Home / அரசியல் / அணு குண்டுகள் மட்டுமல்ல, அணு உலைகளும் எதிர்க்கப்பட வேண்டியதே…

அணு குண்டுகள் மட்டுமல்ல, அணு உலைகளும் எதிர்க்கப்பட வேண்டியதே…

1945-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6-ம் நாள் அமெரிக்கா ஜப்பான் நாட்டிலுள்ள ஹிரோஷிமா எனும் நகரின் மீது முதல் அணு குண்டை வீசியது. சுமார் 80,000 மக்கள் உடனடியாகக் கொல்லப்பட்டார்கள்; லட்சக்கணக்கான மக்கள் கதிர்வீச்சுக்கு ஆளாகி இன்னும் அல்லல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். மூன்று நாட்கள் கழித்து நாகசாகி எனும் நகரின் மீது அடுத்த அணு குண்டு வீசப்பட்டது. அங்கும் இதே சாவு, சங்கடம், சந்ததிகள் அழிப்பு என ஜப்பான் நாடே சரிந்து விழுந்தது.

11813498_10207740870542987_6439431826092426080_n

2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11-ம் நாள் ஃபுகுஷிமா எனும் நகரிலுள்ள அணுமின் நிலையங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெடித்து அபாயகரமான கதிர்வீச்சை உமிழ்ந்தன. முப்பது கி.மீ. தூரத்தில் உள்ள மக்கள் இடப்பெயற்சி செய்யப்பட்டார்கள். கட்டுக்கோப்பான, கடமை உணர்வு மிக்க, அறிவியல் தொழில்நுட்பத்தில் சிறந்த ஜப்பான் நாட்டு மக்கள் இன்னும் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர், அவதிப் பட்டுகொண்டிருக்கின்றனர்.

இரண்டிலும் வட அமெரிக்க வல்லூறின் பங்குண்டு, முதல் நிகழ்வில் அணு குண்டை வீசியது அவர்களின் இராணுவம், இரண்டாவதில் அணு உலையை வடிவமைத்தது வட அமெரிக்க‌ நிறுவனமான ஜெனரல் எல்க்ரிகல்ஸ். முதலில் அணு குண்டு வீசி கொன்றார்கள், இரண்டாவதில் அணு உலை வடிவமைத்து கொன்றார்கள். இரண்டிலிருந்தும் நாம் கற்றுக்கொள்ளவேண்டிய முக்கியமான பாடம் – அணு குண்டோ, அணு உலையோ இரண்டும் மக்களை கொல்லும், முதலாமது வீசினால் மட்டுமே கொல்லும், இரண்டாவதோ செயல்படும் போதும் கொல்லும், செயல்படாமல் நின்று போனாலும் கொல்லும்.

அணு உலை பேரழிவிற்குள்ளான செர்னோபில் (இரசியா).

அணு உலை பேரழிவிற்குள்ளான செர்னோபில் (இரசியா).

அணு உலை என்பது செயல்பட்டுக் கொண்டிருக்கும் அணுகுண்டு. இதைத் தான் கூடங்குளத்தில் அமைத்துள்ளது இந்திய அரசு, இன்னும் நான்கு அணு உலைகளை அமைக்க ஒப்பந்தம் வேறு போட்டுள்ளார்கள். அணு உலையிலிருந்து மின்சாரம் எடுக்கின்றோம் அதனால் தமிழகம் வளம் பெரும் என்கின்றார்கள் அணு உலை ஆதரவாளர்கள். முதலாவது அணு உலை செயல்படத்தொடங்கி அரசின் கணக்குப்படி பல மாதங்களாகிவிட்டது இதுவரை அவர்கள் உற்பத்தி செய்த மின்சாரம் யாருக்கு கொடுக்கப்பட்டது, தமிழகத்திற்கு வழங்கப்பட்ட பங்கின் அளவு எவ்வளவு என்ற கேள்விக்கு இதுவரை எந்த பதிலும் இல்லை, உற்பத்தி செய்தால் தானே கொடுப்பதற்கு…பழைய ஈயம், பித்தளைகளை கொண்டு வந்து அணு உலை என்று வெளிநாடுகள் விற்பனை செய்து விட்டு செல்கின்றன, அதை இந்த ஊழல் பெருச்சாளிகள் நம்மண்ணில் எப்பொழுது வேண்டுமானால் வெடிக்கும் அணு குண்டுகளாக விதைக்கின்றன…

ஹிரோசிமா, நாகசாகி நாட்களை வெறுமனே நினைவு கூறுவதோடு நாம் நின்றுவிடாமல் அணு உலைகளுக்கு எதிரான போராட்டத்தில் நம் கரங்களை இணைத்துக் கொண்டு ஜப்பானில் நடந்தது நம்மண்ணில் நிகழாமல் தடுப்போம் என உறுதியேற்போம்.

நற்றமிழன்.ப‌ –
இள‌ந்தமிழகம் இயக்கம்

இக்கட்டுரை மக்கள் விடுதலை இதழின் ஆகஸ்டு மாத பதிப்புக்காக எழுதப்பட்டது.

About நற்றமிழன்

ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் தரக்கட்டுபாட்டுத் துறையில் பணி புரிகின்றார். தற்சமயம் திருப்பூரில் வசித்து வருகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*