Home / அரசியல் / இன்று (செப்டம்பர் 2) எதற்காக வேலைநிறுத்தம்(Strike) ?

இன்று (செப்டம்பர் 2) எதற்காக வேலைநிறுத்தம்(Strike) ?

இன்று நாடு தழுவிய வேலைநிறுத்தம் காலை 6 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகின்றது. இந்த வேலை நிறுத்தத்தில் பா.ஜ.க-வின் பாரதிய மஸ்தூர் தொழிற்சங்கம்(பா.ம.தொ) தவிர்த்து மற்ற எல்லா தொழிற்சங்கங்களும் கலந்து கொள்கின்றன. பாரதிய மஸ்தூர் தொழிற்சங்கமும் கூட இந்த கூட்டமைப்பில் கடைசி வரை இருந்து விட்டு சில நாட்களுக்கு முன்னரே விலகியது. மோடி அரசு தொழிலாளர் தொடர்பான சட்டங்களை மாற்றி வருகின்றது. தொழிலாளர்களுக்கு இருக்கும் கொஞ்ச, நஞ்ச உரிமையையும் பறிப்பதே இதன் நோக்கம்.

எப்படி விவசாயிகளின் நிலத்தை பறித்து முதலாளிகளின் கையில் கொடுக்க மோடி அரசு “நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை” அவசர சட்டமாக மூன்று முறை கொண்டு வந்து இன்று கைவிட்டு உள்ளதோ, அது போலவே இன்று தொழிலாளர்களின் உரிமையை இல்லாமல் செய்யும் மாற்றங்களை சட்டத்தில் செய்யத்தொடங்கியுள்ளது மோடி அரசு. இது தொடர்பாக எல்லா தொழிற்சங்கங்களும் மத்திய அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தன, வழக்கம் போல மோடி அரசு எந்த வித விட்டுக்கொடுப்பும் இல்லாமல் முதலாளிகளை குளிர்விப்பதில் உறுதியாக இருந்ததன் விளைவாக இன்று அகில இந்திய அளவில் வேலை நிறுத்தத்தையும் எல்லா தொழிற்சங்கங்களும் (பா.ம.தொ தவிர்த்து) அறிவித்துள்ளன.

eposter03

இந்த வேலை நிறுத்தத்தை தொழிலாளர்களின் நலன்களூக்காக மட்டும் இல்லாமல் இந்தியா எதிர்கொண்டு வரும் எல்லா பிரச்சனைகளையும் மையப்படுத்தி நடத்துகின்றன தொழிற்சங்கங்கள். தொழிற்சங்கங்களின் 12 கோரிக்கைகள் பின்வருமாறு…

1) விலைவாசி உயர்வை உடனே கட்டுபடுத்த வேண்டும், இதை பொது வினியோகத்திட்டத்தை பரவலாக்குவதன் மூலமும், ஊக வணிகத்தை முற்றிலுமாக தடை செய்வதன் மூலமும் செயல்படுத்த வேண்டும்.

2) சரியான முறையில் புதிய வேலைவாய்ப்பு வசதிகளை உருவாக்கி, வேலையில்லா திண்டாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும்.

3) எந்த விதிவிலக்குமின்றி நடைமுறையில் உள்ள எல்லா தொழிலாளர் சட்டங்களையும் கண்டிப்பாக அமல்படுத்தி, அச்சட்டங்களை மீறுபவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தல்

4) நாடு தழுவிய சமூக பாதுகாப்பு திட்டங்களை எல்லா தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும்.

5) குறைந்த பட்ச ஊதியத்தை மாதத்திற்கு 15,000 ரூபாயாக நிர்ணயித்து, அதை விலைவாசி உயர்வுக்கு ஏற்ப மாறும் தன்மையுடையது போல இணைத்தல்.

6) உத்திரவாதமான ஓய்வூதியம் மாதம் 3000 ரூபாய்க்கு குறையாமல் எல்லா தொழிலாளர்களுக்கும் கிடைப்பது உறுதிப்படுத்தப்பட‌ வேண்டும்.

7) மத்திய, மாநில அரசுகள் நடத்திவரும் பொது நிறுவனங்களை தனியார்மயப்படுத்தப்படுவதை நிறுத்தி, மீண்டும் அந்தந்த அரசுகளே இயக்க வேண்டும்

8) நிரந்தர பணியை தற்காலிகமாக்குவது நிறுத்தப்பட வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்கள் செய்யும் பணிக்கு அதே பணியில் ஈடுபடும் நிரந்தர தொழிலாளர்களுக்கு கிடைக்கும் ஊதியம் கிடைக்க வேண்டும்.

9) புதிய தொழிற்சங்கம் தொடர்பான அனுமதி ஆவணங்கள் கொடுத்து 45 நாட்களுக்குள் அவற்றை பதிய வேண்டும். உடனடியாக அவர்களுக்கு பன்னாட்டு தொழிலாளர் ஆணையத்தின் சட்டம் C87, C89 செல்லுபடியாகும்படி செய்தல்

10) ஊதியம், போனஸ், ஓய்வூதியம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள எல்லா வரம்புகளையும் இரத்து செய்தல், பணிக்கொடையை (gratuity) அதிகரிக்க வேண்டும்.

11) தொழிலாளர்களுக்கு எதிரான எல்லா சட்டங்களையும் எதிர்த்தும்

12) பாதுகாப்பு, தொடர்வண்டித் துறை (Railways), காப்பீடு போன்ற துறைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு நேரடி முதலீடுகளை எதிர்த்தும்

மேற்கூறிய கோரிக்கைகளுடன் போக்குவரத்துதுறை ஊழியர்கள் வரவிருக்கும் “மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தை” எதிர்த்து இந்த வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்கின்றார்கள். தொழிலாளர்கள் இந்த உரிமைகளைப் பெற பல ஆண்டுகள் போராட்டம் தேவைப்பட்டது, இன்று மோடி அரசுக்கு எதிரான தொழிலாளர்களின் போராட்டத்தில் நாம் தொழிலாளர் பக்கம் நின்று அவர்கள் உரிமைகள் பறிபோகாமல் இருக்க கரம் கொடுப்போம்.

—நற்றமிழன்.ப‌ —இளந்தமிழகம் இயக்கம்

About நற்றமிழன்

ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் தரக்கட்டுபாட்டுத் துறையில் பணி புரிகின்றார். தற்சமயம் திருப்பூரில் வசித்து வருகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*