Home / அரசியல் / டாஸ்மாக்கினால் அரசுக்கு இலாபமா? நட்டமா?

டாஸ்மாக்கினால் அரசுக்கு இலாபமா? நட்டமா?

தமிழ்நாடு சந்தித்து வரும் மிகப் பெரிய பிரச்சனைகளில் ஒன்று தான் இந்த மதுப் பழக்கம். பத்தாண்டுகளுக்கு முன்பு வரை திரை மறைவில் தான் சாராயங்களை வாங்கிப் பருகுவார்கள் என்ற நிலையில் இருந்து இன்று பட்டி தொட்டி எல்லாம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தண்ணீர் பருகுவது போல மதுவை பருகிவிடும் நிலை ஏற்பட்டு விட்டது. இன்று எங்குத் திரும்பினாலும் அரசு நடத்துகின்ற மதுக்கடைகள் மூலைக்கு மூலை பல்லிளித்து வரவேற்கின்றது. பல மதுக்கடைகள் பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், குடும்பங்கள் வாழ்கின்ற குடியிருப்பு பகுதிகளிலேயே அமைந்திருக்கின்றது. இந்த மதுக்கடைகளில் இன்னார் இன்னாருக்குத் தான் மது விற்க வேண்டும் விற்க கூடாது என்ற எந்தவொரு விதியும் இங்கு கிடையாது. சிறுவர்கள், முதியவர்கள், நோயாளர்கள் எனக் கேட்பவர் எவருக்கும் மதுவை வாரி வழங்குகின்றனர். ஒவ்வொரு வட்டாரத்திலும் பொழுது போகவில்லை என்றாலே மதுபானக் கடைகளை நோக்கி நடக்கத் தொடங்குகின்றனர்கள் இளவட்டங்கள், நடுத்தர வயதினர், குடும்பத் தலைவர்கள் என அனைவருமே. மது அருந்தினால் மானக் கேடு என்ற நிலை மறைந்து போய் இன்று கல்யாணம், காது குத்து என எல்லாம் வைபவங்களிலும் தீர்த்தம் என்ற பேரில் மது விருந்துக்கு என ஒரு தொகை ஒதுக்கப்பட்ட எல்லோருக்கும் பரிமாறப்படுகின்ற அவல நிலைக்குத் தமிழ்நாடு வந்துவிட்டது. இன்று மதுபானக் கடைகளைக் காட்சிப்படுத்தாத தமிழ்த் திரைப்படங்களே இல்லை என்ற நிலை வந்துவிட்டது.

vipmainb

அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சமூக ஆர்வலர்கள் இந்த மதுப் பழக்கத்தின் கேடுகளைப் பற்றி விசனங்கள் தெரிவித்து வந்த போதும் வெகுமக்கள் ஊடகங்களோ, அதிகாரத்தில் இருந்தவர்களோ காது கொடுத்துக் கேட்வில்லை. மடை திறப்பது போல மதுக் கடை திறந்து வருவாயே பிரதானம் என்ற நோக்கில் தமிழ்நாடு அரசாங்கம் மது விற்பனையை ஊக்குவித்து வந்தது. இதனால் எத்தனை இழப்புக்களைத் தினந்தினம் நாம் சந்தித்துக் கொண்டிருக்கின்றோம் என்பதை யாரும் தெளிவாகப் பேசுவதில்லை.

ஆனால், மதுக்கடைகளை மூடிவிட்டால் அரசிற்கு வருவாய் இழப்பு வரும், தமிழ்நாட்டு அரசு எந்திரமே இயங்காமல் போகும், தமிழ்நாடு அரசு வழங்கி வரும் சமூக உதவிகளுக்கே முட்டுக்கட்டையாகி விடும் என்ற தொனியில் ஊடகங்கள் முதல் தெருமுனைகள் வரை சிலர் பேசுவதைக் கேட்கக் கூடியதாக இருக்கின்றது. அதுவும் 30, 000 கோடி என்றும் தொடர்ந்து சொல்லப்பட்டு வருகின்றது. இவை எல்லாம் எந்தளவுக்கு நிஜம்? என்பதைப் பற்றிக் கொஞ்சம் பார்ப்போம்.

தமிழ்நாடு வாணிபக் கழகம் என்றழைக்கப்படும் டாஸ்மாக் நிறுவனத்தின் ஊடாகவே தமிழ்நாடு அரசு மாநிலம் முழுவதும் 6823 கடைகளில் மது விற்பனை நடத்துகின்றது. கடந்த 2012-2013-யில் டாஸ்மாக் மது விற்பனை மூலம் தமிழ்நாடு அரசுக்கு 21,680 கோடி ரூபாய் வருவாய் வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதில் கலால் வரியாக 12,125 கோடி ரூபாய்களும், விற்பனை வரியாக 9,555 கோடி ரூபாய்களும் கிடைத்திருப்பதாகத் தெரிகின்றது.

மதுவுக்கு எதிராக தன் வாழ்நாளின் இறுதிவரை போராடிய சசிபெருமாள்.

மதுவுக்கு எதிராக தன் வாழ்நாளின் இறுதிவரை போராடிய சசிபெருமாள்.

டாஸ்மாக்கில் என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்பதைப் பார்ப்போம். தமிழ்நாடு அரசின் வாணிபக் கழகம் தனியார் மது உற்பத்தியாளர்களிடம் இருந்து மதுவை கொள்வனவு செய்து, மாநிலம் முழுவதும் அது நடத்துகின்ற 6823 கடைகளில் வைத்து மக்களுக்கு விற்பனை செய்கின்றது. இந்த விற்பனையில் எல்லாச் செலவுகளும் போக மிச்சம் வருவதைத் தமிழ்நாடு அரசு எடுத்துக் கொள்கின்றது. மதுவை கொள்வனவு செய்வது, மதுக்கடைகளை நடத்துவது, மதுக்கடைகளில் வேலை செய்பவர்களுக்குச் சம்பளம் வழங்குவது, போக்குவரத்துச் செலவுகள், இதர செலவுகள், கலால் வரி எனக் கடந்த 2012-13 ஆம் ஆண்டில் டாஸ்மாக்கின் செலவு எவ்வளவு தெரியுமா? 25, 385 கோடி ரூபாய்கள். அதே ஆண்டு டாஸ்மாக் நிறுவனம் ஈட்டித் தந்த தொகை எவ்வளவு தெரியுமா? 25, 313 கோடி ரூபாய். இரண்டையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் டாஸ்மாக் நிறுவனத்திற்கு 72 கோடி ரூபாய் இழப்பு தான் வந்துள்ளது. இதில் டாஸ்மாக் நிறுவனம் செலுத்திய வருமான வரிகள் மற்றும் கடன் வட்டித் தொகைகளைச் சேர்த்தால் 99 கோடி ரூபாய் இழப்புத் தான் ஏற்பட்டுள்ளது.

டாஸ்மாக் நிறுவனத்தில் இருந்து அரசுக்கு நட்டம் தான் ஏற்படுகின்றது. மது உற்பத்தியாளர்கள் செலுத்தும் கலால் வரி, மது விற்பனையாளர்கள் செலுத்தும் விற்பனை வரி, தனியார் ஓட்டல்கள், கிளப்புகள் செலுத்துகின்ற கூடுதல் கட்டணம் போன்றவைகள் ஊடாகவே அரசுக்கு கொஞ்சம் வருவாய் வருகின்றது.

இதில் பெரும் பங்கு வருவாய் கலால் வரிகள் மூலமாகவே பெறப்படுகின்றது என்பதை அறிகின்றோம். நிச்சயம் மது உற்பத்தியாளர்கள் தமது கலால் வரிச் செலவையும் சேர்த்தே தாங்கள் விற்கும் மதுவின் விலையில் வைத்து அரசிற்கு மதுவை வழங்குவார்கள். அப்படி என்றால் இந்தக் கலால் வரியானது உண்மையில் அரசிற்கு லாபம் இல்லை, அரசு சாராய தொழிற்சாலைகளுக்கு கொடுக்கின்ற காசில் ஒரு பங்கே மீண்டும் அரசிற்கு வருகின்றது.

"காவல் துறை" "மதுவை காக்கும் துறையாக"

“காவல் துறை” “மதுவை காக்கும் துறையாக”

அடுத்து விற்பனை வரிக்கு வருவோம். உண்மையில் மது விற்பனை மூலமாக அரசுக்கு வருகின்ற உண்மையான லாபம் விற்பனை வரிகள் ஊடாகவே வருகின்றது எனலாம். ஏனெனில் ஒவ்வொரு மதுக் குடுவை விற்கப் படும் போதும் வாடிக்கையாளர்கள் விற்பனை வரியையும் சேர்த்தே கொடுத்து மதுக் குடுவைகளை வாங்கிச் செல்கின்றனர் எனலாம். சரி, கடந்த 2012-13 ஆண்டில் அரசிற்கு விற்பனை வரி மூலமாகக் கிடைத்த வருவாய் 9, 555 கோடி ரூபாய்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. ஆனால், இதில் 50 % மட்டுமே டாஸ்மாக் கடைகளில் விற்கப்பட்ட மது மூலமாகப் பெறப்பட்டதாகத் தெரிகின்றது. மீதமுள்ள 50 % வருவாயும் மாநிலம் முழுவதும் உள்ள 872 உரிமம் பெற்ற தனியார் கிளப்புகள், ஓட்டல்களில் விற்கப்படும் மதுவகைகள் மீதான விற்பனை வரி மூலமாகப் பெறப்பட்டு இருக்கின்றன. இதில் கணிசமான தொகை இறக்குமதி செய்யப்பட்ட மதுவகைகள் மீது போடப்படும் விற்பனை வரி மூலமாகப் பெறப்பட்டவை. அப்படியானால், கிட்டத்தட்ட 4700 கோடி ரூபாய்கள் மட்டுமே டாஸ்மாக் கடைகளை நடத்துவதால் அரசிற்குக் கிடைத்த வருவாய் என்பதை நன்கு புலப்படுகின்றது. டாஸ்மாக் கடைகளை மூடுவதால் அரசிற்கு உண்மையில் ஏறத்தாழ 5000 கோடி ரூபாய் மட்டுமே வருவாய் இழப்பு நேரிடும். இந்த வருவாய் இழப்பை எத்தனையோ வழிகளில் ஈடுகட்ட முடியும். இதற்கிடையில் அதிகாரிகளின் லஞ்சம், டெண்டர்களில் ஊழல், முறைகேடுகள், டாஸ்மாக் கடைகளில் போலி மதுபானங்கள், கலப்படங்கள், கடத்தல்கள் என்பவற்றைப் பற்றி எல்லாம் விரிவாக ஆராய்ந்தால் மாநில அரசிற்கு வருவாயை விட இழப்புக்களே மிக அதிகம் என்பது நன்கு புலப்படுகின்றது.

மதுப் பழக்கத்தினால் அரசிற்கு ஆண்டுக்கு பல்லாயிரக் கணக்கான கோடி ரூபாய்கள் வெவ்வேறு வழிகளில் விரயமாகி வருகின்றது. மக்கள் தொகையில் 40 % பேர் மதுப் பழக்கமுடையோர் எனச் சொல்லப்படுகின்றது. இவர்களது உடல்நலம் பாதிக்கின்றது. சிறுநீரக நோய்கள், ஈரல் செயலிழப்பு உட்படப் பல்வேறு கொடிய நோய்கள் ஏற்படுகின்றன. இந்த மக்களின் உடல்நலங்கள் கெடுகின்ற போது, அவை மறைமுகமாக மாநில அரசின் மருத்துவச் செலவினங்களை அதிகரிக்கவே செய்யும். இது ஒருபுறம் என்றால் மதுப் பழக்கத்தினால் இந்தியாவிலேயே தமிழகத்தில் ஏற்படும் சாலை விபத்துக்கள் மிக மிக அதிகம். இந்தச் சாலை விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புக்கள், பொருளாதார இழப்புக்கள் எத்தகையதாக இருக்கும் என்பதைக் கணித்துப் பாருங்கள். அது மட்டுமின்றிச் சிறுவர்கள், இளம்வயதினர் மதுப்பழக்கத்துக்கு அடிமையாகி விடுவதால் கல்வி கற்பதில்லை, வேலைக்குப் போவதில்லை, தொழில்களில் ஈடுபடுவதில்லை, குடும்பங்கள் சிதைகின்றன இவ்வாறான வழிகளில் தமிழ்நாடு அரசிற்கு ஆண்டிற்கு எத்தனை கோடி ரூபாய்கள் வருவாய் இழக்கின்றது என்பதை என்றாவது அலசி ஆராய்ந்தது உண்டா? ஒரு மனிதன் கல்வி கற்று நல்ல வேலைக்குப் போய் நல்லதொரு தொழிலை செய்து குடும்பமாக வாழ்கின்ற போது இயல்பாகவே அவனது வருவாயும், வாழ்வியல் நிலைத்தன்மையும் உயர்கின்றது. அந்த மனிதன் மூலமாகச் சமூகத்தின் உற்பத்தித் திறன் அதிகரிக்கின்றது. அந்த உற்பத்தித் திறன் கூடும் போது அது இறுதியில் பல்வேறு விதங்களில் மாநில அரசின் வருவாயை அதிகரிக்கவே செய்யும்.

sddefault

ஏழரைக் கோடி மக்கள் வாழ்கின்ற, இந்தியாவிலேயே நகரமயமாகி வரும் மாநிலங்களில் முதலிடத்தில் உள்ள, லட்சக் கணக்கான சிறு தொழில்கள், ஆயிரக் கணக்கான பெருந்தொழில்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சிகள், வானொலிகள், இதழ்கள் தனித்துவமான பொழுதுபோக்குத் துறைகள், ஆயிரக் கணக்கான தனியார் பள்ளிகள், நூற்றுக் கணக்கான தனியார் கல்லூரிகள், இந்தியாவிலேயே சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகின்ற என எத்தனையோ பிளஸ்களைக் கொண்டு தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளை மூடுவதால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்டுவது எல்லாம் மிகச் சாதாரணமான ஒன்று என்பதை வேண்டும் என்றே திட்டமிட்டே மறைத்து வருகின்றனர். தமிழகத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் அத்தனை தனியார் கல்வி நிலையங்களிடமும் கூடுதல் வரி அறவீடு செய்தாலே பல ஆயிரம் கோடி ரூபாய் வந்துவிடும். இந்தக் கல்வி நிலையங்கள் கணக்கில் காட்டாமல் ஆண்டுக்கு பல கோடி ரூபாய்களை நன்கொடை என்ற பேரில் வாங்கிக் குவிக்கின்றன. அதில் ஒரு பங்கை அரசு வரி என்ற பேரில் வாங்கிக் கொள்வதால் மதுக்கடை வருவாய் இழப்பை ஈடு செய்துவிடலாம். ஒருவகையில் மழைக்கு முளைக்கும் காளாண்களாய் உருவாகி வரும் கல்வி நிலையங்களைக் கட்டுக்குள் வைப்பதற்கும் இதுவே சரியான வழிமுறையாகவும் இருக்கும்.

அரசும், பெரும்பான்மை ஊடகங்களும் இவற்றை நமக்கு சொல்லாமல், டாஸ்மாக்கை அடைத்துவிட்டால் அரசே இயங்காது என்பது போன்ற மாயத்தோற்றத்தை உருவாக்குகின்றனர். டாஸ்மாக்கை மூடுவதனால் அரசுக்கு ஏற்படும் வருவாயை சரிகட்ட மேலே கூறியது போல‌ பல்லாயிரம் மாற்றுத்திட்டங்கள் உண்டு, ஆனால் அதிமுக, திமுக உள்ளிட்ட முதலாளிகள் நடத்தும் சாராய தொழிற்சாலைகளுக்கும், மதுக்குடில்(பார்) நடத்தும் உள்ளூர் அரசியல்வாதிகளுக்கும், மாமூல் வாங்கித் தின்னும் காவல்துறை உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்கும் தான் மாபெரும் இழப்பு ஏற்படும், இதை தான் அரசு தனது இழப்பாக காட்டுகின்றது. மக்கள் தாங்கள் சீரழிக்கப்படுகின்றோம் என்பதை உணர்ந்து சாராயத்தையும், அதைச் சுற்றி நடக்கும் அரசியலையும்  புறக்கணிக்கத் தொடங்கியுள்ளார்கள், இது தமிழகம் தழுவிய அளவில் தனது இறுதி இலக்கை எட்டும் வரை போராட்டங்கள் நடைபெற வேண்டும் இல்லையென்றால் அதை ஒழிப்பது அவ்வளவு எளிதல்ல. அதுவரை அவர்களால் இயன்றவரை இது போல பொய்யான தரவுகளைப் பரப்பி மாயப் பிம்பத்தை உண்டாக்கி மது விற்பனை இல்லாமல் உலகமும் அண்டமும் சுழலாது என்று கதையளப்பார்கள். அப்படி இந்தச் சாராய வருமானத்தை நம்பித்தான் அரசு என்றால் அவ்வரசே இல்லாமல், நடத்த முடியாமல் சீரழிந்துதான் போகட்டுமே.

— விண்ணன், மறத்தமிழன், தினேஷ் – இளந்தமிழகம்.

About விசை

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*