Home / ஈழம் / இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்…ஐ.நா. மனித உரிமை மன்றக் கூட்டத் தொடர் 2015 … தமிழீழ விடுதலைப் போராட்டம்

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்…ஐ.நா. மனித உரிமை மன்றக் கூட்டத் தொடர் 2015 … தமிழீழ விடுதலைப் போராட்டம்

ஆகஸ்ட் மாதத்தில் இலங்கையில் மீண்டும் ஒரு நாடாளுமன்ற தேர்தல் நடக்கவிருக்கிறது.  இது மே 2009 முள்ளிவாய்க்கால் இனஅழிப்புப் போருக்குப் பிறகு இலங்கையில் நடைபெறும் இரண்டாவது நாடாளுமன்றத் தேர்தல்.  இலங்கையைப் பொருத்தவரை அதிபர் எல்லையற்ற அதிகாரம் கொண்டவர். அதிபர் தேர்தலில் இராசபக்சே தோல்வி அடைந்தப் பிறகு பொறுக்கு வந்த சிறீசேனா, அதிபர் தேர்தலின் போது உறுதியளித்தபடி அதிபரின் அதிகார வரம்பைக் குறைத்துள்ளார். இவ்வண்ணம், கடந்த முறை அதிக அதிகாரங்களைக் கொண்ட அதிபர் பதவிக்காகத் தேர்தலை எதிர்கொண்ட இனப்படுகொலையாளன் இராசபக்சே, இம்முறை பதவிகள் அனைத்தும் இழந்த நிலையில் அதிக அதிகாரங்களைக் கொண்டதாக மாற்றப்பட்டிருக்கும் பிரதமர் பதிவிக்காகப் போட்டியிடுகின்றார்.    சிங்கள ஆளும் வர்க்கத்திற்கு இடைஞ்சல் இல்லாதபடி  தேர்தல் முடிந்தபின் இலங்கை தொடர்பான பன்னாட்டு விசாரணைக் குழுவின் அறிக்கை வெளிவரவுள்ளது. அந்த அறிக்கை மீதான விவாதம் செப்டம்பர் மாதம் ஐ.நா. மனித உரிமை மன்றக் கூட்டத் தொடரில் நடக்கவுள்ளது.

கடந்த  2014 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை மன்றக் கூட்டத்தில் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களை விசாரிக்கப் பன்னாட்டு வல்லுநர் குழு ஒன்று அமைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்தில் இலங்கை அரசிற்கு ஆதரவாக செயல்பட்டு இந்திய அரசு வாக்கெடுப்பில் பங்கெடுக்கவில்லை.  இருப்பினும் 23  நாடுகளின் ஆதரவுடன் இத்தீர்மானம் இலங்கை அரசிற்கு எதிராக நிறைவேறியது.  இத்தீர்மானத்தின்படி அப்பொழுது மனித உரிமை மன்ற ஆணையாளராக இருந்த நவிப்பிள்ளை அவர்கள் மார்த்தி ஆத்திசாரி(பின்லாந்து), சில்விய காட்ரிட் (நியூசிலாந்து) அசும சகான்கிற் (பாகிசுதான்) ஆகியோர் தலைமையிலான பன்னாட்டு விசாரணைக் குழுவை அமைத்தார்.  இக்குழு தனது விசாரணை அறிக்கையை மார்ச் 2015 இல் சமர்ப்பிக்கப் பணிக்கப்பட்டிருந்தது.

அதிபர் தேர்தலும் அதற்குப் பின்னும்

சனவரி 2015  இல் நடைபெற்ற அதிபர் தேர்தலில் இராசபக்சேவை வீழ்த்தி அனைத்துக் கட்சி ஆதரவுடன் மைத்திரிபால சிறிசேனா இலங்கையின் புதிய அதிபரானார். இராசபக்சேவும், மைத்ரியும் இலங்கை சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்கள்தாம். ஆயினும் இராசபக்சேவின் குடும்ப ஆட்சியை வீழ்த்துவதற்கு ஐக்கிய தேசிய  கட்சி (ரணில் விக்ரமசிங்கே), சந்திரிகா, ஜே.வி.பி ஆகியோரின் கூட்டணியில் பொது வேட்பாளராக மைத்ரி நிறுத்தப்பட்டார். மேற்குலக நாடுகளின் ஆசியும் மைத்ரிக்கு இருந்தது.  சிங்களர்களின் ஒரு பகுதியினரின் வாக்குகளோடு, மலையகத் தமிழர்கள், இஸ்லாமியர்கள், ஈழத் தமிழர்கள் ஆகியோரின் வாக்குகளைப் பெற்று மைத்ரி அதிபரானார்.  ஆட்சி மாற்றத்தைக் காரணம் காட்டி புதிதாகப் பொறுப்பேற்ற அரசிற்கு கூடுதல் காலம் கொடுக்க வேண்டும் என விசாரணைக் குழு அறிக்கையை செப்டம்பர் 2015 க்கு தள்ளிப் போட்டார் இப்போது மனித உரிமை மன்ற ஆணையாளராக உள்ள சையத் அல் உசேன்.

சிறிசேனா அரசோ போரில் கொல்லப்பட்ட மக்களுக்கான நீதிகுறித்தோ காணாமல் போனவர்கள், சரணடைந்து காணாமல் போனவர்கள் நிலைகுறித்தோ இதுவரை எந்த விசாரணையையும் மேற்கொள்ளவில்லை. மார்ச் மாதம் வரவிருந்த விசாரணை அறிக்கை செப்டம்பர் மாதத்திற்கு தள்ளிப் போடப்பட்டதுதான்  தாம் செய்துகாட்டிய சாதனை என மைத்ரி அரசு அறிவித்துக் கொண்டது. இப்போதும் செப்டம்பர் மாதம் வெளிவர உள்ள பன்னாட்டுக் குழுவின் அறிக்கை வாயிலாக மீண்டும் ஒரு உள்நாட்டு விசாரணைக்கான கால அவகாசம் பெற சிங்கள அரசு முயலுகின்றது. அண்மையில் வெளி வந்துள்ள சனல் 4  தொலைகாட்சி செய்திக் குறிப்பு இதை உறுதி செய்வதாக அமைந்துள்ளது.

PM-Ranil-Wickremesinghe-President-Maithripala-Sirisena

நாடாளுமன்றத் தேர்தலில் சிங்களத் தரப்பு

சனவரி மாதம் அதிபராக பொறுப்பேற்ற சிறிசேனா, அதிபருக்கு இருக்கும் கூடுதல் அதிகாரங்களைக் குறைத்து இலங்கை அரசியல் சட்டத்தில் 19 ஆவது திருத்தத்தை மேற்கொண்டார்.  இதனால் இன்று இலங்கை அரசியல் சட்டப்படி அதிபரை விட பிரதமருக்கே கூடுதல் அதிகாரங்கள் உள்ளன. அதிபர் தேர்தலில் அனைத்துக் கட்சிக் கூட்டணியினால் தோற்கடிக்கபட்ட இராசபக்சே இப்பொழுது கூடுதல் அரசியல் அதிகாரங்களைக்  கொண்டதாக இருக்கும் பிரதமர் பதவியை வென்றே ஆக வேண்டும் என்ற உறுதியுடன் தேர்தலில் போட்டியிடுகின்றார். அதுவும் பலமான ஐக்கிய மக்கள் விடுதலை முன்னணி / இலங்கை சுதந்திரக் கட்சி சார்பாகவே போட்டியிடுகின்றார்.  இதுவரை இராசபக்சேவை எதிர்த்து வந்த சிறிசேனா இராசபக்சே ஐ.ம.வி.மு. சார்பாக போட்டியிடுவதைத் தவிர்க்க முடியவில்லை. மைத்ரி இராசபக்சேவை ஆதரிக்கிறார். அதிபர் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 47.58%  வாக்குகள் பெற்ற இராசபக்சே இந்த முறை ஐ.ம.வி.மு. சார்பாக தேர்தலை சந்திப்பது ஏறக்குறைய அவருக்கு வெற்றியை உறுதி செய்துள்ளது. அப்படி வெற்றி பெறாவிட்டாலும் இராசபக்சே முகாமிலிருந்து  30 பேர் வெற்றிப் பெற்றாலே இலங்கை அரசைக் கட்டுப்படுத்தவும், திணறடிக்கவும் முடியும் என்றே தென்னிலங்கை அரசியலை நன்கறிந்தவர்கள் சொல்கின்றனர்.  இது இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் ஆயினும் தேர்தலுக்கு முன் சிங்கள தேசத்திலும் தமிழீழத்திலும் நடக்கும் தனித் தனித் தேர்தல்கள்தாம். தேர்தலில் சிங்கள மக்களின் தெரிவு சிங்களப் பேரினவாதத்தைப் புரிந்துக் கொள்வதற்கு துணை செய்யும். தேர்தலுக்குபின், மலையகத் தமிழர்கள், இஸ்லாமியர்கள், தமிழீழத் தமிழர்களின் துணை ஆட்சி அமைப்பதற்கு தேவைப்படும்.

04-04-2009-vavuniya-kathikamr-refugees-camp21

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் தரப்பு

தமிழர் தரப்பில் வடக்கு கிழக்கில் பல்முனைப் போட்டி நடைபெறுகின்றது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு மாற்றாக நிறுத்துவதற்காக  புதிதாக  தொடங்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் வித்யாதரன் தலைமையிலான  “சனநாயகப் போராளிகள் அமைப்பும்”  அதன் ஆபத்தான அரசியல் பின்னணியையும் தமிழ் மக்கள்   ஆழ விளங்கிக் கொள்ள வேண்டி  உள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புலிகளின் பெயரால் கிடைத்த அங்கீகாரத்தை வைத்து இத்தனை ஆண்டுகள் தொடர்ந்து வெற்றி பெற்றுக் கொண்டிருக்கின்றது. வடக்கு மாகாண முதலமைச்சர் சில தெளிவான முடிவுகளை எடுத்தாலும் கூட்டமைப்பை வழிநடத்தும் இடத்தில் உள்ள மூத்த அரசியல் தலைவர்கள் சம்பந்தன், சுமந்திரன் போன்றவர்களின் நடவடிக்கைகள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை  சிதைக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளன.  மே 2009 க்கும் பிறகு நடைபெற்ற தேர்தல்களில் இந்த தேர்தல் த.தே.கூட்டமைப்பிற்கு சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தரப்புக் கட்சிகள் தன்னாட்சி, ஒரு நாடு இரண்டு தேசம் என அரசியல் தீர்வுகளை முன் வைத்தாலும் இலங்கையின் ஒற்றையாட்சி அரசமைப்பு இனப்படுகொலையைத் தவிர எந்தத் தீர்வையும் தரத் தயாராக இல்லை என்பதையே வரலாறு நமக்கு நினைவூட்டுகின்றது.

தமிழீழ அரசியல் தலைமைகள் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் இருந்து இந்த தேர்தலுக்குப் பின்னான சூழலை எப்படி விடுதலை அரசியலுக்கு பயன்படுத்தப் போகிறார்கள் என்பது வரலாற்றுக் கேள்வி.  இந்தத் தேர்தலில் வெற்றிபெரும் கட்சிகள் வடக்கு மாகாணசபை தீர்மானத்தைத் உயர்த்திப் பிடித்து தமிழர்களுக்கு இழைக்கப்பட்டது இனப்படுகொலை என இலங்கை நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவது சர்வதேச அளவில் இலங்கை அரசிற்கு மேலும் அழுத்தத்தையும் தமிழர்களுக்கு மேலும் ஆதரவையும் பெருகச் செய்யும்.  செப்டெம்பரில் நடைபெற உள்ள ஐ.நா மனித உரிமை மன்றக் கூட்டத் தொடரிலும் அது எதிரொலிக்கும்.

57c78c6c-8550-4acb-96d2-885dd8d73c02WallpAutoWallpaper2

தமிழகத்தின் கடமை:

இலங்கையின் வடக்கு மாகணசபை  “தமிழர்களுக்கு நடப்பது இனப்படுகொலை” எனவும் அதற்கு சர்வதேச விசாரணை வேண்டும் எனவும் கடந்த பிப்ரவரி மாதம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.  கடந்த மார்ச் மாதம் மோடி இலங்கைக்கு பயணம் மேற்கொண்டார். இது 28 ஆண்டுகளுக்குப் பிறகான இந்தியப் பிரதமர் ஒருவரின் இலங்கைப் பயணம். ஆனால் அவர் வடக்கு மாகாண சபையின் இத்தீர்மானம் குறித்தோ இராணுவ ஆக்கிரமிப்பு உள்ளிட்ட தமிழர்களின் அடிப்படை சிக்கல்கள் குறித்தோ எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. இந்தியாவில் ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை; இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை மாறவில்லை என்பதைக் காட்டும் விதமாக பாரதிய சனதா கட்சி இனஅழிப்புப் போரில் கொல்லப்பட்ட மக்களுக்கான நீதிக்கான போராட்டத்தை முழுதாக மூடி மறைகின்றது.. தமிழர் பிரச்சனையைத் தவிர்த்து இந்தியாவுக்கும் இலங்கைக்குமான நல்லுறவையும் வரலாற்றுத் தொடர்பையும் மட்டும் பேசி வந்தார் மோடி. தமிழகத்தில் மக்கள் செல்வாக்கில்லாத பா.ச.க. அரசு காங்கிரசைவிடக் கூடுதலாக சிங்களத்தோடு இணக்கம் காட்டுகின்றது என்பதில் வியப்பதற்கேதுமில்லை.

தமிழக அரசோ தொடர்ந்து தீர்மானங்களையும் கடிதப் பரிமாற்றத்தையும் நிறைவேற்றி வருகின்றது. தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளும் இந்திய வெளியுறவுக் கொள்கை அனுமதிக்கும் அளவுக்கு மத்திய அரசுக்கு ஆத்திரம் ஊட்டாத வகையில் தன்னுடைய ’இலங்கைத் தமிழர்’ ஆதரவை வெளிப்படுத்தும். அ.தி.மு.க.வுக்கு பா.ச.க.வுக்குமான உறவைக் காட்டி நிற்கின்றன ஜெயலலிதா பெற்ற விடுதலைத் தீர்ப்பு. வருகின்ற சட்டமன்றத் தேர்தலைக் கணக்கிட்டு தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய பெரும் கட்சிகள் வரும் செம்டம்பரில் குரல் எழுப்புவர்.

our solution

செப்டம்பரில் வரவுள்ள இலங்கை தொடர்பான ஐ.நா. குழுவின் அறிக்கை மூலம் இலங்கை மீது எவ்விதமான பன்னாட்டு தலையீடு வருவதையும் தடுக்க இலங்கை அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகின்றது.  இதில் இலங்கை அரசுக்கு இந்திய அரசு உற்ற நண்பனாக துணை செய்கின்றது. இந்நிலையில் இந்தியச் சிங்களக் கூட்டை உடைப்பதைக் குறிவைத்து தமிழ்நாட்டின் போராட்டங்கள் இருக்க வேண்டும் இலங்கை அரசு புரிந்த இனப்படுகொலையை விசாரிக்கப் பன்னாட்டுத் தீர்ப்பாயம் அல்லது சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணையை  மேற்கொள்ள ஐ.நாவை வலியுறுத்துமாறு  இந்திய அரசை நிர்பந்திக்க வேண்டும்.. அதன் தர்க்கப்பூர்வ வளர்ச்சி தமிழீழ விடுதலைக்கு ஆதரவாக இந்தியாவை இட்டுச் செல்லும். வெறுமனே அறிக்கைகளோடு தன் கடமை முடிந்தது என்று நான்காண்டு ஆட்சியை நடத்திவிட்ட தமிழக அரசையும் அம்பலப்படுத்தத் தயங்கக் கூடாது.

வரும் செப்டம்பரில் சர்வதேச அளவில் நடக்கவுள்ள தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் இந்த அத்தியாயத்தில் தன் கடமையை ஆற்றத் தமிழகம் தயாராக வேண்டும்.

– ச.இளங்கோவன் – இளந்தமிழகம் இயக்கம்

About இளங்கோவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*