Home / அரசியல் / கிரீஸ் மக்கள் ஏன் எதிர்த்து வாக்களித்தார்கள் ……..

கிரீஸ் மக்கள் ஏன் எதிர்த்து வாக்களித்தார்கள் ……..

 ஒஹி (OXI) என்றால் கிரேக்க மொழியில் “இல்லை” என்று பொருள்.  ஐரோப்பிய ஒன்றியத்தில் மிகப்பெரிய பொருளாதார நிதி நெருக்கடியை சந்தித்து வரும் கீரிஸ்,  பன்னாட்டு நாணய நிதியத்திடமிருந்து (IMF) வாங்கிய 10,000 கோடி “யூரோ” கடனைத் திருப்பித் தர விதிக்கப்பட்ட கெடு, கடந்த ஜூன் 30 ஆம் தேதியோடு முடிந்து விட்டது. கிரீஸை பொருளாதார வீழ்ச்சியிலிருந்து காப்பாற்ற வேண்டி, சிக்கன நடவடிக்கைகளை வலியுறுத்துகிறோம் என கூறிக் கொள்ளும் பன்னாட்டு நாணய நிதியமும், ஐரோப்பிய ஒன்றியமும் (EU) ஐரோப்பிய மத்திய வங்கியும் (ECB) கடனைத் திருப்பித் தர முடியாமல் சிக்கித் தவிக்கும் கிரிஸ் அரசுக்கு, பல்வேறு நிபந்தனைகளை விதித்தன.
11183433_10153277731627034_8251856341463896492_n

நிபந்தனைகளில் முக்கியமானது பின்வருமாறு : ஓய்வூதியம் பெறும் வயது என்பதனை 67 ஆக ஆக்க வேண்டும். ஓய்வூதியம் பெறும் மிகவும் வறிய நிலையிலுள்ளோர்க்குத் தரப்படும் சிறப்பு உதவித்தொகை நிறுத்தி வைக்கப்பட வேண்டும். மக்கள் அதிகமாக உபயோகப்படுத்தும் சில பொருள்களின் மீது விற்பனை வரி அதிகரிக்கப்பட வேண்டும். சுருக்கமாகக் கூறினால், மக்களை விட பணமே முதன்மையானது. வட்டியையும் இலாபத்தையும் கணக்கில் கொண்டால் மக்கள் நலனுக்கோ உரிமைகளுக்கோ எந்தவொரு மதிப்பும் கிடையாது என்பதே, இந்த ஏகாதிபத்திய பிரதிநிதிகள் எடுத்து வைக்கும் முதலாளித்துவ வாதம்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக இருக்கும் கிரீஸ் அரசு, இந்நிதியங்களின் நிபந்தனைகளை ஏற்பதா? வேண்டாமா? என ஜூன் 5 ஆம் தேதி பொது மக்களிடையே வாக்கெடுப்பு நடத்தப்போவதாக அந்நாட்டு பிரதமர் அலெக்சி டிசிப்ராஸ் அறிவித்தார். மக்கள் “ஆம்” என்று வாக்களித்தால் அவர்கள் நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டு விட்டார்கள் என்று பொருள். “இல்லை” என்று வாக்களித்தால், நிபந்தனைகளை ஏற்கப் போவதில்லை என்று பொருள். அதாவது உங்கள் கடனையும் திருப்பித் தர முடியாது என்று அறிவிப்பதாகவும் அமையும். கடந்த ஜனவரி 26 ஆம் தேதி கிரீஸ் நாட்டின் பிரதமராக பொறுப்பேற்ற, அலெக்சி டிசிப்ராஸ், ’சிரிஸா’ என்கிற இடது சாரிக் கட்சியைச் சேர்ந்தவர்.
இதே இன்று தங்களை லிபரல், சனநாயகவாதிகள் எனக்காட்டிக்கொள்ளுபவர்களோ, வலதுசாரிகளோ கீரிசின் ஆட்சியில் இருந்திருந்தால் இதுபோன்று வாக்கெடுப்பு எதுவுமே நடத்தாமல், எல்லா நிபந்தனைகளையும் ஏற்றுக்கொண்டு வங்கிகளிடம் சரணடைந்திருப்பார்கள். இடதுசாரி அரசு ஆட்சியில் இருப்பதால் தான் மக்களின் கருத்தை அறியும் தேர்தலே நடைபெற்றது என்பதை இங்கே நாம் நினைவு கூற வேண்டும்.   வாக்கெடுப்பு முடிவடைந்து 61.31 விழுக்காடு மக்கள், பன்னாட்டு நிதியங்களின், ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளை எதிர்த்து “இல்லை” என்று வாக்களித்திருக்கிறார்கள். “நிபந்தனைகள்” என்பது ஒரு சுமை தான் அல்லவா? பொருளாதார நெருக்கடியில், வாழ வசதியின்றி, கல்விக்காகவும் மருத்துவத்துக்காகவும் அல்லல் படும் ஏழைகளுக்கு இந்த நிதிச்சுமைகளும் வரிகளும் ஏன் என்ற கேள்விக்கு அவர்கள் அளித்த பதில் “ஒஹி”.
image

வாங்கிய கடனைத் திருப்பித் தர வேண்டும். அது தானே முறை. இதில் என்ன தவறு இருக்கிறது என்ற இயல்பான கேள்வி, நம் அனைவரிடமும் எழுகிறது. முதலில் கடன் என்பது என்ன? எனக்கு ஒரு தேவை இருக்கின்றது 1000 ரூபாய் கடன் வாங்குகின்றேன். ஆனால் எனக்கு கடன் கொடுப்பவன் அந்த 1000 ரூபாயை எதற்கு செலவளிக்க வேண்டும், எந்த நிறுவனத்தில் சென்று பொருட்களை வாங்கி செலவழிக்க வேண்டும் என சொன்னால் அது கடனா? இதைத் தான் உலக வங்கிகளும், பன்னாட்டு நாணய நிதியங்களும், எல்லா முதலாளித்துவ அரசுகளும் செய்கின்றன. ஒருபுறம் கடன் என்ற பெயரில் கொடுத்துவிட்டு அதை எப்படி யாரை வைத்து செலவழிக்க வேண்டும் எனச்சொல்கின்றார்கள்.

உதாரணத்திற்கு –  இன்று சென்னையில் ஓடும் மெட்ரோ ரயிலை எடுத்துக்கொள்வோம். சப்பான் அரசு 50 விழுக்காடு கடன் கொடுத்து இந்த திட்டம் வந்தது என்று தான் எல்லோரும்(ஊடகம் உட்பட) சொல்கின்றார்கள். ஆனால் இந்த மெட்ரோ பணிகளில் பல ஜ‌ப்பானிய நிறுவனங்களால் செய்யப்பட்டவை. ஒருபுறம் கடனைக் கொடுத்துவிட்டு மறுபுறம் தங்கள் நாட்டு நிறுவனங்களை அனுப்பி அந்த பணத்தை வசூலும் செய்துவிடுகின்றனர். மெட்ரோவிற்காக கொடுத்த கடனை ஜப்பான் அரசு, நிறுவனங்களை அனுப்பி வசூலும் செய்துவிட்டது. ஆனால் இன்னும் கடன் தொகை தமிழக அரசின் மேல், அதாவது மக்களின் மேல். இதற்கு வட்டியும் வேறு செலுத்த வேண்டும் ????

மேலும் கடன் வாங்கியவர்களிடமிருந்து கந்து வட்டியாக, பணத்தைக் கறப்பதும், அவர்கள் மீது தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்து தாங்கள் சொல்வதையெல்லாம் நடைமுறைப்படுத்தச் செய்வதையும் கடன் கொடுக்கும் நாடுகள் ஒரு தந்திரமாக பயன்படுத்தி வருகின்றன.  இப்படி தான் இந்திய அரசு உலக வங்கியிடம் 1990-களில் கடன் வாங்கிய பொழுது,  காட் (GATT) ஒப்பந்ததில் கையெழுத்திட்டதை நாம் இங்கே நினைவு கூற வேண்டும். இன்று கிரீசில் நடைபெறுவது போல அன்று நம்மிடம் எந்த வாக்கெடுப்பும் நடத்தவில்லை.  கிரீஸ் மக்கள் இந்த பிரச்சனையை புரிந்து கொண்டதால் இன்று தங்களுக்காக செலவு செய்யப்படாத கடனுக்கு தாங்கள் எப்படி பொறுப்பாக முடியும், எனவே அந்த கடனை திருப்பி கட்ட தேவையில்லை என்று வாக்களித்துள்ளார்கள். உலக முதலாளித்துவம் விதிக்கும் நிர்ப்பந்தங்களை, தூக்கி எறிந்ததன் மூலம், முதலாளித்துவ தாராளவாத பொருளாதார சிந்தனைகளுக்கு எதிரான முதல் கல்லை வீசியிருக்கிறார்கள் கிரேக்க மக்கள்.

இந்தக் கலகம் கிரீஸ் நாடோடு முடிவடையப் போவதில்லை. பொருளாதார நெருக்கடியில் சிக்கித் திணறும் மற்ற உறுப்பினர்களான பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளிலும் இந்நிலை தொடரும் வாய்ப்பிருக்கிறது. இன்னும் ஐரோப்பிய  மத்திய வங்கியிடமிருந்து கீரீஸ் வாங்கிய 30,000 கோடி “யூரோ” கடனும் திரும்பக் கிடைக்காதோ என்ற கவலையில், மத்திய வங்கி சிக்கியிருக்கிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினர்களாக இருக்கும் நாடுகள் அனைத்தும் “யூரோ” என்கிற‌ ஒற்றை நாணயத்தைக் கொண்டிருக்கின்றன.  “ஐரோப்பிய நாடுகளிடையே பொருளாதாரம் இணைக்கப்படும், “வளர்ச்சி” ஏற்படும் என்பன போன்ற மிகப்பெரிய பரப்புரைகளோடு தொடங்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றியம், 23 ஆண்டுகளுக்கு பிறகு ஒட்டுமொத்த பொருளாதாரப் பின்னடைவைச் சந்தித்திருக்கிறது. கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாமல், மும்மடங்கு கட்டணம், மருத்துவத் துறையில் தனியார் மயமாக்கல் போன்ற வீழ்ச்சியின் பாதையில் பயணித்து வந்த இந்நாட்டு மக்கள், பெரும் கோபத்தில் இருக்கின்றனர். யூரோ என்கிற பொது நாணயம் மிகப்பெரிய சுமையாக அம்மக்களுக்கு ஆகிப் போயிருக்கிறது. இன்று முதல் கிரீஸ் தனது நாணயத்தின் மூலம்  பயணத்தை மேற்கொள்ள‌ப்போகின்றது.
greece-vote

முதலாளித்துவம் என்றால் என்ன? என்று உலக நாடுகளுக்கு கிரேக்க மக்கள் பாடம் கற்றுக் கொடுத்துள்ளனர். மூன்றாம் உலக நாடுகளை அந்நாட்டு அரசுகள் இப்போது ஆள்வதில்லை. மாறாக, கடன் கொடுத்த உலக வங்கிகளும் வல்லாதிக்க நாடுகளும், அவர்களின் நிறுவனங்களுமே ஆள்கின்றன. இந்தியாவில் கூட, எரிவாயு உருளைக்கான மானியத்தை வேண்டாமென்று சொல்லுங்கள் என பிரதமர் மோடியிலிருந்து, இங்கிருக்கும் நடிகர்.விவேக் வரை மக்களைக் கெஞ்சிக் கொண்டிருக்கின்றனர். மக்கள் நலத்திட்டங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. உடல் நலத்திற்கான பட்ஜெட்டே(நிதிநிலை) முழுவதுமாக நீக்கப்பட்டிருக்கின்றது. அனைத்து அரசு துறைகளும் தனியார் மயமாக்கப்பட்டு வருகின்றன. அனைத்திற்கும் காரணம் உலக வங்கியிடம் இந்தியா வாங்கியிருக்கும் கடன் சுமையே. சிக்கன நடவடிக்கைகளை குறைத்துக் கொள்ளுமாறு, கடன் கொடுத்த உலக வங்கி, இந்தியா உள்ளிட்ட‌ மூன்றாம் உலக நாடுகளை நிர்ப்பந்திக்கிறது.  மக்களின் மானியங்களில் கைவைக்கும் சொல்லும் அதேவேளையில் இந்த வங்கிகள் முதலாளிகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் சலுகைகளை வாரி இறைக்கச் சொல்கின்றன.

கடன் அட்டையை (Credit Card) வாங்கச் சொல்லி மக்களைக் கட்டாயப்படுத்தி, நுகர்வுக் கலாச்சாரத்துக்குள் அவர்களை மூழ்கடித்து கடனாளியாக்கி, கடன் பெற்றதன் தண்டனையை மக்களையே அனுபவிக்கச் செய்யும் பொருளாதார ஏற்பாடு தான், முதலாளித்துவம் உலக சமூகத்துக்கு வழங்கியிருக்கும் மாபெரும் கொடூரக் கொடை. ஆனால் முதலாளிகள் வாங்கும் கடனை திருப்பிச் செலுத்த முடியாவிட்டால் அரசே அதை திருப்பிச் செலுத்தும் ????  இந்த நவீன காட்டு மிராண்டித் தனமான பொருளியல் ஏற்பாட்டைத் தான், சவுக்கடி கொடுத்து நிராகரித்திருக்கிறார்கள் கிரேக்க மக்கள்.  கிரீசின் ஆழ்ந்த பொருளாதார நெருக்கடிக்கு இன்னொரு காரணம், கிரீசின் பெருமுதலாளிகளும் அங்கு செயல்படும் பன்னாட்டு நிறுவனங்களும் அரசுக்குச் செலுத்த வேண்டிய வருமான வரியைப் பல ஆண்டுகளாக ஏமாற்றி வருகிறார்கள். ஆனால் நிபந்தனைகள் அனைத்தும் சாமானிய மக்களைத் தான் சுடுகின்றன. சாமானிய ஏழைகள் தானே பெரும்பான்மையாக இருக்கின்றனர். பணக்காரர்கள் எப்போதும் சிறுபான்மையினர் தானே.
ஒரு நாடு கடன் வாங்குகிறது என்றால் அந்தக் கடனைப் பெற்று அவர்கள் வளர்ச்சியின் பாதையில் சென்று கொண்டிருக்க வேண்டும் என்பது பொருளாதாரக் கோட்பாடுகளின் அடிப்படை விதி. ஆனால் கிரீஸ் வளர்ச்சிப் பாதையில் செல்லவில்லை. மாறாக நெருக்கடிக் குள்ளாகியிருக்கிறது.  இதற்கு காரணம் கடனை வாங்கிய கிரீஸ் முதலாளிகளுக்கும், பெரு நிறுவனங்களின் “வளர்ச்சிக்கு”  மட்டுமே அதை செயல்படுத்தியுள்ளது (இங்கு மோடி கூறிவருவதும் அதே வளர்ச்சி தான்). ஆகவே  அதனை எதற்காக நாங்கள் கட்ட வேண்டும் என கேட்கின்றார்கள் கிரேக்க மக்கள். ஒரு சுயதேவைப் பூர்த்தி (Self Sustained) பொருளாதாரமாக மாற வேண்டிய கடமையும் சவாலும், இடது சாரித் தலைவர் அலெக்சி டிசிப்ராசை நோக்கி இருக்கிறது. ஒரு சோசலிசப் புரட்சி இன்றி, கிரேக்கம் பொருளாதாரத்தில் மீண்டு எழ‌ முடியாது என்ற நேரடியான பாடத்தை அம்மக்கள் பெற்று விட்டார்கள்.

இது கிரேக்கத்தோடு முடியப் போவதில்லை. கலகங்கள் தொடரும்.

–அ.மு.செய்யது – இளந்தமிழகம் இயக்கம்

About அ.மு.செய்யது

6 comments

 1. பாலவிக்னேஸ்வரன்

  அருமையான பதிவு… ஆங்கிலத்திலும் வெளியிட்டால் மிகச்சிறப்பு

  • தங்கள் கருத்திற்கு நன்றி, ஆங்கிலத்திலும் எழுத முயலுகின்றோம்…

 2. நேர்த்தியான கட்டுரை , . . . மிக்க நன்றி

 3. ஆனால்… முதலாளித்துவ்வாதிகளோ, கிரேக்கப் தன்னுடைய சோசலிச மக்கள் ஆதாயக் கொள்கைகளால் அவற்றின் மூலம் மக்கள் பணத்தை மேல் வீணாக செலவழித்ததால் தான் தோற்றதாக எழுதுகிறார்களே??

  இதன் மூலம் சோசலிச கொள்கைகள் தோற்கும் என்பதை உலகம் உணர வேண்டும் என்கிறார்கள்…

  • தங்கள் கருத்திற்கு நன்றி.

   எந்த குற்றவாளியும் தனது குற்றத்தை ஒப்புக்கொள்வதில்லை, குறிப்பாக முதலாளித்துவ கொள்கைவாதிகள் எப்பொழுதும் தங்கள் தோல்வியை ஒப்புக்கொள்வதில்லை, அதை மற்றவர்கள் மேல் சுமத்துகின்றார்கள். சரி அவர்களது கூற்றுப்படியே வைத்துக்கொண்டாலும் இன்று ஆட்சியிலுள்ள அரசு தான் இடதுசாரி அரசே தவிர, இதற்கு முன் இருந்தவர்கள் அல்ல. இதற்கு முன் இருந்தவர்கள் முதலாளித்துவ சார்பு வலதுசாரிகளே, அவர்கள் எப்படி மக்கள் நலனுக்காக பணத்தை செலவிட்டிருப்பார்கள்.. இலாஜிக்கே இல்லையே…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*