Home / அரசியல் / மோட்டார் வாகனச் சட்டத் திருத்த மசோதா – அரசு தொடுக்கும் யுத்தம்!

மோட்டார் வாகனச் சட்டத் திருத்த மசோதா – அரசு தொடுக்கும் யுத்தம்!

அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் ஆய்வு செய்து மத்திய பா.ச.க. அரசு கொண்டுவரத் துடிக்கும் மோட்டார் வாகனச் சட்டத் திருத்த மசோதா மக்கள் மீது அடுத்து தொடுக்கும் யுத்தம். ஏற்கனவே முந்தைய காங்கிரஸ் அரசு முயற்சித்து தோல்வியடைந்த மசோதா இது. கடந்த ஏப்ரல் 30ல் நாடுதளவிய அளவில் நடந்த வேலை நிறுத்தத்தால் மசோதாவை திரும்பப்பெற்று பின்வாங்கியுள்ளது மத்திய அரசு. பன்னாட்டு நிறுவனங்களின் நலனுக்காகவும், போக்குவரத்துத் துறையில் தனியார்மயத்தை ஊக்கிவிப்பதற்காகவும் மீண்டும் இந்த மசோதாவை கொண்டுவர முயற்சிக்கும், ஆனால் மீண்டும் மக்கள் தோற்கடிப்பார்கள் என்பது நிச்சயம்.

மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதா- 2015ல் அப்படிதான் என்ன இருக்கின்றன?

1) மாநில அரசுகளின் பொது போக்குவரத்து துறையின் உரிமைகள் பறிக்கப்படும்.

2) பன்னாட்டு தனியார் நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

3) மாநில அரசுகளுக்கு வர வேண்டிய வாகன வரி மத்திய அரசுக்கு சென்றுவிடும்.

4) வாகனப் பதிவு, வாகனச் சோதனை, தகுதிச் சான்று வழங்குதல் உள்ளிட்ட பணிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்படும்.

5) விபத்தைக் குறைக்கும் நோக்கில்(?) அபராதத் தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டு தலைக் கவசம் இல்லாமல் வாகனம் ஒட்டினால் ரூ.500, வாகன காப்பீடு இன்றி ஓட்டினால் ரூ.10,000, ஓட்டுநர் உரிமம் இன்றி ஓட்டினால் ரூ.10,000, கைப்பேசியில் பேசிக் கொண்டே ஓட்டினால் ரூ5,000, மேலும் தொடர்ந்து 3 முறை சிக்கினால் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யப்படும்.

traffic-7591

தண்டங்களால், தண்டனைகளால் விபத்தைக் குறைக்க முடியும் என்பது உண்மையா? அண்மையில் சென்னை கே.கே.நகரில் மூவர் இரு சக்கர வாகனத்தில் சென்றார்கள் என்பதற்காக போக்குவரத்து காவலாளரால் வண்டியில் இருந்து தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் இளைஞர் ஒருவர். 100 ரூபாய் கையூட்டு கொடுத்திருந்தால் இது நடந்திருக்காது என்பது அனைவருக்கும் தெரியும்.

சாலையோரம் படுத்திருந்தவரின் மேல் மகிழுந்தை ஏற்றிக் கொன்ற சல்மான் கான் போன்ற பெரும் பணக்காரர் எந்தவித தண்டனையுமின்றி வெளியில் உலாவ அனைத்து சட்டங்களிலிருந்து விடுப்பு “உடனே” கிடைக்கிறது. சாதாரண‌ மக்களுக்கு ”சட்டத்தை மீறினார்” என்று கொலை செய்யும் காவலருக்கு அதிக பட்சம் பணி மாற்றம்தான் தண்டனை கிடைக்கிறது. அதாவது ஆளும், அதிகார வர்க்கங்களுக்கு தாங்கள் செய்யும் எந்த குற்றத்திற்கும் தண்டனையே கிடையாது என்பது அறிவிக்கப்பட்ட இரகசியமாகியிருக்கிறது. இத்தகைய அமைப்பில் தண்டனை அதிகமானால் குற்றம் குறையும் என்பது அரசால் திட்டமிட்டு பரப்பப்படும் மாயையே.

இப்படி மாநில அரசின் உரிமையைப் பறிக்கின்ற சனநாயக விரோத போக்கு, சாமானியர்களிடம் இருந்து தண்டம் வசூலிக்கும் அதீத அதிகாரத்தை காவல்துறைக்கு வழங்குவது, அனைத்து சேவைத்துறைகளையும் இலாப நோக்கிலான தனியார்மயமாக்குவது என அனைத்து விதத்திலும் மக்களுக்கு எதிராய் உள்ளது இந்த மசோதா. இந்த செய்திகளை மக்களிடம் எடுத்துச் செல்வோம். எதிர்காலத்தில் இந்த மக்கள் விரோத மசோதாவை அரசு எந்த வழியில் எடுத்து வந்தாலும் முறியடிப்போம்.

——வினோத் களிகை- இளந்தமிழகம் இயக்கம்

இக்கட்டுரை மக்கள் விடுதலை மாத இதழில் வெளிவந்துள்ளது.

About வினோத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*