Home / அரசியல் / நாளை குடிநீருக்கு கையேந்தப் போகும் சென்னை

நாளை குடிநீருக்கு கையேந்தப் போகும் சென்னை

2011-ல் சென்னை மாநகராட்சியுடன் திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகள் இணைக்கப்பட்டன.இதன் முலம் 174 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டதாக இருந்த சென்னை மாநகராட்சி 426 சதுர கி.மீ. ஆக விரிவடைந்தது. விரிவடைந்த சென்னை மாநகராட்சியின் பகுதிகளுக்கும் குடிநீர் தேவையை சென்னை குடிநீர், வடிகால் வாரியம் பூர்த்தி செய்து வருகின்றது .

சென்னையின் அருகில் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அமைந்துள்ள பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம், போரூர் ஆகிய‌ ஏரிகளில் இருந்தும் கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியில் இருந்தும் தண்ணீர் எடுக்கப்பட்டு நான்கு சுத்திகரிப்பு நிலையங்கள் மூலமாக (கீழ்பாக்கம், புழல், வடகுத்து மற்றும் செம்பரம்பாக்கம்) சுத்திகரிக்கபட்டு 27 நீர் பங்கீட்டு நிலையங்கள் மூல‌ம் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு விநியோகம் செய்யபடுகின்றது.

மீஞ்சூர், நெமிலியில் கடல் நீரை குடி நீராக்கும் திட்டம் மூலமாகவும், ஆழ்துளை கிணறு, ஏரி, உவர் நீர்களை எதிர்திசை சவ்வூடுபரவல் (Reverse Osmosis) தொழில்நுட்பம் மூலம் வேளச்சேரி, நொச்சிக்குப்பம், அயோத்தியாகுப்பம், காசிமேடு ஆகிய இடங்களில் உள்ள சுத்திகரிப்பு நிலையங்கள் மூலமாகவும் சுத்திகரிக்கப்பட்டும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகின்றது. பெரும்பாலும் சென்னையின் குடிநீர் தேவையை சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களின் நீர் ஆதாரங்களே பூர்த்தி செய்து வருகின்றன.

சென்னை மக்களுக்கு நாள் ஒன்றுக்கு 90 கோடி லிட்டருக்கு மேல் தண்ணீர் தேவைப்படுகின்றது. ஆனால் சென்னை குடிநீர் வாரியத்தால் இன்றைய நிலையில் 58 கோடி லிட்டர் தண்ணீர் மட்டுமே வழங்க முடிகின்றது. அதுவும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் மட்டுமே. பற்றாகுறை ஒரு பக்கம் இருப்பினும் சென்னை மாநகரின் மக்கள் தொகை நாள் தோறும் பெருகிக் கொண்டே இருக்கின்றது.மேலும் மாநகரின் தற்போதைய மக்கள் தொகை 82 லட்சத்தை தாண்டி விட்டது.

கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தினை சென்னையை அடுத்த நெமிலி அருகில் உள்ள பெரூரில் அமைத்து வருகின்றது தமிழக அரசு. மேலும் நெமிலியில் கூடுதலாக ஒரு தொழிற்சாலையை 10.50 ஏக்கர் நிலத்தில் 1,000 கோடி ருபாய் செலவில் அமைக்க திட்டம் தீட்டியிருக்கிற‌து.

map1

இவை மட்டுமின்றி சென்னையின் குடிநீர் தேவைக்காக தமிழ்நாடு அரசு 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தேர்வாய்கண்டிகையில் நீர்த்தேக்கம் அமைக்க மத்திய அரசின் சுற்றுச்சூழல், வன அமைச்சகத்திடம் அனுமதி வாங்கியது இதில் 56 ஏக்கர் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் வருகின்றது. இத்திட்டத்தின் அருகில் இருக்கும் கண்ணன்கோட்டை ஏரியையும் இணைத்து 8.3 கிலோ மீட்டர் தூரம் உள்ள கண்டலேறு – பூண்டி கால்வாயில் இணைக்க திட்டம் போடப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக 1,378.16 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்துவதற்காக அரசு தோராயமாக 160 கோடி ரூபாய் என்று கணக்கு மதிப்பீடு செய்துள்ளது. இதற்காக பெரும்பாலும் விவசாய நிலங்களையும், காடுகளையும் அழிக்க வேண்டி இருப்பதால் மக்கள் இதனை கடுமையாக எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

எதிர்கால திட்டங்களாக தற்போது உள்ள நீர்நிலைகளை சீர் செய்யவும், கொள்ளளவு நிலைகளை உயர்த்தவும் அரசு 1,851 கோடி ருபாய் என்று கணக்கிட்டு உள்ளது.

1) சோழவரம் ஏரியை சீர்செய்து கரைகளை வலுப்படுத்தி 1,080 கன அடி நீர் சேமிக்க 50 இலட்சம் ரூபாய்.

2) போரூர் ஏரியின் கொள்ளளவு 700 இலட்சம் லிட்டர் கன அடியாக உயர்த்த 20 கோடி ருபாய்.

3) அயம்பக்கம் ஏரியின் கரைகளை வலுப்படுத்தி 3140 இலட்சம் லிட்டர் கன அடியாக‌ உயர்த்த 30 கோடி ருபாய்.

4) நேமம் ஏரியை சீர் செய்து கொள்ளளவு 5770 இலட்சம் அடியாக உயர்த்த 79.5 கோடி ருபாய்.

5) அம்பத்தூர், கொரட்டூர், மாதவரம் ஏரிகளை சீர் செய்யவும் இத்திட்ட‌த்தில் உள்ள‌ட‌ங்கும்.

ஆனால் இவைகள் மட்டும் இன்றி சென்னைக்குள் இருக்கும் சேத்துப்பட்டு ஏரி, கீழ்க்கட்டளை, ஜமீன் பல்லாவரம், நாராயணபுரம், சித்தலப்பாக்கம், மாம்பாக்கம், பெருங்குடி, வேளச்சேரி ஏரிகளைப் பராமரிப்பது பற்றி எந்த திட்டமும் அரசிடம் இதுவரை இல்லை.

ஒரு புறம் பல கோடி ரூபாய்களில் திட்டங்களைத் தீட்டி மக்களுக்கு தேவையான நீர் ஆதாரங்களை பெருக்குவதாக அரசு, தன்னை மக்களின் அரசாக காட்டிக் கொண்டாலும் உண்மையில், இருக்கும் நீராதாரங்களை பாதுகாக்காமல் இருப்பதுடன் அதனை அழித்து சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் வேலைகளைச் செய்வதுடன், பணம் படைத்தவர்களுக்கும் தனியார் பெருமுதலாளிகளுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் ஆறு,ஏரிகளை படையல் வைக்கின்றது. எப்படி?

உதாரணமாக போரூர் ஏரியை பற்றி சற்று விரிவாக காண்போம்.

போரூர் ஏரியின் ஒட்டுமொத்த பரப்பளவு 800 ஏக்கர், இதில் இன்று மீதமிருப்பது 300 ஏக்கர் மட்டுமே, இதிலும் 100 ஏக்கரில் மட்டுமே 4.6 கோடி கன மீதமிருப்பது 300 ஏக்கர் மட்டுமே, இதிலும் 100 ஏக்கரில் மட்டுமே 4.6 கோடி கன அடியாக தண்ணீர் உள்ளது. 1987 ஆம் ஆண்டு தமிழக அரசு ராமச்சந்திரா மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு 17 ஏக்கர் ஏரி நிலத்தை வழங்கி உள்ளது. ஆனால் வழங்கப்பட்ட நிலத்தை தவிர்த்து மேலும் 15 ஏக்கர் ஏரியின் நிலத்தை பல்கலைக்கழகம் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் அதனை மீட்டெடுக்கவும் கரைகளை வலுப்படுத்தவும் தான் கரைகளில் மண்ணை கொட்டி வருவதாக பொதுப்பணித்துறை நீர்வள துறை அதிகாரிகள் கூறுகின்றனர். 4.6 லிருந்து 7 கோடி கன அடியாக நீர் கொள்ளளவை உயர்த்த ஏரியின் கரைகளை வலுப்படுத்தவும் ஒன்று முதல் இரண்டு மீட்டர் ஆழப்படுத்தவும் முடிவு செய்துள்ளதாக அரசு தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிற‌து.

11750635_873679759346688_3037805769562776843_n
கரைகளில் மண் கொட்டி தான் ஏரியை வலுப்படுத்த வேண்டும், ஆனால் தமிழக அரசு ஏரியின் நடுவில் மண்ணைக் கொட்டுகின்றார்கள் (பார்க்க – படம்), அரசின் திட்டம் என்னெவென்றால் இப்பொழுது நீர் இருக்கும் பகுதியை இரண்டாக பிரித்து ஒரு பகுதியை தூர்ந்து போகச் செய்து நாளைடைவில் ஏரியையே இல்லாமல் செய்வதே.

இதே போரூர் ஏரியில் கட்டப்பட்டு இருந்த குடிசைகளை அப்பொழுது ஆட்சியில் இருந்த ஜெயலலிதா அரசு 2006 ஆம் ஆண்டு எவ்வித தயக்கமும் இன்றி இடித்து தள்ளியது. இன்று அதற்கு பதிலாக பல அடுக்குமாடி குடியிருப்புகள் முளைத்துள்ளன. அதே போல இராமச்சந்திரா பல்கலைக்கழகமும் ஏரியிலேயே அமைந்துள்ளது. குடிசைகளை எல்லாம் ஆக்கிரமிப்பு என்று புல்டோசர்களை வைத்து நொறுக்கித் தள்ளும் அரசு, இன்று அபார்மென்ட்டுகளுக்கு மின்சாரம், குடிநீர் என எல்லா உரிமைகளையும் வாரி வழங்கி வருகின்றது. அரசு ஒரு கண்ணிற்கு எப்பொழுதும் சுண்ணாம்பையும், மறு கண்ணிற்கு வெண்ணையையும் வழங்கி வருகின்றது.

சென்னையில் பாய்ந்த ஆறுகளின் நிலை:

கூவம் ஆறு திருவள்ளூர் மாவட்டம் கேசாவரம் என்னும் சிற்றூரில் கல்லாற்றின் கிளையாக உருவாகி. சுமார் 75 கிலோ மீட்டர் பாய்ந்து சென்னை வழியாக வங்கக் கடலை சென்று அடைகின்றது. அடையாறு செம்பரம்பாக்கம் ஏரியில் தொடங்கி சென்னை நகரின் வழியாக வங்காள விரிகுடாவில் கலக்கின்றது. ஒரு காலத்தில் தூய நீராகவும் படகு போக்குவரத்திற்கும், மீன் பிடி தொழிலுக்கும் பயன்பட்டு வந்த‌ இந்த ஆறுகளை எந்த அளவிற்கு மாசுபடுத்த முடியுமோ அந்த அளவு மாசுபடுத்தி வைத்திருக்கின்றது அரசு.

06THPUDUPET_381043f

தற்பொழுது சென்னை மாநகராட்சி செயல்படுத்தி வரும் பிளாஸ்டிக் சாலை, சிமென்ட் சாலை போன்ற திட்டங்களினால் நகரின் பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் பூமிக்குள் சென்று அடைய முடியாமல் வழிந்தோடி கடலில் கலப்பதும் சென்னை நகரின் நீலத்தடி நீர் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதற்கு காரணமாக இருக்கின்றது. மேலும் பழைய மகாபலிபுரம் சாலைகளில் அமைந்து உள்ள தகவல் தொழில் நுட்பம் உள்ளிட்ட‌ பிற நிறுவனங்களுக்கு தேவையான தண்ணீர் சென்னையை சுற்றி உள்ள சோழவரம், திருமழிசை , பூவிருந்தவல்லி போன்ற இடங்களில் சென்னையை சுற்றி உள்ள விவசாய நிலங்களில் இருந்து நீர் உறிஞ்சப் பெற்று விநியோகம் செய்யப்படுகின்றது. இதன் மூலம் சென்னையை சுற்றி இருந்த விவசாயிகள் விவசாயம் செய்ய நீரின்றி விவசாய‌த்தை கைவிட்டு நிலங்களை விற்று விட்டு நகரங்களை நோக்கிச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். இதையொட்டி சென்னை சுற்றுப்புற‌ங்களில் உள்ள விவசாயிகள் 2013ஆம் ஆண்டு ஒரு போராட்டமும் நடத்தினர். ஆனால் இவற்றைத் தடுக்க வேண்டிய அரசே தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மூலமாக சென்னையை சுற்றி இருந்த சில ஏரி நிலங்களை குடியிருப்பு நிலங்களாக மாற்றி விற்பனை செய்தது (உதார‌ணமாக : முகப்பேர் ஏரி திட்டம்).

அரசு என்ன செய்ய வேண்டும்…

ஏரி, ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளை காக்க வெறுமனே பெயரளவில் அன்றி, உரிய‌ முறையில் செயல்பட்டு நீர்நிலைகளை மீட்டெடுக்க‌ வேண்டும், சென்ற ஆட்சியில் நடைமுறைப்படுத்தி இன்று மறந்து விட்ட‌ மழை நீர் சேகரிப்பு திட்டம் போன்ற நீர்மட்டத்தை உயர்த்தும் திட்டங்களை தொடர வேண்டும். நீர்நிலைகளை மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் மீதும், நீர்நிலைகளை ஆக்கிரமிப்பவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

chennaiwatercrisis_505_022414041652

மக்களின் முன்னுள்ள பணி என்ன

அண்டை மாநிலங்களில் இருந்து தண்ணீர் தரவில்லை என்பதற்காக போராடுவது போல, நாம் நமது மாநிலத்தில், நமது ஊரில் உள்ள நீர் நிலைகளை பாதுகாக்கவும் போராட‌ வேண்டும். அரசு தனிச்சை போக்காக ஏரி நிலங்களை தனியாருக்கு அளிக்கும் பொழுதுதோ அல்லது வீட்டு மனைகளாக மாற்றி விற்பனை செய்யும் பொழுது அதை தடுத்து நிறுத்த போராட வேண்டும். நமது ஒன்றிணைந்த போராட்டமே நமது சந்ததியினர் நீருக்காக நாளை மற்றவர்களிடம் கையேந்தாமல் இருக்கச்செய்யும்.

நீர் இன்றி அமையாது உலகு என்பதினை உணர்ந்து நீர் ஆதாரங்களை காப்போம் !
வருங்கால சந்த‌திகளை வாழவைப்போம் !

— ராசன் காந்தி – இளந்தமிழகம் இயக்கம்

தரவுகள் (அ) மேலும் படிக்க‌

1) http://www.thehindu.com/news/cities/Chennai/article2611090.ece

2) http://www.thehindubusinessline.com/bline/2003/09/15/stories/2003091500010900.htm

3) http://www.indiaenvironmentportal.org.in/content/389706/villagers-protest-land-acquisition-for-tiruvallur-reservoir-project/

4) http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/villagers-protest-land-acquisition-for-tiruvallur-reservoir-project/article5828582.ece

5) http://www.frontline.in/the-nation/a-villages-nightmare/article6756538.ece

About இராசன் காந்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*