Home / அரசியல் / மரண தண்டனைக்கு எதிரான நம் குரலை உயர்த்துவோம்
யாகூப் மேமன்

மரண தண்டனைக்கு எதிரான நம் குரலை உயர்த்துவோம்

யாகூப் மேம‌னனின் கருணை மனு மகாராஷ்ட்ரா கவர்னரால் நிராகரிக்கப்பட்டுள்ளது, அதே போல உச்ச நீதிமன்றமும் மேமனின் தீர்ப்பை மீளாய்வு செய்யும் மனுவை இன்று நிராகரித்துள்ளது, மீதமுள்ளது குடியரசு தலைவரின் முன்னுள்ள கருணை மனு மட்டுமே, ஒருபுறம் மரண தண்டனையை நிராகரிக்கக் கோரிய முன்னாள் குடியரசு தலைவர்.அப்துல் கலாமிற்கு அஞ்சலி செலுத்திக் கொண்டே மறுபுறம் யாகூப் மேமனை கொல்லப்போகின்றது அரசு.

மரண தண்டனை கூடாது என்ற கருத்தில் இருக்கும் இளந்தமிழகம் இயக்கம் யாகூப் மேமனின் மரண தண்டனையை எதிர்க்கின்றது, நாம் எல்லோரும் இணைந்து இதை எதிர்த்து போராட‌ வேண்டும் என வேண்டுகோள் வைக்கின்றது.  இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் இந்த பதிவு வெளியிடப்பட்டது, காலத்தின் தேவைகருதி ஆசிரியரின் ஒப்புதலுடன் கட்டுரை மீளப்பதியப்படுகின்றது

விசை ஆசிரியர் குழு

—-

 

மரண தண்டனைக்கு எதிரான நம் குரலை உயர்த்துவோம் யுக் மோகித் சவுத்ரி. 

தமிழில்: தியாகு 

தொகுப்பு: ஆனந்தி தயாளன்

 

நீங்கள் அனைவரும் அக்கறை கொண்டிருந்த ஒரு வழக்கிற்காக நான் சென்றமுறை சென்னை வந்திருந்தேன். முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவருக்கும் நிறைவேற்றப்பட்ட நீதிப்பேராணை விண்ணப்பத்தின் பேரில் வாதிடுவதற்காக நான் வந்தேன். இங்கு வந்திருக்கிற உங்களில் பெரும்பாலானவர்கள் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரின் பேரில் கொண்டிருக்கிற பரிவினாலேயே வந்திருக்கிறீர்கள் என்று நான் கருதுகிறேன். இதே கூட்டம் கசாப்புக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டதற்கு எதிராக நடத்தப்பட்டிருக்குமேயானால், அதை ஆதரிப்பவர்களாக எவ்வளவு பேர் இருப்பீர்கள் என்று நான் நினைத்துப் பார்க்கிறேன். ஒரு சிலர் கை உயர்த்துவதை நான் பார்க்கிறேன்.

 

நாம் உண்மையிலேயே மரண தண்டனையை எதிர்க்கிறோம் என்றால், அது ஒரு பஞ்சாபியராகிய புல்லருக்கு விதிக்கப்பட்டதாக இருந்தாலும், வேறொரு இனத்தைச் சேர்ந்தவருக்கென்றாலும் ஏன் ஒரு பாகிஸ்தானியருக்காகவே இருந்தாலும், யாருக்கு விதிக்கப்படுகின்ற மரண தண்டனையையும் எதிர்க்கக் கூடியவர்களாக நாம் இருக்க வேண்டும். அதுதான் உண்மையான மரண தண்டனை எதிர்ப்பாக இருக்க முடியும்.

 

நீங்கள் தற்போது எனக்களித்திருக்கும் வி.ஆர். கிருஷ்ணய்யர் பெயரிலான இந்த விருது என்னைப் பெருமைப் படுத்துவதாக இருக்கிறது. அதற்காக நான் உளமாற நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். ஆனால் அதே நேரம், நம்முடைய பெயரைச் சொல்லிக்கொண்டு அரசு ஒருவரைத் தூக்கிலே போட்டு பத்து நாட்கள் கூட ஆவதற்குள் இப்படி ஒரு விருதைப் பெறுவதற்காக நான் சங்கடப்படுகிறேன்.

 

யாகூப் மேமன்

யாகூப் மேமன்

கசாப்பின் மரண தண்டனையை உறுதி செய்த போது உச்சநீதிமன்றம் அவரை தூக்கிலிடுகின்ற அதிகாரத்தை இந்திய அரசுக்கு வழங்கியிருக்கிறது. ஒருவரைத் தூக்கிலிடுகிற அதிகாரம் இருக்கிறது என்பதாலேயே அந்த அதிகாரத்தை செலுத்தி தூக்கிலிட வேண்டும் என்று பொருளில்லை.

 

நம்முடைய குடும்பத்தில், நம்முடைய சமூக வாழ்க்கையில், அன்றாட நடைமுறைகளில் நாம் பல தவறுகள் இழைக்கிறோம். பலரைக் காயப்படுத்தி விடுகிறோம். ஒவ்வொரு தவறுக்காகவும் முழு தண்டனை விதிக்கவேண்டும் என்றானால், எப்படி இந்த சமூகக் கட்டமைப்பு, குடும்பக் கட்டமைப்பு மிஞ்சி நிற்கும்? கருணை காட்டுவதற்கென்றே இந்திய மக்களின் பெயரால் குடியரசுத் தலைவருக்கு உயிரைப் பறிப்பதற்கு குறைவான எதையாவது வழங்க வேண்டும் என்பதற்காகவே தரப்பட்டிருக்கிற ஓர் அதிகாரமாகும். நாம் கருணையுள்ளம் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்று நம்முடைய பள்ளிகளிலே பாடங்களில் படிக்கிறோம். மதம் நமக்குக் கற்றுத்தருகிறது. எனவே நாம் கருணை காட்டத் தவறினால் நமக்கு கருணை கிடைக்காமல் போய்விடும்.

 

கசாப்பைத் தூக்கிலிடுகிற அதிகாரம் இந்திய அரசிடமிருந்தது. அதே போல் கசாப்பிற்கு கருணை காட்டுகிற அதிகாரமும் இந்திய அரசிடம் தான் இருந்தது. கசாப்பிற்கு உண்மையிலேயே இந்திய அரசு கருணை காட்டியிருக்குமானால் அது மிக உயர்ந்த,சாலச்சிறந்த செயலாக இருந்திருக்கும். அது உலகின் நன்மதிப்பைப் பெற்றிருக்கும். கசாப்பிற்கு கருணைகாட்ட மறுத்ததன் மூலமாக, இந்திய மக்கள் கருணை இல்லாதவர்கள் என்று உலகத்திற்கு இந்திய அரசு காட்டியிருக்கிறது.

 

கசாப்பைக் கொல்வதற்கு இருந்த அதிகாரத்தைப் பற்றி எல்லாம் சொன்னேன். ஒருவரை கொல்வதற்கான நடைமுறை வேலைகளைப் பற்றி இப்போது நான் சொல்ல விரும்புகிறேன். ஏதேனும் ஒன்றைச் செய்வதற்கு அதிகாரம் இருந்தாலே அதை எப்படி வேண்டுமானாலும் செய்யலாம் என்று பொருளில்லை. சட்டம் நிலைநிறுத்தியிருக்கிற நடைமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது முக்கியம். இந்திய அரசுக்கு கசாப்பைக் கொல்லும் அதிகாரம் இருக்கிறது என்பதை ஒப்புக் கொண்டாலும் கூட, அந்த அதிகாரத்தை இந்திய அரசு செயல்படுத்திய விதம் ரகசியத்தன்மை வாய்ந்தது, சட்டத்திற்குப் புறம்பானது மற்றும் அவமானத்திற்குரியது.


பன்னாட்டுச் சமூகம், “மரண தண்டனைகள் நிறைவேற்றப்படுவதை நிறுத்தி வைக்க வேண்டும்” என்ற தீர்மானத்தை இயற்றி அறிவித்த இரண்டாவது நாளே கசாப்பை இந்திய அரசு தூக்கிலிட்டிருக்கிறது. இது பன்னாட்டுச் சமுதாயத்தை கேலிக்குரியதாகக் கருதுவதற்கு இணையானதாகும். நவம்பர் 5 ஆம் நாள் கசாப்பின் கருணை மனுவை நிராகரித்து குடியரசுத்தலைவர் ஆணையிட்டார். நவம்பர் 21 ஆம் நாள் அவர் தூக்கிலிடப்பட்டார். ஆனால் அவர் தூக்கிலிடப்பட்டதற்குப் பிறகுதான் மக்களுக்கு அந்தச் செய்தி அறிவிக்கப்பட்டது. கசாப்பின் கருணை மனுவை நிராகரித்ததையும் அவரைத் தூக்கிலிடுகிற உத்தரவையும் இந்திய மக்களுக்குத் தெரியாமல் இந்திய அரசு ரகசியமாக வைத்துக்கொண்டது ஏன்?ரகசியமாக இரவோடு இரவாகச் செயல்படுவது யார்? திருட்டுத்தனமாக காரியம் செய்வது யார்? இருட்டு ஊழலுக்கு விதை விதைக்கிறது. அரசாங்கம் இருட்டிலே பயணம் செய்ய வேண்டிய தேவை என்ன? வெளிச்சத்தில் எல்லோரும் பார்க்கும்படியாக, வெளிப்படையாக அரசாங்கம் செயல்படக்கூடாதா?

 

நவம்பர் 5 ஆம் நாள் குடியரசுத்தலைவர் கசாப்பின் கருணை மனுவை மறுதலித்தார் என்றால் அந்த செய்தி இந்திய மக்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். ஏனென்றால் இது ஒரு ஜனநாயக நாடு. வெளிப்படைத் தன்மையோடு அரசாங்கம் இயங்குவது கட்டாயமாகும். அதற்குப்பிறகு இந்திய அரசு செயல்பட்ட முறை என்பது பல செயல்கள் சட்டப்புறம்பாக நடைபெற்றதைக் காட்டுகிறது. நவம்பர் 5 ஆம் நாள் இந்திய குடியரசுத்தலைவர் கசாப்பைத் தூக்கிலிடுவதற்கு ஆணையிடுகிறார். ஆனால், நவம்பர் 6 ஆம் நாள் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் “தி எகனாமிக் டைம்ஸ்’ பத்திரிகையினுடைய செய்தியாளருக்கு இந்திய அரசு அப்படி எந்த முடிவும் எடுக்கவில்லை என்று தகவல் கொடுக்கிறது.

 

ஒன்றை ரகசியமாக வைத்துக்கொள்வது என்பது வேறு, புளுகுவது என்பது வேறு. பல வழிகளில் நாம் நம்முடைய படிமத்தை சிதைத்து கறைப்படுத்துவதாக இந்த முடிவு அமைந்திருக்கிறது. கசாப்பின் கருணை மனு மறுதலிக்கப்பட்டதையும், அவரைத் தூக்கிலிடுவதையும் இந்திய அரசு ரகசியமாக மறைத்து வைத்துக் கொள்ள நினைத்தது ஏன்?மரண தண்டனை நிறைவேற்றத்திற்கான சட்டப்படியான உத்தரவு இந்திய அரசாங்கத்தின் கையில் இருந்தது. அவ்வாறு இருக்கும்போது அரசு ஏன் இப்படி ரகசியமாக, வெட்கக்கேடான முறையில் செயல்பட வேண்டும்?

 

கசாப்பைத் தூக்கிலிட்ட செய்தியை நான் கேள்விப்பட்ட போது, இந்த செய்தியை அரசு ரகசியமாக வைத்திருந்ததற்கு காரணம் தேசியப் பாதுகாப்புதான் என்று சொல்வார்கள் என்று எதிர்பார்த்தேன். வேறு எந்தச் சாக்கும் இல்லாதபோதெல்லாம் தேசியப் பாதுகாப்பை காரணமாகக் காட்டுவதே அரசாங்கத்தின் வழக்கம். ஆனால், இந்த முறை இந்திய அரசுக்கு அகந்தை தலைக்கேறி இருந்தது. மக்கள் இதை ஏற்றுக் கொள்வார்கள் என்று அழுத்தமான நம்பிக்கையிருந்தது. எனவேதான், அது தேசியப் பாதுகாப்புப் பற்றியெல்லாம் சொல்லாமல் உண்மையை வெளிப்படையாகப் போட்டு உடைத்துவிட்டது.

 

இந்திய உள்துறை அமைச்சர் மற்றும் மராட்டிய முதலமைச்சர் இருவரும் தனித்தனியாக அளித்த பேட்டிகளில் கசாப்பைத் தூக்கிலிடுவதை ரகசியமாக வைத்திருந்ததற்கு காரணம்,மனித உரிமை ஆர்வலர்கள் நீதிமன்றத்திற்குப் போய்விடுவார்கள் என்பதுதான் என்று அவர்கள் கூறியிருக்கிறார்கள். இது நீதிமன்றங்களை கேவலப்படுத்துகிற அறிவிப்பாகும். நீதிமன்றங்களை நாடுவது, சட்டத்தின் உதவியை நாடுவது, உரிமையைப் பயன்படுத்துவது என்ற அந்த வழியை அடைப்பது என்று இந்திய அரசு எடுத்திருக்கிற இந்த முடிவானது நமக்கெல்லாம் அச்சமூட்டுகிற, கலக்கம் ஏற்படுத்துகிற ஒரு நிகழ்ச்சிப் போக்காகும்.

 

ஒவ்வொரு இந்தியனுக்கு மட்டுமல்லர், ஒவ்வொரு மனிதனுக்கும் இந்திய அரசமைப்பு இரண்டு முக்கியமான உரிமைகளை வழங்குகிறது. ஒவ்வொரு மனிதனும் நீதித்துறையிடம் சென்று தீர்வு நாடுவதற்கான உரிமையை அரசமைப்புச் சட்டம் வழங்குகிறது. நீதித்துறையிடமிருந்து தீர்வு காணுகிற அந்த முயற்சி என்பது நீதிமன்றங்களை அணுகுவதற்கான உரிமையாகும். ஒருவரின் உயிரையும், தன்னுரிமையையும் பறிப்பதாக இருந்தால் சட்டத்தின்படி முறையான நடைமுறையைப் பயன்படுத்துகிற வாய்ப்பு அவருக்கு வழங்கப்படும் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் அரசமைப்பு வழங்குகிற உரிமையாகும்.

 

கருணை மனுக்களை பரிசீலிப்பது எப்படி; முடிவெடுப்பது எப்படி? என்பது பற்றி இந்திய அரசு தனக்குத்தானே வகுத்துக் கொண்டிருக்கிற பல நடைமுறை விதிகள் இருக்கின்றன. அந்த நடைமுறைகள் யாவற்றையும் கசாப்பு தொடர்பான இந்த முடிவில் இந்திய அரசு அப்பட்டமாக மீறியிருக்கிறது. கருணைமனு எழுதுவதற்கு சட்ட உதவி வழங்கப்பட வேண்டும் என்பது அடிப்படை உரிமையாகும். ஆனால், கசாப் தன்னுடைய கருணை மனுவை வரைவதற்கு எந்த சட்ட உதவியும் வழங்கப்படவில்லை. சட்ட உதவி இல்லாமல் அவர் தனது கருணை மனுவை தயாரிக்க முடியாது. சட்டத்தின் உதவியை நாடுகிற அவரது உரிமையை மறுப்பதாக இது அமைகிறது.

c11ff391-13c2-445c-8657-fa026a105df0_S_secvpf

கருணை மனு தீர்வு செய்யப்படாமல் நிலுவையில் இருக்கும் போது எவரையும் தூக்கிலிட முடியாது என்பது இந்திய அரசு வகுத்திருக்கிற இன்னொரு விதியாகும். மற்றுமொரு விதி என்னவென்றால் கருணைமனு நிராகரிக்கப்படுகின்ற பொழுது, கருணை மனு கொடுத்திருப்பவர், அவருக்காக கருணைமனு கொடுத்திருக்கிற மற்றவர்கள், இவர்கள் அனைவருக்கும் அந்த தகவல் தெரிவிக்கப்பட வேண்டும் என்பதாகும்.

 

மரண தண்டனை நிறைவேற்றத்திற்கான தேதி குறிக்கப்பட்டதற்குப் பிறகு, அந்தக் கைதிக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் அந்த தகவல் தெரிவிக்கப்பட வேண்டும் என்பதும் ஓர் விதியாகும். கருணை மனு மறுக்கப்பட்ட செய்தியையும், மரண தண்டனை நிறைவேற்றப்பட இருப்பதையும் அந்தக் கைதிக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும், மற்றவர்களுக்கும் தெரிவிப்பதற்குப் பின்னால் இருக்கிற நோக்கம், அவர்கள் அவருடைய உயிரைக் காப்பதற்கு மரண தண்டனையிலிருந்து தப்புவதற்கு சட்ட உதவியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான்.

 

இந்த வழக்கில் கசாப்பிற்காக பலரும் கருணை மனு கொடுத்திருந்தார்கள். அவர்களின் மனுக்கள் மறுதலிக்கப்பட்டதென்று இதுவரை தகவல் எதுவும் தரப்படவில்லை. கசாப்பினுடைய குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டுமென்பது ஒரு கட்டாயமாகும். கசாப்பினுடைய கிராமத்து முகவரி அரசாங்கத்தின் கையில் இருந்தது. ஆனால், அந்த முகவரிக்கு தகவல் தராமல் பாகிஸ்தானிய தூதுவருக்கு மட்டும் இதனை தந்தி கொடுத்து தகவல் தெரிவித்தனர்.

 

கருணை மனுவிற்கும், மரண தண்டனை நிறைவேற்றத்திற்குமான பல்வேறு நடைமுறைகளும், விதிகளும் அப்பட்டமாக மீறப்பட்டன. இந்த விதிகள் அனைத்தையும் அப்பட்டமாக மீறியதை அரசாங்கம் வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறது. இப்படி மீறியதற்கு காரணம் அவர்கள் நீதிமன்றத்தை நாடிவிடக்கூடாது என்பதுதான். மக்களின் சட்ட உரிமைகளைப் பயன்படுத்திக் கொள்ள நீதிமன்றத்தை அணுகுவதைத் தவிர்ப்பதற்காக, சட்ட விரோதமான செயல்களில் அரசாங்கமே ஈடுபடுகிறது என்பது இதற்கு முன்பும் நிகழ்ந்திருக்கிறது. நெருக்கடி நிலை காலத்தில் அரசாங்கம் இவ்வாறு செயல்பட்டது. இப்போது கசாப்பின் வழக்கில் அதே முறையை கடைப்பிடித்து சட்ட விரோதமாக அது செயல்பட்டிருக்கிறது.

 

கொலை, வன்புணர்ச்சி என்ற குற்றத்தை ஒருவர் செய்வாரானால் அவருக்கு ஏன் மரண தண்டனை கூடாது என்ற கேள்வி நம் முன் வைக்கப்படுகிறது. மரண தண்டனை கூடாது என்று சொல்லும் போது தண்டனையே கூடாது என்று சொல்வதாகப் பொருளில்லை. ஒவ்வொரு குற்றத்திற்கும் வெவ்வேறு தண்டனைகளை வழங்குகிற வாய்ப்பு நமக்கு இருக்கிறது. சாதாரண தண்டனைகளும் இருக்கின்றன; மிகக் கடுமையான தண்டனைகளும் இருக்கின்றன. ஆனால், நடந்த குற்றத்தை அப்படியே திருப்பிச் செய்வதாக பல தண்டனைகள் அமைவதில்லை.

 

தண்டனைக்கு நான்கு நோக்கங்கள் உள்ளன: 1. சீர்திருத்தம் 2. சமூகத்தைப் பாதுகாத்தல் 3.குற்றம் செய்வோருக்கு அச்சமூட்டித்தடுத்தல் 4. வஞ்சம் தீர்த்தல் (அல்லது) பழிவாங்குதல்.

 

சீர்திருத்தத்தைப் பொருத்தவரை, மரணதண்டனை எந்த வகையிலும் சீர்திருத்த முடியாதது. ஏனென்றால் சீர்திருத்தப்பட வேண்டியவரே அதில் அழிந்துவிடுகிறார். சீர்திருத்தத்திற்கு அது பயன்படாது. ஒருவரால் சமூகத்திற்கு ஆபத்தென்றால் அவரை சிறையிலடைப்பதன் மூலம் சமூகத்தைப் பாதுகாக்கலாம். வாழ்நாள் சிறைதண்டனை என்பது சமூகத்தைப் பாதுகாப்பதற்கு;அதேபோல் அம்மனிதனை திருத்துவதற்கு, இந்த நோக்கங்களுக்கு அதுவே போதுமானது;பயனுள்ளதாகவும் இருக்கும். மரணதண்டனை, ஆயுள் தண்டனையைக் காட்டிலும் ஒருவரை கொலைக் குற்றம் செய்யவிடாமல் தடுத்துவிடுவதில்லை என்பதை மெய்ப்பிப்பதற்கு ஏராளமான புள்ளி விவரங்கள் உள்ளன.

 

நாமே கூட பல குற்றங்களை செய்திருக்கிறோம். நாம் ஏதாவது ஒரு குற்றத்தை செய்வதற்கு முன் இந்தக் குற்றம் செய்தால் இந்த தண்டனை விளையும் என்று யோசித்துப் பார்த்து செய்கிறோமா என்றால் இல்லை. குற்றமிழைக்கிற ஒவ்வொருவரும் சிக்கிக்கொள்வோம் என்று யோசிப்பதில்லை. தண்டனை விதிக்கப்படும் என்றும் எதிர்பார்ப்பதில்லை. அப்படியிருக்கிற போது மரண தண்டனை குற்றமிழைத்துவிடாமல் தடுக்கும் என்ற கேள்விக்கே இடமில்லை. மரண தண்டனை குற்றத்தைத் தடுக்காது என்று நான் சொல்லவில்லை. ஆனால், ஆயுள்தண்டனையைக் காட்டிலும் கூடுதலான வகையில் அது குற்றத்தைத் தடுக்கும் என்பதில் உண்மையில்லை.

 

மரணதண்டனை என்பது சீர்திருத்தம் என்ற நோக்கில், சமூகத்தைப் பாதுகாப்பது என்ற நோக்கில், குற்றத்தைத் தடுப்பது என்ற நோக்கில் எந்தவகையிலும் பயன்படாது என்பதைப் பார்த்திருக்கிறோம்.

 

கடைசியாக பழிதீர்த்தல் அல்லது வஞ்சம் தீர்த்தல். ஒருவர் கொள்ளைக் குற்றத்தில் ஈடுபட்டால் பதிலுக்கு அவர் வீட்டில் கொள்ளையடித்து நாம் தண்டனை கொடுப்பதில்லை. ஒருவர் வன்புணர்ச்சி குற்றம் செய்தால், மீண்டும் அவரிடம் அந்தக் குற்றத்தை நாம் செய்வதில்லை. ஒருவர் கொலை செய்கிறார் என்றால் நாம் அவரைப் பார்த்தொழுகி அதே குற்றத்தைச் செய்ய வேண்டும் என்று பொருளில்லை. ஒருவருக்கு மரணதண்டனை விதிக்கவில்லையென்றால், அவருக்கு தண்டனையே விதிக்காமல் விட்டுவிடுகிறோம் என்று பொருளில்லை. குற்றமிழைத்தவன் செய்த செயலைப் பார்த்தொழுகி அதே செயலை ஏன் நாம் திருப்பிச் செய்ய வேண்டும்? வஞ்சம் தீர்த்தல் என்பதை, பழிவாங்குதல் என்பதையே எடுத்துக்கொண்டால், ஒரே குற்றத்தை திருப்பிச் செய்ய வேண்டும் என்பதற்கு எவ்விதமான காரணமோ, ஏரணமோ கிடையாது. வேறு தண்டனைகள் மூலமாகவே இந்த வஞ்சம் தீர்த்தலை நிறைவேற்றிக் கொள்ள முடியும்.

 

எனவே, அரசமைப்புச் சட்டம் குறிப்பிட்ட சில உரிமைகளை நமக்கு வழங்கியிருக்கிறது. இந்த உரிமைகளை எந்தக் கொம்பனாலும் நம்மிடமிருந்து பறிக்க முடியாது. யாருக்கு உரிமை வேண்டும், யாருக்கு உரிமை தேவையில்லை என்பதையும், எப்போது அந்த உரிமைகள் மதிக்கப்படும், எப்போது அந்த உரிமைகள் மதிக்கப்படாது என்பதையும் முடிவு செய்கிற அதிகாரத்தை நாம் இந்த அரசாங்கத்திற்கு கொடுத்துவிடப் போகிறோமா? ஒரு பயங்கரவாதிக்குதான் அரசாங்கம் இப்படிச் செய்யும், நமக்கெல்லாம் இப்படிச் செய்யாது என்று நினைத்துவிடாதீர்கள். யார் பயங்கரவாதி, யார் பயங்கரவாதி இல்லை என்று தீர்மானிக்கிற அதிகாரத்தையும் அரசாங்கம் கையில் எடுத்துக் கொண்டிருக்கிறது.

இப்போது நமக்கு முன்னால் எழுகிற வினா: என்ன செய்யலாம் நாம்? நாம் செய்வதற்கு ஒன்றும் இல்லை, நம்மிடம் வசதியில்லை, நம்மிடம் செல்வாக்கு இல்லை, நாம் இது குறித்து எதுவும் செய்ய முடியாது என்று நம்மில் பலர் நினைக்கிறோம். ஆனால், எனக்கென்று குரல் இருக்கு மானால் அந்தக் குரலை நான் உயர்த்துவேன். எனக்கென்று ஒரு திறமையிருக்குமானால் மரண தண்டனை நிறைவேற்றத்தைத் தடுப்பதற்கு அந்தத் திறமையை நான் பயன்படுத்துவேன். என் அண்டை வீட்டிலே ஆட்கள் இருப்பார்களானால்,மரண தண்டனையை தடுத்து நிறுத்துவதற்கு அவர்களிடமும் ஆதரவு திரட்டுவேன். அவர்களையும் கருத்து மாற்றம் பெறச் செய்வேன்.

 

நாம் வாய்மூடி மவுனிகளாக இருக்க முடியாது. எவ்வளவு முடியுமோ அவ்வளவிற்கு மரண தண்டனை நிறைவேற்றங்களைத் தடுத்து நிறுத்துவதற்கு எவ்வளவு காலம் முடியுமோ அவ்வளவு காலத்திற்கு நாம் பாடுபட்டாக வேண்டும்; உழைத்தாக வேண்டும்.

 

மரண தண்டனைக்கெதிரான மக்கள் இயக்கம் சார்பில் வி.ஆர். கிருஷ்ணய்யரின் 98 ஆவது பிறந்த நாள் விழா டிசம்பர் 1, 2012 அன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் வழக்குரைஞர் யுக் மோகித் சவுத்ரி அவர்களுக்கு, “மரண தண்டனையை ஒழிக்க சட்டப்பூர்வமான நடவடிக்கை மற்றும் சட்டத் திருத்தத்திற்கான செயல்பாடுகளை முன்னெடுத்ததற்கான’ விருது வழங்கப்பட்டது. இவ்விருதையேற்று அவர் ஆற்றிய உரையை இங்கு வெளியிடுகிறோம்.

About விசை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*