Home / அரசியல் / நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரும் – கார்ப்பரேட்டுகள் செலுத்த வேண்டிய கடனும்….

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரும் – கார்ப்பரேட்டுகள் செலுத்த வேண்டிய கடனும்….

விசை ஆசிரியர் குழு முன்னுரை:

’ஊழலை ஒழித்திடுவோம், கருப்புப் பணத்தை மீட்டிடுவோம், விவசாய நலன்களைக் காத்திடுவோம்’ என்று நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குறுதிகளாக அள்ளி வீசிய, மோடி தலைமையிலான பாரதீய சனதா கட்சியின் ஆட்சி வியாபம் ஊழல், கடலை மிட்டாய் ஊழல், கருப்புப் பண மோசடிப் பேர்வழி லலித் மோடியின் மீதான மனித நேயம், மூன்று முறை அவசர சட்டமாக நில அபகரிப்பு சட்டம் ஆகியவற்றின் காரணமாக நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சிகளை சனநாயக விவாதமாக எதிர்கொள்ள முடியாமல் திணறுகிறது. எங்க ஊழலை பற்றி பேசினால் , உங்க (காங்கிரசு) ஊழலைப் பற்றி பேச நேரிடும் என்று பொறுப்பற்றத் தனமாக பேட்டை ரவுடி போன்று பாசக மிரட்டுகிறது. பாசகவின் மக்கள் விரோத கொள்கைகளையும் ஊழல் மலிந்த ஆட்சியையும் கண்டிக்காமல் பெரும் ஊடகங்கள் ‘அய்யகோ , நாடாளுமன்றத்தின் மழைக்கூட்டத் தொடரில் அலுவல் நடைபெறவில்லையே , மசோதாக்கள் நிறைவேற்றப்படவில்லையே , அமளியால் மக்களின் வரிப்பணம் தினம் பல கோடி ரூபாய் வீணாகிறதே!’ எனப் புலம்பித் தள்ளுகிறது.

 

 மழைக்கால கூட்டத்தொடர் செயல்படாமல் போனதில் பா.ச.க-வின் பங்கை கேள்விக்குள்ளாக்காமல் காங்கிரசை மட்டும் கிண்டல் செய்யும் ஊடகங்கள்


மழைக்கால கூட்டத்தொடர் செயல்படாமல் போனதில் பா.ச.க-வின் பங்கை கேள்விக்குள்ளாக்காமல் காங்கிரசை மட்டும் கிண்டல் செய்யும் ஊடகங்கள்

மறுபுறம், இந்தியாவின்(?) ‘வளர்ச்சிக்காக’ அல்லும் பகலும் பாடுபடுகின்றோம் என்று கூறிக்கொள்ளும் இந்திய பெருமுதலாளிகளின் கூட்டமைப்பான சிஐஐ (CII) அனைத்துக் கட்சிகளும், ” நாடாளுமன்றத்தில் கூட்டாக ஆலோசித்து செயல்பட்டு ” எவ்வித தங்குதடையின்றி GST மசோதா, நில அபகரிப்பு மசோதாக்களை நிறைவேற்ற வழிவிடுமாறு இணையத்தில் மனு ஒன்றினை இயற்றி இருக்கிறது. மேலும், ஜிஎஸ்டி , நில அபகரிப்பு சட்டங்கள் ஆகியனவற்றை விரைவில் இயற்ற வேண்டும் என்று பெருமுதலாளிகளுக்கான கூட்டமைப்பு வலியுறுத்துவதில் இருந்தே இச்சட்டங்கள் யாருடைய வளர்ச்சிக்கானது என்பது ‘உள்ளங்கை நெல்லிக்கனி போல் நமக்கு தெளிவாகிறது. நாட்டின் வளர்ச்சிக்காக என்று பதறும் இந்த பெருமுதலாளிகள் அவர்கள் பாக்கி வைத்துள்ள பல்லாயிரம் கோடி ரூபாய் வங்கிக் கடன்களை முதலில் செலுத்தலாமே என்று நியாயமான வாதத்தை கட்டுரையாளர் திரு.இராமநாதன் அவர்கள் ‘தி நியூசு மினுட்’ இணையதளத்தில் பெருமுதலாளிகளின் இணைய மனுவிற்கு எதிர்வாதமாக புள்ளிவிவரங்களுடன் இக்கட்டுரையினை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். நமது தமிழ் வாசகர்களிடம் இக்கருத்தினை சேர்க்க வேண்டிய முக்கியத்துவம் கருதி தமிழில் இங்கு மொழிபெயர்த்து பதிவிடுகிறோம்.

 

———–

இந்திய நிறுவனங்களின் கூட்டமைப்பு (The Confederation of Indian Industry) தங்களைத் தாங்களே ” நவீன இந்தியாவின் ஒப்பற்ற வணிகக் கழகம்” என பீற்றிக் கொள்கின்ற, இந்திய கார்பரேட் முதலாளிகளின் குழு ஒன்று கடந்த ஆகஸ்டு 7 அன்று ஒரு இணைய‌ மனுவை தொடங்கியது. அதில் அவர்கள் என்ன வேண்டுகோளை முன்வைக்கின்றார்கள் என்றால், அனைத்துக் கட்சிகளும், ” நாடாளுமன்றத்தில் கூட்டாக ஆலோசித்து செயல்படுவதன்” மூலம் எவ்வித தங்குதடையின்றி GST மசோதா மற்றும் நில அபகரிப்பு மசோதாக்களை நிறைவேற்ற வேண்டுமாம். தற்சமயம் அந்த இணைய‌ வேண்டுகோள் மனுவை ஆதரித்து 40, 000 கையெழுத்துக்களும் வந்துள்ளது.

நாடாளுமன்றத்தின் செயல்பாடுகள் தடையில்லாமல் நடக்க வேண்டும் என்ற ஆர்வத்தில், “ச‌னநாயகமே மிக உயர்ந்தது”, “நாடாளுமன்றத்திற்கு என ஒரு மாண்பு இருக்கின்றது” போன்ற சொற்களை இவர்கள் பயன்படுத்துகின்றார்கள். நாடாளுமன்றம் ஒழுங்காக நடக்க வேண்டும் என்கிறார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள், எதற்காக அவர்கள் சம்பளம் கொடுக்கப்படுகின்றார்கள் என்பதை மறக்கக் கூடாது என அக்கறை கொள்கின்றார்கள். இதை எல்லாம் கூட விட்டுவிடுவோம்.

ஆனால் பாசக்கார இந்திய முதலாளி வர்க்கமே, நான் முக்கியமான ஒன்றை உங்களிடம் கேட்க‌ விரும்புகின்றேன். சொல்லப் போனால் கண்டிப்பாக இதைப் பற்றி நீங்கள் கவலைப்பட்டே ஆக வேண்டும். இதைப் பற்றி நீங்கள் கொஞ்சம் கூட வாயைத் திறப்பதே இல்லை. இதனால் நம் நாட்டின் மொத்த பொருளாதாரமே மூழ்கிப் போகின்ற பேரபாயம் இருக்கின்றது இதைப் பற்றி நீங்கள் கவலைப்பட்டே ஆக வேண்டும்.. அது என்ன தெரியுமா? உங்களது மாபெரும் கடன் தொகை பாக்கிகளே.

debt stockmonkeys

கடந்த 2008-யின் பின்னரான பொருளாதார மந்தநிலை காணப்படும் இக் காலப் பகுதியில் வளரும் நாடுகளின் பொருளாதாரச் சந்தைகளில் இயங்கிக் கொண்டிருக்கும் தனியார் நிறுவனங்களின் திருப்பி செலுத்தப்படாத கடன் தொகைகள் மட்டும் 33 % அதிகரித்துள்ளது என ஜேபி மோர்கன் ஆய்வறிக்கை புள்ளிவிவரங்களை பைனான்சியல் டைம்ஸ் செய்தி நிறுவனம் தெரிவிக்கின்றது. இந்தியாவில் தனியார் நிறுவனங்களின் திருப்பி செலுத்தப்படாத பாக்கிக் கடன் தொகை ஏறத்தாழ 1 இலட்சத்து 20 ஆயிரம் கோடி டாலர்கள், தற்போதைய இந்தியப் பணத்தின் மதிப்பில் சொல்ல வேண்டும் என்றால் சுமார் 78 இலட்சம் கோடி ரூபாய்கள். இந்த மாதிரியான திருப்பி செலுத்தப்படாமல் இருக்கின்ற கடன் தொகையில் 20 வளரும் நாடுகளில் இந்தியா நான்காம் இடத்தைப் பெற்றுள்ளது.

வங்கிகளின் தகவல் படி பார்த்தால் மிக மோசமான வாரா கடன்களாக 14 இலட்சம் கோடி ரூபாய்கள் உள்ளன என என்.டி.டி.வி கூறுகின்றது.

கிரடிட் சுயிஸ் வெளியிட்டுள்ள புள்ளிவிவர ஆய்வுத் தகவலின் படி பார்த்தால், இவ்வாறு கடன் தொகைகளை திருப்பிச் செலுத்தாமல் சாக்குப் போக்கு காட்டுகின்ற முக்கிய நிறுவனங்கள் சில இந்தியாவில் இருக்கின்றன. அவர்களில் அதானி குழுமம் (பாரத பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பர்) மட்டும் 81, 000 கோடி ரூபாய் கடனைத் திருப்பிச் செலுத்தாமல் இருக்கின்றது. எஸ்ஸார் குழுமம் 98, 000 கோடி ரூபாயையும், வேதாந்த குழுமம் 99, 000 கோடி ரூபாய்களையும், ரிலையன்ஸ் அனில் திருபாய் அம்பானி குழுமம் 1 இலட்சத்து 13 ஆயிரம் கோடி ரூபாய்களையும், ஜே.பி குழுமம் 63, 000 கோடி ரூபாய்களையும் திருப்பிச் செலுத்தாமல் இருக்கின்றனர். இந்த முக்கிய பத்து பெரும் கடனாளிகளின் தொகையைக் கூட்டினால் மலைக்கும் அளவிற்கு, அதாவது 6 இலட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய்களை கடனாக வைத்திருக்கின்றனர்.

பிசினஸ் டுடே சொல்லுகின்ற கணக்கின் படி கடந்த 2009-10 ஆம் ஆண்டில் இருந்து 2013-14 ஆண்டு வரையிலான காலப் பகுதியில் இந்தியாவின் மிகப் பெரிய தனியார் நிறுவனமான ரிலையன்ஸ் தொழிற்சாலைக் குழுமத்தின் கடன் தொகை மட்டும் 64, 000 கோடியில் இருந்து 1 லட்சத்து 38 ஆயிரம் கோடி ஆக அதிகரித்துள்ளது. செசா ஸ்டர்லைட் நிறுவனத்தின் கடனோ 1, 961 கோடி ரூபாய்களில் இருந்து 80, 568 கோடி ரூபாய்களாக அதிகரித்திருக்கின்றது. அந்த ஆய்வறிக்கை மேலும் கூறுவது என்னவென்றால், ” 2009-10 ஆம் ஆண்டிலிருந்து 2013-14 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலங்களில் இந்திய முதலாளி வர்க்கத்தின் கடன் தொகைகள் இரு மடங்காக, அதாவது 20 இலட்சம் கோடியில் இருந்து 41இ லட்சம் கோடியாக அதிகரித்திருக்கின்றது என்பது தான். அது கிடத்தட்ட 690 பில்லியன் டாலர்கள், அதாவது உலகின் முதல் 19 நாடுகளைத் தவிர மிச்சமுள்ள அனைத்து நாடுகளின் ஒட்டு மொத்த மொத்த செல்வத்திற்கு நிகரான அளவாகும்.” அந்த அறிக்கையை இங்கு விவரமாக வாசிக்கலாம்.

இந்த நிறுவனங்கள் வாங்குகின்ற கடன் தொகைகளை கூட்டிப் பார்த்தால், அது இந்திய அரசாங்கம் வாங்குகின்ற ஒட்டு மொத்த கடன் தொகையை விட அதிகம், இல்லை இல்லை மிக மிக அதிகம். இந்திய கார்பரேட்டுகள் பாக்கி வைத்திருக்கின்ற கடன் தொகை என்பது அனைத்து மாநில அரசாங்கங்கள் வைத்திருக்கின்ற கடன் தொகைகளை எல்லாம் விட மிக அதிகம் என பிசினஸ் ஸ்டாண்டர்டு இதழ் தெரிவிக்கின்றது.

இது மிகவும் மோசமானதொரு நிலைமையாகும். ” கார்பரேட் நிறுவனங்களின் கடன் தொகைகள் மிக மோசமான நிலையை எட்டியுள்ளது. பல நேரங்களில் அவர்கள் சேர்த்திருக்கின்ற சொத்துக்களை விட கடன் மிக அதிகமாக இருக்கின்றது. அவர்களிடம் பெருங்கடனைத் தவிர எந்தவொரு சரக்கும் கிடையாது, எந்தவொரு மூலதனமும் கிடையாது, ” என எடல்வீஸ் சொத்து சீர்த்திருத்தக் குழுமத்தின் தலைமை செயலதிகாரியும், நிர்வாக இயக்குநருமான சிபி ஆந்தணி பிசினஸ் டுடே இதழிற்கு தெரிவித்துள்ளார்.

வங்கிகள் எல்லாம் பெரும் பீதிக்குள்ளாகியிருக்கின்றன என்றே சொல்ல வேண்டும். ரிசர்வ் ( இந்திய வைப்பு ) வங்கி கவலையடைந்திருக்கின்றது. அவ்வளவே ஏன் இந்திய கார்ப்பிரேட்டுக்களின் பெருங்கடன் நிலைமைகளைப் பற்றி பன்னாட்டு நாணய நிதியம் இந்தியா அரசிற்கு எச்சரிக்கையும் விடுத்திருக்கின்றது. இவ்வாறான நிலைமையால் நம் நாட்டின் வேலை வாய்ப்பு நிலைமைகள், ஏற்றுமதி தொழில்கள், சொல்லப் போனால் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார நலனிற்கே பெரும் குந்தகம் ஏற்படுத்தும் சூழல் உருவாகியுள்ளது.

இவ்வாறான ஒரு இக்கட்டான நிலையை ஏற்படுத்திவிட்டு, நம் கார்பரேட் அண்ணாத்தைகள் தார்மீக ஒழுங்கைப் பற்றியும், மக்களாட்சி மண்ணாங்கட்டி என வாய் ஜால சொற்களை வைத்துக் கொண்டும், நமது நாடாளுமன்றம் எப்படி இயங்க வேண்டும் என வியாக்கியானம் செய்கின்றார்கள். நம் நாட்டு மக்கள் ஒவ்வொருவரது வரிப்பணத்தைக் கொண்டு இயங்கி வருகின்ற நாட்டுடமை வங்கிகளிடம் பெருந்தொகையான கடன்களை வாங்கி அமுக்கிக் கொண்ட இந்த பெரும் முதலாளி முதலைகளே! மக்கள் பிரதிநிதிகளிடம் கேள்வி கேட்கத் தொடங்க முன்னர் முதலில் கொஞ்சம் இந்த நாட்டு மக்களுக்கு பதில் சொன்னால் நல்லா இருக்கும்.

மொழியாக்கம்: விண்ணன்.

மூலப்பதிவு – Corporate honchos why not pay your massive debts petitioning parliament function

 

 

About விண்ணன்

One comment

  1. அருமையான கட்டுரை!

    மொழிபெயர்ப்பும் மிக அருமை!

    வாழ்த்துக்கள் தோழர் விண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*