Home / அரசியல் / டாஸ்மாக்கினால் யாருக்கு இலாபம் ?

டாஸ்மாக்கினால் யாருக்கு இலாபம் ?

டாஸ்மாக் கடைகளை மூடக்கோரியும் முழுமையான மது விலக்கு கோரியும் தமிழகமெங்கும் எழுச்சி மிக்க போராட்டங்கள் வலுவடைந்திருக்கின்றன. காந்தியவாதி சசி பெருமாள், கடந்த வாரம் குமரி மாவட்டத்தில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையை மூடக் கோரி, செல்போன் கோபுரம் மீது ஏறி போராடிய போது,மர்மமான முறையில் களத்திலேயே உயிர் நீத்தார். குறைந்தபட்சம் பள்ளி கல்லூரிகள், வழிபாட்டுத் தளங்கள் அருகிலுள்ள மதுக்கடைகளை அரசு மூடும் வரை, சசி பெருமாளின் உடலைப் பெற்றுக் கொள்ளப் போவதில்லை என அவர் குடும்பத்தாரும் போராட்டக் களத்திற்குள் குதித்துள்ளனர்.

maxresdefault

இறந்தும் போராடிக் கொண்டிருக்கும் சசி பெருமாளின் தியாகத்தையும் போராட்டத்தையும் அடுத்த கட்டத்திற்கு முன்னகர்த்தும் முயற்சியாக கல்லூரி மாணவர்களும் இளைஞர்களும் தமிழகமெங்கும் வீரியமிக்க போராட்டங்களை நடத்தி வருகின்றனர். டாஸ்மாக்குக்கு எதிரான போராட்டங்களை ஒடுக்கும் நோக்கத்தோடு போராடும் மாணவர்களின் மீது கொடூர‌ வன்முறையை தற்போது கட்டவிழ்த்து விட்டிருக்கிறது தமிழக அரசு. தற்போது டாஸ்மாக் கடைகளை போராடுபவர்களிடமிருந்து பாதுகாக்க, ஒவ்வொரு மதுக்கடையின் முன்பும் காவல்துறை நின்று பாதுகாத்து வருகிறது. மதுக்கடைகளை அரசே நின்று போற்றிப் பாதுகாப்பதை விட ஒரு வெட்கக் கேடு இருக்க முடியாது. மது விலக்குக்கு எதிரான கருத்தியல் வலுப்பெற்றிருக்கும் இவ்வேளையிலும், தமிழக அரசு போராட்டங்களை கடுமையாக ஒடுக்குவதற்கும் காவல்துறையின் துணையோடு அரசே முன்னின்று மதுக்கடைகளைக் காப்பதற்கும் என்ன காரணம் என்பதையும் அலச வேண்டியிருக்கிறது.

டாஸ்மாக்கிற்கு எதிராக போராடும் மாணவர்களை அடிக்கும் காவல்துறை... சட்டம், ஒழுங்கு ????

டாஸ்மாக்கிற்கு எதிராக போராடும் மாணவர்களை அடிக்கும் காவல்துறை… சட்டம், ஒழுங்கு ????

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 47 ஆம் பிரிவு, அரசு தன் மக்களின் உடல்நலத்தையும் ஊட்டச்சத்தையும் உயர்த்துவதை முதன்மைக் கடமையாகக் கொள்ள வேண்டுமெனவும், மருத்துவ நோக்கிற்காக அன்றி, உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கக் கூடிய எவ்வித நச்சுப் பானங்களையும் தடை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்துகிறது. ஆகவே, டாஸ்மாக்கின் வாயிலாக, அரசே தன் மக்களுக்கு ஊற்றிக் கொடுப்பதால், தமிழக அரசு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மீறிவிட்டது. அது மட்டுமின்றி, 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு சரக்கை விற்பதன் மூலமும், கல்வி நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் ஆகிய இடங்களில் 100 மீட்டர் சுற்றளவுக்குள் டாஸ்மாக் கடைகளை நிறுவிப் பாதுகாப்பதன் மூலமும் எல்லா விதிகளையும் தமிழக அரசு உடைத்துவிட்டது.

குடிபோதையின் விளைவுகள் என்ன? என்பதை பல கட்டுரைகளில் படித்திருப்போம். குடும்பம் சீரழிதல், குழந்தைகளின் எதிர்காலம் பாழாகுதல், பாலியல் வன்கொடுமைகள், விபத்துகள் அதிகரிப்பு என அடுக்கடுக்காக பிரச்சினைகள் இருந்தாலும், குடி போதையினால் பாதிக்கப்படுவது அதிகம் பெண்கள் தான். கணவனின் உடல் நலம் பாதிக்கப்படும் போது வருமானமும் பாதிக்கப்படுகிறது. மருத்துவச் செலவு, குழந்தைகளின் கல்வி என குடும்பப் பெண்கள் அலைக்கழிக்கப்படுவது ஒருபுறமிருக்க, குடி போதையில் மனைவிக்கும் மகளுக்கும் வேறுபாடு அறியாத குடிமகன்கள், மகள்களை பாலியல் வன்புணர்வு செய்த கதைகளையும் கேள்விப்படுகிறோம். படிக்கும் வயதில் சிறுவர்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமையாவதும்,போதையில் விபத்துகள் அதிகரிப்பதும் என தொடர் விளைவுகள் குடிப்பழக்கத்தினால் ஏற்படுகின்றன. “சோர்வு நீங்க, உடல் வலி நீங்க‌ குடிக்கிறோம்” என்பதில் தொடங்கி, பார்ட்டி, ஃபேஷன் என குடிப்பவர்கள் வரை ஒரு மிகப்பெரிய “குடி” அரசை உருவாக்கிய பெருமை தமிழக அரசையே சாரும்.

jaya

9 ஆண்டுகளுக்கு முன் 3639 கோடி ரூபாயாக இருந்த டாஸ்மாக்கின் வருவாய் 21,680 ரூபாயாக உயர்த்தியதன் மூலம், தமிழக அரசு ஆல்கஹால் வியாபாரத்தை எந்தளவு மும்முரமாக நடத்தியிருக்கிறது என்பது புலனாகிறது. அதாவது, குடிப்பவர்களின் எண்ணிக்கையை ஆறு மடங்காக உயர்த்தியிருக்கிறது என்றும் ஒருவகையில் பொருள் கொள்ளலாம். டாஸ்மாக்கின் மூலம் பெறப்படும் வருவாய் மிகப்பெரியது. அதனை வைத்தே அரசின் மக்கள் நலத்திட்டங்களின் செலவைச் சந்திக்க முடிகிறது என ஒரு பொதுப்புத்தி திட்டமிட்டே உருவாக்கப்பட்டிருக்கிறது. குடிக்காதவர்களும் குடிப்பழக்கத்தினால் நேரடியாக பாதிக்கப்படாதவர்களும் கூட “இதில்லனா கவர்ன்மென்ட்ட ரன் பண்ண முடியாதுப்பா” என்று சமரசம் அடையச் செய்த பொதுக்கருத்து இன்று மக்கள் திரள் போராட்டங்களின் மூலம் உடைபட்டிருக்கிறது. மக்களின் உயிரைக் குடித்து, குடும்பங்களை அழித்து, தமிழகத்தையே தள்ளாடச் செய்து வரும் வருவாயில் ஓர் அரசு எப்படி மக்கள் நலன் குறித்து சிந்திக்க முடியும்?

1983 ஆம் ஆண்டு, ஒரு சிறிய முதலீட்டில் தொடங்கப்பட்ட அரசு நிறுவனமான டாஸ்மாக் (Tamil Nadu State Marketing Corporation), மொத்த மது விற்பனையை தனியாரிடமிருந்து தன்வசம் எடுத்துக் கொண்டது. அடுத்த 20 ஆண்டுகளுக்குப் பிறகு, 2003 இல் சில்லறை மது விற்பனையையும் கைப்பற்றியதன் மூலம், மது விற்பனையின் ஒற்றை அதிகார‌ மையமாக டாஸ்மாக் உருவெடுத்தது. டாஸ்மாக்கினால் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது உண்மை தான். ஆனால் அந்த வருவாய் யாருக்கு என்பதில் தான் இங்கு ஒரு போட்டியே நிலவுகிறது. தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்து வரும் இரு முக்கிய கட்சிகளான தி.மு.கவும் அ.தி.மு.கவும் யார் இந்த “சரக்கு”ச் சந்தையைக் கைப்பற்றி, தனது கட்சிக்காரர்களுக்கு வருமானம் பெற்றுத் தருவது என்பதில் உள்ள போட்டி அது.

தற்போது மது உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் முதலிடத்தில் இருக்கும் “மிடாஸ் கோல்டன் டிஸ்டில்லரீஸ்” (Midas Golden Distilleries) நிறுவனத்தின் 2010-11ஆம் ஆண்டின் வருவாய் 360 கோடியாக இருந்தது. அதிமுக அரசு பொறுப்பேற்ற அடுத்த இரண்டு ஆண்டுகளில், அதாவது 2012-13 ஆம் ஆண்டுகளில் அதன் வருவாய் 1077 கோடியை எட்டியது. டாஸ்மாக்கிற்கு அதிகமாக சரக்கு வழங்கும் இந்நிறுவனத்தின் உரிமையாளர் ஹாட் வீல்ஸ் இந்தியா மற்றும் சிக்னட் ஏற்றுமதியாளர்கள். இந்த ஹாட்வீல்ஸ் இந்தியா நிறுவனத்தில் சசிகலாவுக்கு 31 விழுக்காடு பங்குகளும் இளவரசிக்கு 31 விழுக்காடு பங்குகளும் இருக்கின்றன. இவர்கள் இருவரும் யார் என அறிமுகம் தேவையில்லை. இவர்களுடைய நிறுவனங்கள் அனைத்துமே ஏறத்தாழ ஒரு லட்சம் முதலீட்டில் மட்டுமே தொடங்கப்பட்டவை. ஆகவே இத்தகைய உடன்பிறவா சகோதரிகளின் வருமானத்தைப் பெருக்கவும் இவர்களுக்கு உரிமையான மற்ற நிறுவனங்களின் வருமானத்தில் வரி ஏய்ப்பு செய்யவும், டாஸ்மாக்கை ஊற்றி வளர்ப்பது ஜெயலலிதா அரசின் தலையாயக் கடமையாக இருப்பதில் வியப்பேதுமில்லை.

bala-cartoon-16-5-13-e

 

2006 – 2011 ஆம் ஆண்டுகளில் இரு மது உற்பத்தி நிறுவனங்களுக்கு தி.மு.க ஆட்சிக் காலத்தில் உரிமம் வழங்கப்பட்டது. 2008 இல் உரிமம் பெற்ற “எலைட் டிஸ்டில்லரீஸ்” (Elite Distilleries) தன் வருமானத்தை பூஜ்ஜியத்திலிருந்து, ஒரே ஆண்டில் 712 கோடி ரூபாயாக உயர்த்தியது. அதே எலைட் நிறுவனத்தின் வருவாய், 2011 – 12 ஆம் ஆண்டு இடைவெளியில் 466 கோடியாகச் சுருங்கியது. இடையில் ஒரு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைச் சொல்லத் தேவையில்லை. அதே போல “எஸ்.என்.ஜே டிஸ்டில்லரீஸ்” (SNJ Distilleries) என்ற மற்றொரு நிறுவனத்திற்கும் 2008 இல் உரிமம் வழங்கப்பட்டு, 2008 – 09ஆம் ஆண்டுகளில் 940 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியது. அதிமுக அரசு பொறுப்பேற்றதும் 2012 – 13 இல் அதன் வருவாய் 834 கோடி ரூபாயாகக் குறைந்தது.

இந்த எலைட் நிறுவனத்தின் உரிமையாளர்கள் ஜே.ஹோட்டல்கள் (43 விழுக்காடு பங்குகள்) குழுமமும்,இந்துஸ்தான் கட்டுமான நிறுவனமும் (55 விழுக்காடு) ஆகும்.2008 ஆம் ஆண்டு வரை இந்த ஜே.ஹோட்டலின் 50 விழுக்காடு பங்குகளை வைத்திருந்தவர் திமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் ஆவார். மீதி 49% பங்குகள் அவர் மனைவி அனுசுயாவிடம் இருந்தன. பின்னர் மொத்த பங்குகளும் (99%) அவர்கள் மகன் சந்தீப்புக்கு மாற்றப்பட்டன. இந்துஸ்தான் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர்கள் இதே தாயும் மகனுமாவார்கள். இவ்வளவு நீட்டி முழக்கிச் சொல்லாமல், இந்த எலைட் நிறுவனத்தை நடத்துவது ஜெகத்ரட்சகன் குடும்பத்தினர் எனவும் சொல்லலாம். அடுத்து எஸ்.என்.ஜே நிறுவனத்தை நடத்துவது யாரென்றால், எஸ்.என்.ஜெயமுருகன் மற்றும் அவரது மனைவி ஜே.கீதா. எஸ்.என்.ஜெயமுருகன், “கலைஞரின் கைவண்ணத்தில்” உருவான‌ ”உளியின் ஓசை” மற்றும் ”பெண் சிங்கம்” ஆகிய திரைப்படங்களின் தயாரிப்பாளர் ஆவார்.

விஜய் மல்லையாவிற்கு சொந்தமான யுனைடெட் ஸ்பிரிட்ஸ் (United Spirits Limits), தி.மு.கவின் டீ.ஆர்.பாலுவுக்கு சொந்தமான கோல்டன் வாட்ஸ் (Golden Vats Pvt.Ltd), பொள்ளாச்சி மகாலிங்கத்திற்கு சொந்தமான சிவா டிஸ்டில்லரீஸ் (Shiva Distelleris), கலைஞர் டிவி சரத் ரெட்டிக்கு நெருக்கமான வாசுதேவனுக்கு சொந்தமான கல்ஸ் டிஸ்டில்லரீஸ் (KALS Distilleries) என்று 18 தனியார் தொழிற்சாலைகள், மதுவை உற்பத்தி செய்து டாஸ்மாக்குக்கு வழங்குகின்றன.  மதுகடைகளை மூடுவதால் நட்டம் அரசுக்கல்ல, அதிமுக, திமுக  உள்ளிட்ட எல்லா சாராய முதலாளிகளுக்கும், மதுக்குடில்(பார்) நடத்தும் எல்லா கட்சி அரசியல்வாதிகளுக்கும்,  மாமூல் வாங்கித் தின்னும் காவல்துறைக்கும் தான்…ஒற்றை வரியில் சொல்ல வேண்டுமானால் தமிழகமே ஒரு சாராய சாம்ராஜ்யத்தின் கீழ் தான் இயங்குகிறது.

download

தமிழக அரசு ஏன் சாராயக்கடையை நடத்துகிறது என்பதற்கு மேற்கூறப்பட்ட தரவுகளே போதுமானதாக இருக்கும். டாஸ்மாக்கினால் அரசுக்கு வருவாய் வருகிறதா இல்லை இரு கட்சிகளின் பினாமிகளுக்கு வருமானம் வருகிறதா என்பதில்தான் நாம் கவனம் கொள்ள வேண்டும். அதனால்தான் பொங்கல் தீபாவளி பண்டிகை நாட்களில் 200 கோடி, 300 கோடி “டார்கெட்” இலக்கை அரசே நிர்ணயிக்கிறது.

முக்கிய எதிர்க்கட்சியான தி.மு.கவின் தலைவர் கருணாநிதி, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மது விலக்கைக் கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிக்கை வெளியிட்டார். ஆனால் இந்த அறிக்கை சூடான செய்தியாகி ஆவி பறக்குமுன்னே, “தமிழகத்தில் மது விலக்கை கொண்டு வரும் சாத்தியக்கூறுகள் குறைவு. நாம் தான் உருவாக்க வேண்டுமென” பின் வாங்கினார். ஆனால் தற்போது மது விலக்குக்கு எதிராக தமிழகத்தின் பெருவாரியான எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டிருக்கின்றன. மதிமுக, மனித நேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் ஆகியோர் இணைந்து நேற்று ஆகத்து 4, முழு அடைப்புப் போராட்டத்தை நடத்தியிருக்கின்றனர். இப்போராட்டத்திற்கு தேமுதிக,காங்கிரசு, திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவளித்திருக்கின்றன. பா.ம.க ஆதரவளிக்கவில்லை.

Amma-Squared

மக்களுக்கு இலவசமாக கொடுக்கப்பட வேண்டிய கல்வி தனியாரிடம் இருக்கிறது. கல்விக் கொள்ளையில் இலாபம் பார்த்து பழகிவிட்ட தனியார் முதலாளிகள் பொறியியல்,மருத்துவம் என தங்களது கொள்ளைத் தொழிலை மேம்படுத்திக் கொள்கின்றனர். கல்வி, சுகாதாரம்,மருத்துவம் என மக்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்து தராத அரசுகள், டாஸ்மாக்கின் மூலம் சாராயக் கடைகளை நடத்துவதன் சூட்சுமத்தை வெகுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

குற்றம் செய்தவனை விட குற்றம் செய்யத் தூண்டியவனே முதல் குற்றவாளி என இந்திய அரசியலைமைப்புச் சட்டம் சொல்கிறது. ஆகவே, தமிழக குடும்பங்களைச் சீரழித்து, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மதுவுக்கு மக்களை அடிமையாக்கி, பாலியல் வன்கொடுமைகள், சாலை விபத்துகள் வரை அனைத்து வகையான சமூக விரோதக் குற்றங்களுக்கும் தமிழக அரசே குற்றவாளியாகிறது. இத்தகைய மக்கள் விரோத அரசையும் தனியார் இலாப வெறியையும் தொடர்ந்து அம்பலப்படுத்துவதும், தமிழகத்தின் கடைசி டாஸ்மாக் கடையை இழுத்து மூடும்வரை போராடுவதும் நம்முடைய முதன்மையான கடமைகளில் ஒன்று.

 

அ.மு.செய்யது – இளந்தமிழகம் இயக்கம்.

 

கேலிச்சித்திரங்கள் அனைத்தும் பாலா அவர்களால் வரையப்பட்டது. தோழருக்கு நன்றிகள்…

About அ.மு.செய்யது

2 comments

  1. எளிமையான கட்டுரை. கொடுக்கப்பட்ட தரவுகள் உங்களது கருத்துக்களை சரியாக நிறுவுகின்றன. கேலிச்சித்திரங்கள் நேர்த்தியாக அமைந்திருக்கின்றன.
    ஒன்று மட்டும் சொல்ல விழைகிறேன். போராட்டங்களில் அற வழியினை கடைப்பிடித்தல் முக்கியம். இந்த கோர வன்முறை நிலைமைக்கு தள்ளப்பட்டது அரசின் இரும்பு நெஞ்சு தான் என்றாலும் மதுகடைகளை அடித்து தான் நொறுக்குவோம் என்ற இந்த கும்பல் மனோபாவத்தை ஏற்க முடியவில்லை. சேலத்தில் இறந்த டாஸ்மாக் ஊழியரின் குடும்பத்திற்கு இந்த வன்முறையாளர்களால் பதில் கூற முடியாது.

    • தங்கள் கருத்திற்கு நன்றி தோழர். அற வழியில் போராடி தான் சசி பெருமாள் இறந்தார் (அவரது மரணத்தில் உள்ள மர்மம் இன்னும் விலகவில்லை). மக்கள், மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து மதுக்கடையை ஒழிப்பதும் அறவழி தான், அங்கு பொருட்களுக்கு தான் சேதம் விளைகின்றதே தவிர அங்குள்ள பணியாளர்கள் அல்ல. அதே நேரம் சேலத்தில் நடந்தது போல பெட்ரோல் குண்டு வீசுவது தான் வன்முறை வழி, அது தவறு, அது போன்ற நிகழ்வுகள் நடக்கக்கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*