Home / அரசியல் / தமிழ் நாடு / கழிவறைகளுக்கு தண்ணீர் இல்லை – உலகத்தரம் வாய்ந்த மெட்ரோ ரயில்?!

கழிவறைகளுக்கு தண்ணீர் இல்லை – உலகத்தரம் வாய்ந்த மெட்ரோ ரயில்?!

‘மெட்ரோ ரயில்’ சென்னைக்கு வந்தது யாரால்?

தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் என்று ஆளாளுக்கு ‘நாங்கதான், நாங்கதான்’ என்று போட்டிபோட்டுக் கொண்டிருக்க, ‘தற்போதைய மத்திய பாஜக தான் கடந்த ஓராண்டில் திட்டத்தை விரைவுபடுத்தி முடித்துக்கொடுத்தது’ என்று களத்தில் குதித்திருக்கிறார் தமிழிசை சவுந்தரராஜன் (அடடா, இது தெரியாமப் போச்சே!).

கலைஞரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் மெட்ரோ ரயில் தொடர்பான தங்களது ஆட்சிக்கால செய்திளை எடுத்துவிட, ரத்தத்தின் ரத்தங்கள் (அதிமுக தொண்டர்கள்) ‘அம்மாதான் திட்டத்தை முடிச்சுவைச்சாங்க, திறந்துவைச்சாங்க’ என்று அலப்பறைகளை அள்ளிவிட, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ‘காங்கிரஸ்தான் ஜப்பானிடமிருந்து கடனை வாங்கி திட்டத்தை நிறைவேற்றிட அனைத்து வகைகளிலும் உதவியது’ என்று அறிக்கைவிட்டார். திறப்புவிழா நடந்த அன்று தமிழ் இணையம் இந்த அக்கப்போர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது.

நம்முடைய மீடியாக்களோ,

உலகத்தரம் வாய்ந்த ரயில் சேவை!

முதல் ஓட்டுனர் ஒரு பெண்!

டிக்கெட் இல்லாமல் யாரும் பயணிக்க முடியாது!

என்று விளம்பரப்படுத்திக்கொண்டும், ரயிலில் எத்தனைபேர் பயணிக்கலாம், நேர அட்டவணை என்ன, ரயிலில் என்னென்ன வசதிகள் இருக்கின்றன என்றும் எழுதிக்கொண்டும் பேசிக்கொண்டும் இருந்தார்கள்.

இன்னொரு பக்கம் ஆலந்தூர் டூ கோயம்பேடு 40ரூ ரொம்ப அதிகம் என்று குரல்கள் எழுந்தபோது, ‘இப்ப ஓடுற ஏசி பஸ்லயே அதே மாதிரி ரேட்தான் அதனால இதெல்லாம் சரியான விலைதான்’ என்று காரில் போகும் ‘ஏழை குடிமக்களும்’ ரத்தத்தின் ரத்தங்களும் விளக்கம் சொல்லிக்கொண்டிருந்தார்கள். (50 -100 பேர் மட்டும் போகக்கூடிய பேருந்தும் ஆயிரம் பேர் பயணிக்கக்கூடிய ரயிலும் ஒன்றா?). ‘பீனிக்ஸ் மால்ல டூ வீலரை நிப்பாட்டுறதுக்கே மணிக்கு 50 ரூ வாங்குறானுங்க, அதனால 40 ரூபாலாம் மேட்டரே இல்லேங்க’ என்று இன்னொருவர் வாதத்தை முன்வைத்தார். ‘ஏசிலாம் போட்டிருக்கு அதனால 40ரூபாயங்கிறது ஓகேதாங்க’ என்கின்றனர் சிலர். முதல்நாள் வசூலாக சுமார் 10லட்சம் ரூபாய்க்கு மேல் கிடைத்திருக்கிறது என்று செய்திகள் கூறுகின்றன. கட்டணத்தைப் பாதியாகக் குறைத்தால் 5லட்சமாகியிருக்கும். இந்த மீதமுள்ள 5லட்ச ரூபாய் ரயிலுக்கு ஒருநாள் ஏசி போட செலவாகுதா என்ன? இந்த ரயில்களில் குளு குளு ஏசி போடுவதற்கு ஒரு நாளைக்கு தோராயமாக எவ்வளவு செலவாகும் என்று விவரம் தெரிந்தவர்கள் சொன்னால் நன்று.  நல்லவேளையாக ‘விமானத்தில் கி.மீ.க்கு சுமார் 5 ரூபாய் ஆகிறது. ஆனால், நம்ம மெட்ரோ ரயிலில் கி.மீ.க்கு சுமார் 3 ரூபாய்தான் ஆகிறது’ என்று எந்த மேதாவியும் கருத்து சொல்லவில்லை!

சரி, நாமளும் இந்த ‘உலகத்தரம்’ வாய்ந்த மெட்ரோ ரயிலை பார்த்துவிடுவோமே என்று முடிவெடுத்து அடுத்த நாள் கிளம்பிவிட்டேன்.

ஒரு முறை மட்டும் செல்ல நாணயம் போன்ற பயணச் சீட்டுகள் (பயண நாணயங்கள்) உள்ளன. அவற்றைத் தருவதற்கென்று தனி இயந்திரங்கள் உள்ளன. அதில் இரண்டு இயந்திரத்தில் ‘சில்லரை இல்லை’ என்று செய்தி வந்துகொண்டிருந்தது. இன்னொன்றில், ஊழியர் ஒருவர் அந்த இயந்திரத்தை எப்படிப் பயன்படுத்துவது என்று விளக்கி, பயணிகளுக்கு டிக்கெட் எடுத்துக் கொடுத்துக்கொண்டிருந்தார். இது தவிர பயண அட்டை கிடைக்கிறது. 50ரூ அட்டை. அதற்குமேல் பயணிக்க ‘டாப் அப்’ என்று பணம் கட்டி, ஆலந்தூர் நிலையத்தின் பயண பகுதிக்குள் நுழைந்தேன். நடைமேடைக்குச் செல்வதற்கு நகரும் படிக்கட்டு, சுமார் 50 அடி உயரத்துக்கு ஒரே வீச்சில் போகிறது. நகரும் படிக்கட்டுக்கு அந்தப்பக்கம் வெற்றிடம்.
escalator

குழந்தைகளைக் கையில் கூட்டிக்கொண்டு போகிறவர்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டும். பயணிகளின் பாதுகாப்பு பற்றி எந்தக் கவலையும் இந்த கட்டட வடிவமைப்பாளர்களுக்கு இருந்ததாகத் தெரியவில்லை. ஆலந்தூர் இரண்டு ரயில் தடங்கள் சந்திக்கும் இடம் என்பதால், முதல் தளத்தில் விமான நிலையம் மற்றும் சென்ட்ரலில் இருந்து வரும் ரயில்கள் செல்வதற்கான தடங்களும் அதற்கு மேலே கோயம்பேடு மற்றும் பரங்கிமலையிலிருந்து வரும் ரயில்களுக்குமான தடங்களும் இருக்கின்றன. மேல் தளம் இன்னும் அதிக உயரத்தில் இருக்கின்றது. கழுத்துயரத் தடுப்பு இருந்தாலும் அதற்கு மேல் எதுவும் இல்லை. இவ்வளவு உயரத்தில் இருக்கும் ஒரு ரயில் நிலையத்திற்கு என்ன மாதிரியான பாதுகாப்பு அம்சங்கள் தேவை என்பதை யாராவது நிர்வாகத்திற்கு விளக்கிச் சொன்னால் தேவலை.

கோயம்பேடு (CMBT நிலையத்திற்கு அடுத்து, கடைசி நிலையம்) போனதும் கொஞ்ச நேரம் உட்காரலாம் என்று பார்த்தால், இருக்கைகளையே காணோம்! (கீழே உள்ள படங்களைப் பாருங்கள்)

station view 1
station view 2
‘என்னங்க, இன்னும் சேர்லாம் போடலியா?’ என்று ஊழியர் ஒருவரிடம் பேச்சு கொடுத்தேன்.
‘குடிக்கத் தண்ணியே கிடையாதுங்க’ என்று சலித்துக்கொண்டார்.
என்னைப்போலவே ‘சுற்றிப்பார்க்க’ வந்த இன்னொரு பயணிகள் கூட்டத்திற்கு வழிகூறுவதற்காகச் சென்றுவிட்டார். சரி கழிவறை வசதிகள் ஏதும் இருக்கிறதா, பார்க்கலாம் என்று அந்தப் பக்கமாகச் சென்றேன்.
இன்னொரு ஊழியரிடம் ‘டாய்லெட் பயன்படுத்தலாமா?’ என்று கேட்டேன்.
‘இல்லேங்க, இன்னும் ரெடியாகல’ என்றார்.
‘ரெடியாகல ன்னா கட்டி முடிக்கலையா?’ என்று கேட்டேன்.
‘தண்ணி இன்னும் வரலங்க’ என்றார்.
(அப்புறம் என்னாத்துக்கு அவசர அவசரமா திறந்து வைச்சீங்க ‘புரட்சித் தலைவி’ அவர்களே?)
சரி, கோயம்பேட்டில்தான் தண்ணீர் இன்னும் வரவில்லை, அரும்பாக்கம் நிலையத்தில் இறங்கி என்ன நிலவரம் பார்க்கலாம் என்று இறங்கினேன். மாற்றுத் திறனாளிகளுக்கான கழிவறை ஒன்று இருந்தது, அதைப் பூட்டு போட்டு பூட்டிக்கொண்டிருந்தார் ஊழியர் ஒருவர்.
‘வேற டாய்லெட் எதுவும் இல்லையா?’ என்று கேட்டேன்.
‘இருக்குது, ஆனா தண்ணி இன்னும் வரல, வேல பாக்குறவங்க இத யூஸ் பண்ணிக்கிறாங்க’ என்றார்.
திரும்ப வரும்போதுதான் கவனித்தேன், மின் இணைப்பு பெட்டிகள் எல்லாம் பயணிகள் சென்றுவரும் வழியோரத்தில் திறந்தவெளியில் இருப்பதை. சரிதான், நம்முடைய உலகத்தரம் அவ்வளவுதான் போல என்று நினைத்துக்கொண்டே, ஆலந்தூர் செல்லும் அடுத்த ரயிலில் ஏறிவிட்டேன்.

அப்போதுதான் நினைவிற்கு வந்தது, ‘ரயிலுக்கு உள்ளே வழித்தடங்கள், நிலையங்கள் அடங்கிய தகவல் பலகை தமிழில் மட்டும் உள்ளது’ என்று யாரோ கொளுத்திப்போட்டுவிட்ட செய்தி நேற்று அக்கப்போரானது. (வட நாட்டார்களுக்கும், இந்தியை பேச்சும் மூச்சுமாகக் கொண்டிருக்கும்(?!) சில மோடி ரசிகர்களுக்கும் சொல்லவா வேண்டும்! ஏற்கெனவே அவுங்களுக்கும் நமக்கும் வாய்க்காத் தகராறு இருக்கு!). அட, தமிழ்ல மட்டுமே இல்லைங்க, இந்திய அலுவலக மொழிகளுள் ஒன்றாகிய ஆங்கிலத்துலயும் இருக்கு. கீழே இருக்கும் படத்தைப் பாருங்கள்.

in english
எல்லா அறிவிப்புகளும் வரைபடங்களும், ஆங்கிலம் மற்றும் தமிழில் இருக்கின்றன.சரி, எதற்காக, யாருக்காக இந்த மெட்ரோ ரெயில் தொடங்கப்பட்டது?

‘கூட்ட நெரிசலைச் சமாளிக்க, நேரத்தை மிச்சப்படுத்த, அலுவலகம் செல்லும் மக்களுக்காக’ இப்படித்தான் சொல்லப்பட்டது!.

மெட்ரோ ரயில் வழித்தடங்களில், பயணிப்பவர்கள் பெரும்பாலும் அலுவலக வேலைகளுக்காகவும், வெளியூர் செல்ல பேருந்து பிடிக்க கோயம்பேடு செல்பவர்களாகவும்தான் இருக்க முடியும். தற்போதைய கட்டணம் சுமார் 10 கி.மீ.க்கு 40 ரூ. கிண்டியிலிருந்து எல்.ஐ.சி. செல்வதற்கும் இதே கட்டணம் அல்லது இதற்கும் அதிகமாக எதிர்பார்க்கலாம். எனில், மாதாந்திர பயண செலவு சுமார் 2000ரூ. இருசக்கர வாகனம் வைத்திருப்பவர்கள் எனில் அதை ரயில் நிலையத்தில் நிறுத்த சுமார் 15ரூ கட்டணம். இதற்கு மாதம் தோராயமாக 375ரூ.  இவ்வளவு கட்டணம் கொடுத்து நடுத்தர மக்கள் எத்தனைபேர் பயணம் செய்வார்கள்?

parking fee
நமது ‘உலகத் தரம் வாய்ந்த(!)’ ரயில் நிலையத்தில் ‘உலகத் தரம் வாய்ந்த(!)’ இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடம் (கீழே உள்ள புகைப்படம்).
parking area
எத்தனை இருசக்கர வாகனங்கள் நிறுத்தமுடியும் என்று நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள். நெரிசலைக் குறைக்க ஏற்படுத்தப்பட்டிருக்கும் மெட்ரோ நிலையங்கள் எத்தனை இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கான இடங்களைக் கொண்டிருக்கின்றன என்பதை எந்த மீடியாவாவது விளக்கிச் சொன்னால் நல்லது.

இந்த ரயில் நிலையம் கட்டுவதற்காக ஏற்கெனவே அரசு ஒதுக்கியிருக்கும் பணமும் சரி, கடனுக்கு திருப்பி அளிக்க வேண்டிய தொகையும் சரி, பணக்காரர்களிடமிருந்து மட்டும் வசூலித்த பணமா?

வெள்ளை போர்டு பேருந்தில் கட்டணம் குறைவு என்பதற்காகவே காத்திருந்து அதில் பயணம் செய்யும் சாதாரண மக்களின் வரிப்பணமும் சேர்ந்ததுதானே அரசாங்கத்தின் வரிப்பணம்? (ஏற்கெனவே திட்டமிட்டு வெள்ளை போர்டு பேருந்துகளை சென்னை மாநகரப் பேருந்து கழகம் குறைத்து வருகிறது). இந்நிலையில் கூட்ட நெரிசலைக் குறைக்கப் போகும் மெட்ரோ ரெயில் என்று விளம்பரம் செய்துவிட்டு, கொள்ளைக் கட்டணம் வசூலிப்பது மக்களை ஏமாற்றும் வேலையன்றி வேறேதுவும் இல்லை.

ஒருவேளை அதிகரித்துவரும் கார்களின் நெரிசலைக் குறைக்கப்போகிறதா இந்த மெட்ரோ ரெயில்? 40ரூ சரியான விலைதான் என்று கூறும் பணம் படைத்தவர்கள்,  வீட்டிலிருந்து ரயில் நிலையம் வந்து, இங்கிருந்து ரெயில் பிடித்து அலுவலகத்திற்குப் பக்கத்தில் உள்ள நிலையம் வந்து அங்கிருந்து அலுவலகம் செல்லப் போகிறார்களா என்ன?

இப்போது இருக்கும் விலையில், மெட்ரோ இரயில் நிலையங்கள் விடுமுறை நாட்களில் குடும்பத்தினருடன் ஒருமுறை வந்து செல்லும் சுற்றுலாத் தலங்களாக மாறுமே அல்லாமல், சாதாரண மக்களும் அன்றாடம் பயன்படுத்தும் போக்குவரத்து முறையாக நிச்சயம் மாறப்போவது இல்லை. ‘நேரத்தையும் நெரிசலையும் குறைக்கிறேன் பார்’ என்று இருக்கிற பணத்தையும் உருவிவிடாதீர்கள். நெரிசலும் நேரமும் ஆனாலும் வெள்ளை போர்டு மஞ்சள் போர்டு பேருந்துகளே எங்களுக்குப் போதும்!

About ஊர்சுற்றி ஜோன்சன்

மென்பொருள் துறையில் பணிபுரிபவர். தற்போது வசிக்கும் ஊர்: சென்னை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*