Home / அரசியல் / மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் – குருதியில் தோய்ந்த போராட்டம்

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் – குருதியில் தோய்ந்த போராட்டம்

முன்குறிப்பு:
ஊர்க்குருவிகளின் மண்ணையும் மக்களையும் நோக்கிய நான்காவது பயணத்தில், ஜீலை 4,5 தேதிகளில், தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் இருந்தும், பெங்களூரில் இருந்து சிலரும் சேர்த்து மொத்தம் 26 பேர் மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்களுக்கு பயணம் மேற்கொண்டோம். அங்கு நாம் கண்டு கேட்டவற்றைத் தொகுத்தே,பின்வரும் கட்டுரை எழுதப்பட்டது.

ஜீலை23, 1999தமிழக அரசியல் வரலாற்றில் ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் வாழ்வை, உரிமைகளை அரச பயங்கரவாதத்திற்கும், ஆதிக்க சாதிவெறிக்கும் மீண்டும் ஒருமுறை பறிகொடுத்த நாள். எத்தனையோ பெருமைகளை தன்னகத்தே சுமந்துகொண்டிருந்த, வற்றாத ஜீவநதி என்றழைக்கப்படும்தாமிரபரணி நதி, தன் சொந்த மக்களின் சடலங்களைக் கண்டு, தானும் ஜீவனிழந்து, மவுனித்து, மரணித்த நாள்.

வரலாறு:

திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற தென்மாவட்டங்களில் உழைக்கும் மக்களாகிய, ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த மக்கள் பெருமளவில் ஆங்கிலேய அரசின் காலத்திலேயே, தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்காக மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்களில் கொத்தடிமைகளாக ஆக்கப்பட்டிருந்தனர். அடிப்படை வசதிகள் ஏதுமற்ற நிலையில் மிகவும் கொடூரமான முறையில் தலைமுறை தலைமுறையாக சுரண்டப்பட்டு வந்துள்ளனர். இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பு, நாடு முழுவதும் பல்வேறு தேயிலைத் தோட்டங்கள் அரசுடைமை ஆக்கப்பட்டாலும், வாடியா குடும்பத்தினரின் கையிலிருந்த மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டங்கள் அவர்களது பாம்பே பர்மா டிரேடிங் கம்பெனி வசமே தொடர்ந்தது. தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் நலன் காக்கும் எந்தச் சட்டத்தையும் ஏற்காமல், அவர்களை ஒட்டச் சுரண்டிக் கொழுத்தது நிர்வாகம்.

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் அவல நிலைக்கு, கடந்த 1978 ஆம் ஆண்டு அவர்கள் ”காலை உணவில் இரண்டு இட்லி அதிகம் கேட்டு நடத்திய போராட்டமும், கடந்த 1988ஆம் ஆண்டில், பணிபுரியும் இடத்திற்கு செல்வதற்கு 10 நிமிட அவகாசம் கேட்டு நடத்திய போராட்டமும்” சான்றாகும். கடந்த 1998 ஆம் ஆண்டு, மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் பெற்று வந்த தினக்கூலியான 53 ரூபாயை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் சேர்த்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். மக்களின் போராட்டத்திற்கு மசிந்து கொடுப்பதுபோல், தேயிலை தோட்ட நிர்வாகம் 04.09.1998 அன்று தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

manjolai_mass3

ஆனால், பின்னர் தனது சுயரூபத்தைக் காட்டிய நிர்வாகம், காவல்துறையை ஏவிவிட்டு நூற்றுக்கணக்கான போராளிகளை அடித்து, இழுத்துச் சென்றது. மொத்தம் 127 தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக ஆறு மாத போராட்டத்திற்குப் பிறகு, பணிக்கு திரும்பிய தொழிலாளர்களை, மேலும் மிரட்டிப் பணிய வைக்க முயன்றது நிர்வாகம். தற்காலிகத் தொழிலாளர்களை மிரட்டுவது, அவர்களுக்காகக் குரல் கொடுத்த நிரந்தரப் பணியாளர்களின் சம்பளத்தைக் குறைப்பது என்று பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கிய நிர்வாகத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி, கடந்த 07.06.1999 அன்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வீட்டை முற்றுகையிட்ட தொழிலாளர்களை மீண்டும் கைது செய்தது, காவல்துறை. தளராமல், மறுநாளும் முற்றுகையிட்ட தொழிலாளர்களை மீண்டும் கைது செய்து சிறையிலடைத்தது காவல்துறை.

தாமிரபரணிப் படுகொலை:

இந்நிலையில், 47 நாட்களாக சிறையிலடைக்கப்பட்ட தேயிலைத் தோட்டத் தொழிலாளிகளை விடுவிக்கக் கோரியும், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு, பாம்பே பர்மா ட்ரேடிங் கம்பெனியிடமிருந்து, மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி 23.07.1999 அன்று, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாய் சென்றனர். இப்பேரணிக்கு, புதிய தமிழகம், சி.பி.ஐ(எம்), தமிழ் மாநில காங்கிரஸ், சி.பி.ஐ,, ஐக்கிய ஜமாத் உள்ளிட்ட கட்சிகள் தலைமை வகித்தன. பேரணியில் மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் மட்டுமின்றி திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து தலித் மக்கள் பங்கேற்றனர்.

திருநெல்வேலி சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து துவங்கிய பேரணி, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி முன்னேறியது. ஒடுக்கப்பட்ட மக்களின் பிரம்மாண்ட எழுச்சியால் திக்குமுக்காடிப் போன மாநகரைத் தங்கள் முழக்கங்களால் மேலும் அதிர வைத்துச் சென்ற பேரணி, திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்துக்கு சற்று முன்னால் அங்கு குவிக்கப்பட்ட காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது. ஆட்சியரைச் சந்தித்து மனு கொடுப்பதற்கு, பேரணியின் தலைவர்கள், காவலர்களிடம் தங்களை உள்ளே விடுமாறு அனுமதி கேட்டனர். ஆனால் காவல்துறை மறுக்க, கூட்டத்தில் ஏற்பட்ட சிறு சலசலப்பை பயன்படுத்திக் கொண்ட காவல்துறை கண்மூடித் தனமான தாக்குதலைத் துவங்கியது. திரண்டிருந்த மக்கள் மீது தடியடி நடத்திய காவல்துறை, அத்தோடு நிற்காமல், கற்களை வீசி அப்பாவிப் பொது மக்களைத் தாக்கியது. காவல்துறையின் இந்தத் தாக்குதலுக்கு, கட்சித் தலைவர்களும் தப்பவில்லை. கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர் தோழர் பழனி கடுமையாக தாக்கப்பட்டார். லத்தி, கற்கள்,கண்ணீர் புகை குண்டுகள், ரப்பர் குண்டுகள்,தோட்டாக்கள் முதலிய ஆயதங்கள் பயன்படுத்தப்பட்டன.

manjolai_mass2

காவல்துறையின் தாக்குதலால் மிரண்டு போயிருந்த மக்கள் கூட்டம், தடியடியிலிருந்து தப்பிக்க தாமிரபரணியில் இறங்கியது. பேரணியைக் காவல்துறை தடியடி நடத்தி கலைத்து விட்டது. இனி ஒன்றும் செய்யாது, என்று ஆற்றங்கரையிலும், ஆற்றினுள்ளும், நின்று கொண்டிருந்த மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி காத்து கொண்டிருந்தது. ஆட்சியர் அலுவலகத்தினை ஒட்டிய சாலையில் தடியடி நடத்தி, மக்களைக் கலைத்த காவலர்கள், அத்தோடு நில்லாமல், சாலையிலிருந்து நல்ல இறக்கத்தில் அமைந்திருந்த தாமிரபரணி ஆற்றின் கரைக்கும் இறங்கி வந்து தாக்கியது.ஆற்றங்கரையில் நின்று கொண்டிருந்த மக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் ஆற்றை நோக்கி ஒடினர்.. காவல்துறையின் அடி பட்டு மயங்கி விழுந்தவர்களை, குழந்தை என்றும் முதியவர் என்றும் பாராமல் அவர்களைக் கொலை செய்யும் நோக்கில் ஆற்றில் தூக்கி வீசியது அதிகாரவர்க்கத்தின் ஏவல்துறை.

மக்களை அடிக்கும்போது, கேவலமாக அவர்களை வசைபாடியும், அவர்கள் சாதி பெயரைச் சொல்லித் திட்டியும், “உங்களுக்கெல்லாம் கூட்டம் ஒரு கேடா?” என்று கேட்டும், தனது ஆதிக்க சாதி வெறி நஞ்சைக் கக்கியுள்ளது. அந்த இடத்திலிருந்து தப்பிக்க, தாமிரபரணி ஆற்றின் மறுகரைக்கு மக்கள் சென்ற போது, அங்கும் இறங்கி வந்து அடித்தது. வரைமுறையின்றி, வன்முறையை வெளிப்படுத்துவது, முடிந்தவரை மக்களை ஆற்றில் தள்ளிவிட்டு, அவர்கள் ஆற்றில் முங்கி இறந்தார்கள் என்ற தோற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் காவல்துறை தீவிரமாக இருந்தது. அதன் காரணமாகவே, மயங்கிக் கிடந்தவர்களையும் ஆற்றில் தூக்கிப் போட்டது.

ஆற்றில் இருந்த மக்கள், மயங்கியவர்கள் பலரது, உயிரைக் காப்பாற்றினாலும், அவர்களையும், கற்களை வீசித் தாக்கிய காவல்துறை அவர்களை விரட்டியடித்தது. இது போதாதென்று, பேரணியில் செய்தி சேகரிக்கவந்த செய்தியாளர்களையும் அடித்து, அவர்களது, ஒளிப்படக்கருவியையும் உடைத்தார்கள். இதன் மூலம் தாங்கள் நிகழ்த்தும் கலவரத்திற்கு சாட்சி இருக்கக்கூடாது என்ற அதன் எண்ணமும் தெளிவாகிறது. காவல்துறையின் கொலைவெறித் தாக்குதலில் அன்று, தங்கள் உயிரை இழந்தவர்கள் மொத்தம் 17 பேர். அதில் ஒரு பெண்ணும், 2 வயது குழந்தையும் அடங்குவர்.

manjolai_mass8
படுகொலைக்குப் பின்:

படுகொலை நடந்து முடிந்த செய்தி வந்த உடனேயே, ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பைக் கூட்டிய அன்றைய தமிழக முதலமைச்சர் கருணாநிதி, பேரணிக்கு சென்றவர்கள், கலவரத்தில் ஈடுபட்டதால்தான், காவலர்கள் தடியடி நடத்த வேண்டி இருந்தது என்று விளக்கம் கொடுத்தார். தாங்கள் தடியடி நடத்தியமைக்குக் காரணம் பேரணிக்கு வந்திருந்த மக்கள் பெண் காவலர்களை மானபங்கப்படுத்த முயன்றதால்தான் என்று கூறியது காவல்துறை. இறந்தவர்களைப் பிரேதப் பரிசோதனை நடத்திய மருத்துவர்கள், நீரில் மூழ்கியே இறந்தனர் என்று சான்றிதழ் வழங்கி, காவல்துறையின் பொய்யை வலுப்படுத்தியது. ஆனால், இறந்தவர்களின் உறவினர்களும், பாதிக்கப்பட்ட மக்களும், இவ்வப்பட்டமான பொய்களை மறுத்து, அரசின் இந்த மூடி மறைக்கும் வேலைக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இறந்தவர்களின் உடல்களை வாங்க மறுத்து, மறு பிரேத பரிசோதனை செய்யக் கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனால், அரசோ, இவர்களது, போராட்டங்களைச் சிறிதும் கண்டுகொள்ளாமல், தானே, இறந்தவர்களைப் புதைக்கும் வேலையில் இறங்கியது. மேலும், மறு பிரேத பரிசோதனை கேட்பது, தங்கள் தகுதியைச் சந்தேகிப்பதாகும் என்று, அரசு மருத்துவர்கள் வேறு போராட்டத்தில் இறங்கினர். சுருங்கக் கூறினால், அரசின் ஒட்டுமொத்த இயந்திரமும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கெதிராக நின்றது. இதற்கிடையே, மாஞ்சோலைப் படுகொலையைப் பற்றி வந்த ஊடகக் காட்சிகளையும், பேரணியில் பங்கெடுத்தவர்களின் நேர்காணல்களையும் சேர்த்து, தோழர் ஆர்.ஆர். சிறினிவாசன் எடுத்த “நதியின் மரணம்” ஆவணப் படத்தினை திருநெல்வேலியில் திரையிட்டதற்காக ஊடகவியலாளரும், மனித உரிமை செயல்பாட்டாளருமான தோழர் டி..எஸ்.எஸ். மணி காவல்துறையினால் கைது செய்யப்பட்டு சுமார் 10 நாட்களுக்குப் பின் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

manjolai_mass4

தொடர்ச்சியான மக்கள் போராட்டங்களாலும், தென் மாவட்டங்கள் முழுக்க தலித் மக்களின் எழுச்சி மிகுந்த போராட்டங்களாலும் வேறு வழியின்றி, நடந்த சம்பவத்தை விசாரிக்க முன்னால் நீதிபதி மோகன் அவர்கள் தலைமையில் ஒருநபர் கமிசன் ஒன்றை அமைத்தது தமிழக அரசு. நடந்த சம்பவத்தை விசாரித்த நீதிபதி மோகன் கமிசன், ஒட்டு மொத்த சம்பவத்திற்கு காரணம், பேரணிக்கு வந்தவர்கள் கலவரத்தில் ஈடுபட்டதுதான் என்று கூறியது. மேலும் அது, பேரணியில் பங்கேற்ற அரசியல் கட்சித் தலைவர்கள், தங்கள் தொண்டர்களைக் கட்டுப்படுத்தத் தவறியதற்கு அவர்களைச் சாடியது. எல்லாவற்றிற்கும் மேல், இதுபோன்ற பேரணிகளை அரசு தடை செய்ய வேண்டும் என்று வேறு அரசுக்கு பரிந்துரை செய்தது.. தண்ணீரில் மூழ்கி இறந்தவர்கள், விபத்தினால் இறந்தார்கள் என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயன்றது.

மாஞ்சோலைப் படுகொலை நடந்து முடிந்த சில நாட்களுக்குள்ளாகவே, சிறையிலடைக்கப்பட்ட தொழிலாளர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். எஸ்டேட் நிர்வாகமும், அவர்தம் கூலியை 150 ரூபாயாக உயர்த்தியது. எனினும், மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் முன்வைத்த கோரிக்கைகள் பெரும்பாலானவை இன்றும் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது.

தாமிரபரணிப் படுகொலை – படிப்பினைகள்:

• கடந்த 23.07.1999 அன்று நடந்த பேரணி என்பது அரசியல் ரீதியாக முக்கியமான ஒன்றாகும். காலம்காலாமாக தாழ்த்தப்பட்ட சாதிகளாக எந்தவித அதிகாரமும் இல்லாமல் ஆதிக்க சாதிகளின் பிடியில் வாழ்ந்து வந்த மக்கள் அரசியல் ரீதியாக தங்களை அணிதிரட்டும் பணியினை 90களில் மேற்கொண்டனர். புதிய தமிழகம் போன்ற கட்சிகள், தலித் இயக்கங்கள் தலித்துகளை அரசியல் ரீதியாக ஓரணியில் திரட்டிட முயன்றன. அழுகிப் போன, துருப்பிடித்த அரச எந்திரத்தின் எதேச்சதிகார, ஆதிக்க சாதி மனோபாவத்தினை மக்கள், கொடியங்குளம் கலவரம் போன்றவற்றில் தெள்ளத் தெளிவாக அறிந்து கொண்ட காரணத்தால், அரசியல் ரீதியான எழுச்சி ஒன்றே, ஆளும் வர்க்கத்தினை அவர்களது பிரச்சனைகளை கவனிக்க வைக்கும் என்பதை புரிந்து கொண்டனர். மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள், 1999 ஜூன் மாதம் நடத்திய போராட்டங்களுக்கும், 23 ஜூலை 1999 நடந்த பேரணிக்கும் உள்ள ,முக்கியமான வேறுபாடு, முதலில் நடந்த போராட்டங்கள் பெரும்பாலும், மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மட்டுமே பங்கேற்ற, கூலி உயர்வு சம்பந்தப்பட்ட பிரச்சனையாகவே நடந்தது. ஆனால், 23 ஜீலை 1999 நடந்த பேரணியிலோ, மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மட்டுமல்லாது, திருநெல்வேலி மாவட்டத்தின் பிற பகுதிகளில் வசிக்கும், தேயிலைத் தோட்டத் தொழிலுக்கு எந்த சம்மந்தமும் இல்லாத தலித் மக்கள் பலர் கலந்து கொண்டனர். தலித்துகள் தங்களை அரசியல் ரீதியாக வலுவாக முன்னிறுத்திக் கொள்ளும் வாய்ப்பாகவே அப்பேரணியைக் கருதினர்.அதனைப் புரிந்துகொண்ட ஆளும்வர்க்கம், தலித்துகளின் அணிசேர்க்கையை, அவர்கள் அரசியல் எழுச்சி பெறுவதை எக்காரணத்தைக் கொண்டும் விரும்பாத காரணத்தாலேயே, கட்டற்ற வன்முறையை அப்பாவி மக்கள் மீது ஏவியது.

maanj_f

• தலித் மக்கள் மீது நடந்த அரச பயங்கரவாத வன்முறைகளில், தாமிரபரணிப் படுகொலையும் முக்கியமான ஒன்றாகும். மேற்குறிப்பிட்ட காரணங்களுக்காகவே, தலித்துகளின் அரசியல்ரீதியிலான அணிசேர்க்கையை தடுக்கும் நோக்குடனேயே, கடந்த 2012 அன்று பரமக்குடி துப்பாக்கிச் சூடும் நடந்தது. இரண்டிற்கும், காவல்துறை கூறிய காரணங்கள் ஒன்றுதான். கூடியிருந்தவர்கள் பெண் காவலர்களை மானபங்கப்படுத்தினர் என்று. தொடர்ச்சியாக தலித்துகளை வன்முறையாளர்களாக, ஒழுக்கமில்லாதவர்களாக, குற்றவாளிகளாக சித்தரிக்க முயலும் போக்கினை இதன் மூலம் அறியலாம். இதற்கு சான்றாக, தென்மாவட்டங்களில் சமீப காலங்களில் தலித்துகளின் மீது போடப்படும் பொய் வழக்குகள் அதிகமாகியுள்ளன. சேரிகளில் வாழ்பவன் அழுக்கானவன் என்பது போல, தலித்துகள் ஒழுக்கமற்றவர்கள், குற்றவாளிகள் என்ற ஒரு பிம்பத்தை ஏற்படுத்த முயலும் ஆளும் வர்க்கத்தின் நோக்கம் தெள்ளத் தெளிவாகிறது.

• மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் இன்றைய நிலை பெரிதாக எந்த முன்னேற்றமுமின்றியே இருக்கிறது. பாம்பே பர்மா ட்ரேடிங் கம்பெனி இலாபத்தில் கொழித்தாலும், அதன் தொழிலாளர்கள் இன்று வரை வறுமையிலேயே வாழ்கின்றனர். தேயிலைத் தோட்டத்தில் அவர்களது இளமையும் உழைப்பும் ஒட்ட சுரண்டப்படுவதால் பலர் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். நிர்வாகமும் தொடர்ந்து அவர்களை நவீன கால கொத்தடிமைகளாகவே நடத்தி வருகிறது. போராடிய மக்கள் வைத்த கோரிக்கையான, எஸ்டேட்டை அரசே எடுத்து நடத்த வேண்டும் என்ற கோரிக்கை இன்றளவும் நிறைவேற்றப்படாமல், அவர்தம் வாழ்வாதாரத்தை அழிப்பதாகவே உள்ளது.

• தென்மாவட்டங்களில் கடந்த ஆண்டு நடந்த பெரும் எண்ணிக்கையிலான சாதிரீதியிலான கொலைகள், இன்றளவும் தலித்துகளுக்கு சமூகப்பாதுகாப்பின்மை நிலவுவதையே சுட்டிக் காட்டுகிறது. பொருளாதார ரீதியாக தலித்துகள் தங்களை வலுப்படுத்திக் கொள்ளும் போக்கினை நசுக்குவதற்காகவே, அவர்கள் மீது பொய் வழக்குகள் புனையப்படுகின்றன.

• உழைக்கும் மக்களாய் ஓரணியில் ஒன்றிணைந்து, சாதி ஒழிப்பை முன்னிறுத்தும் அரசியல் சக்தியாய் மாறுவதே மக்கள் விடுதலையை பெற்றுத்தரும்.

மாஞ்சோலை தியாகிகளின் போராட்டநினைவை நெஞ்சில் ஏந்துவோம்!
ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையை வென்றெடுப்போம்!

— பாலாஜி – இளந்தமிழகம் இயக்கம்.

About பாலாஜி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*