Home / அரசியல் / தமிழக சட்டமன்ற தீர்மானங்களைக் கேலிகூத்தாக்கும் இந்தியா, வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு!
TN-Assembly

தமிழக சட்டமன்ற தீர்மானங்களைக் கேலிகூத்தாக்கும் இந்தியா, வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு!

தமிழக சட்டமன்ற தீர்மானங்களைக் கேலிகூத்தாக்கும் இந்தியா. அழுத்தம் கொடுக்காமல் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு

இலங்கை இனப்படுகொலை குறித்து பன்னாட்டு விசாரணை வேண்டும் என்ற தீர்மானத்தை  மூன்றாவது முறையாக  தமிழக அரசு அண்மையில்   நிறைவேற்றியது. தமிழக அரசின்  தீர்மானங்கள் இந்திய அரசை இக்கோரிக்கைக்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.  அமெரிக்க அரசு இலங்கை அரசுடன் இணைந்து பன்னாட்டு நீதிபதிகள் அடங்கிய இலங்கையின் உள்நாட்டு பொறிமுறையை வலியுறுத்தி ஒரு தீர்மான வரைவை முன் வைத்துள்ளது. அதுவே ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் நிறைவேற்றப்பட இருக்கின்றது. இத்தீர்மான வரைவில்   இலங்கைக்கு ஆதரவாக உள்நாட்டுப் பொறிமுறையை வலியுறுத்தி உலக நாடுகள் பல முனைந்து செயல் படுகின்றன.

இந்திய அரசோ தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று  இத்தீர்மான வரைவை எதிர்க்கவில்லை. பன்னாட்டு  நீதி பொறிமுறை  கொண்டுவருவதற்கான எந்த முயற்சியும் இது வரை எடுக்கவில்லை.  தமிழக அரசும் தீர்மானத்தை நிறைவேற்றியதற்குப்  பிறகு அதை செயல்படுத்த இந்திய அரசுக்கு எவ்வித அழுத்தங்களையும் கொடுக்காமல் தமிழக மக்களை ஏமாற்றி வருகின்றது.

கடந்த மார்ச் 2014 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்ட பன்னாட்டு புலனாய்வுக் குழு தனது அறிக்கையை அண்மையில் ஐ.நா.ம.உ.மன்றத்தில் வெளியிட்டது.

அவ்வறிக்கை உள்நாட்டு நீதி பொறிமுறை போதாதென்று உறுதிபடக் கூறுகின்றது.

இலங்கை  அரசின் ஒத்துழைப்புடன் பன்னாட்டு வல்லுனர்கள் அடங்கிய கலப்பு பொறிமுறை ஒன்றை நிறுவி நீதி விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரைத்துள்ளது.

ஐ.நா குழுவின் அறிக்கையை முழுவதுமாக நிராகரிப்பதாக அறிவித்துள்ள இலங்கை அரசு கலப்பு பொறிமுறையை மறுத்து உள்நாட்டு விசாரணை ஒன்றை தான் மேற்கொள்வதாக அறிவித்துள்ளது.   மனித உரிமையா? இறையாண்மையா? என்றால் ”இறையாண்மைக்குப் பின் தான் மனித உரிமை” என்று இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே சொல்லியுள்ளார். இவ்விடயத்தில் இந்தியா, அமெரிக்கா, சீனா, இரசியாஆகிய நாடுகள்  ஒரே கருத்தைக் கொண்டுள்ளன என்றும் கூறியுள்ளார்.

2011 ஆம் ஆண்டும், 2013 ஆம் ஆண்டும் அ.தி.மு.க. தலைமையிலான தமிழக அரசு தமிழினப் படுகொலை குறித்து பன்னாட்டு விசாரணை வேண்டும் எனவும் அதற்கு இந்திய அரசு ஐ.நா வில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றி இருந்தது.

ஆனால் கடந்த மார்ச் 2014 ஆம் ஆண்டு  அமெரிக்கா கொண்டு வந்த இலங்கை தொடர்பான தீர்மானத்தின் பொழுது காங்கிரசு கட்சி தலைமையிலான  இந்திய அரசு வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் தீர்மானத்தைப் புறக்கணித்தது.

இந்நடவடிக்கையின் மூலம் தமிழக சட்டமன்ற தீர்மான கோரிக்கையை  புறந்தள்ளிய  இந்திய அரசு ஐ.நா.ம.உ. மன்றத்தில் இலங்கை அரசிற்கு ஆதரவாக செயல்பட்டு தமிழர்களுக்கு துரோகம் இழைத்தது.  2009, 2012,2013 ஆகிய ஆண்டுகளில் இலங்கைக்கு ஆதரவான தீர்மானங்களை ஆதரித்த இந்தியா 2014 ஆம் ஆண்டின் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்காமல் நடுநிலை வகித்து இலங்கையின் நட்பைப் பேணிக் கொண்டது.

இப்பொழுது மீண்டும் ஒரு தீர்மானம் இலங்கை தொடர்பாக வரவுள்ளது. இம்முறை பாரதிய சனதா கட்சி தலைமையிலான இந்திய அரசிற்கு தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது. இம்முறையும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியவுடன் தன கடமை முடிந்தது என்பது போல தமிழக அரசு அமைதி காக்கின்றது.

வெறும் காகிதத்தில் இருக்கும் சட்டமன்ற தீர்மானத்திற்கு உயிர் கொடுக்க அமெரிக்காவின் வரைவுத் தீர்மானத்தில் பன்னாட்டு பொறிமுறை கோரி திருத்தம் கொண்டு வர வேண்டும் என தமிழக அரசு நாடளுமன்ற உறுப்பினர்கள் குழுவினை அனுப்பி இந்திய அரசிற்கு அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் தழுவிய முழு அடைப்பிற்கு அனைத்துக் கட்சிகளுடன் இணைந்து அழைப்பு விடுத்திருக்க வேண்டும்.  அதற்குப் பிறகும் தமிழர்களுக்கு எதிராக இந்திய அரசு செயல்படுமானால் அதன் துரோகத்தை தமிழக மக்களுக்கு அம்பலப் படுத்த வேண்டும்.

அண்மையில் மறைந்த மெல்லிசை மன்னர் இசையமைப்பாளர் ம.சு. விசுவநாதன் இழப்பிற்கு தமிழக முதல்வர் இரங்கல் அறிக்கை வெளியிட்டிருந்த போது பின்வரும் கருத்தை வெளியிட்டு இருந்தார்.  “பெரும் புகழுக்கும் பெருமைக்கும் உரிய எம்.எஸ் விஸ்வநாதன் பல விருதுகள் பெற்றிருந்தாலும் அவருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படாதது எனக்கு என்றும் மனவருத்தத்தை அளித்து வந்தது.

நான் 1991-ஆம் ஆண்டு முதலமைச்சராக பதவியேற்றது முதல் விஸ்வநாதன் அவர்களுக்கு பத்மவிபூஷன் விருது வழங்க மத்திய அரசிடம் பரிந்துரை செய்து வருகிறேன். ஆயினும், மாநில அரசுக்கு சாதகமாக எதையும் செய்யாத மத்திய அரசுகள் இதற்கும் செவிசாய்க்கவில்லை……எம்.எஸ் விஸ்வநாதன் அவர்களுக்கு 2012-ஆம் ஆண்டு “திரை இசைச் சக்கரவர்த்தி” என்ற பட்டத்தை நான் வழங்கி அவரை கௌரவித்தேன்.” மத்திய அரசுகள் மாநில அரசுகளை எப்படி அணுகுகின்றன என்பதற்கு முதல்வர் கொடுத்திருக்கும் ஒப்புதல் வாக்குமூலம் இது.

இது வரை இலங்கை தொடர்பாக மூன்று தீர்மானங்களை தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றியுள்ள பொழுதும் அதனை வெறும் காகிதமாக காலில் போட்டு மிதித்து வருகின்றது இந்திய அரசு. இனியும் வேடிக்கை பார்க்காமல்  தமிழக அரசு இத்தீர்மானங்களை நடைமுறை படுத்த நடவடிக்கைகளில் இறங்க வேண்டும்.தமிழக அரசுக்கு மட்டுமின்றி அரசாங்கத்தை தலைமை தாங்கும் கட்சிக்கும், இத்தீர்மானங்களை ஆதரித்தக் கட்சிகளுக்கும் அதன் தலைவர்களுக்கும், தமிழகத்தின் படைப்பாளிகளுக்கும், ஊடகவியலாளர்களுக்கும், அறிவு சீவிகளுக்கும், மாணவர்களுக்கும் , மக்களுக்கும் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைக்கு கொண்டு வரும் பொறுப்பு இருக்கின்றது.

- இளங்கோவன் ,

இளந்தமிழகம் இயக்கம்

About இளங்கோவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>