Home / அரசியல் / தூக்குக் கயிற்றின் நிறம் காவி!

தூக்குக் கயிற்றின் நிறம் காவி!

யாகூப் மேமனின் பிறந்த நாளை இறந்த நாளாக்கிய இந்தியா – தூக்குக் கயிற்றின் நிறம் காவி!

கடந்த ஜூலை 31 யாகூப் மேமனின் 54 ஆவது பிறந்த நாள். அன்றுதான் அவரது இறந்த நாளும்கூட. இந்திய அரசின் ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் முழு மூச்சுடன் மூன்று நாட்கள் அல்லும்பகலும் செயல்பட்டு பிறந்த நாளை இறந்த நாளாக்கும் சாதனையை நிகழ்த்திக் காட்டியுள்ளது.

தூக்குக்கென்று தேர்வு செய்யப்பட்ட நாள் இந்திய ஆளும்வர்க்கத்தின் வன்மத்தைக் காட்டியது. அவர்களின் நீதித்துறை சட்டப்படி நடக்கிறதென்று காட்டுவதற்கு இரவுக் காட்சியில் நீதிமன்ற நாடகம் நடந்தது. தடா நீதிமன்றம் விதித்த மரண தண்டனையைக் கேள்விக்குள்ளாக்கிய மனுவைப் பரிசீலித்த உச்ச நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வில், நீதிபதி தாமஸ் குரியன் பிழை களைவு மனுவை பரிசீலித்த நீதிமன்ற நடைமுறையில் பிழையுள்ளது என்று கூறி தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடைவிதிக்க முன்வந்தார். இன்னொரு நீதிபதியான ஏ.ஆர்.தவே தடைவிதிக்க மறுத்துவிட்டு ”அரசன் பாவம் செய்த பாவிக்குத் தண்டனை வழங்காவிட்டால் அந்தப் பாவம் அவனையே சாரும்” என்ற மனு ஸ்மிருதியிலுள்ள மந்திரத்தை உச்சாடனம் செய்தபடி உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியை அணுகுவோம் என்றார். தலைமை நீதிபதி மூவர் அமர்வை நியமித்தார். அந்த அமர்வால் யாகூப்பின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

pranab_20130222

அடுத்த சில மணித்துளிகளில் யாக்கூபின் கருணை மனுவை நிராகரித்தார் மகாராஷ்டிர மாநில ஆளுநர். குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்ட கருணை மனுவையும் நிராகரிக்கும் முடிவை உள்துறை அமைச்சகம் உடனடியாக எடுத்தது. ராஜ்நாத் சிங் குடியரசு தலைவரை நேரில் சந்தித்து தகவலைச் சொன்னார்.. பிரணாப் முகர்ஜி தூக்குமரத்தை தூக்கி நிறுத்தினார். மாலை 3.30 மணியில் இருந்து இரவு ஒன்பது மணிக்குள் இவையத்தனையும் நடந்து முடிந்தது. கருணை மனு நிராகரிக்க‌ப்பட்டதிலிருந்து தூக்கில் போடுவதற்கு பதினான்கு நாட்கள் இடைவெளி வேண்டுமென்று கடைசி கல்லும் வீசப்பட்டது.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, ”கருணைக் காட்ட சட்டத்தில் இடமில்லை” என்று மதியம் சொன்ன அதே மூவர் நீதிபதி அமர்வைக் கூட்டினார். யாகூப்பின் மூச்சு நிறுத்தப்பட்டுவிடக் கூடாதென்று இந்தியாவிலுள்ள ஆயிரக்கணக்கான மனித உரிமையாளர்கள், அரசியல் ஆற்றல்கள் படபடக்கும் இதயத்துடன் இரவு முழுக்க விழித்துக் கிடந்தார்கள். ஜூலை 31 அதிகாலை 5 மணிக்கு அவரது தூக்கைத் தடுத்து நிறுத்தவே முடியாதென்று உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. 5 மணிக்கு முகநூலில் மரணச் செய்தி பரவியது. 6.35 மணிக்கு அவர் தூக்கில் ஏற்றிக் கொல்லப்பட்டார். ஆம். கசாப், அப்சல் குரு என்ற வரிசையில் மீண்டும் ஓர் இஸ்லாமியருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

1993 ஆம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 257 பேர் கொல்லப்பட்டனர். இதில் முக்கியக் குற்றவாளி என்று அறியப்படும் தாவூத்தும், டைகர் மேமனும் இது வரை பிடிபடவில்லை. டைகர் மேமன் குடும்பத்தில் சிலருக்கு ஆயுள் தண்டனை. டைகர் மேமனின் தம்பி யாகூப் மேமனுக்கு மட்டும் தூக்கு. இதுவே பின்னணி.

satish-acharya-yakub-memon-599x437

யாகூப் மேமனுக்கு கொடுக்கப்பட்ட மரண தண்டனையை நியாயப்படுத்த விரும்புவோர் 1993 மார்ச் 12 இல் நடந்த மும்பை தொடர் குண்டுவெடிப்பில் இருந்து பேசத் தொடங்குகிறார்கள். அதில் இறந்த போன 257 பேருடைய குடும்பங்களின் கண்ணீரைக் கொண்டு இந்துத்துவ அரசின் கடைவாயில் ஒழுகும் இரத்தத்தைத் துடைத்துவிடத் துடிக்கிறார்கள். ஆனால், மும்பை குண்டு வெடிப்புதான் தொடக்கமா? அதே ஆண்டு சனவரியில் பால் தாக்கேர தலைமையிலான சிவ சேனா மற்றும் ஆர்.எஸ்.எஸ் ஸால் வழிநடத்தப்பட்ட கலவரங்களில் தொள்ளாயிரம் இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டதை மறைப்பதேன்? 1992 திசம்பர் 6 ஆம் நாள் பாபர் மசூதியை இடித்துத் தள்ளிய கரசேவகர்கள் அல்லவா நாடெங்கும் ஆயிரக்கணக்கான கல்லறைகளைக் கட்டுவதற்கு வித்திட்டவர்கள். பாபர் மசூதி இடிப்புத் தான் முதல் பயங்கரவாத நடவடிக்கை. அது இந்துப் பயங்கரம். அன்று போடப்பட்ட நச்சு விதை இஸ்லாமியர்களின் இரத்தத்தால் அன்றோ விருட்சமாய் வளர்க்கப்பட்டுக் தூக்கு மரமாய் இப்போது யாகூப்பின் உயிர்க்குடித்தது?

இந்திய ஆளும்வர்க்கத்தின் ’ஒளிரும் இந்தியாவைப்’ பாதுகாக்க அவர்களுக்குப் பாகிஸ்தான் எதிர்ப்பு மட்டும் போதவில்லை. இந்தியாவிலேயே ஓர் உளவியல் பாகிஸ்தானை உருவாக்குகிறார்கள். இந்துக்களுக்கு ஓர் எதிரி பக்கதிலேயே இருக்கிறார்கள் என்று காட்டுவதும் இஸ்லாமியர்களின் நெஞ்சில் அச்சத்தையும் அந்நியரென்ற உணர்வையும் ஏற்படுத்துவதுமே இந்த தூக்குகளின் நோக்கம்.

பாபர் மசூதி இடிப்பென்பது இஸ்லாமியர்களைப் பொறுத்தவரை வெறும் பள்ளிவாசல் இடிப்பல்ல. இந்த நாட்டின் மீதும் சக மதத்து மக்களின் மீதும் கொண்டிருந்த நம்பிக்கையை மீளக் கட்டியெழுப்ப முடியாதபடி இடித்து தள்ளியதாகும். அன்று முதல் இன்று வரை பல்வேறு கலவரங்களாலும் பொய் வழக்குக் கைதுகளாலும் சித்திரவரைகளாலும் சிறையடைப்புகளாலும் நீதிமன்றத் தீர்ப்புகளாலும் பொது சமூகத்தின் மீதான நம்பிக்கையைக் கலைந்து போன கனவாக ஆக்கிக் கொண்டே இருக்கிறது. இஸ்லாமிய சமூகத்தின் ஆழ்மனதில் பதிந்துவிட்ட காயத்தை மீண்டும் மீண்டும் கீறிவிட்டு குளிர்காய்ந்து கொண்டிருக்கிறது இந்திய ஆளும் வர்க்கம். பா.ச.க. பச்சை இந்துத்துவமென்றால் காங்கிரசு பசப்பும் இந்துத்துவம் என்பதை ”டைகரையும் கொண்டு வரவேண்டும்” என்று யாகூப்பின் பிணத்தின் மீது அறிக்கைவிட்டு காட்டியது காங்கிரசு. யாகூப் உயிர் எண்ணிக்கையில் ஒன்றுதான். ஆனால் மதத்தின் அடிப்படையில் மக்களின் உளவியலில் இரு நாடுகளை உருவாக்கிக் கொண்டிருப்பதுதான் நமக்கு மேலும் அச்சமூட்டுவதாகும்.

Memon

இந்த தூக்கைப் பொறுத்தவரை இந்திய அரசின் செயற்திறன் கவனிக்கத்தது. 29 ஆம் தேதி முழுவதும் இந்திய அரசு தன்னுடைய இயந்திரத்தை ஒத்திசைவாக இயக்கி யாகூப்பை மரணக் குழியில் தள்ளியது. வட இந்திய ஊடகங்களில் சில “யாகூப்பைத் தூக்கிலேற்ற வேண்டும்(#YakubtoHang)”, “யாகூப்பின் தூக்கைத் தடுக்கக் கடைசி கீழ்த்தரமான முயற்சி (last ditch effort to stall execution)” என்றெல்லாம் தலைப்பிட்டு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பின. மொத்தத்தில் இந்திய ஆளும்வர்க்கத்தின் இந்துத்துவ ஊதுகுழலாய் பல ஊடகங்கள் பணியாற்றின.

சில ’நடுநிலையாளர்கள்’, ‘அறிவு ஜீவிகள்’, ”மரண தண்டனை வேண்டாமென்று சொல்லுங்கள். ஆனால் தண்டனையையோ, இந்திய நீதித் துறையின் நடைமுறையையோ’ கேள்விக்குள்ளாக்காதீர்கள்” என்று இந்திய நீதித்துறையைப் பாதுகாக்க வேண்டிய ஆளும்வர்க்கத்தின் பணியை வலிந்துவந்து தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டனர். இதுவரை இஸ்லாமியர்களின் உயிரை நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் கொன்று குவித்த வன்முறைகளில் ஈடுபட்டவர்கள், திட்டம் வகுத்து தந்தவர்கள், வெறியூட்டியவர்கள் ஒருவருக்குக்கூட இந்திய நீதித்துறை மரண தண்டனை கொடுக்கவில்லை என்பதை வசதியாக மறந்துவிட்டார்களா? அல்லது நாம் மறக்க வேண்டும் என்று விரும்புகிறார்களா?

இந்தியாவில் நடந்துகொண்டிருக்கும் தேசிய, சாதிய, மத ரீதியான ஒடுக்குமுறைகளுக்கு எதிரானப் போராட்டங்களுக்கு ஊடாக அவற்றின் துணை விளைவாய் மரண தண்டனை வகைப்பட்ட நீதி வழங்கலை முற்றாக ஒழிக்க வேண்டும் மனித உரிமைக் கோரிக்கை முகிழ்த்து எழுந்துள்ளது. மனித உரிமையாளர்கள், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், வழக்கறிஞர்கள், முன்னாள் நீதியரசர்கள் என்று பலரும் ஒவ்வொரு முறை இந்தியாவின் தூக்கு மரம் கழுத்தை நெரிக்கும் போது கண்ணீர் சிந்தி வருகிறார்கள். இதில் கவனிக்க வேண்டியது இந்த மரணத் தண்டனைக்கு உள்ளாகுபவர்களில் பெரும்பாலும் தலித் மக்களும் சிறுபான்மையினருமே என்பது தான்.

எனவே, வரலாற்றுக் காலந்தொட்டு ஊர் நடுவில் ஒருவரைத் தூக்கில் ஏற்றிக் கொல்வது சுரண்டிக் கொளுக்கும் ஆளும் வர்க்கத்திற்கு சேவை செய்யவும் அடக்கப்பட்ட மக்களுக்கு அச்சம் ஊட்டவுமே பயன்பட்டு வந்துள்ளது. அடக்கப்பட்ட மக்களின் போராட்டங்களின் பயனாய் வளர்ச்சிப் பெற்றுள்ள மனித உரிமைப் போராட்டங்களால் இந்திய நீதித் துறையிலும் ஒருவரைத் தூக்கில் ஏற்றுவது அத்தனை எளிதல்ல என்ற நடைமுறை உருவாகியுள்ளது. குற்றத்தின் கொடூரத்தன்மை, கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆகியவற்றைக் கடந்து இந்திய பொது சமூகம் இன்னும் சில அடிகள் முன்வந்தால்போதும் ’மரண தண்டனை’ என்ற பெயரில் இந்திய அரசு தன் நீதிமன்றத் தீர்ப்புகளால் நிகழ்த்துகின்ற அரசியல் கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட முடியும். குறிப்பாக தமிழகத்தில் மூவர் தூக்குக்கு எதிரானப் போராட்டமும் செங்கொடியின் தியாகமும் வெகுமக்களை இக்கோரிக்கையின்பால் சனநாயகப்படுத்தியிருப்பது நம்பிக்கை அளித்துக் கொண்டிருக்கிறது.

மரண தண்டனை ஒழிப்பு போராட்டம் என்பது வெறுமனே மனித நேயம் அடிப்படையில் மட்டும் நடத்தினால் ஒழிக்க இயலாது. யாகூப் மேமன் தூக்குக் கயிற்றின் நிறம் காவி என்பதையும் ஆளும் வர்க்கத்தின் நலன் அடிப்படையில் நீதித்துறையில் சார்புத்தன்மையால் வழங்கப்படும் தண்டனை என்பதையும் நினைவில் கொண்டு இந்துத்துவ (பார்ப்பனீய) முதலாளித்துவ ஆளும்வர்க்கத்தை எதிர்த்தும் மரண தண்டனை ஒழிப்புப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

—செந்தில்குமார் – ஒருங்கிணைப்பாளர் – இளந்தமிழகம் இயக்கம்

About செந்தில்

One comment

  1. Nice article, in order to get wide readership of much sensitive issue kindly translate in it English. It will be wise if the English version of the site itself is the replica of the Tamil one.
    Thanking you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*