Home / அரசியல் / “வியாபம்” ஊழல் –  என்றால் என்ன?

“வியாபம்” ஊழல் –  என்றால் என்ன?

 “வியாவ்சாயிக் பரிக்சா மண்டல்” என்ற இந்தி சொற்களைச் சுருக்கி “வியாபம்” என்று அழைக்கிறார்கள்.  [Professional Examination Board (MPPEB) or MP Vyavsayik Pareeksha Mandal ]

‘வியாபம்’ என்பது மத்தியப் பிரதேத்தின் மாநில அரசுப் பணியிடங்களுக்கும் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கும் நுழைவுத் தேர்வு மூலம் உரியவர்களைத் தேர்ந்தெடுக்கும்‘பணியாளர் தேர்வாணையம்’ போன்ற அமைப்பு. 1990-களிலிருந்து ஊழல்கள், முறைகேடுகளின் புகலிடமாக இருக்கும் இந்த அமைப்பின் மீது 2000 ஆம் ஆண்டில்தான் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இருந்தாலும் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. 2009 ஆம் ஆண்டில் நடந்த‌ மருத்துவ நுழைவுத் தேர்வின் போது எழுந்த புகார்கள் பூதாகரமானதைத் தொடர்ந்து,  இந்த அமைப்பின் முறைகேடுகள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சத்திற்கு வரத் தொடங்கின. இம்முறைகேடுகளை விசாரிக்க குழு ஒன்றை மாநில அரசு நியமித்து,  2011 அக்குழு ஒரு அறிக்கையை சமர்ப்பித்தது. 100 பேர் கைது செய்யப்பட்டனர். 2012 ஆம் ஆண்டு “சிறப்பு அதிரடிப் படை” (Special Task Force) நியமிக்கப்பட்டது.

vya1

கடந்த ஜூன் 15 வரை இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அரசியல் வாதிகள், இடைத்தரகர்கள் மற்றும் பெரும்பாலும் மாணவர்கள் அவர்களின் பெற்றோர் என இவ்வழக்கில் கைதுகள் தொடர்கின்றன. அதிர்ச்சிகரமான ஒரு தகவல் என்னவென்றால் இவ்வழக்கில் தொடர்புடைய‌  40-க்கும் மேற்பட்டோர் மர்மமான முறையில் இறந்து போயிருக்கிறார்கள். அல்லது கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். கைதுகளும் கொலைகளும் மர்ம மரணங்களும் ஒரு மர்ம சினிமாவைப் போல தொடர்கின்றன.

ஓராண்டில் ஊழலே இல்லாத அரசு என மார்தட்டிக் கொள்ளும் பா.ஜ.க அரசு தான், இன்று வானளாவ உயர்ந்து நிற்கும் இந்த ஊழலையும் முறைகேடுகளையும் செய்தது என தெளிவாக தக்க ஆதாரங்களோடு குட்டுகள் உடையத் தொடங்கி விட்டன. மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவ்ராஜ் சவுகான் முதற்கொண்டு அவர் மனைவி சாதனா சவுகான்,  மாநில ஆளுநர் ராம் நரேஷ் யாதவ் வரை குற்றவாளிகளின் பட்டியல் நீண்டு கொண்டிருக்கிறது. வழக்கம் போல குற்றவாளிகளைக் காப்பாற்றும் முயற்சியில் பா.ஜ.க அரசு தொடர்ந்து ஈடுபட்டு வந்தாலும், எதிர்க்கட்சிகளும் சமூக செயற்பாட்டாளர்களும் களத்தில் இருப்பதால்,  பா.ஜ.க அரசுக்கு நெருக்கடி மூச்சை முட்டுகிறது. 56  இஞ்ச் மார்பளவு கொண்ட நாயகன் ( உத்திரபிரதேசத்தில் ஒரு கூட்டத்தில் மோடியே தன்னைப் பற்றி கூறிக்கொண்டது ) இங்கேயும் மெளனமாக இருக்கிறார். இன்று இக்கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் இந்நேரம்,  வியாபம் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றச் சொல்லி, உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. ஆளுநர் ராம் நரேஷ் யாதவ்-ஐ நீக்கக் கோரும் விவகாரத்தில் விளக்கம் கேட்டு மத்திய பிரதேச மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும், ஆளுநருக்கும் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.

vya3

 வியாபம் தேர்வில் நடந்த மோசடிகள்:

  • வியாபம் தேர்வு எழுதாமல் கல்லூரியிலோ அரசு பணியிலோ சேர விரும்புகிறவர்களை இடைத்தரகர்கள் அடையாளம் கண்டு கொள்கிறார்கள். வசூல் ராஜா படத்தில் வருவது போல,நுழைவுச் சீட்டில் விண்ணப்பதாரரின் புகைப்படத்துக்கு பதில் திறமையான ஒருவருக்கு லஞ்சம் கொடுத்து அவரது புகைப்படத்தை ஒட்டி ஆள் மாறாட்டம் செய்து தேர்வெழுத ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இந்த முரண்பாட்டைக் கண்டு கொள்ளாமல் இருப்பதற்கு தேர்வுக் கூட கண்காணிப்பாளருக்கு லஞ்சமும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
  • அடுத்தபடியாக, திறமையான மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற்று கடைசி நேரத்தில் கல்லூரியில் சேராமல் போனது போல் மோசடி செய்துள்ளனர். அந்த இடங்களை வேறு மாணவர்களுக்கு வழங்க கல்லூரி நிர்வாகத்துக்கு அதிகாரம் உள்ளதாக கூறி பணத்தைப் பெற்றுக்கொண்டு கல்லூரியில் இடங்களை ஒதுக்கியுள்ளனர்.
  • விண்ணப்பதாரர் சார்பாக தேர்வெழுத திறமையானவர்கள் கிடைக்காத பட்சத்தில், தேர்வு அறையில் திறமையானவர்களுக்கு பின்னால் லஞ்சம் கொடுத்தவர்களை அமர வைத்து‘காப்பி’ அடிக்க அனுமதித்துள்ளனர்.
  • காப்பி அடிக்கவும் வாய்ப்பில்லாத‌ மாணவர்களை தேர்வெழுத அனுமதித்து விட்டு, கணினியில் மென்பொருள் உதவியுடன் மதிப்பெண்ணை திருத்தி சான்றிதழை வழங்கி உள்ளனர்.

இந்த முறைகேடுகளில் லட்சங்களில் தொடங்கி பல கோடி ரூபாய்கள் வரை, பரிவர்த்தனைகள் நடைபெற்றிருக்கின்றன.

தொடரும் மர்ம மரணங்களும் அவிழும் முடிச்சுகளும்:

Killing Spree என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள். அப்படியொரு தொடர் கொலைகள் இவ்வழக்கில் நடக்கின்றன. 2009 ஆம் ஆண்டு இவ்வழக்கு “சிறப்பு அதிரடிப் படை” க்கு மாற்றப்பட்டதிலிருந்து, நாற்பதுக்கும் மேற்பட்டோர் மர்மமான முறையில் மரணமடைந்திருக்கிறார்கள்(கொல்லப்பட்டுள்ளார்கள்). குற்றம் சாட்டப்பட்ட இடைத்தரகர்,  மாணவர்கள் உள்ளிட்டோரும் இவ்வழக்கு தொடர்பாக செய்தி சேகரித்து வரும் பத்திரிக்கையாளர்களும் ஊடகத்துறையினரும் கூட கொலைகளுக்கு ஆளாகி வருகின்றனர். மேற்சொன்ன அனைத்துமே கொலைகளாக இருப்பதற்கு100 விழுக்காடு வாய்ப்புகள் இருக்கின்றன. இவ்வளவு உறுதியாகக் கூறுவதற்கு காரணங்கள் இருக்கின்றன.

Namrata-Damor

  • 2012 ஆம் ஆண்டு வியாபம் ஊழலில் சம்பந்தப் பட்டதாக நம்ரதா தாமோர் என்ற மருத்துவ மாணவி மீது புகார் கூறப்பட்டது. கடந்த 2012-ம் ஆண்டு ஜனவரி 7-ம் தேதி ரயில் தண்டவாளம் அருகே அவர் மர்மமாக இறந்து கிடந்தார். இவர் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை வழக்கை மூடி வைத்து விட்டது. இந்நிலையில், அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் நேற்று ( 8 ஜூலை 2015 ) அறிக்கை வெளியிட்டிருக்கின்றனர்.
  • கடந்த ஜூலை 4 ஆம் தேதி நம்ரதா தாமோரின் பெற்றோரை நேர்காணல் எடுத்துக் கொண்டிருந்த ஆஜ் தக் செய்தி நிருபர் அக்க்ஷேய் சிங், வாயில் நுரை தப்பி உயிரிழந்தார்.
  • கடந்த மார்ச்சு மாதம் மத்தியப் பிரதேச மாநில ஆளுநரின் மகன், சைலேஷ் யாதவ் லக்னோவில் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரும் வியாபம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்.
  • கடந்த மாதம் ஜூன் 28 ஆம் தேதி , நரேந்திர சிங் தாமோர் என்ற குற்றம் சாட்டப்பட்டு இந்தூர் சிறையில் இருந்தவர் நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். இவ்வழக்கில் நிகழும் 24-வது மரணம் அது.
  • மத்தியப் பிரதேசத்தில் ‘வியாபம்’ ஊழல் குறித்த விசாரணைக்கு உதவிவந்த மருத்துவக் கல்லூரி டீன் மர்மமான முறையில் டெல்லி ஹோட்டலில் ஜூலை 6 ஆம் தேதி (இரண்டு நாட்களுக்கு முன்) காலை இறந்து கிடந்தார்.

விசிலூதிகள்: ( Whistleblowers )

பல பேரைக் காவு வாங்கும் வியாபம் ஆவியின் வழக்கில் ஆனந்த் ராய், ஆஷிஷ் சதுர்வேதி, பிரசாந்த் பாண்டே போன்ற‌ தகவல் தொழில் நுட்ப பணியாளர்கள் சிறப்பு அதிரடிப் படைக்கு உதவி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக, இந்தூரைச் சேர்ந்த ஒரு தகவல் தொழில் நுட்ப நிபுணர், வியாபம் வழக்கில் சம்பந்தப்பட்ட கணினிகளையும் ஒரு சில தகவல்களையும் கண்டு பிடித்திருக்கிறார். அது மட்டுமின்றி, முறைகேட்டில் ஈடுபட்டு பரிந்துரைக்கப்பட்ட நபர்களின் பெயர்கள் அடங்கிய ஒரு எக்சல் கோப்பையும், இடைத்தரகர்களுக்கும் அரசுத் துறையினருக்கும் நடந்த குறுந்தகவல் பரிமாற்றங்களையும் அவர் கண்டு பிடித்திருக்கிறார். அவர் உயிருக்கு ஆபத்து நேரலாம் என்கிற ரீதியில், ஒரே ஒரு காவலரோடு,  அவர் சைக்கிளின் பின்புறம் அமர்ந்து கொண்டு “பாதுகாப்பாக” பணிக்கு செல்லும் படங்களையும் இணையத்தில் பார்க்கலாம்.

vya2

காங்கிரசு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து இந்த “எவரெஸ்ட்” சிகர ஊழலை எதிர்த்து குரல் கொடுத்து வருகின்றனர். கடந்த ஆண்டு நவம்பர் 5 ஆம் தேதி 2014, காங்கிரசு முன்னாள் மத்திய பிரதேச முதல்வர், திக் விஜய் சிங், சிபிஐ விசாரணை கோரி, மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தை நாடினார். மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் இதை நிராகரித்தது. மாறாக, 3 பேர் அடங்கிய “சிறப்பு புலனாய்வுக் குழுவை” (SIT) ஓய்வு பெற்ற நீதிபதி சந்ரேஷ் பூஷன் தலைமையில் நியமித்தது.  கடந்த மாதம் பிப்ரவரியில் காங்கிரசு தலைவர்கள் நேரடியாக‌ மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுஹானையும் அவரது மனைவியையும் நோக்கி குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். மேலும் சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் தக்க ஆவணங்களான எக்சல் கோப்பையும் தொலைபேசி அழைப்புகள் அடங்கிய பதிவையும், குறு சேமிப்பானையும் (Pen Drive) சமர்ப்பித்தனர். மேலும் சிவ்ராஜ் சிங் சவுஹான் பதவி விலகுமாறு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று ஜூலை 9 ஆம் தேதி, வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி, உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

ஒரு மாபெரும் ஊழல் வழக்கில் ஒரு சில பெருந்தலைகளை தப்பிக்க வைக்க‌, எண்ணற்ற இளைஞர்களும் ஊடகத்துறையினரும் மாணவர்களும் பலி கொடுக்கப்பட்டிருப்பது, சட்டத்தின் ஆட்சி தோல்வியடைந்ததையே காட்டுகிறது. ஐபிஎல் ஊழல் பெருச்சாளி லலித் மோடிக்கு உதவிய சுஷ்மா சுவராஜ், வசுந்தரா ராஜே,  இப்போது வியாபம் வழக்கு உச்சமடைந்ததும் மத்தியில் பா.ஜ.க ஆளும் திமிரில் அப்பட்டமான‌ கொலைகளை அரங்கேற்றும் மத்திய பிரதேச மாநில பா.ஜ.க அரசு என ஊழலின் ஊற்றுக் கண்ணாக இருக்கும் பா.ஜ.க அரசின் ஓவ்வொரு பூனைக்குட்டிகளாக அவிழ்ந்த வண்ணம் இருக்கின்றன. காணாத கஞ்சியைக் கண்ட நாய்,  ஓயாமல் ஓயாமல் ஊத்திக் குடிக்குமாம் என்பது போல,  பதவியும் அதிகாரமும் கைக்கு வந்தவுடன் குதியாளம் போடும் இந்த காவி அரசியல் வாதிகள், கண்ட வழியில் எல்லாம் ஊழல் செய்யவும், சட்டத்தின் நுண்துளைகள் மூலம் தப்பிக்க எப்பேற்பட்ட கொடூரங்களைச் செய்யவும் முனைவார்கள் என்பது நிரூபணமாகிறது. மத்தியப் பிரதேசத்தில் மட்டும் நடக்கும் ஒரு விடயமல்ல இது. நாட்டையே சூறையாடும் இயற்கை வளக் கொள்ளைக் கும்பல்களும், ஆற்று மணல் மாஃபியாக்களும், சாராயக் கும்பல்களும் அரசியல் அதிகாரத்தின் துணையோடும் பண பலத்தோடும் எப்படி சட்டத்தை வளைக்கிறார்கள் என்பதையும் கொஞ்சம் கவனிப்போம்.

“புல்லுறவு” (Crony Capitalism) முதலாளியத்தை வளர்த்தெடுப்பதில் காங்கிரசும் பா.ஜ.கவும் வேறு வேறல்ல. இருவருமே முதலாளித்துவம் உற்பத்தி செய்யும் ஊழலின் இரு வேறு முகங்கள் தான். அது மட்டுமின்றி, கழுத்தளவு ஊழல் சேற்றில் சிக்கிக் கொண்டிருக்கும் இவ்விரு கட்சிகளும், நிலைமை கை மீறி அது மர்மக் கொலைகளாக தொடரும் போது அதைத் தடுப்பதில் கையாலாகதவர்களாகவே இருக்கிறார்கள். சுருங்கச் சொன்னால், ஊழல் குற்றச்சாட்டுகளும் முறைகேடுகளும் சங்கிலித் தொடராக பெருகும் போதும், சட்டத்தின் பங்களிப்பு சிதையும் போதும், காங்கிரசு மற்றும் பா.ஜ.க ஆகிய இவ்விரு ஆளும் வர்க்கக் கட்சிகளும் செய்வதறியாது திகைத்து நிற்பதும், இந்திய மக்களின் முன் கேவலமாக அம்பலப்படுவதும் வாடிக்கையாக இருக்கிறது.

 – அ.மு.செய்யது

இளந்தமிழகம் இயக்கம்

About அ.மு.செய்யது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*