Home / அரசியல் / தீஸ்தா செட்டில்வாட் – ஒடுக்கப்படும் மனிதர்களின் குரல்!

தீஸ்தா செட்டில்வாட் – ஒடுக்கப்படும் மனிதர்களின் குரல்!

குஜராத் கலவரங்களின் போது, “குல்பர்கா சொசைட்டி” என்கிற இடத்தில் 69 முஸ்லிம்கள்,  பஜ்ரங் தள் என்கிற இந்து அமைப்பால் கொடூரமாக எரித்துக் கொல்லப்பட்டனர். காங்கிரசின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான இஹ்சான் ஜாஃப்ரியும் அச்சம்பவத்தில் கொல்லப்பட்டார். அக்கலவரங்களின் ஒரு பகுதியாக,அகமதாபாத்தில் நரோடா பாட்டியா என்கிற இடத்தில் 97 முஸ்லிம்களும் எரித்துக் கொல்லப்பட்டனர். விஷ்வ இந்து பரிஷத்தின் தீவிரவாத அமைப்பான பஜ்ரங் தள் அமைப்பு 5000 பேரை களத்தில் இறக்கி,  ஏறத்தாழ ஆயிரம் முஸ்லிம்களைக் கொன்றது.  இக்கலவரங்களில் கொல்லப்பட்டவர்கள், தப்பியோடி வீடு இழந்தவர்கள்,விதவைகள், குழந்தைகள் என பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஆதரவாக‌ சி.ஜே.பி (Citizens for Justice and Peace) என்ற அமைப்பை உருவாக்கி,  குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தி வருபவர் தான் தீஸ்தா செட்டில்வாட்.

மனித உரிமை செயற்பாட்டாளரும் ஊடகவியலாளருமான தீஸ்தா செட்டில்வாட், தன் கணவரான ஜாவித் ஆனந்துடன் இணைந்து “சப்ரங் கம்யூனிகேஷன்ஸ்” என்றொரு தன்னார்வ நிறுவனத்தையும், அந்நிறுவனத்தின் மூலமாக “கம்யூனலிசம் காம்பாட்” என்ற மாத இதழையும் நடத்தி வருகிறார். 1993 ஆம் ஆண்டிலிருந்து இயங்கி வரும் இந்நிறுவனமும் “காம்பாட்” மாத இதழும் மதச்சார்பற்ற விழுமியங்களை அடிப்படை கொள்கைகளாகக் கொண்டவை.  கடந்த இரு தசாப்தங்களாக இந்துத்துவ பாசிசத்திற்கு எதிராக, தொடர்ந்து இயங்கி வரும் “சப்ரங் கம்யூனிகேஷன்” நிறுவனம் சட்டவிரோதமாக அந்நிய நிறுவனங்களிடமிருந்து நிதி பெற்றிருக்கிறது என்ற குற்றச்சாட்டுகளின் பேரில் வழக்கு பதிவு செய்து, மத்திய புலனாய்வுத் துறை, தீஸ்தா செட்டில்வாட்டின் வீடு, மற்றும் அவரது அலுவலகம் உள்ளிட்ட நான்கு இடங்களில் நேற்று முழுவதும் கடும் சோதனை நடத்தியிருக்கிறது.

தீஸ்தா செட்டில்வாட்

குஜராத் கலவரங்களுக்கு முக்கிய காரணமானவர்களாக, பிரதமர் (அப்போதைய குஜராத் முதல்வர்) நரேந்திர மோடியிலிருந்து,  அவரது அமைச்சரவை சகாக்கள், உயர் அதிகாரிகள், காவல் துறையினர் அனைவரின் மீதும் நீதிமன்ற விசாரணையை கொண்டு வந்தவர் தீஸ்தா செட்டில்வாட். குஜராத் கலவர‌ வழக்குகள் குஜராத்தில் நடந்தால் நிச்சயம் நியாயம் கிடைக்காது என்று, உச்சநீதிமன்ற தலையீட்டின் மூலம் அவ்வழக்கை, மஹாராஷ்டிர மாநிலத்திற்கு மாற்றம் செய்யக் காரணமாகவும் இருந்தார்.

2002 பிப்ரவரி 27 ஆம் தேதி, கலவரங்களின் போது நடந்த ஒரு உயர் அதிகாரிகள் கூட்டத்தில் “இந்துக்கள் தங்கள் கோபத்தைத் தணித்துக் கொள்ளட்டும்” என மோடி கூறியதாக,  சஞ்சீவ் பட் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் பொதுமக்கள் மத்தியில் வாக்குமூலம் அளித்த போது,  அதை மக்கள் மன்றத்தில் கொண்டு வந்து,  இஹ்சான் ஜாஃப்ரியின் மனைவி,  ஜாகியா ஜாஃப்ரி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். தீஸ்தா செட்டில்வாட்டின் சி.ஜே.பியும் (CJP) இணை மனுதாரராக இவ்வழக்கில் இணைந்து கொண்டது.

குல்பர்கா சொசைட்டியில் கொல்லப்பட்டவர்களின் நினைவாக,  டீஸ்டா ஒரு நினைவு மண்டபம் கட்டும் முயற்சியில் நிதி திரட்டி வந்தார். பல்வேறு காரணங்களினால் அம்முயற்சி தடை பட்டது. அந்நிதியை தன் நிறுவனங்களுக்கு மடை மாற்றி விட்டார் என குஜராத் காவல்துறை அவர் மீது பொய் வழக்கு பதிவு செய்தது. அந்நிதியை சட்ட விரோதமாக பயன்படுத்தவில்லை என நீதிமன்றத்தில் முறையான ஆவணங்களையும் இரசீதுகளையும் கணக்குகளையும் சமர்ப்பித்து, அவ்வழக்குகளை முறியடித்தார். எனவே குஜராத் காவல்துறையினரால் தீஸ்தாவைக் கைது செய்ய முடியவில்லை.

ஜாகியா ஜாஃப்ரியாவின் வழக்கு வருகிற ஜூலை 27 ஆம் தேதி இறுதிக் கட்ட விசாரணைக்கு வருகிறது. நரோடா பாட்டியாவின் முறையீடு நாளை குஜராத் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில் அவ்வழக்குகளின் போக்கை மாற்றவும், தீஸ்தாவை பழிவாங்கும் நோக்கத்திலும் தொடர்ந்து பொய் வழக்குகளின் மூலமும், புலனாய்வு சோதனைகளின் மூலமும் தீஸ்தாவையும் அவரது கணவரையும் தொடர்ந்து நெருக்குகிறது மத்திய பா.ஜ.க அரசு.

குஜராத் கலவர வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட 117 பேரை சிறைக்கு அனுப்பக் காரணமாக இருந்த‌ தீஸ்தா செட்டில்வாட், இது பழிவாங்கும் நடவடிக்கைகாக சோடிக்கப்பட்ட வழக்கு என்றும் தான் நிதி பெற்றதில் சட்டத்தை மீற வில்லை என்பதற்கு தன்னிடம் முறையான ஆவணங்கள் இருப்பதாகவும் தொடர்ந்து வாதாடி வருகிறார். 49க்கும் மேற்பட்ட சாட்சியங்களை காவு வாங்கியிருக்கும் வியாபம் ஊழலும், சாட்சியங்களைக் கொல்லும் ஆசாரம் பாபுவும் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி வரும் இவ்வேளையில், அவ்வழக்குகளில் எல்லாம் அவ்வளவு சுணக்கம் காட்டாத நரேந்திர மோடியின் அரசு, தீஸ்தாவை கடுமையாக ஒடுக்க முயலுவதன் காரணமென்ன?

மோடி பதவியேற்ற கடந்த ஒரு ஆண்டில், குஜராத் கலவரங்களில் ஆயுள் தண்டனை பெற்ற பாபு பஜ்ரங்கி என்பவனுக்கும் 28 ஆண்டுகள் சிறை தண்டனை மாயா கோட்னானி என்ற முன்னாள் குஜராத் பெண் அமைச்சருக்கும் பிணையும் விடுப்பும் வழங்கப்பட்டது. மாறாக, நரேந்திர மோடிக்கு எதிராகவும், குஜராத் வன்கலவரங்களுக்கு காரணமானவர்களை தண்டிக்கவும் போராடி வரும் சமூக செயற்பாட்டாளர்களையும், மனித உரிமை போராளிகளையும் பொய் வழக்குகள் மூலம் தொடர்ந்து ஒடுக்கி வருகிறது நரேந்திர மோடியின் மத்திய பா.ஜ.க அரசு.

 – அ.மு.செய்யது

இளந்தமிழகம் இயக்கம்

About அ.மு.செய்யது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*