Home / சமூகம் / “தமிழால் இணைவோம் – அறிவால் உயர்வோம்!” – பேரவையின் தமிழ் விழா – 2015
unnamed (6)

“தமிழால் இணைவோம் – அறிவால் உயர்வோம்!” – பேரவையின் தமிழ் விழா – 2015

“தமிழால் இணைவோம் – அறிவால் உயர்வோம்!”

பேரவையின் தமிழ் விழா – 2015

 

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் (பெட்னா) தமிழ் விழா – 2015 இந்த ஆண்டு அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சான் ஓசே நகரில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.  இந்த ஆண்டு விழாவில் கலந்து கொண்ட இளந்தமிழகம் இயக்கத் தோழர் இளங்கோவன் அவர்கள் விழா குறித்து வழங்கியுள்ள  குறிப்பு இதோ.

இமிழ்கடல்சூழ் உலகெங்கும் போய் வாழ்ந்தாலும்

எந்தமிழர் தமிழ் மொழியால் இணைந்து கொள்க!

என்ற பாவலேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் தொடரை மெய்பிப்பது போல வட அமெரிக்காவின் பல மாநிலங்களிலும் பரவி வாழும் தமிழர்கள் தங்கள் பகுதிகளில் தமிழ் சங்கங்கள் மூலம் தங்களை ஒன்றிணைத்துக் கொண்டுள்ளனர். இந்த சங்கங்களின் கூட்டமைப்புதான் பெட்னா என்றும் பேரவை என்றும் அழைக்கப்படும் “வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை”. இப்பேரவையின் சார்பாக ஆண்டு தோறும் யூலை திங்கள் முதல்கிழமை பேரவை விழா எனப்படும் தமிழ் விழா நடத்தப்படுகின்றது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருப்பொருளை முன்வைத்து நடக்கும் இவ்விழாவில் இந்த ஆண்டு “தமிழால் இணைவோம் – அறிவால் உயர்வோம்” என்ற முழக்கத்துடன் நடைபெற்றது.

1988 ஆம் ஆண்டு முதல் வட அமெரிக்காவில் தொடர்ந்து நடைபெறும் இந்தப் பெருவிழா தமிழர்களின் இயல், இசை, நாடகம், அறிவியல், அரசியல் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களையும் அறிஞர்களையும் அடையாளங்கண்டு அவர்களை ஏற்றுப் போற்றுகின்றது. ஒருபுறம் “அமெரிக்கத் தமிழர் முன்னோடி” பரிசுகள் என வட அமெரிக்க நாடுகளில் தங்களது துறைகளில் சாதனை படைத்தத் தமிழர்களை சிறப்பிக்க பரிசுகளை வழங்கி வருகிறது. மறுபுறம் துறைசார் சாதனையாளர்களை தமிழகத்திலிருந்து அமெரிக்காவிற்கு அழைத்து வந்து பரிசு வழங்கி பெருமைப்படுத்தும் இந்தப் பேரவை விழா தமிழர் பண்பாட்டையும் மொழியையும் கலைகளையும் பாதுகாக்க நடைபெரும் விழாக்களில் ஒரு முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் திகழ்கிறது.

unnamed (6)

பேரவையின் 28 ஆவது ஆண்டு விழா இந்த ஆண்டு முதல் முறையாக அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில வளைகுடாப் பகுதியில் உள்ள சான் ஓசே நகரில் கடந்த யூலை 3 ஆம் நாள் முதல் 5 ஆம் நாள் வரை மிகப் பெரிய அளவில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இந்த ஆண்டு விழாவினை சான் பிரான்சிசுகோ நகரில் உள்ள பேரவையின் உறுப்பு அமைப்பான “வளைகுடாப் பகுதி தமிழ் மன்றம்” ஒருங்கிணைத்திருந்தது. இவ்விழாவில் அமெரிக்காவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும், கனடாவில் இருந்தும் ஏறக்குறைய 2500 பேர் வரை தமிழர்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டனர்.

இந்த ஆண்டு விழாவின் கூடுதல் சிறப்பாக மறைந்த இசை மேதை “தமிழ் இசை” முனைவர் திரு. வி.ப.கா. சுந்தரம் அவர்களின் 100 ஆவது பிறந்தநாளையும், மறைந்த இசை மேதை திரு. பாபநாசம் சிவன் அவர்களின் 125 ஆவது பிறந்தநாளையும் கொண்டாடும் விழாவாக அமைந்தது. மேலும் இலங்கை வடக்கு மாகாண முதலமைச்சர் உயர்திரு. சி. விக்னேசுவரன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டதும், தமிழகத்தில் இருந்து வந்து அமெரிக்காவில் தொழில்துறையில் சாதித்த சாதனையாளர்களை, தொழில் முனைவோர்களை ஒன்றிணைக்கும் “தமிழ் தொழில் முனைவோர் மன்றம்” உருவாக்கப்பட்டதும், அம்மன்றத்தின் சார்பாக நடைபெற்ற ஒரு நாள் கருத்தரங்கும் குறிப்பிடத்தக்கது.

பேரவை விழாவில் ஒவ்வொரு முறையும் மக்களே ஒருசேர தமிழ்த்தாய் வாழ்த்துப் பண்பாடி ஒவ்வொரு நாள் நிகழ்வும் தொடங்குகின்றனர்.  இரண்டு நாட்கள் தொடர்சியாக நடைபெற்ற விழாவில் இளைஞர்களும் குழந்தைகளும் பெரும் அளவில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.  மேலும் தமிழ் மொழி தொடர்பான வினாடி வினா நிகழ்வுகள், இலக்கியம் தொடர்பான போட்டிகளில் நிறைய குழந்தைகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். குறும்பட விழா, அமெரிக்க வாழ் தமிழ் இளைஞர் மன்றக் கூட்டமும் நடைபெற்றது. வளைகுடாப் பகுதி தமிழ் மன்ற உறுப்பினர்கள் குழுவாக சேர்ந்து கடந்த சில ஆண்டுகளாக பறை இசைப்பயிற்சி பெற்று வருகின்றனர். இந்தப் பறைக் குழுவினர் தமிழகத்தில் இருந்து வந்திருந்த புத்தர் கலைக் குழுவின் நிறுவனர் தோழர் மணிமாறன் முன்னிலையில் உணர்வெழுச்சியுடன் பறை இசை அரங்கேற்றம் செய்தனர். தமிழகத்திற்கு சென்று பயிற்சி பெற்று வந்தவர்கள் பொய்க்கால் குதிரை ஆட்டம் ஆடினர். கரகாட்டம், சிவகாமியின் சபதம் நாடகம் உள்ளிட்ட தமிழர்களின் மரபுக் கலைகள் பல பேரவை மேடையில் அரங்கேறியது.

unnamed (5)

தமிழத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட இசைத் துறையில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்ற முனைவர் மார்கரட்டு பசுடீன், நாட்டுப்புற இசைக் கலைஞர் மகிழினி மணிமாறன், சூழலியலாளர் சுந்தர் இராசன், முனைவர் விசுவநாதன், கர்நாடக இசைக் கலைஞர் சௌமியா ஆகியோர் இந்த ஆண்டு பேரவை மேடையில் சிறப்பு செய்யப்பட்டனர்.

இந்த ஆண்டிற்கான “அமெரிக்கத் தமிழர் முன்னோடி” பரிசுகள் சீரொளியைக் (இலேசர்) கொண்டு கண் அறுவை மருத்துவம் செய்யும் முறையினைக் கண்டுபிடித்த முனைவர் இரங்கசுவாமி சிறீநிவாசன் , தொழில் அதிபர் டீம் பெசுட்டு நிறுவனத்தின் தலைவர்  திரு. கிருட்டிணன் சுதந்திரன், இயற்கை அறிவியலாளர் முனைவர் முத்துலிங்கம் சஞ்சயன், கணிப்பொறியியல் பேராசிரியர் சேதுராமன் பஞ்சநாதன், யேல் பல்கலைக்கழக வானியற்பியல் பேராசிரியர் பிரியம்வதா நடராசன்மருத்துவர் இராமநாதன், இசைக் கலைஞர் திரு. பி. பீமன் , வழக்குரைஞர் பேராசிரியர் அகிலன் அருளானந்தம் ஆகியோர்க்கு வழங்கப்பட்டது.

வெள்ளிக்கிழமை அன்று முழு நாள் தனி நிகழ்வாக நடைபெற்ற தமிழ் தொழில் முனைவோர் மன்றத்தில் தங்களின் பட்டறிவைப் பகிர்ந்து கொள்ள பல தொழில் முனைவோர்கள், சாதனையாளர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். வட அமெரிக்காவில் உள்ள தமிழ் இளைஞர்கள் கண்டுபித்த புதிய மென்பொருட்களைக் காட்சிப்படுத்தி அதில் சிறந்த கண்டுபிடிப்புகளுக்குப் பரிசும் வழங்கப்பட்டது.

புளூம் ஆற்றலை கண்டுபிடித்த முனைவர் சிறீதர் அவர்கள் இம்மன்ற நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகையில், தொழில் முனைதலில் பொருளாதார தொழில் முனைதல், கொள்கைசார் தொழில் முனைதல், குமுகத் தொடர்பு சார் தொழில் முனைதல் உள்ளிட்ட பிரிவுகள் உண்டு. இதில் விளைவுசார் தொழில் முனைதல் குறித்து நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இந்த உலகின் அனைத்து வளங்களும், அனைத்து செயல்களும், வளர்ச்சிகளும், ஆற்றல்களால் தீர்மானிக்கப்படுகின்றது. இன்று நமது வாழ்வின் அனைத்து நடவடிக்கைகளும் ஆற்றல் சார்ந்தே அமைந்துள்ளது. அதனாலேயே நாங்கள் புதிதாக ஆற்றலை எவ்வாறு உருவாக்குவது என்ற பணியில் ஈடுபட்டோம். ஆறு பில்லியன் மக்கள் உள்ள இந்த உலகில் இன்னும் சில பத்தாண்டுகளில் 10 பில்லியன் மக்கள் வாழப் போகின்றோம். வரப்போகின்ற 4 பில்லியன் மக்களின் தேவையை நாம் எவ்வாறு உறுதி செய்வது? அவர்களுக்கு ஏற்றவாறு நாம் இந்த உலகை எவ்வாறு பாதுகாக்கப் போகின்றோம்? நாளை குறித்த நமது சிந்தனைகளே நமது கண்டுபிடிப்புகள் மூலம் விளைவுசார் தொழில் முனைதலில் நம்மை வளரச் செய்கின்றது என்றார்.

திருமதி. வைதேகி ஏபர்ட்டு அவர்கள் அவாய் தீவைச் சேர்ந்தவர். சங்க இலக்கியங்கள் அனைத்தையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். ஒரு பல்கலைக்கழகம் செய்யும் பணியை தனி ஒரு ஆளாக அனைத்துச் சங்க இலக்கியத்தையும் ஆங்கிலத்திலும் எளிமையான தமிழிலும் மொழிபெயர்த்துள்ளார் திருமதி. வைதேகி. அவருடன் சில கல்வியாளர்கள் இணைந்து ஒரு குழு அமைத்து ஆர்வர்ட்டு பல்கலைக்கழகத்தில் முன்னிசைவு பெற்று, தமிழ் பயிற்றுவிக்க ஒரு தமிழ்ப் பேராசிரியர் வேண்டும் என்று வைத்த கோரிக்கைக்கு ஆர்வர்ட்டு பல்கலைக்கழகம் ஒப்புதல் வழங்கிய மகிழ்ச்சியான செய்தியைப் பேரவை மேடையில் அறிவித்தார்.

unnamed (1)

முனைவர் இராசம் அவர்கள் ”ஆர்வர்ட்டு பல்கலைக் கழகத்தில் வரவிருக்கும் தமிழ் இருக்கைக்கு“ தன்னுடைய பொருளுதவியை பேரவையின் ஒருங்கிணைப்பாளர் திரு. தில்லை குமரனிடம் கொடுத்தார். தமிழ்நாட்டில் இருந்து நல்ல மொழியாளுமை உள்ள, முனைவர் பட்டம் பெற்ற தமிழ் ஆசிரியரை – அந்த பதவிக்கு வரவழைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

சனிக்கிழமையன்று மாலை தமிழத்தில் இருந்து வந்திருந்த சிறப்பு பேச்சாளர்கள் பேரவையின் பொது மேடையில் உரையாற்றினர்.

இசைக்கலைஞர் வி.ப.க சுந்தரம் அவர்களின் படைப்புகள் குறித்து முனைவர் மார்கரட்டு பசுடீன் அவர்கள் தொகுப்புரை ஆற்றினார்.

நாட்டுப்புறக் கலைகள் கலைஞர்களுக்கு விடுதலை உணர்வைக் கொடுக்கின்றது, தமிழர் மரபுக் கலைகளில் தொல் கலையான பறையிசையினை ஒரு நிகழ்வில்மட்டும் பயன்படுத்தப்படும் கலை என இல்லாமல் வாழ்வில் அனைத்து நிகழ்வுகளிலும் பறையினைப் பயன்படுத்த, புத்தர் கலைக் குழு பயிற்சிகளையும் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றது என பறை இசை குறித்து புத்தர் கலைக் குழு நிறுவனர் தோழர் மணிமாறன் கூறினார்.

இயற்கையோடு இயைந்த வாழ்வை வாழும் எந்த ஒரு இனமும் தற்சார்பை பேணும் இனமாக வாழ்கின்றது எனவும் அப்படி தற்சார்பாக வாழும் இனங்களை உலக வல்லாதிக்க நாடுகள் ஏற்பதில்லை, மாறாக அந்த இனங்களை அழிக்கவே நினைகின்றன. அதனால்தான் தற்சார்போடு வளர்ந்த தமிழினத்தை உலக நாடுகள் ஈழத்தில் அழித்தனர். தமிழகத்தில் அணு உலை, நியூற்றினோ போன்ற திட்டங்கள் மூலம் எதிர்கால தலைமுறையினரை அழிக்க முயல்கின்றனர் என்றார் பூவுலகின் நண்பர்கள் தோழர் சுந்தர் இராசன்.

இலங்கையில் வடக்கு-கிழக்கில் தமிழர்கள் எதிர்கொள்வது குமுகச் சிக்கல் அல்ல, நாம் ஒரு இனப்படுகொலைக்கு உள்ளாகியுள்ளோம்.  தமிழர்கள் கடந்த காலத்தில் எதிர்கொண்ட அடக்குமுறைகளை, துன்பங்களைப் பற்றிப் பேச ஆயத்தமாக இல்லாத தெற்குப்பகுதி மக்கள் எப்படித் தமிழர்களோடு குமுக நல்லிணக்கம் குறித்துப் பேச முடியும்? இனரீதியாக ஒடுக்கப்பட்ட, அழிக்கப்பட்டத் தமிழர்கள் காக்கப்பட வேண்டும் என்றே, ‘நாங்கள் எதிர்கொள்வது இனப்படுகொலை’ என பேராதரவுடன் ஒரு தீர்மானத்தை வடக்கு மாகண அவையில் கொண்டு வந்தோம். இன்றுள்ள அரசியல் சூழலில் இலங்கையின் ஒற்றையாட்சி அரசமைப்புகள் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு காண முடியாது. தன்னாட்சி (சுயாட்சி) என்பதே எமது நிலைப்பாடு. வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் பொருளாதார, பண்பாட்டு மேம்பாட்டுக்கு புலம் பெயர்ந்து வாழும் எம் தமிழ் உறவுகள் உதவ முன்வர வேண்டும். தொடக்க காலத்தில் தென் இந்தியாவின் தமிழகத்துடன் இலங்கையில் உள்ள தமிழர்கள் மேற்கொண்டிருந்த பொருளாதார உறவுகளைப் புதுப்பிக்க நாம் இப்பொழுது ஆயத்தமாக உள்ளோம் என இலங்கையின் வடக்கு மாகாண முதலமைசர் உயர்திரு. சி. விக்னேசுவரன் அவர்கள் தனது சிறப்புரையில் குறிபிட்டார்.

unnamed (2)

இந்த ஆண்டு பேரவை விழாவின் ஒருங்கிணைப்பாளர் திரு. தில்லை குமரன், பேரவையின் தலைவர் திரு. நாஞ்சில் பீற்றர், சான் பிரான்சிசுகோ வளைகுடாப் பகுதி தமிழ் மன்றத்தின் தலைவர் திரு. ஆறுமுகம் உள்ளிட்டோர் உரையாற்றி, சிறப்பு விருந்தினர்களுக்கு பரிசுகளை வழங்கினர். காரிக்கிழமை (சனி) காலை நடைபெற்ற இலக்கியக் கூட்டத்துடன் பேரவை தமிழ் விழா -2015 நிறைவுற்றது.   அடுத்த ஆண்டு பேரவையின் தமிழ் விழா புதுசெர்சி மாநிலத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் இருந்து வேலை வாய்ப்புகளுக்காக புலம் பெயர்ந்து பல நாடுகளில் வாழும் மக்களின் தமிழர் பண்பாட்டு அடையாங்கள் பேணப்பட வேண்டும், கலைகள் அடுத்தத் தலைமுறைக்கு கடத்தப்பட வேண்டும், மொழியின் வளர்ச்சியை உறுதி செய்ய வேண்டும், தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும், இதற்காக செயல்படுபவர்கள் ஏற்கப்பட (அங்கீகரிக்கப்பட) வேண்டும் என நடைபெறும் விழாக்களில், கடந்த 28 ஆண்டுகளாகத் தொடர்ந்து வட அமெரிக்காவில் நடைபெற்று வரும் பேரவையின் தமிழ் விழா முன்னோடி விழாவாக விளங்குகின்றது. பிற நாடுகளில் வாழும் தமிழர்களும் தங்களை ஒன்றிணைத்துக் கொண்டு பேரவை விழா போன்ற பன்முக விழாக்களைத் தொடங்குவதற்கு இவ்விழா முன்மாதிரியாக அமைந்திருக்கின்றது.

“தமிழால் இணைவோம் – அறிவால் உயர்வோம்!”

—  ச.இளங்கோவன் – இளந்தமிழகம் இயக்கம்

About இளங்கோவன்

2 comments

  1. manimaran magizhini

    வணக்கம் பதிவிட்டமைக்கு பாராட்டுக்கள் அவரவர் அளவில் இப்படியான பங்களிப்புகள் ஒருங்கிணைந்த செயல்பாட்டிற்கு மேலும் வலுவூட்டும் தேவையறிந்து கடமையாற்றும் தங்களின் செயலுக்கு மீண்டும் வாழ்த்துக்கள் – மணிமாறன் மகிழினி

  2. கடல் கடந்து வாழும் நிலையில் கன்னிதமிழ் மொழியின் பால் பற்று கொண்டு ஒன்றாகக் கூடி விழா எடுத்து ஆண்டுதோறும் கொண்டாடும் நீங்கள் அனைவரும் பல்லாண்டு வாழ்க! நன்றி வணக்கம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>