Home / அரசியல் / மது ஒழிப்புப் போராட்டம் ஏன் தேவை

மது ஒழிப்புப் போராட்டம் ஏன் தேவை

இன்று தமிழ் நாடு முழுவதும் மது ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டு பொதுமக்களின் அனைத்துப் பிரிவுகளில் இருந்தும் வீதியில் இறங்கிப் போராடுகின்றனர். புரட்சி எப்போதும் காய்ந்த சருகுபோல் தரையில் எங்கும் படந்து கிடக்கின்றது. அதைப் பற்றவைக்க ஒரு தீக்குச்சி நெருப்பு போதும் என்பதுபோல, ஈகி சசி பெருமாள் அவர்களின் மது ஒழிப்புக்கெதிரான போராட்டக்களச் சாவு, தமிழ் நாடு முழுவதும் மது ஒழிப்புக்கான புரட்சிப் போராட்டத்தைத் தூண்டியுள்ளது. சாராயத்திற்கு எதிரான மக்களின் வெறுப்பை, தீக்குச்சி நெருப்பாக இது ஒருமுகப்படுத்தியுள்ளது.

ஆனால் அரசுக்கும், அரசு மதுக்கடைகளுக்கும்(Tasmac) சார்பான குரலும் மக்களில் ஒரு பகுதியினரிடம் இருந்து வந்துகொண்டே உள்ளது. அவர்களின் வாதத்தின் சாரமாக இருப்பது மது ஒழிப்புக்கு வாய்ப்பே இல்லை, அரசுக்கு இழப்பு ஏற்படும், கள்ளச்சாராயம் பெருகும் அதனால் விற்பனையை வேண்டுமானால் சிறிது குறைக்கலாம், அரசியல் நடவடிக்கை, குடிப்பது தனிமனித உரிமை – விருப்பம் சார்ந்தது, அரசு விற்பதால் பொதுமக்களுக்கு எந்தத் தீங்கும் இல்லை – அதனால் அதை ஏன் தடைசெய்ய வேண்டும் என்று வினவுகின்றனர். இதில் உண்மையுள்ளதா என்று பார்ப்போம்.

மதி மயக்கும் (போதை) பழக்கம் எல்லா காலத்திலும் இருந்துள்ளது. ஆனால் எப்போதுமே அது தவறான நடவடிக்கை என்றே இக்குமுகம் (சமூகம்) வழங்கியுள்ளது. இப்பொழுது உள்ளது போல் எப்போதுமே அதற்கு குமுக ஏற்பு (அங்கீகாரம்) இருந்ததில்லை. அரசு சாராயம் விற்க தொடங்கிய பின் மிக மிக விரைவாக மக்கள் விழுமியங்களை இழக்க தொடங்கினார்கள்.

இப்பொழுது உள்ளது போல் முன்பு குடிப்பது எளிதானது அல்ல. இழிவானதாகவும் கருதப்பட்டது. முன்பு மிகவும் ‘விவரமானவர்களுக்கு’ மட்டுந்தான் சாராயமும் கள்ளும் கிடைத்தது. இப்போது எல்லோருக்கும் எல்லா இடங்களிலும் கிடைக்கிறது. அதனால் சீரழிவோர் எண்ணிக்கை பன்மடங்கு உயர்ந்துள்ளது.

ஆனால் தற்போது அரசே விற்கிறது என்பதாலும், தங்களால்தான் அரசே நடக்கிறது என்றும் பெருமையாக எண்ணி, எந்தக் குற்ற உணர்வுமில்லாமல் வெளிப்படையாகச் செய்கின்றனர். கள்ளச்சாராயத்தை விட அரசு விற்கின்ற சாராயம் கொடியது, ஏனெனில் நம் எண்ணத்தில் கள்ளச்சாராயம் குடிப்பது தவறு என்றும், அரசே விற்பதால் சாராயம் குடிப்பது தவறல்ல என்றும் பதிவாகிறது. இது விழுமியங்களின் வீழ்ச்சி. ஒட்டுமொத்த குமுகத்தின் உளவியலையே அரசு சீரழித்து, நஞ்சாக்கியுள்ளனர்.

27-1422357187-drunkard-student-11600

தற்போது பல கல்லூரி, பள்ளி மாணவர்கள் நேரம் போகவில்லை என்றாலோ, சலிப்பாக உணரும்போதோ, நிறைய படிக்க வேண்டுமே என்று உள அழுத்தம் ஏற்படும்போதோ, வேறு ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லியோ குடிக்கும் பழக்கத்துக்கு ஆளாகின்றனர். அதற்கு அடிமையகவும் மாறுகின்றனர். இப்படிப்பட்டச் சூழலைக் கடக்கப் பல வழிகள் இருந்தும் ஏன் சாராயத்தை நாடுகின்றனர் என்று பார்த்தால், சாராயம் மிக எளிதாகக் கிடைப்பதுதான் முதன்மையான ஒரு காரணம்.

சாராயத்தை உட்கொள்வதால் ஏற்படும் தீங்கைப் பற்றியும், அதனைப் படிப்படியாகக் குறைத்து, இறுதியில் அறவே ஒழிப்பது பற்றியும் உலக நலவாய அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை விரிவாக விளக்குகின்றது.

உண்மையில் பார்த்தால், மதுவிலக்கு எனும் கோரிக்கையின் அடிப்படையில் இருக்கும் கருத்தே, சாராயம் ‘மெய்யான’ கட்டுப்பாட்டில் (பெயரளவில் அல்ல) இருக்க வேண்டும் என்பதுதான். குடி நோயாளிக்கு மருந்தகத்தில் மருத்துவர் பரிந்துரை இருந்தால் விற்பதோ அல்லது குடிக்க உரிமம் வழங்குவதோ, கள்ளச்சாராயம் பெருகும் கட்டுப்படுத்த இயலாது என்றால் கள் அல்லது பதனி விற்பதோ…. இதெல்லாம் அரசின், ஆள்வோரின் கவலைதானேவொழிய பொது மக்களாகிய நமக்கு அல்ல. மதுவைத் தடைசெய்வதால் ஏற்படும் பின்விளைவு பற்றியும் அதை சீர் செய்வது பற்றியும் அரசும் ஆள்வோரும் சிந்திக்கட்டும். அது நம் வேலை அல்ல. பொது மக்கள் ஓர்குரலில் சாராயம் (மது) வேண்டவே வேண்டாம் என்று கிளர்ந்தெழும்போது, மக்களில் சிலர் குறுக்குச்சால் ஓட்டுவது வீண்வேலை. தவறானது.

கள்ளச்சாராயம் பற்றியோ அதனால் ஏற்படும் பின்விளைவு பற்றியோ கவலைப்படுவதைவிட, பள்ளி மாணவர்கள், சிறுவர்கள், இளைஞர்கள், குழந்தைகள், இளம்பெண்கள் என வருங்கால தலைமுறை ஒட்டுமொத்தமாக சீரழிவதை எண்ணித்தான் கவலைப்பட வேண்டும். சாராயம் போனால் கள்ளச்சாராயம் வந்துவிடும் என்றால், அரசு எதற்கு? காவல்துறை எதற்கு? சட்டம் எதற்கு? நீதித்துறை எதற்கு?…. இதையெல்லாம் கலைத்துவிட்டு அனைத்து குற்றசெயலையும் அரசே நடத்தட்டுமே. அரசே குற்றங்களை மொத்தக் குத்தகைக்கு எடுத்துக்கொண்டால் சில்லறை குற்றங்கள் நடைபெறாது அல்லவா.

drunk-driving1

அரசு மதுக்கடை நடத்துவதால் ஈட்டப்படும் வருமானம் குறித்தும், நிகர ஈட்டம் (இலாபம்) குறித்தும் பல கட்டுக்கதைகள் உலவுகின்றன. இதனை நடத்துவதால்தான் பெரும் பொருளீட்டி அரசை நடந்த முடிவதாக ஆட்சியாளர்கள் தொடந்து பொய்யுரைக்கின்றனர். வருமானம் முப்பதாயிரம் கோடியே தவிர, நிகர ஈட்டம் அல்ல. வருமானம் கூட 24 ஆயிரம் கோடிதான். சாராயக் கொள்முதல், அதனை விற்க ஆகும் நிருவாகச் செலவீனம், வரிவிதிப்பு என்று பார்த்தால், உண்மையில் அரசுக்கு இழப்புதான். விரிவான அலசலுக்கு இக்கட்டுரையைப் படிக்கவும்.

மேலும் சாராயம் இன்றியமையாத உணவுப்பொருள் அல்ல அதனால் அரசு அதனை விற்க வேண்டிய எந்தத் தேவையும் இல்லை. அரசுக்கு வேறு வேலை இல்லை என்றால், தன்னால் நிறைய செயலை செய்ய இயலும் என்றால் கல்வி , ஆற்றல் உற்பத்தி, மற்ற சேவை / உற்பத்தித்  தொழிலை தனியாரிடம் இருந்து பெற்று நடத்தட்டும். உடல் நலக்கேடு விளைவிக்கும் சாராயம், புகையிலை, மற்ற மதி மயக்கும் எதையும் ஒரு போதும் விற்கவோ வழங்கவோ கூடாது. இச்செயலைச் செய்ய மக்களின் வரியில் அரசு நடக்கக் கூடாது. அது மக்கள் அரசும் அல்ல, இது மக்களாட்சியும் அல்ல. இதையெல்லாம் கட்டுப்படுத்தும், ஒழிக்கும் செயலில்தான் ஓர் அரசு ஈடுபட வேண்டும்.

மதுவிலக்கு கள்ளச்சாராயத்தைப் பெருக்கும் என்பது சொத்தையான வாதம். அப்படிப் பெருகாமல் தடுக்க வேண்டியது அரசின் கடமை. அதற்குத்தான் மக்கள் வரியில் காவல்துறை செயல்படுகிறது. அவர்களிடம் அளவற்ற அதிகாரமும் உள்ளது. பலநேரங்களில் காட்டுமிராண்டிபோல காவல்துறை மக்களைத் தாக்குகிறது, போலியான மோதல் கொலையில் சுட்டுக் கொல்கிறது. அப்படிப்பட்ட வரம்பு மீறிய அதிகாரம் உடையோர், எளியோர் மீது முறையற்ற அதிகாரத்தைப் பயன்படுத்துவோர், முறையாக செயல்பட்டால் எல்லாத் தவறுகளையும் எளிதில் ஒழிக்க முடியும்.

no-liquor

மது ஒழிப்பு என்பது  கள்ளச்சாராயத்தைப் பெருக்கும் என்று வாதிடுவோர், அரசு பாலுறவு நிலையத்தை (விபச்சாரம்) நடத்தினால் பல குற்றங்கள் குறையும் என்று அரசிடம் கோரிக்கை வைப்பார்களா? மதுவை எக்காலத்திலும் ஒழிக்க முடியாது என்று வரலாற்று குறிப்புகளைத் தருவோர், திருட்டு கொலை கொள்ளையையும் வரலாற்றில் எக்காலத்திலும் ஒழிக்க முடியவில்லை அதனால் அதையும் அரசே நடத்தலாம் என்றோ, உரிமம் வழங்கி கட்டுக்குள் மட்டும் வைக்கலாம் என்றோ, அதனை ஒழிக்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபடக் கூடாது, அப்படிப்பட்டச் சட்டமும் வேண்டாம் என்றோ இவர்கள் அரசுக்கு கோரிக்கை வைப்பார்களா?

கள்ளச்சாராயம் பெருகினால், அதனை அரசு ஒழிக்க வேண்டும். அதைத் தடுப்பது அரசின் ஆளுமை சார்ந்தது. ஆளுமையற்ற அரசால்தான் கள்ளச்சாராயம் என்ற சிறிய தீங்கைக் கூட கட்டுப்படுத்த இயலாது. நாம் நினைப்பதைப்போல அரசு வலிமையற்றது அல்ல. நம் கற்பனைகளையும் தாண்டிய வலிமைபடைத்தது. கட்டுப்பட்டுத்தவில்லை என்றால் கட்டுப்படுத்த விரும்பவில்லை என்றுதான் பொருளேவொழிய, கட்டுப்படுத்த இயலாது என்பதல்ல. அரசு கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்தவில்லையென்றால் அதை ஒழிக்கப் போராடுங்கள், அதை விட்டு விட்டு அரசே சாராயத்தை கட்டற்ற அளவில் விற்கட்டும் என்று கூற வேண்டாம். ஒரு பிழைக்கு மற்றொரு பிழை தீர்வல்ல. ஒட்டுமொத்தமாக தீங்கை ஒழிக்க வேண்டும்.

இயலும் இயலாது என்பதின் அடிப்படையில் இருந்து அரசு கொள்கைகளை வகுக்கக் கூடாது. எது தேவை தேவையில்லை, எது சரி தவறு என்பதை அடிப்படையாக் கொண்டே அரசு செயல்பட வேண்டும்.

சாராய வணிகத்தைக் குறைக்கும் நோக்கத்தோடுதான் அரசு செயற்பட்டிருக்க வேண்டும், செயல்பட வேண்டும். ஆனால் சாராயத்தை இலக்கு வைத்து வணிகம் செய்வதும், நாளுக்கு நாள் இலக்கை உயர்த்துவதும், கடைகளைப் பெருக்குவதும் நேரெதிர் செயற்பாடு. ஒட்டுமொத்த குமுகத்தின் வீழ்ச்சிக்கான பாதை.

சாராயத்தை விற்பதால் அரசுக்கு கிடைக்கும் வருவாயைக் காட்டிலும் குமுகப் பெருளாதார இழப்பு பன்மடங்கு. மக்களின் காசு பறிக்கப்படுவதோடு, உடல் நலக்கேடு (அதனால் அரசுக்கும் குடும்பத்துக்கும் ஏற்படும் மருத்துவச் செலவும் கணக்கில் கொள்ளப்பட வேண்டும்), குடும்ப உறவில் சிக்கல் – சீரழிவு, எண்ணிலடங்கா குமுகச் சீர்கேடு, குற்றச் செயல் பெருக்கம், சாலை நேர்ச்சிப் பெருக்கம், குமுக அமைதியின்மை – தொந்தரவு பெருக்கம், உறபத்தி நேரம் வீணாதல் என்று குடியால் ஏற்படும் விளைவுகளை அடுக்கிக் கொண்டே போகலாம். சாராயத்தை நிறுத்தினால் இவையெல்லாம் ஒழியும் என்பது வாதமல்ல ஆனால் சாராயத்தால் இவையெல்லாம் பெருகியுள்ளது என்பது கண்கூடு.

25-1408966250-sattapanchayat-iyakkam-protest-against-tasmac1-600

குடிப்பது தனிமனித உரிமை – விருப்பம் சார்ந்தது என்பதும், கொலை கொள்ளையைப் போல் இப்பழக்கம் யாரையும் இடர்படுத்துவது கிடையாது என்பதும் போலியான வாதம். குடியால் பலர் நேரடியாக இடர்படுகின்றனர் – எடுத்துக்காட்டாக சாலை நேர்ச்சியில்(விபத்து) ஒரு குடிகாரனால் சாவது எதிரில் வரும் குடிக்காதவனும், இருவரின் குடும்பமும் தான். பச்சைக்கொலைக்கு ஈடான செயல் இது. இதற்கு மக்களால் மக்களுக்காக நடத்தப்படும் மக்கள் அரசு துணைபோவதை ஒருபோதும் ஏற்க முடியாது. இந்தியத் துணைக்கண்டத்தின் அரசியலமைப்புச் சட்டப்படி, அரசு சாராயத்தையும், மற்ற மதி மயக்கும் – உடல் நலனைச் சீரழிக்கும் பொருட்களையும் கட்டுப்படுத்த வேண்டும் ஆனால் அரசே இதனை முன்னின்று நடத்துவது மாபெரும் பிழை.

இன்று அனைத்துத்தரப்புப் பொதுமக்களும் ஒரே குரலில் மதுவிலக்கு வேண்டும் என்பது, அரசு அளவுகடந்து எல்லைமீறி சாராயத்தை விற்றதுதான். முதலில் சாராயத்தைக் கட்டுப்படுத்தத்தான் கேட்டார்கள். பத்தாண்டுகளாக சாராய வணிக்கத்தை ஆட்சியாளர்கள் உயர்த்தினார்களேவொழிய குறைப்பதற்கான ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை, அதனால்தான் முழுவதும் ஒழிக்க வேண்டும் என்று போராடுகின்றனர். வாதத்திற்காக கேட்கின்றேன்…. அரசு சாராயம் தொடர்ந்து விற்பனை செய்ய வேண்டும் எனும் கொள்கை உடையவர்கள், அரசு கட்டுக்கடங்காமல் சாராயத்தை விற்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயற்பட்டபோது எதிர்த்து இருக்க வேண்டும், தடுத்திருக்க வேண்டும். இப்படி எல்லை மீறினால் தடை கேட்டுப் போராடுவார்கள் அதனால் ஒரு கட்டுக்குள் எங்களுக்கு உங்களின் ‘சிறப்பான’, ‘கனிவான’ தொண்டைத் தொடர்ந்து ஆற்றுங்கள் என்று அரசைக் கோரியிருக்க வேண்டும். உங்களின் தன்னநல அடிப்படையில்கூட அப்படிப்பட்ட கோரிக்கையை எப்போதும் வைக்காத நீங்கள், இன்று மது ஒழிப்புக்கு எதிராகப் போராடுவோரைப் பார்த்து பாடம் எடுப்பது வியப்பளிக்கின்றது.

மேலும் மது ஒழிப்பு போராட்டத்திற்கு அரசியல் சாயம் பூசுவதும் தவறு. திமுகவின் கொள்கையையும், அவர்கள் கடந்த ஆட்சிகாலங்களில் நடந்து கொண்டதையும் , மதுவிலக்கு குறித்த தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் குழுவிற்கு சாராய ஆலை அதிபரை தலைமை தாங்க அறிவித்து இருப்பதையும், முதன்முதலில் சாராயத்தை உள்ளே விட்டதையும், சாராயத்தைத் தடைசெய்வதாகத் தொடர்ந்து கூறிக்கொண்டே புதிய ஆலைகள் திறக்க இசைவு வழங்கியதையும் மக்கள் அனைவரும் நன்கு அறிவர். அதனால் இப்போராட்டத்தை அதிமுக, திமுக தேர்தல் போட்டியாகவும், யாரோ ஒரு அரசியல்வாதியின் மகன் புகையிலை விற்பனை தொடர்பான தொழில் செய்வதையும் குறிப்பிட்டு மது ஒழிப்புப் போராட்டத்தை மட்டம் தட்டுவதை நிறுத்த வேண்டும். அரசியல் கட்சிகள் இன்று திடீரென பேசுவது மக்களின் எண்ணவோட்டத்தையும் போராட்டத்தையும் அறிந்துதான். ஆனால் இப்போராட்டத்தைத் துவங்கியதும், தொடர்ந்து நடத்துவதும் பொதுமக்கள்தானேவொழிய அரசியல் கட்சிகளோ அரசியல்வாதிகளோ அல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

குமுகத்தில் பற்பலக் குற்றங்கள் சாராயத்தால் கூடியிருக்கின்றது. குமுகம் பெரும் இழப்பைப் பல வடிவங்களில் சந்தித்து வருகின்றது. அதைப் பொறுக்காமல்தான் மக்கள் தன்னெழுச்சியாக சாராயத்திற்கு எதிராகப் போராடுகின்றனர். அதன் தேவையை உணரக்கூடத் தவறினால் எப்படி? ஒட்டுமொத்த தமிழ் மக்களின் உண்மையான கோரிக்கைக்கு குரல் கொடுப்பதும் துணை நிற்பதும் நமது கடமை.

– மறத்தமிழன் கன்னியப்பன் – இளந்தமிழகம் இயக்கம்

About மறத்தமிழன் கன்னியப்பன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*