Home / சமூகம் / ஏன் தமிழர்கள் மதுப்பழக்கத்தை கைவிட வேண்டும்?

ஏன் தமிழர்கள் மதுப்பழக்கத்தை கைவிட வேண்டும்?

தமிழ்நாடு சந்தித்து வருகின்ற மிகப்பெரும் பிரச்சனைகளில் ஒன்று மாநிலம் முழுவதும் பெருகிவரும் மதுப்பழக்கம். ஒருமுறை மதுபானத்தைச் சுவைத்துப் பழகிவிட்டால் பின்னர் மனம் அதனை மீண்டும் மீண்டும் கேட்கத் தொடங்கிவிடும். அதுவும் வாழ்வியல் அழுத்தங்கள் நிறைந்து போன தற்காலத் தமிழகத்தில் அந்த அழுத்தங்களில் இருந்து விடுபட மிக எளிதாகப் பலரும் மதுபானக் கடைகளை நோக்கி ஓடுகின்றனர். இதனை நமது ஆட்சியாளர்களும், திரைப்படங்கள், தொலைக்காட்சிகள் உட்பட வெகுமக்கள் ஊடகங்களும் தீனிபோட்டு வளர்க்கின்றன.
தமிழகத்தில் மதுப் பழக்கம் இன்று எல்லை கடந்து தடம்புரண்டு ஓடுகின்றது எனலாம். எங்கு நோக்கினாலும் மதுபானக் கடைகள், வயது வரம்பின்றி அனைவரும் மது பருகுகின்றனர். தமிழக அரசின் சட்டப்படி 21 வயதிற்கு உட்பட்டோருக்கு மது விற்கக் கூடாது, ஆனால் நிகழ்வில் என்ன நடக்கின்றது மதுக்கடைகளில் 15, 16 வயது சிறுவர்கள் கூட ” அண்ணா, பீர் ” என வாங்கிச் செல்கின்றார்கள். மதுப் பழக்கத்தினால் மாணவ சமுதாயம் இன்று பாதிக்கப்படுகின்றது. பள்ளி சீருடைகளிலேயே வந்து குடித்துவிட்டு மயங்கிக் கிடக்கின்ற சம்பவங்கள் பலவும் செய்திகளில் வெளியாகி வருகின்றன. மதுப் பழக்கத்தால் அவர்களுக்கு கல்வியில் நாட்டம் குறைகின்றது. இதனால் இளந்தலைமுறையினரது எதிர்காலமே கேள்விக்குறியாகி வருகின்றது?
திருவண்ணாமலை மாவட்டத்தில் நான்கு வயது சிறுவன் மதுவருந்தும் காட்சிகள்சமூகவலைகளில் பரவிய போது தமிழகமே அதிர்ந்தது. மதுவால் தமிழகம் சாதித்திருப்பது இது தான். பச்சைக் குழந்தைகள் முதல் பள்ளி மாணவர்கள் வரை மதுப் பழக்கத்துக்கு அடிமையாகி வரும் நிலை அதிகமாகிவிட்டது.
தமிழ்நாட்டில் குடிப்பவர்களின் சராசரி வயது 19-யில் இருந்து 13-14 ஆகக் குறைந்துவிட்டது எனவும். குடிப்பவர்களில் 80 % பேர் தீவிர குடிகாரர்களாகவும் இருப்பதாகவும் தெரிய வருகின்றது. தமிழகத்தில் 40 % ஆண்களுக்குக் குடிக்கும் பழக்கம் இருப்பதாக நந்தினி என்ற தன்னார்வத் தொண்டூழியக் குழுவின் அறிக்கை தெரிவிக்கின்றது.

drnk-students

மதுப் பழக்கத்திற்கு அடிமையாகியோர் உடல் அளவிலும், மன அளவிலும் கடுமையாகப் பாதிப்படைகின்றனர். தாம் பாதிக்கப்படுவதோடு மட்டுமில்லாமல் மற்றவர்களது வாழ்க்கைக்கும் குந்தகம் விளைவிக்கின்றனர். தமிழகத்தில் நடக்கின்ற பல கொடிய சம்பவங்களின் பின்னில் இருப்பது என்னவோ இந்த மதுபானமே. மதுவைப் பருகிவிட்டால் கிடைக்கும் ஒருவித குருட்டுத் தைரியம் எந்தவித தப்பையும் செய்யத் தூண்டுகின்றது. அண்மைய காலங்களில் பெருகி வருகின்ற திருட்டு, கொள்ளை, கற்பழிப்பு, பாலியல் வன்முறை, கொலை, சாலை விபத்துக்கள் எனப் பல சம்பவங்களின் பின்னில் மதுவிற்கு முக்கியப் பாத்திரம் இருப்பதை நிச்சயம் யாராலும் மறுக்கவே முடியாது.
தமிழகத்தில் ஏற்படும் மிக அதிகமான சாலை விபத்துக்களுக்கும் அதனால் ஏற்படும் மரணங்களுக்கும் முக்கியக் காரணமாக மதுப் பழக்கம் என்ற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. சாலை விபத்து மரணங்களில் 70 % மதுவருந்தி விட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படுவதாகப் பன்னாட்டு மேலாண்மை, தொழில்நுட்ப ஆராய்ச்சி சஞ்சிகை தனது 2012-ம் ஆண்டிற்கான அறிக்கையில் தெரிவிக்கின்றது. இந்தியாவில் சாலை விபத்துக்களில் முன்னணியில் தமிழகமும் நிற்கின்றது. அதிலும் மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டுவதால் கடந்த மூன்றாண்டுகளில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கையைப் பெருகியிருக்கின்றது.
மதுவால் ஏற்பட்ட சாலை விபத்து மரணங்களில் தமிழ்நாடு இந்தியாவில் மூன்றாம் இடத்தில் நிற்கின்றது. முதல் இடத்தில் மத்திய பிரதேசமும், ஆம் அதே பாஜக அரசின் கோட்டை தான், இரண்டாம் இடத்தில் பிகாரும் இருக்கின்றது. நம்மை விடக் கல்வியறிவு, பொருளாதாரத்தில் பின் தங்கிய மாநிலங்களின் வரிசையில் தமிழ்நாடும் நின்று கொண்டிருப்பது தான் நமது ஆட்சியாளர்களின் சாதனையே.
2011-12 ஆண்டில் மட்டும் தமிழகத்தில் ஏற்பட்ட மொத்த விபத்துக்கள் 65,873 ஆகும். இதில் 14,359 விபத்துக்கள் கடுமையான காயங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. கடந்த 2012-2013 ஆம் ஆண்டுக் குடித்துவிட்டு வண்டி ஓட்டியதால் மட்டும் 2,764 விபத்துக்களில் ஏறக்குறைய 718 பேர் உயிரிழந்துள்ளனர். இது அதற்கு முந்தைய 2011-12 ஆம் ஆண்டை விட 200 பேர் அதிகமாகும்.  அதே ஆண்டுக் குடித்து விட்டு வண்டி ஓட்டிய 5000 பேருக்குக் காவல்துறை ஓட்டுநர் உரிமத்தை ரத்தும் செய்துள்ளது. ஆனாலும் காவல்துறை இன்னமும் மெத்தனமாகவே செயல்படுவதாகச் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். நமது காவல்துறையில் கணிசமானோர் பல சந்தர்ப்பங்களில் மாமூல் வாங்கிக் கொண்டு குற்றவாளிகளைத் தப்பிக்க விடுகின்றார்கள் என்பதையும் அனைவரும் அறிவோம். அப்படி என்றால், மதுவினால் ஏற்படும் சாலை விபத்துகளும் மரணங்களும் பன்மடங்கு கூடுதலாகவே இருக்கும் என்பதாகவே தோன்றுகின்றது.

download

மதுப்பழக்கம் அத்தோடு நின்றுவிடவில்லை, ஏற்கனவே நம் நாட்டில் இருக்கின்ற சமூகச் சிக்கல்களோடு ஒன்றிணைந்து தற்கொலைகளைச் செய்வோரது தொகையையும் பெருக்கியுள்ளது. இந்தியாவில் அதிகம் தற்கொலை நிகழ்வதும் தமிழகத்தில் தான். 2014 ஆம் ஆண்டில் தமிழகத்தில் மட்டும் 16, 122 பேர் தற்கொலை செய்திருக்கின்றனர். இவர்களில் 70 % பேர் பொருளாதார ஏற்றமற்ற வருமானம் குறைந்த பிரிவினராகவும் இருக்கின்றனர். ஏறத்தாழ 35 % பேர் மதுப் பழக்கத்தின் விளைவாக தற்கொலை செய்து கொள்கின்றனர் என சிநேகா தற்கொலை தடுப்பு மையத்தின் மருத்துவர் லட்சுமி விஜயகுமார் தெரிவிக்கின்றார். தமிழ்ச் சமூகத்தின் இறுக்கமான சூழல்களோடு மதுப் பழக்கமும் தற்கொலையைத் தூண்டி விடும் முக்கியக் காரணியாகவே உள்ளது. தமிழகத்தில் கடந்த நான்கு வருடங்களில் தற்கொலை செய்வோரது தொகை ஆண்டுக்கு 6 % அளவில் அதிகமாகியிருக்கின்றது.
மறு பக்கத்தில் மதுப்பழக்கத்தினால் குற்றங்களும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன என்பதும் மறுக்க முடியாத உண்மை. தில்லியில் நிர்பயா என்ற இளம்பெண்ணைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திப் பேருந்தில் இருந்து தூக்கி எறிந்து கொன்ற சம்பவத்தின் போது, அதைச் செய்த ஐந்து பேரும் கடுமையான மது போதையிலேயே இருந்தனர். இன்று நாடு முழுவதும் பெருகி வருகின்ற பாலியல் வன்முறை சம்பவங்களின் பின்னில் மதுப்பழக்கமும் ஒரு காரணமாக இருக்கின்றது.
தமிழகத்தின் பொருளாதாரம் வளர்ந்து வருவதால் மக்களிடையே ஏற்பட்டுள்ள பணப் புழக்கத்தை மையமிட்டு இங்கு எண்ணற்ற சமூகச் சீரழிவுகள் அரங்கேறி வருகின்றன. அதில் மதுபான விற்பனையும், பிற மயக்கப் பொருட்கள் விற்பனையும், பாலியல் தொழில்களும் கொடி கட்டி பறக்கின்றன. இவை யாவும் ஒன்றோடு ஒன்று நெருங்கிய தொடர்புடையவையாகவும் உள்ளன. மதுப்பழக்கம் அதிகம் காணப்படும் பகுதிகளில் எய்ட்ஸ் போன்ற பாலியல் தொற்றுநோய்களாலும் பலர் பாதிப்படைகின்றனர். மதுப்பழக்கம் பாலியல் பகுத்தறிவைச் சிதைத்து ஒழுக்கக் கேடான தகாத பாதுகாப்பற்ற உறவுகளில் ஈடுபட வைக்கின்றது. இதன் மூலம் எய்ட்ஸ், கொனேரியா எனப் பலவகையான பால்வினை நோய்களுக்கும் மக்கள் ஆளாகுகின்றனர்.

bl09_drinks_jpg_2466144f

அது மட்டுமின்றித் தொடர்ந்து மதுவருந்தி வருவோருக்கு மன அழுத்தம், நினைவாற்றல் இழப்பு, பார்வை குறைபாடுகள், இதயம் வீங்கிப் போதல், ரத்த நாளங்கள் செயலிழப்பது, வாயில் புற்றுநோய், தொண்டையில் புற்றுநோய், குடலில் புற்றுநோய், ஈரல் இறுக்கி நோய், ஈரல் வீங்கிப் போதல், ஈரல் அழுகிப் போதல், இரைப்பை வீக்கம், கணைய அழற்சி, சீரணச் செரிமானப் பிரச்சனைகள், கை கால் நடுக்கம், ஆண்மைக் குறைவு, பாலுறவுச் சிக்கல்கள், தற்கொலை எண்ணம், ரத்த சோகை, விபத்துக்கள் ஏற்படுவது, மாய மயக்கங்கள், மன நோய்கள் என இதனால் ஏற்படும் பிரச்சனைகளைப் பட்டியிலிட்டுக் கொண்டே போகலாம்.
மது அருந்துவதால் வேலையில் நாட்டம் குறைகின்றது. மது தரும் மதி மயக்கத்தின் விளைவாகச் சந்தேகக் குணமும், கோபங்களும் அதிகமாகி விடுகின்றன. இதன் விளைவாகக் குடும்பத்தில் மகிழ்ச்சி பறிபோகின்றது. அத்தோடு நின்றுவிடுகின்றதா, ஒழுங்காக வேலைக்குப் போய்ச் சம்பாதிப்பவர்களைக் கூட மது சோம்பேறிகளாக மாற்றிவிடுகின்றது. மதுப் பழக்கத்தினால் வேலைக்கும் போகாமல், கடன் வாங்கி ஜீவனம் நடத்திக் கொண்டு, பொருளாதாரப் பின்னடவை சந்திக்கும் குடும்பங்கள் ஏராளம் ஏராளம். இறுதியில் இது தவறான வழிகளுக்கு அவர்களை இட்டுச் சென்றுவிடுகின்றது.
மது பழக்கத்தினால் குடும்பத் தலைவர்கள் உடல்நலம் குன்றிப் போகும் போது, உயிர் விடுகின்ற போது, அந்த ஒட்டு மொத்த குடும்பமுமே பாதிக்கின்றது. போதிய வருவாயும் இன்றி, மருத்துவச் செலவுகளும் கூடுதலாகி துன்பத்தில் துவண்டு போகின்ற குடும்பங்கள் ஏராளம் உள்ளன. அத்தோடு குடிப்பழக்கம் அதிகம் காணப்படுகின்ற குடும்பங்களில் வாழ்க்கைத் துணை மீதான குடும்ப வன்முறைகளும், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளும் நிகழ்கின்றன. இது குடிப்பழக்கமுடையோரை மட்டுமில்லாமல் அவரைச் சார்ந்த ஒட்டு மொத்த குடும்பமும் வெகுவாகப் பாதிக்கப்படுகிறது. மதுப் பழக்கத்தால் ஆண்டுக்கு 67,444 கோடி ரூபாய்கள் மாநில அரசிற்கு மருத்துவச் செல்வினங்களால் இழப்பு ஏற்படுகின்றது என சட்டப் பஞ்சாயத்து இயக்கம் என்ற அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

3009ee39-0a27-4a58-9b95-fdf47b68c303_S_secvpf

இன்று நம் ஆட்சியாளர்கள் மதுவை வரைமுறையின்றி விற்பதற்கு முக்கியக் காரணங்கள் அவர்கள் சார்ந்த மது வியாபாரிகள் அதிகம் லாபமீட்ட வேண்டும் என்ற நோக்கமே. அது மட்டுமின்றித் தொடர்ந்து மக்கள் மதுப் பழக்கத்திற்கு அடிமையாகிப் போகும் பட்சத்தில் ஆட்சியாளர்கள் நிகழ்த்துகின்ற ஊழல்கள், அரசியல் குற்றங்களை மக்கள் எதிர்க்கேள்வி கேட்க மாட்டார்கள் என்ற தன்னல எண்ணமும் தான்.
2500 ஆண்டுகளுக்கு முன் அந்நிய வேத ஆக்கிரமிப்பாளர்களின் ஆட்சியில் மதுப் பழக்கத்துக்கு மக்கள் அடிமையாகி தமது மொழியையும், செல்வத்தையும், மண்ணையும் இழந்து வருவதை எதிர்த்து கௌதம புத்தரும், வர்த்தமான மகாவீரரும் போராடினார்கள். வேத பிராமணர்கள் வழங்கும் மதி மயக்கும் சோமபானங்களைக் கடுமையாக நிராகரித்துப் பிரச்சாரம் செய்தனர். தென்னிந்தியாவில் திருவள்ளுவர் உட்படப் பல பௌத்த, சமணப் பெரியவர்களும் மதுப் பழக்கத்துக்கு எதிராகக் குரல் எழுப்பினார்கள்.
பிரித்தானிய காலனித்துவ ஆட்சி காலத்திலும் மக்கள் அனைவரும் மதுவிற்கு மயங்கிக் கிடப்பதை அறிந்த ஜோதிராவ் பூலே, அயோத்திய தாசர், தந்தை பெரியார், மகாத்மா காந்தி எனப் பலரும் மதுவிலக்கை அமுல்படுத்த போராடினார்கள்.
கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல்.
ஒருவன் தன்னிலை மறந்து மயங்கியிருப்பதற்காகப், போதைப் பொருளை விலை கொடுத்து வாங்குதல் விவரிக்கவே முடியாத மூடத்தனமாகும் என ஐயன் வள்ளுவப் பெருந்தகை 2000 ஆண்டுகளுக்கு முன்பே கூறுகின்றார். அத்தகைய வான்புகழ் கொண்ட வள்ளுவப் பெருந்தகை வாழ்ந்த நாட்டிலேயே இன்று மதி மயக்கும் மதுப் போதையை இந்த நாட்டின் அரசே விற்று வருவதை விட இழுக்கான செயல் வேறு என்ன இருக்க முடியும்? வள்ளுவருக்கு சிலை வைத்தவர்களும், கோட்டம் கட்டியவர்களும், வள்ளுவரை கொண்டாடுவோரும் கூட மதுவை வைத்தே வியாபாரம் செய்து வந்திருக்கின்றனர். இன்று மீண்டும் எங்கும் மதுவே, எதிலும் மதுவே என்ற நிலைக்கு வந்துவிட்டோம்.
மீண்டும் மதுவை ஒழிக்கப் போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இன்று ஐயா சசிபெருமாள் அவர்களின் உயிர்த்தியாகமானது இந்த மதுவை இல்லாமல் ஒழிப்பதற்கான ஒரு பெரும் போராட்டத்தின் தொடக்கமே. இதில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவதன் மூலமாக அன்னாரின் தியாகம் வீண்போகாமல் ஐயன் வள்ளுவனின் சொற்களுக்கு அமைய மதுபானம் என்ற கொடிய அரக்கனிடம் இருந்து தமிழர்களை காப்பாற்ற முடியும்.
தமிழ்நாடு மட்டுமின்றி இன்று உலகம் முழுவதுமே மதுப் பழக்கத்தினால் பாரிய உடல்நலக் கேடுகளும், சமூகப் பின்னடைவுகளும் ஏற்படுவதாக ஐநா சபையின் உலக உடல்நலக் கழகம் (WHO) தெரிவிக்கின்றது. என்று மக்கள் மத்தியில் மது ஒழிகின்றதோ அன்று அவர்களிடம் மதி வளரும், அன்று மக்கள் ஒற்றுமையோடு நாட்டு முன்னேற்றத்திற்குப் பாடுபடத் தொடங்குவார்கள். அதனால் இனியும் விழிமூடிக் கிடக்காமல் விழித்துக் கொள்வதால் மட்டுமே நாளைய தமிழகத்தின் சமூக, பொருளாதார எதிர்காலத்தைச் சீரும் சிறப்புமாகக் கட்டியெழுப்ப முடியும்.

— விண்ணன் – இளந்தமிழகம் இயக்கம்

About விண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*