம் ( JAN DHAN YOJANA):

 

பாரதிய சனதா கட்சி வெற்றி பெற்று, மோடி பிரதமராக பதவியேற்ற பின் நம் நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் வங்கி கணக்குகள் இருக்க வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்ட திட்டமே ” ஜன் தன் யோஜனா” எனப்படும் மக்கள் நிதித் திட்டம்.

 

இந்தத் திட்டத்தின் படி, 2015 ஆகஸ்ட் மாதத்திற்குள், இந்தியாவிலுள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு வங்கிக் கணக்கு என்கிற வீதம் தொடங்க திட்டமிடப்பட்டது. இதில் ஒரு வங்கிக் கணக்கு, அதற்கான பணம் எடுக்கும் அட்டை, ரூபாய் ஒரு லட்சம் மதிப்பிற்கான விபத்துக் காப்பீடு, ஆறு மாத காலத்திற்கு தொடர்ந்து பரிவர்த்தனை செய்பவர்களுக்கு ரூபாய் 5000 வரையிலான மிகைப்பற்று(Overdraft) தொகை என என்பதே இந்தத் திட்டத்தின் கூறுகள்.

 1409279516

2015 சனவரி மாதம் வரை நாடு முழுக்க சுமார் 11.5 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.

 

இது குறித்து உத்தர பிரதேச மாநிலம், காசியாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த ராதா என்னும் வீட்டு வேலை செய்யும் பெண் ப்ரண்ட்லைன் இதழிடம், ” வங்கிக் கணக்கை எப்படியாவது தொடங்கிவிட்டால், என்னுடைய கணக்கில் அரசு சார்பில் ஒரு லட்சம் ரூபாய் போடப்படும்” என்று தன்னிடம் கூறியதாலேயே கால் கடுக்க நின்று ஆட்டோ ஓட்டும் தன்னுடைய கணவரின் பெயரில் கணக்கை 2000 ரூபாய் வைப்பு நிதி செலுத்தித் துவங்கியதாகக் கூறினார்.

 

ஆறு மாத காலத்திற்கு சரியான பரிவர்த்தனை தொடர்ச்சியைக் கொண்டுள்ள வங்கி கணக்குகளைக் கொண்டு, ரூபாய் 5000 வரை மிகப் பற்றுத் தொகை பெறலாம் என்பது குறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் திரு,ரகுராம் ராஜன் தெரிவிக்கும் போது, ” இந்திய அரசு வங்கிகளை அபாய நிலைக்கு தள்ளும் வேளையில் இறங்கியுள்ளதாகவும், இந்தத் திட்டத்தினால் இந்திய வங்கித் துறை சுமார் 75000 கோடி ரூபாயை கொடுக்க வேண்டிய நெருக்கடிக்கு உள்ளாகும்” என்று எச்சரித்துள்ளார்.

 

இந்தத் திட்டத்திற்கு முன் இந்திய நாட்டில் உள்ள வங்கி கணக்குகளின் நிலை எண்ண என்று உற்று நோக்கினால், மொத்தம் உள்ள வங்கிக் கணக்குகளில் 50 விழுக்காட்டிற்கும் மேலான வங்கிக் கணக்குகள் பயன்பாட்டில் இல்லாமல், சுழியம் அளவிலான வைப்புத் தொகையையே கொண்டுள்ளன என்று இந்திய சென்சஸ் தெரிவிக்கிறது.

 

கடந்த பத்தாண்டு கால காங்கிரசு ஆட்சியிலேயே, அனைத்து மக்களுக்கும் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட வேண்டும் என்பதன் பொருட்டு உருவாக்கப்பட்ட சி.ரங்கராஜன் தலைமையிலான நிதி சேர்ப்புக்கான ஆணையம் வழங்கிய பரிந்துரைகளின் அடிப்படையைத்தான் மோடியின் ஜன் தன் திட்டமும் கொண்டுள்ளது. இப்போதைய குடியரசுத் தலைவர் திரு.பிரணாப் முகர்ஜி நிதி அமைச்சராக இருந்த போது, ” சுய அபிமான்” எனும் பெயரில் வங்கிக் கணக்குகளுக்காக பரப்புரை மேற்கொண்டு திட்டத்தை செயல்படுத்தத் தொடங்கியது.

 

காங்கிரசுக்கு மாற்றாக தம்மை முன்னிறுத்திய மோடி, தன்னுடைய அரசு கொண்டு வரும் திட்டத்திற்கு காங்கிரசு உருவாக்கிய அடிப்படையை பயன்படுத்துகிறார். அதை முன் மொழிந்த நிதி அமைச்சர் அருண் ஜெட்லி காங்கிரசு உருவாக்கிய முழக்கத்தைக் கொண்டு அறிமுகப்படுத்தியது  காங்கிரசுக்கும், பா.ச.க-வுக்கும் பொருளாதாரக் கொள்கைகளின் அடிப்படையில் எந்த வேற்றுமையும் இல்லை என்பதையே உணர்த்துகின்றன.

 

ஆதார் அட்டை:

 

கடந்த காங்கிரசு ஆட்சியின் போது கொண்டு வரப்பட்டு, பாராளுமன்ற நிலைக் குழுவின் ஒப்புதல் இல்லாமலேயே அமலாக்கப்பட்ட ஆதார் அட்டைத் திட்டம், ஆட்சிகள் மாறியும் காட்சிகள் மாறாமல் இன்று வரை செயல்பாட்டில் உள்ளது.

 

சென்ற மார்ச் மாதம் 16 ஆம் தேதி கூட,  நீதிபதிகள் ஜெ.செலமேஷ்வர், எஸ்.எ. போப்டே, சி.நாகப்பன் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு மக்களுக்கான சமூக நலத் திட்டங்களுக்கு, ஆதார் அட்டையைக் கோரி வற்புறுத்தக் கூடாது எனவும், அவ்வாறு செய்வது 2012 செப்டம்பர் 23-ல் வெளியான உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மீறும் செயல் என்றும் கூறியது.

 

ஆனால், இதுவரை நாட்டில் உள்ள 85 கோடிக்கும் மேலான மக்களுக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டு, அதை எரிவாயு மானியத்துடன் இணைத்தல், வாக்காளர் அட்டையுடன் இணைத்தல் போன்ற வழிகளில் மறைமுகமாக கட்டாயமாக்கி வருகிறது.

 

மானியங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்குத் தான் ஆதார் அட்டை என காங்கிரசு, பா.ச.க -வும் ஒரே பொய்யைத் திரும்ப திரும்பச் சொல்லி வருகின்றன.

 

நாம் பயன்படுத்தும் அலைபேசிக்கு ஏதேனும் வங்கியில் இருந்து வீட்டுக்  கடன் வேண்டுமா என்றோ?, புதிய தள்ளுபடிகள் பற்றி தெரிந்து கொள்ள விருப்பமா என்றோ? அழைப்புகள் வருவது வாடிக்கையாகிவிட்டது. நம்முடைய அலைபேசி என்னை இவர்கள் எவருக்கும் கொடுக்கவில்ல ஆனால், இவர்களுக்கு எப்படி நம்முடைய விபரங்களும், அலைபேசி என்னும் கிடைக்கிறது என்று நமக்கு பலமுறைத் தோன்றியிருக்கும்.

 

புதிதாக அலைபேசி இணைப்பு பெறவோ, இணையத்தில் பொருட்கள் வாங்கவோ கொடுக்கும் விபரங்களை நிறுவனங்கள் விலை கொடுத்து வாங்கிப் பயன்படுத்துகின்றன.

 

இவ்வாறு, தன்னுடைய சொந்த நாட்டு மக்களின் விபரங்களைத் திரட்டி( கைரேகைப் பதிவுகள், கருவிழிப் படலம் உட்பட) அரசே விற்றால் அதுதான் ஆதார் அட்டை திட்டம்.

 

இந்தத் திட்டத்தை அரசின் பல்வேறு திட்டங்களோடு இணைப்பதுடன், இத்தகவல்களை வைத்து வருமானமீட்டும் திட்டமும் இருப்பதாக ஆதார் ஆணையமே உறுதி செய்துள்ளது.

 

ஆயிரம்தான் இருந்தாலும் இந்த ஆதார் அட்டை திட்டத்திற்கு தலைவராக இருந்தவர், இன்போசிஸ் நிறுவனத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான நந்தன் நிலேகனி அல்லவா??

 

நாட்டு மக்களுடைய தகவல்களை வைத்து வருமானமீட்டுவது மட்டுமின்றி, குடிமக்களின் அடிப்படைத் தகவல்களைப் பயன்படுத்தி அரசு மீது விமர்சனம் வைக்கும் சனநாயாக ஆற்றல்களையும், சமூக செயற்பாட்டாளர்களையும் வேவு பார்க்கும் வேலையைச் செய்வதே ஆதாரின் பின்னிருக்கும் உண்மை நோக்கம்.

 

 

எரிவாயு உருளைக்கான மானியம்:

 

நேரடி பணப் பரிமாற்றத்தின் மூலம், எரிவாயும் உருளைக்கான மானியம் தருவதை அரசு செயல்படுத்தி வருகிறது. எரிவாயு உருளைக்கான மானியம் பெற தங்களுடைய ஆதார் அட்டையை எரிவாயு விநியோகிக்கும் நிறுவனத்திடம் பதிவு செய்து கொள்ள வேண்டும் அல்லது வங்கிக் கணக்கை இணைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறி நேரடி பணப் பரிமாற்றத்தை அமலுக்குக் கொண்டு வந்தது தற்போதைய மோடி அரசு.

 

அதாவது, எரிவாயு உருளையின் மொத்த விலையையும் கொடுத்து நாம் சந்தையில் வாங்க வேண்டும். அதற்குப் பிறகு, அரசு தரவேண்டிய மானியத் தொகை நம்முடைய வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

 

இதனால், எரிவாயு உருளையின் விலை சந்தையில் ஏறினாலும், இறங்கினாலும் அரசு தரப்பில் இருந்து கொடுக்கப்படும் மானியத் தொகை மாறாமல் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.

 

நாட்டின் வளர்ச்சிக்கு உங்கள் பங்களிப்பைச் செய்ய எரிவாயு மானியத்தை விட்டுக் கொடுங்கள் என்று கூப்பாடு போடும் மோடி அரசு, படிப்படியாக மானியத் தொகையைக் குறைத்து, இறுதியில் முற்றிலும் ரத்து செய்வதற்கான வழிகளை எளிமைப்படுத்தியுள்ளது நேரடி பணப் பரிமாற்றத் திட்டம்.

11039097_10204366910149047_762643457920641482_n

இவ்வாறு, 1990-களுக்குப் பிறகான 25 ஆண்டுகளில், காங்கிரசும், பா.ச.க-வும் மாறி மாறி ஆட்சி செய்துள்ளன. இந்த 25 ஆண்டுகளில் இந்திய நாட்டில் அமல்படுத்தப்பட்டு வரும் பொருளாதாரக் கொள்கைகளின் வேகம் தற்போதைய மோடி ஆட்சியில் அதிகரித்துள்ளது என்பதே கண்கூடு.

 

இந்த ஓராண்டில் பென்சன் யோஜனா, இன்சூரன்ஸ் யோஜனா என்று எத்தனையோ திட்டங்களை மோடி தலைமையிலான பா.ச.க அரசு அறிவித்துள்ளது. ஆனால், அவை எல்லாம் இதற்கு முன்னர் ஆட்சியில் இருந்தவர்களும் செய்தவையே. வெறும் பெயர்களும், எண்ணிக்கையும் மாறுவதால் மக்களுக்கு நல்ல காலம் வரப் போவதில்லை என்பதுதான் மோடியின் ஓராண்டுத் திட்டங்கள் சொல்லும் சேதி.

 

சொன்னதை செய்தாரா? தொடரும்….

கதிரவன்
இளந்தமிழகம் இயக்கம்

 

About கதிரவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*