Home / சமூகம் / இந்துத்துவம் / பசு புனிதம்!… மனித உயிர் மலினம்???

பசு புனிதம்!… மனித உயிர் மலினம்???

” தாத்ரி கொலை எதிர்பாராத விபத்து; பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் நீதி கிடைக்கும்”

– இந்திய கலாச்சாரத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா.

“ பசுக்களை கொல்பவர்களை கொலை செய்வோம்; எங்கள் உயிரைக் கொடுத்தாவது பசுக்களைக் காப்போம்.”

– பா.ச.க நாடாளுமன்ற உறுப்பினர் சாக்சி மகாராஜ்.

” அமைதியை நிலைநாட்டும் பொறுப்பு ஏன் எப்போதும் இந்துக்களின் மீதே சுமத்தப்படுகிறது?.தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் அமைதி காக்கட்டும் !”

– பா.ச.க நாடாளுமன்ற உறுப்பினர் தருண் விஜய்

கடந்த வாரம் திங்கட்கிழமை, உத்தரப்பிரதேச மாநிலம் தாத்ரியில், “மாட்டிறைச்சி வைத்திருந்தார் என்கிற சந்தேகத்தின் பெயரில் அக்ஹ்லாக் என்பவரை ஒரு கும்பல் அடித்துக் கொன்றது. அவரோடு சேர்த்து அந்தக் கும்பலினால் தாக்கப்பட்ட அவரது மகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தக் கொலை வழக்கில், ” பாரதிய சனதா கட்சியைச் சேர்ந்த அப்பகுதித் தலைவரின் மகனான விசால் ராணா உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்”. இந்த சம்பவத்தின் தொடர்ச்சியாகத்தான், நாம் மேற்குறிப்பிட்டிருக்கும் கருத்துகள் பாரதிய சனதா கட்சியைச் சேர்ந்தவர்களிடம் இருந்து வந்துள்ளது.

மோடி தலைமையிலான பாரதிய சனதா கட்சி இந்திய அளவில் ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து, சிறுபான்மையினரும், தலித்துகளும் தாக்குதலுக்கு உள்ளாவது என்பது தொடர் நிகழ்வாகியுள்ளது.

உத்திரப் பிரதேசத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்தார் என்ற வதந்தியால் நடந்த கொலைக்கு முன்பும், பின்பும், பா.ச.க நாடாளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் வன்முறையைத் தூண்டும் விதமாகத் தொடர்ந்து பேசி வருகின்றனர். ஆனால், இப்போதும் வாய் மூடி மௌன விரதம் இருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.

protest-against-dadri-lynching

இன்றைய சூழ்நிலையில் நம்முடன் வாழ்ந்து சுக துக்கங்களில் பங்கு பெரும் ஒரு சக மனிதனின் உயிரைக் கொன்று காக்கப்பட வேண்டிய அளவுக்கு எந்த விதத்தில்  பசு புனிதமானது, அதன் பின்னிருக்கும் அரசியல் என்ன? என்று அலசுவதே இந்த கட்டுரையின் நோக்கம்.

பா.ச.க -வின் இந்துத்துவத் திட்டம்

மாட்டை வைத்து அரசியல் செய்வதும், பசுவின் மீது புனிதம் கற்பித்து வாக்கு வங்கியை ஒருமுகப்படுத்த நினைப்பதும் பாரதீய சனதா கட்சிக்கும், ஆர். எஸ். எஸ் கும்பலுக்கும் ஒன்றும் புதிய விடயமல்ல.

ஆர்.எஸ்.எஸ்-சின் மூல அமைப்பான இந்து மகா சபை தொடங்கப்பட்ட நாளில் இருந்து மாட்டு அரசியல் என்பது பா.ச.க.-வின் இந்துத்துவத் திட்டமாக இருந்து வருகிறது..

மகாராஷ்டிரா, ஹரியானா என பா.ச.க ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில்  மாட்டிறைச்சிக்கு தடை கொண்டு வந்தது முதல் விநாயகர் சதுர்த்தி அன்று இறைச்சி விற்பனை நிலையங்களுக்கு கட்டாய விடுமுறை அறிவித்தது  என்று மாட்டை வைத்து அரசியல் செய்யும் பாரதிய சனதா கட்சியின் செயல்பாடு இந்திய அளவில் ஆட்சியைப் பிடித்த நாளில் இருந்து  வேகம் எடுத்துள்ளது.

எப்போதும் ஒரு பொது எதிரியைக் கட்டமைத்து அதன் மூலம் தங்களுடைய பலத்தைப் பெருக்குவதே பாசிசவாதிகளின் திட்டமாக இருந்துள்ளது. இந்தியாவில் வளர்ந்திருக்கும் காவிப் பாசிசமும் அதே வழியைப் பின்பற்றி இங்கிருக்கும் இசுலாமிய சிறுபான்மை மக்களை எதிரியாக சித்தரித்து வருகிறது.

இசுலாமிய மக்களை எதிரியாக கட்டமைக்கும் காவிக் கும்பல், சிறுபான்மையினருக்கு எதிரான பல்வேறு வரலாற்று புரட்டுகளை நாடெங்கிலும் பரப்பி வருகிறது.அவ்வாறான வரலாற்று புரட்டுகளில் ஒன்றுதான், பசுவின் மீது கட்டமைக்கப்படும் புனிதமும்.

பசுவின் புனிதம் – ஓர் மோசடி

உத்திரப் பிரதேசத்தில் நடந்த கொலை சம்பவத்திற்கும், பா.ச.க -வினரின் வன்முறை தூண்டும் கருத்துகளுக்கும் மூல காரணமாக இருப்பது பசுவின் மீது கட்டமைக்கப்படும் புனித பிம்பம்தான்.

இப்படி மாடுகளின் மீது கட்டப்படும் பிம்பத்தை, பல்வேறு வரலாற்றாளர்களும், சமூக ஆய்வாளர்களும் பலமான ஆதாரங்களுடன் சுக்கு நூறாக உடைத்துள்ளனர்.

ஆதிமனிதனாக காடுகளில் திரிந்த மனிதர்கள் மத்தியில் இறைச்சி X மரக்கறி, சைவம் X அசைவம் என்கிற பாகுபாடுகள்  இல்லை.. ஏனெனில், உலகெங்கிலும் காடுகளில் திரிந்த மனிதர்கள் அனைவரும் வேட்டைச் சமூகமாகத்தான் இருந்தார்கள். இந்தியாவிலும் அப்படிதான்.

வேட்டைச் சமூகமாக இருந்த மனிதன் மேய்ச்சல் வாழ்க்கையை மேற்கொண்டு முன்னேறியதும், ஓரிடத்தில் தங்கி விவசாயம் செய்யத் தொடங்கியதும் தான் கால்நடைகளின் பயன்பாடு அதிகரித்தது.  இவ்வாறு உற்பத்திக் கருவியாக நிலம் மாறி, நிலப்பிரபுத்துவ சமூகம் வளர்ந்த நிலையில் தான் கால்நடைகளினால் பெறப்படும் பயன்பாடும், ஈட்டப்படும் பொருளாதாரமும் அதிகரித்த போது மாடுகளை செல்வம் சேர்க்கும் வழியாக மனிதன் கருதத் தொடங்கினான். ஆனால், அப்போதும் வேள்விகளிலும், யாகங்களிலும் பார்ப்பனர்களால் பலியிடப்படும் மாடுகள், குதிரைகள் எண்ணிக்கை குறையவேயில்லை.

நாடோடி வாழ்க்கையை மேற்கொண்டு இந்தியாவிற்குள் நுழைந்த ஆரியர்கள் வழியாகத்தான் மேய்ச்சல் வாழ்க்கை இங்கு அறிமுகமானது. அப்போது கால்நடைகளின் விருத்திக்காக கால்நடைகளை பலியிடும் வழக்கம் அவர்களிடம் இருந்தது.

பசுக்கள் புனிதமாகக் கருதப்பட்ட காரணத்தினாலேயே யாகங்களிலும், வேள்வியிலும் பலியிடப்பட்டன.

குறிப்பாக, இன்ன கடவுளுக்கு இன்ன மாமிசம் பிடிக்கும், படைக்க வேண்டும் என்று வேத நூல்களில் சொல்லப்பட்டுள்ளது. வேத காலக் கடவுள்களிலேயே மிகப்பெரிய கடவுளாக முன்னிறுத்தப்பட்ட இந்திரன் ” அவர்கள் எனக்காக பதினைந்து, இருபது எருதுகளைச் சமைத்தார்கள்” என்று கூறுவதாக ரிக் வேதத்தில் வருவதை தன்னுடைய “பசுவின் புனிதம்” நூலில் குறிப்பிட்டுள்ளார் டி.என்.ஜா.

ஜெய்மினிய உபநிடத பிராமணம் திருமண விழாக்களின் போது நடத்தப்படும் “மதுபர்கம்” என்னும் விருந்தைப் பற்றி குறிப்பிட்டுள்ளது. குரு, புரோகிதன், தந்தை வழி, தாய் வழி மாமாக்கள், நண்பன் போன்ற சிறப்பு விருந்தினர்களுக்காக நடத்தப்பட்ட இந்த விருந்தில் தயிர், தேனுடன் மாட்டின் இறைச்சியும் பரிமாறப்பட்டது. பலியிடப்பட்ட மாட்டின் இறைச்சியோ அல்லது விருந்துக்காக கொல்லப்பட்ட மாட்டின் இறைச்சியோ விருந்தினர்களின் விருப்பத்திற்கேற்ப வழங்கப்பட்டது.

beef ban cartoon1

விலங்குகளை பலியிடுதல் வேதகாலத்தைத் தொடர்ந்து புராண காலங்களிலும் இருந்து வந்துள்ளது. மகாபாரத்தில், ” காயல், சம்பாரா, எருமை உட்பட விலங்குகளில் இறைச்சியினை யுதிஷ்டிரர் தருவார் என திரௌபதி சொல்வதையும்”, வால்மீகி ராமாயணத்தில் ” உண்ணத் தகுந்தவை என தர்ம சாஸ்திரங்களால் சொல்லப்பட்ட விலங்குகளை பலியிடும் யாகத்தை தசரதன்  நடத்திய பின்புதான் ராமன் பிறந்தான்” என்று வருவதையும் டி.என்.ஜா குறிப்பிடுகிறார்.

வேத காலத்திற்கும், புராண காலத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் தோன்றிய புத்த மதம் ஓரளவிற்கும் , சமண மதம் முற்றிலுமாகவும் விலங்குகள் பலியிடுவதற்கு எதிராக இருந்தன. ஆனால், அப்போதும் விலங்குகளை யாகங்களுக்கு பலி கொடுக்கும் பழக்கம் பார்ப்பனீய மதமான இந்து மதத்தின் அனைத்து பிரிவினரிடையேயும் இருந்தது.

நாம் முன்னரே சொன்னது போல, மனிதன் ஓரிடத்தில் தங்கி விவசாய செய்ய தொடங்கிய போது உருவான நிலப்பிரபுத்துவ சமுதாயமும், அதன் சமூகத் தாக்கமும் தான் கால்நடைகள் பலியிடுவதற்கு எதிரான குரல்கள் பிறப்ப‌தற்கு வழிகோலியது. அதுவும் அன்று பெரும்பாலான விலங்குகளை யாகத்தில் பலியிட்டுக் கொண்டிருந்த பார்ப்பனீய மதத்திற்கு எதிராகவே உருவானது.

அரசியல், சமூக மற்றும் பொருளாதார காரணிகள்:

காவி பாசிசம் வளர்ந்து, இந்துத்துவம் தீயாகப் பரவி வரும் இன்றைய சூழலில் மாட்டிறைச்சிக்கு தடை, பசு வதை மாபாதகம் போன்ற பொய்கள் பரப்புரை செய்யப்படுவது இந்துக்களாக அடையாளப்படுத்தபடும் மக்களின் வாக்குகளை ஒருமுகப்படுத்தும் நோக்கில்தான்.

மாட்டிறைச்சி உண்ணும் இந்துக்கள் இருக்கும் ஒரு நாட்டில் அதே இறைச்சியை வைத்திருந்தார் என்கிற வதந்தியின் அடிப்படையில், ஒரு இசுலாமியர் கொல்லப்படுவதற்கு வாக்குகளைத் தவிர வேறு காரணங்கள் இருக்க முடியாது.

அடிப்படையிலேயே சாதிய சமூகமான நம்முடைய சமூகத்தில்தான் இறைச்சி உண்பவர்களிலேயே மாட்டிறைச்சி உண்ணமாட்டோம் என்று கூறுபவர்கள் இருக்கிறோம். தனிநபர் விருப்பமாக இருப்பதைத் தவிர்த்து உயர் சாதியினரோடு சேர்ந்து பசுவின் புனிதத்தை உயர்த்திப் பிடிப்பவர்கள் இவர்கள்தான். உலகில் எந்த ஒரு நாட்டிலும் இறைச்சி உண்பவர்களில் இப்படி ஒரு விலங்கிற்கு மட்டும் பாவம் பார்ப்பவர்கள் இல்லை.

beef ban cartoon2

நம்முடைய நாட்டில், மாட்டிறைச்சி தான் மற்ற இறைச்சிகளை விட குறைவான விலையில் கிடைக்கிறது. மாட்டிறைச்சியை சாப்பிடுவதன் மூலம்தான் சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ள மக்கள் அவர்களுக்கு தேவையான புரதச் சத்தை பெறுகிறார்கள். மாட்டிறைச்சிக்குத் தடை கொண்டு வருவது என்பது அடித்தட்டு வாழ்நிலையில் இருக்கும் மக்கள்தொகையில் உள்ள குழந்தைகளுக்கு புரதச் சத்துள்ள உணவு கிடைப்பதை தடை செய்யும்.

ஐந்து வயதைத் தொடுவதற்கு முன்பே இரண்டு லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் இறந்து போகும் ஒரு நாட்டில், மலிவு விலையில் கிடைக்கப் பெரும் புரதத்தைத் தடுப்பது என்பது குழந்தைகள் இறப்பிற்கும், உடல் நலிவோடு வளரும் நோஞ்சான் தலைமுறையின் உருவாக்கத்திற்குமே  இட்டுச் செல்லும்.

விவசாயம் நலிவடைந்து, மழை பொய்த்துப் போகும் காலங்களில் எல்லாம் பால் கறவை செய்யாத மாட்டை இறைச்சிக்கு விற்றுத்தான் விவசாயக் குடும்பங்கள் வறுமையைப் போக்க வேண்டியுள்ளது. இவர்களில் பெரும்பாலனவர்கள் விளிம்பு நிலையில் உள்ள விவசாயி கூலித் தொழிலாளர்களும், குறுநில விவசாயிகளும்தான்.

இவை எதையும் கருத்தில் கொள்ளாமல், மாட்டிறைச்சியைத் தடை செய்வது என்பது, அடித்தட்டு மக்களின் நிலையை, வாழ்வியலை இந்த அரசுகள் உணரவில்லை என்பதையே காட்டுகிறது.

என்ன செய்கிறார் மோடி ???

பன்னாட்டு முதலாளிகளை பார்த்தால் வாய் திறப்பவர்; வெளிநாட்டு வாழ் இந்தியர்களைப் பார்த்தால் கர்ஜிப்பவர்; இன்று இந்தியாவுக்குள்தான் இருக்கிறார், நவதுவாரங்களையும் இறுக்கி அடைத்தபடி.

நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளின் போது ” இளஞ்சிவப்பு புரட்சி (PINK REVOLUTION ) செய்கிறோம்; நமக்கு தேவையோ பசுமைப் புரட்சிதான்” என்று பீகாரில் மோடி பேசியதே இதன் தொடக்கப் புள்ளி. இளஞ்சிவப்புப் புரட்சி என்று அவர் குறிப்பிட்டது மாடுகளை இறைச்சிக்காக வெட்டுவதைத்தான்.

ஆனால், கடந்த முறை சீனா சென்ற பிரதமர் இறைச்சி ஏற்றுமதியைப் பற்றி பல்வேறு வாக்குறுதிகளைக் கொடுத்து வந்தார். இந்த ஆண்டும் கால்நடைகளின் இறைச்சியை ஏற்றுமதி செய்வதில் இந்தியாதான் முதலிடத்தில் உள்ளது.

ஏழை, அடித்தட்டு மக்கள் உணவிற்காக வெட்டப்படும் மாடுகளின் எண்ணிக்கையை விட, தோலுக்காகவும், ஏற்றுமதிக்காகவும் வெட்டப்படும் மாடுகளின் அளவு என்பது மிக அதிகம். பசு பாவம் என்றும், ” கோமாதா எங்கள் குலமாதா” என்று பூஜிப்பவர்கள் தான் பசுவின் மடியில் இயந்திரத்தை மாட்டி பாலை உறிஞ்சும் தொலைக்காட்சி விளம்பரத்தை பார்த்து ரசிப்பவர்களாக இருக்கிறார்கள். பசுவை கொல்லக்கூடாது என சொல்லும் சங்பரிவாரமும், பா.ச.க-வும் மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலைகள்,  பசுவின் இரத்தத்தையும் உறிஞ்சி பால் கறக்கும் தொழிற்சாலைகள், என எதையும் எதிர்த்து போராடியதும் இல்லை,போராடப்போவதுமில்லை.

உணவு என்பது நம் ஒவ்வொருவருடைய தனிப்பட்ட விருப்பம். யார் எதை சாப்பிட வேண்டும் என்பதை அரசு முடிவு செய்வது சனநாயக நாட்டில் பாசிசம் தழைக்கவே பாதை வகுக்கும். காவிப் பாசிசம் வேரூன்ற நினைக்கும் இவ்வேளையில் மாட்டுக்கறி தடைக்கு எதிராக போராடுவது என்பதுதான் சனநாயகம்.

சங்பரிவாரமும், மோடியும் இணைந்து நடத்தும் கூத்தில் இரண்டு திரைக்கதைகள், ஒன்று பன்னாட்டு முதலாளிகளுக்கு வால் பிடிப்பது; அவர்களுக்காக “வளர்ச்சி” என்று பிரதமர் மோடி முழங்குவது. மற்றொன்று, காவிப் பாசிச செயல்பாட்டை வாய் பொத்தி வேடிக்கை பார்ப்பது. இந்த வேலையை சிறப்புற செய்வார் என்ற நம்பிக்கையில்தான் சங்பரிவாரம் மோடியை பிரதமராக்கியுள்ளது.

இந்தியாவிற்கான செயல்திட்டம் நாக்பூரில் உருவாகி வரும் இன்றைய சூழலில், பசு புனிதம்தான் !!!… மனித உயிர்கள் மலினம்தான்!!!

– கதிரவன்

இளந்தமிழகம் இயக்கம்.

About கதிரவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*